Friday 29 April 2022

ஓங்கல் - புராணத்தில் புவியறிவியல்

புராணம் கூறும்  புவி அறிவியல்

1954 இல் ஒரு இந்திய ஆய்வு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீ (29,029 அடி) என நிர்ணயித்தது, இது நேபாள அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த குழுக்கள் கூட்டாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய உயரத்திற்கு ஒப்புக்கொண்டன, இது சர்வே ஆஃப் இந்தியாவின் அசல் கணக்கீட்டை விட 0.86 மீ (2.8 அடி) அதிகமாகும்.  (பார்வை https://www.bbc.com/future/article/20220407-how-tall-will-mount-everest-get-before-it-stops-growing).  நடைபெற்றுள்ள ஆய்வுகளின்படி பூகம்பங்களின்ல் எவரெஸ்ட் சிகரமானது வளர்ந்து வருகின்றது என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.    

ஆச்சரியம் என்னவென்றால், இதே கருத்தைத் திருவிளையாடல்  புராணமும் கூறுகிறது. ஒவ்வொரு ஊழிக் (இயற்கைப் பேரழிவுக்) காலத்திலும் இமயமலை யானது உயர்ந்து ஓங்கி வளர்ந்து வருகின்றது என்கிறது திருவிளையாடற் புராணம்.

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், இமயமலையானது ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் ஓங்கி வளர்கிறது என்றொரு புவியியல் அறிவியல் கருத்து பதிவு செய்யப்ட்டுள்ளது.  திருவிளையாடற் புராணம் 2 பாடல்களில் இமயமலையை “ஓங்கல்” என்ற பெயர்ச் சொல்லால் குறிக்கிறது.  ‘செங்கல்’ அனைருக்கும் தெரியும்.  இமயமலையானது ஓங்கி வளரும் கல்லாம்.  அதனால் இமயமலையயை “ஓங்கல்” என்ற பெயரால் புராணம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் அளந்து சொல்லும் அதே கருத்தைத் திருவிளையாடற் புராணமும் பதிவு செய்துள்ளது வியப்பிலும் வியப்பாக உள்ளது அல்லவா?

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்
பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்
உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

---------------------------------------

கற்றவை 

திருவிளையாடற் புராணத்தின் பாடல்கள் மூலமும் உரையும்

புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.

     (இ - ள்.) புரந்த ஆதி வானவர் பதம் - இந்திரன் முதலிய இமையவர் உலகும், போது உறை புத்தேள் - தாமரை மலரில் உறையும் அயனுடைய, பரந்த வான்பதம் - அகன்ற உயர்ந்த சத்தியலோகமும், சக்கரப்படை உடைப்பகவன் -  திகிரிப்படையினையுடைய திருமாலின், வரம் தவாது வாழ் பதம் - மேன்மை கெடாது வாழ்கின்ற பரம பதமும், எலாம் - ஆகிய எல்லாமும், நிலைகெட வரும் ஊழி நாள் தோறும் - அழிய வருகின்ற ஊழிக்காலந்தோறும், அ ஓங்கல் - அத்திருக்கைலாய மலையானது, உரம் தவாது நின்று ஓங்கும் - வலி கெடாது நிலைபெற்று வளரும் 

புரந்தராதி : வடமொழித் தீர்க்க சந்தி. பகவன் ஆறு
குணங்களையுடையவன்; சிவன், திருமால் முதலிய பல கடவுளர்க்கும் இப்பெயர் உரித்து. வரும் ஊழி நாள் எனச் சொற்கள் மாற்றப்பட்டன; வருநாள் நின்று அவ்வூழிதோறும் என வுரைத்தலுமாம்;  உம்மை தொக்கது. 'கைலை மூவுலகும் ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கம்' என முன்னுங் கூறினார்; ஆண்டுக் காட்டிய  'ஊழிதோ றூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலைய'  என்பதனை ஈண்டுங் கொள்க. ஓங்கல் என்பது மலைக்குத் தொழிலாகுபெயர்; அல் : பெயர் விகுதி யென்னலுமாம். (2)

------------

சலிக்கம் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி
கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டேர்
வலிக்கும் பரிமள் ளர்வழங்கொலி வாங்கி நேரே
ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல்.

(இ - ள்.) சலிக்கும் புரவுத் தடம் தேர் உடைத் தம்பிராட்டி - செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடாதகைப் பிராட்டியார், கலிக்கும் பல தூரியம் - ஒலிக்கின்ற பல இயங்களின் ஒலியையும், கைவரை - யானைகளும், தெய்வத் திண்தேர் - தெய்வத் தன்மையையுடைய வலிய தேர்களும், வலிக்கும் பரி - கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், மள்ளர் - வீரர்களும், வழங்கு ஒலி - செல்கின்ற ஒலியையும் வாங்கி நேரே ஒலிக்கும்படி - ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு, ஊழி தோறு ஓங்கும் ஓங்கல் கிட்டினள் - ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற கயிலை மலையை அடைந்தார் எ - று.

தூரியம் அதன் ஒலிக்காயிற்று; தூரியமும் நால்வகைச் சேனையும் ஒலிக்கின்ற வொலி யென்னலுமாம். வலித்தல் - கருதுதல். ஓங்கல்வாங்கி எதிரொலி செய்ய. ஊழி தோறும் ஓங்குதலை.
"ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே"
என்னும் ஆளுடைய நம்பிகள் தேவாரத்தா னறிக; முன்னரும் உரைக்கப் பெற்றது. (26)

------------------------------------------------------------------------------------

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிரொன் றேனையது 
தன்னே ரிலாத தமிழ் - பழம் பாடல்

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் - ஆங்கு அவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிர் ஒன்றேனை அது
தன் நேர் இலாத தமிழ் - பழம் பாடல்

ஓங்கல் = ஓங்கிய மலை, இமயமலை
இடை வந்து = இமயமலையின் இடையே உள்ள திருக்கயிலாயம்
உயர்ந்தோர் தொழ விளங்கி = உயர்வானவர்கள் தொழும்படியாக விளங்கி,
ஏங்கு ஒலி நீர் = அலைகளை வந்து வந்து திரும்பிச் செல்லும் ஒலியை உடைய கடல்நீர்
ஞாலத்து = உலகத்தின்
இருள் அகற்றும் = இருளை அகற்றும்
இப்பாவில் சூரியனுக்கும். தமிழுக்கும் உள்ள இரு ளகற்றுவதாகிய ஒப்புமை கூறி, பின் அவற்றுக்கிடையே யுள்ள வேற்றுமையைக் கூறுகின்றார். (இவ்வாறு கூறுவது வேற்றுமையணி இலக்கணம்)

------------------------------------------

நன்றி =  பாடல் தொகுப்பு உதவி -  தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

Saturday 23 April 2022

மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன்

 மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன் 

மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்

(கீழடி) மணலூர், கூடல், முடத்திருமாறன் பற்றிய தகவல்

செந்தமிழ்  பக்கம் 246

ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும்.  கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன.  அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது.  எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.

பாண்டியன் முடித்திருமாறன் -

குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன்.  ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.

இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5) 

இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன.   இச்செய்தியை,

“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க.  தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும்.  இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள்.   இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர்.  இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)

பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர்.  இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........

-----------------------------------------------

நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்”  அவர்கள்

Sunday 10 April 2022

இராசி என்பதற்கான தமிழ்ச் சொல் “அகை”

இராசி என்பதன் தமிழ்ச் சொல்லா?
அல்லது 
இராசி என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன?

இராசி என்பதற்கான தமிழ்ச் சொல் “அகை”

இராசி என்ற சொல்லை “அகை” என்ற செந்தமிழ்ச் சொல்லால் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  சங்கப்பாடல்களில் இடம்பெற்றள்ள அகை, அகைய, அகைந்து என்ற சொற்களின் பொருட்கள் மேலும் ஆய்விற்கு உரியனவாக உள்ளன.

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 437 -

“இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்,  பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்,  மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம்  தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்”

உரை  -  பருவங்களுள்  உயர்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச்சிறந்த சித்திரை  மாதமும்,  ஒப்பற்ற நாள்மீன்களுள்(நட்சத்திரங்களுள்)  உயர்ந்த சித்திரை நட்சத்திரமும்,  திதிகளுள் உயர்ந்த பௌர்ணமியும், ஆகிய இவைகள் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும்,  வந்து வந்து வழிபடுவாயாக,  ஓர் ஆண்டுக்கு வரையறுத்து,  முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும், அருச்சனை செய்தலால் வரும் பயன் (உன்னை, இந்திரனை) அடையும். 

அன்பன்,
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்,
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்,
மதுரை.
(மேனாள் துணைப் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி)

------------------------------------

திருவிளையாடற் புராணத்தில் “அகை”   -
இந்திரன் பழி தீர்த்த படலம் -  பாடல் வரிசை எண் 437.

இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து  அருச்சித்தோர் வருடம்
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.

நன்றி -   பாடல் பதிவு தமிழ் இணையக் கல்விக்கழகம்  https://www.tamilvu.org/

-------------------------------------------------

சங்கப்பாடல்களில் “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளின் தொகுப்பு -

அகை என்றால் 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர் என்று பொருள்.  அகைதல் என்றால் எரிதல், கிளைத்து எரிதல். அகைத்தல் என்றால் கிளைத்தல், விட்டுப் பிரிதல், செல்லுதல், எழுதல், உயர்த்துதல், வலிய மலர்த்துதல், முறித்தல் போன்ற வினைகளைச் சுட்டும்.

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு - கலி 55/2

கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர - கலி 74/5

அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் - கலி 139/26

கொய் அகை முல்லை காலொடு மயங்கி (கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்) - அகம் 43/9

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10

எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து (தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் ) - அகம் 106/1

பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் - அகம் 106/2

எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை - அகம் 116/1

அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15

அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் - அகம் 277/14

கண் அகை இளம் குழை கால் முதல் கவினி (தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற) - அகம் 283/10

குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் - அகம் 295/2

கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய/இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி - அகம் 339/8,9

மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப/உறை கழிந்து உலந்த பின்றை பொறைய - அகம் 345/13,14

அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் - அகம் 351/7

குப்பை கீரை கொய் கண் அகைத்த/முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10

நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப/பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - நற் 5/4,5

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய/நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - நற் 172/2,3

எரி அகைந்து அன்ன வீ ததை இணர - நற் 379/3

வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு/அழுத கண்ணள் ஆகி - குறு 366/5,6

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் (யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்) - மலை 429

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை - பொரு 159

கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ - பதி 25/12

கயன் அகைய வயல் நிறைக்கும் - மது 92

நன்றி - “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in

-------------------------------------------------

Monday 4 April 2022

சித்திரா பௌர்ணமி வழிபாட்டுச் சிறப்பு

சித்திரை 3 (16.04.2022) சனிக்கிழமையன்று சித்திரா பௌர்ணமி 

சித்திரா பௌர்ணமி

வழிபாட்டுச் சிறப்பு

சித்திரா பௌர்ணமியின் சிறப்பைச் சிறப்பாகத் திருவிளையாடற் புராணம் எடுத்துக் கூறியுள்ளது.

பருவகாலங்களில்  சிறந்தது வேனில் காலம், 
12 மாதங்களில் சிறந்தது “வான்தகர் மாதம்”  (தகர்  என்றால் ஆடு என்று பொருள், வான் தகர்  என்றால் வானிலுள்ள ஆடு, அதாவது மேஷராசி, சித்திரைமாதம் என்று பொருள்),
நட்சித்திரங்களில் சிறந்தது சித்திரை நட்சத்திரம்,
திதிகளில் சிறந்தது பூரணை( பௌர்ணமி)......

“சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், சித்திரா பௌர்ணமி நாளன்று மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டு வணங்கினால் வருடம் 365 நாட்களும் வணங்கிய பலன் கிடைக்கும்” என்று அருள்மிகு சோமசுந்தரேசுவரர் இந்திரனுக்கு அருளிச் செய்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   இதன்படியே தேவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் சித்திராபௌர்ணமி நாளன்று மதுரைக்குவந்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேசவரரை வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.   இவ்வாறு வணங்கிய இந்திரன் சிவபெருமானிடம் “உனது அடியார்களுள் ஒருவனாக அடியேனும் இருக்க அருளிச் செய்ய வேண்டும்” என வரம் வேண்டிப் பெற்றுள்ளான்.   

    இந்திரன் முதற்றான தேவர்கள் போல், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரின் அடியார்களாகிய நாமும் வரும் ஸ்ரீ சுபகிருது வருடத்தில், சித்திரைமாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்திரா பௌர்ணமி (சித்திரை 3(16.04.2022) சனிக்கிழமை) நாளன்று வழிபட்டு வேண்டிய வரங்கள் பெறுவோம்.  அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரேசுவரரின் அடியாராய் வாழ்ந்து உய்வடைவோம்.

அன்பன்,
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்,
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்,
மதுரை.
(மேனாள் துணைப் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி)

---------------------------------------------------------

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 437 -

“இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்,  பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்,  மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம்  தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்”

உரை  -  பருவங்களுள்  உயர்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச்சிறந்த சித்திரை  மாதமும்,  ஒப்பற்ற நாள்மீன்களுள்(நட்சத்திரங்களுள்)  உயர்ந்த சித்திரை நட்சத்திரமும்,  திதிகளுள் உயர்ந்த பௌர்ணமியும், ஆகிய இவைகள் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும்,  வந்து வந்து வழிபடுவாயாக,  ஓர் ஆண்டுக்கு வரையறுத்து,  முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும், அருச்சனை செய்தலால் வரும் பயன் (உன்னை, இந்திரனை) அடையும். 

------------------------------------

திருவிளையாடற் புராணம் 
வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

“சித்திரை மதியிற் சேர்ந்த சித்திரை நாளிற் றென்னன்
மைத்திரண் மிடற்று வெள்ளி மன்றுளாற் களவு மாண்ட
பத்திமை விதியிற் பண்டம் பற்பல சிறப்ப நல்கிப்
புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்த லுற்றான்.”
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1289.)

சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் தென்னன்  மைத்திரள் மிடற்று வெள்ளி மன்று உளாற்கு களவு மாண்ட பத்திமை விதியில் பண்டம் பலபல சிறப்ப நல்கிப்  புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்தல் உற்றான்.

உரை  -  அபிடேக பாண்டியன், சித்திரைத் திங்களில் வந்த  சித்திரை நாளில் கருமை மிக்க மிடற்றினையுடைய வெள்ளியம்பல வாணனுக்கு,  அளவிறந்த அன்பினால், ஆகம நெறிப்படி,  பூசைப் பொருள்கள் பலவற்றைச்  சிறக்க அளித்து, போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கும் பூசையை நடாத்தத் தொடங்கினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.

-------------------------------------------------

திருவிளையாடற் புராணம்
இந்திரன் பழி தீர்த்த படலம் 
பாடல்கள் -

435.
ஐய நின் இருக்கை எல்லைக்கு அணியன் ஆம் அளவின் நீங்கா
வெய்ய என் பழியினோடு மேலை நாள் அடியேன் செய்த
மையல் வல் வினையும் மாய்ந்து உன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவும் உரியன் ஆனேன் சிறந்த பேறு இதன் மேல் யாதோ.
436.
இன்ன நின் பாதப் போதே இவ்வாறே என்றும் பூசித்து
உன் அடியாருள் யானும் ஓர் அடித் தொண்டன்  ஆவேன்
அன்னதே அடியேன் வேண்டத் தக்கது என்று அடியில் வீழ்ந்த
மன்னவன் தனக்கு முக்கண் வரதனும் கருணை பூத்து.
437.
இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து  அருச்சித்தோர் வருடம்
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.
438.
துறக்க நாடு அணைந்து சுத்த பல் போகம் துய்த்து மேல் மல பரி பாகம்
பிறக்க நான் முகன் மால் முதல் பெரும் தேவர் பெரும் பதத்து ஆசையும் பிறவும்
மறக்க நாம் வீடு வழங்குதும் என்ன வாய் மலர்ந்து அருளி வான் கருணை
சிறக்க நால் வேதச் சிகை எழு அநாதி சிவபரம் சுடர் விடை கொடுத்தான்.

நன்றி - திருவிளையாடற் புராணம் பாடல்கள் தொகுப்பு உதவி --
தமிழ் இணையக் கல்விக்கழகம்  https://www.tamilvu.org/

-------------------------------------------------

சங்கப்பாடல்களில் “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளின் தொகுப்பு -

அகை என்றால் 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர் என்று பொருள்.  அகைதல் என்றால் எரிதல், கிளைத்து எரிதல். அகைத்தல் என்றால் கிளைத்தல், விட்டுப் பிரிதல், செல்லுதல், எழுதல், உயர்த்துதல், வலிய மலர்த்துதல், முறித்தல் போன்ற வினைகளைச் சுட்டும்.

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு - கலி 55/2
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர - கலி 74/5
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் - கலி 139/26
கொய் அகை முல்லை காலொடு மயங்கி (கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்) - அகம் 43/9
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து (தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் ) - அகம் 106/1
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் - அகம் 106/2
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை - அகம் 116/1
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் - அகம் 277/14
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி (தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற) - அகம் 283/10
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் - அகம் 295/2
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய/இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி - அகம் 339/8,9
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப/உறை கழிந்து உலந்த பின்றை பொறைய - அகம் 345/13,14
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் - அகம் 351/7
குப்பை கீரை கொய் கண் அகைத்த/முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப/பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - நற் 5/4,5
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய/நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - நற் 172/2,3
எரி அகைந்து அன்ன வீ ததை இணர - நற் 379/3
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு/அழுத கண்ணள் ஆகி - குறு 366/5,6
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் (யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்) - மலை 429
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை - பொரு 159
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ - பதி 25/12
கயன் அகைய வயல் நிறைக்கும் - மது 92

நன்றி - “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in

----------------------------------------------------

Sunday 3 April 2022

தமிழ்ப் புத்தாண்டு விழா, திருவிளையால் புராண ஆராய்ச்சி மையம்

தமிழ்ப் புத்தாண்டு விழா

திருவிளையால் புராண ஆராய்ச்சி மையம்

சுபகிருது வருடம், சித்திரை 1 (14.04.2020) 

தலைமை -- காசிஸ்ரீ, முனைவர், கி. காளைராசன்

தினமலர் செய்தி -
மதுரை : திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா மதுரையில் நடந்தது.   

அழகப்பா பல்கலை முன்னாள் துணைப் பதிவாளர் காளைராஜன் தலைமை வகித்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.விக்ரம் கல்லுாரிகள் குழும தலைவர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:
    சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. சூரியன் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளில் தமிழ்ப் புத்தாண்டு துவங்குகிறது. இதற்கு திருவிளையாடல் புராணம், நக்கீரர் இயற்றிய நெடுநெல்வாடையில் ஆதாரம் உள்ளது. தெய்வம், தமிழ் இணைந்ததுதான் ஹிந்து மதம் என்றார்.
    தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் மலர்விழி மங்கையர்க்கரசி, தருமை ஆதீனப் புலவர் குருசாமி தேசிகர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிறுவனர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், ஆன்மிக நன்னெறி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் பங்கேற்றனர். செயலாளர் கண்ணன் பஞ்சாங்கம் வாசித்தார். செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3007850