Wednesday, 4 December 2019

கீழடி - புதையுண்டுள்ள நகரம் எப்போது அழிந்தது? எப்படி அழிந்தது?

கீழடி -
கூடல் என்ற மதுரை 
எப்போது உருவாகியது ? எப்போது அழிந்தது ?


கீழடியருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது, கைவிடப்பட்ட பண்டைய கூடல்  என்ற மதுரை என்பது எனது கருத்து.

புதையுண்டுள்ள இந்த நகரத்தின் ஈமக்காடானது கொந்தகை அருகே சாலையின் ஓரத்தில் உள்ளது என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிடுகிறார்.  இங்கே ஏராளமான முதுமக்கள்தாழிகள் உள்ளன.  இது புதையுண்டுள்ள நகரம் உயிருடன் இருந்தபோது இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்காடு ஆகும். இந்த ஈமக்காட்டில் வரும் ஆண்டில் (2020)  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவுள்ளன என அறிகிறேன்.

இந்த ஈமக்காட்டில் பழந்தமிழரின் பெயர்கள் அடங்கிய முதுமக்கள் தாழிகள் நிறையக் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளன.   நடைபெறவுள்ள இந்த ஆய்வின் வழியாகப் பழந்தமிழரின் உணவுப் பழக்கவழங்களும், நீத்தார்வழிபாட்டு முறைகளும் அறிவியல் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன்.

புதையுண்டுள்ள இந்நகரில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இந் நகரம் அழிந்திருந்தால்,  இங்கு வாழ்ந்த மக்களும் அவர்களது உடைமைகளும் ஒன்றுசேரப் புதையுண்டு போயிருக்க வேண்டும்.  ஆனால் மக்களின் எலும்புகள் ஏதும் இந்நகரில் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்நகரம் அழியும்போது இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

இந்நகரம் மண்ணால் புதையுண்டு அழிந்திருப்பதற்கு இரண்டு காரணிகள்தான் இருக்கமுடியும். 1) கடல்கோள் அல்லது சுனாமி (இதற்குத் திருவிளையாடல் புராணத்தில் சான்றுகள் உள்ளன. 2) வைகை யாற்றுப் பெருக்கு (வைகை யாற்றுப் பெருக்கிற்கு இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.  ஆனால் ஆற்றுப் பெருக்கால் நகரம் ஏதும் அழிந்ததாகக் குறிப்புகள்  இல்லை).

இந்த நகரம் எவ்வாறு அழிந்தது? கடல்கோளாலா அல்லது ஆற்றுப் பெருக்காலா? என இதுநாள்வரை அறிவியல் அடிப்படையில் ஆராயப்படவில்லை.  முறையினா அறிவியல்  ஆய்வுகள் நடைபெற்று  முடிவுகள் தெரியவரும்போதுதான், இந்நகரம் அழிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.  அதுவரை பண்டைய புராணக் கருத்தைப் புளுகு என்று கற்பனையாகக் கருதி ஒதுக்கிவிட இயலாது.


கடல்கோளால் இந்நகரம் அழிவைச் சந்தித்திருந்தால்,  கிழக்கிலிருந்து வந்த கடல்நீரினால் இங்கு வசித்த மக்கள் மேற்குநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருப்பர்.  எனவே அவர்களது உடல்கள் இந்த நகருக்கு மேற்கே புதையுண்ட கிடக்க வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு மேற்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கிலிருந்து பாய்ந்து வரும் வைகை ஆற்றுப்பெருக்கினால்  இந்நகரம் அழிந்திருந்தால்,  இந்நகரில் வசித்தவர்களின் உடல்கள் கிழக்கே அடித்துச் செல்லப்பட்டு இந்த நகருக்குக் கிழக்கே புதையுண்டு கிடக்கும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்குக் கிழக்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

அப்படி எந்தவொரு தடயமும் இதுநாள் ஆராயப்படவில்லை. இங்கு படிந்துள்ள மண் அல்லது மணற் திட்டுக்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் படிந்துள்ளனவா? அல்லது மேற்கிலிருந்து கிழக்காகப் படிந்துள்ளனவா? எனக் கண்டறியப்பட வில்லை. 

மேலும், இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களோ மிருகங்களோ இறந்துபோன தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் எலும்போ அல்லது கால்நடைகளின் எலும்போ கண்டறியப்பட வில்லை..
எனவே, திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி,  இந்நகரில் வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னரே, இந்நகரம் அழிந்துள்ளது என்பது உறுதி.


நகரின் காலக்கணிப்பு
பண்டைய ஆலவாய் என்ற மதுரை நகரம் அழிந்ததை ஊழிக்காலம் என்று புராணமும் பரிபாடலும் கூறிப்பிடுகிறன.   ஊழிக்குப் பின்னர் கலிகாலம் தோன்றி 5112 ஆண்டுகள் ஆகின்றன என்று பஞ்சாங்கக் கணிப்பு உள்ளது.  ஊழிக் காலத்திற்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் கூடல் என்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
எனவே, இவற்றின் அடிப்படையில் கீழடி யருகே புதையுண்டுள்ள இந்நகரம் (கூடல் என்ற மதுரை) தோன்றி 5112 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஆலவாய் என்ற மதுரை இருந்த இடம் கண்டறியப்படுகிறது.  அந்தத் தொன்மையான ஆலவாய் என்ற மதுரை இருந்த இடத்தில் புதிதாக மதுரை நகர் உருவாக்கப்படுகிறது. 
கூடல் என்ற மதுரையில் இருந்த மக்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரைக்கு சென்று குடியேறுகின்றனர்.  அதனால் இந்தக் கூடல் என்ற மதுரை நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறிவிடுகிறது.

பின்னாளில்,  மற்றொரு கடல்கோள் (சுனாமி) உண்டாகியுள்ளது.  இந்தக் கடல்கோளில்  இப்போதிருக்கும் மதுரையின் எழுகடல்தெருவில் உள்ள வாவி (குளம்) வரை கடல்நீர் வந்து சேர்ந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.  எழுகடல்தெருவரை மட்டுமே வந்து திரும்பிய இந்தக் கடல்வெள்ளத்தால்  இன்றிருக்கும் மதுரை அழியவில்லை.  ஆனால் மதுரைக்குக் கிழக்கே யிருந்தன எல்லாமும் கடல்வெள்ளத்தில் சிதைந்து அழிந்து போயுள்ளன.

இந்தக் கடல்கோளால்தான் (சுனாமியினால்தான்) கீழடியருகே கைவிடப்பட்ட கூடல் என்ற  மதுரைநகரும் அழிந்து புதைந்துள்ளது.  புதையுண்டுள்ள நகரம் (கூடல் என்ற மதுரை) அழிந்த காலம் இன்னதென்று  தெரியவில்லை.  தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தால்தான் உண்டு.

ஆலவாய் என்ற மதுரை போற்றுவோம்.
கூடல் என்ற மதுரை போன்றுவோம்,
மதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment