சங்கத் தமிழர்
இயற்கையை வழிபட்டார்களா? கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபட்டார்களா?
சங்கப்பாடல்களில் கடவுளும் தெய்வங்களும்
கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது. இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ
இதுவரை ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிடவில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா? கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது.
சங்கத் தமிழ் நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே கடவுள் தெய்வம் என்ற சொற்கள் 135 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர்.
தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.
இவற்றில் உள்ள சங்கப்பாடல்களில் மட்டுமே 93 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 42 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இன்னும் இறைவன் என்ற சொல்லையும் அந்தந்தத் தெய்வங்களின் பெயர்களையும் தனித்தனியாகத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன.
கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல் மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது. முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும்.
நாம் நமது முப்பாட்டன்கள் வழி நின்று நமது கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
மேற்சொன்ன 135 பாடல்வரிகளும் இணைப்பில் உள்ளன.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.
நன்றி – தொடரடைவு http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)
-------------------------------------------
கடவுள் + தெய்வம் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை.
நற்றிணையில் 10 + 6 = 16
குறுந்தொகையில் 4 +2 =6
ஐங்குறுநூற்றில் 4 +1 = 5
பதிற்றுப்பத்தில் 12 + 5 = 17
பரிபாடலில் 4 + 5 = 9
கலித்தொகையில் 12 + 10 = 22
அகநானூற்றில் 20 + 4 = 24
புறநானூற்றில் 10 +1 = 11
என எட்டுத்தொகை நூல்களில் 76 இடங்களில் கடவுள் என்ற சொல்லும்,
34 இடங்களில் தெய்வம் என்ற சொல்லுமாக ஆகமொத்தம் 110 இடங்களில் கடவுளும் தெய்வமும் பெற்றுள்ளன.
திருமுருகாற்றுப்படையில் 1 + 4 = 5
பொருநர் ஆற்றுப்படையில் 1 + 0 = 1
சிறுபாணாற்றுப்படையில் 1 + 1 = 2
பெரும்பாணாற்றுப்படையில் 2 + 1 = 3
மதுரைக்காஞ்சியில் 4,
குறிஞ்சிப் பாட்டில் 4,
மலைபடுகடாமில் 4
---------------------------------------
கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு -
நற்றிணையில் 10
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த - நற் 34/1
கடவுள் ஆயினும் ஆக - நற் 34/10
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய - நற் 83/2
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் - நற் 189/3
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் - நற் 216/6
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து - நற் 251/8
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை - நற் 303/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/4
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் - நற் 358/6
குறுந்தொகையில் 4
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்/கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் - குறு 87/1,2
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் - குறு 105/2
கடவுள் நண்ணிய பாலோர் போல - குறு 203/4
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4
ஐங்குறுநூற்றில் 4
அரும் திறல் கடவுள் அல்லன் - ஐங் 182/3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி - ஐங் 243/1
குன்ற குறவன் கடவுள் பேணி - ஐங் 257/1
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி - ஐங் 259/3
பதிற்றுப்பத்தில் 12
காடே கடவுள் மேன புறவே - பதி 13/20
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி - பதி 21/15
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் - பதி 30/34
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த - பதி 31/18
கைவல் இளையர் கடவுள் பழிச்ச - பதி 41/6
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை - பதி 43/6
காமர் கடவுளும் ஆளும் கற்பின் - பதி 65/9
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி - பதி 70/18
கடவுள் அயிரையின் நிலைஇ - பதி 79/18
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - பதி 88/2
பரிபாடலில் 4
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்/அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் - பரி 3/43,44
நின்னில் சிறந்த நிறை கடவுளவை/அன்னோர் அல்லா வேறும் உள அவை - பரி 4/63,64
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் - பரி 5/13
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய - பரி 5/44
கலித்தொகையில் 12
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு - கலி 46/16
கடவுள் கடி நகர்-தோறும் இவனை - கலி 84/6
கடவுளர் கண் தங்கினேன் - கலி 93/7
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் - கலி 93/9
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் - கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் - கலி 93/13
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ - கலி 93/20
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ - கலி 93/24
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ - கலி 93/28
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை - கலி 93/29
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் - கலி 93/35
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் - கலி 101/24
அகநானூற்றில் 20
தெறல் அரு மரபின் கடவுள் பேணி - அகம் 13/3
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து - அகம் 14/16
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் - அகம் 16/18
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் - அகம் 35/7
கடவுள் எழுதிய பாவையின் - அகம் 62/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது - அகம் 90/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற - அகம் 125/14
கடி நகர் புனைந்து கடவுள் பேணி - அகம் 136/6
கடவுள் காந்தளுள்ளும் பல உடன் - அகம் 152/17
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி - அகம் 156/15
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று - அகம் 167/15
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய - அகம் 184/1
நிலை பெறு கடவுள் ஆக்கிய - அகம் 209/16
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே - அகம் 282/18
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து - அகம் 307/12
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் - அகம் 348/8
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி - அகம் 396/7
புறநானூற்றில் 10
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - புறம் 52/12
கடவுள் பேணேம் என்னா ஆங்கு - புறம் 106/3
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புறம் 158/11
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் - புறம் 199/1
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - புறம் 260/5
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே - புறம் 335/12
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் - புறம் 399/26
திருமுருகாற்றுப்படையில் 1
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை - திரு 256
பொருநர் ஆற்றுப்படையில் 1
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - பொரு 52
சிறுபாணாற்றுப்படையில் 1
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன - சிறு 205
பெரும்பாணாற்றுப்படையில் 2
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி - பெரும் 290
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் - பெரும் 391
மதுரைக்காஞ்சியில் 4
தொன் முது கடவுள் பின்னர் மேய - மது 41
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - மது 467
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - மது 651
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை - மது 710
குறிஞ்சிப் பாட்டில் 2
வேறு பல் உருவின் கடவுள் பேணி - குறி 6
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது - குறி 209
மலைபடுகடாமில் 4
காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 83
பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - மலை 396
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை - மலை 538
---------------------------------------------------
எட்டுத்தொகை நூல்களில் 34 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி - குறு 263/4
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4
அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் - கலி 124/18
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் - கலி 132/21
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
----------------------------------------------
பத்துப் பாட்டில் 8 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.
தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
----------------------------------------