Monday, 4 November 2019

கிருதுமாலில் தண்ணீர்

40 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் அவலம்: 
கிருதுமாலில் தண்ணீர் 
ஓடுவது எப்போது?

தினகரன் செய்தி -  
மதுரை: மதுரையின் இரண்டாவது தொன்மையான கிருதுமால் நதி தண்ணீர் இன்றி, 40 ஆண்டுகளாக வறண்டுள்ளது. நகர் பகுதியின் நிலத்தடி நீராதாரமான இந்த நதியில் வைகை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.


மதுரையில் வைகை நதிக்கு அடுத்து, பெரிய நதியாக கிருதுமால் நதி ஓடியுள்ளது. இந்த நதி தொன்மையான நதியாக இருந்துள்ளது. வைகை நதி மதுரையின் வடபகுதி மக்களுக்கும், விவசாயத்திற்கும் கைகொடுத்தது. கிருதுமால் நதி தென்பகுதி மக்களுக்காக உருவானது. இந்த நதி நாகமலை அருகே, துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகி  அச்சம்பத்து, விராட்டிபத்து, கொக்குளப்பி,  பொன்மேனி, எல்லீஸ் நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரையை கடந்து, சிவகங்கை மாவட்டம் கரிசல்குளம், கொந்தகை கண்மாயை அடைந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழவலசை என்ற இடத்தில், குண்டாற்றில் கலக்கிறது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 200 கிமீ தூரம் கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதி மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நதிக்கு தேவையான தண்ணீர் நாகமலை மற்றும் வைகை ஆற்றில் இருந்து துவரிமான் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது. இதனால் இந்த நதி வற்றாத நதியாக முன்பு ஓடிக்கொண்டிருந்தது. வைகையில் வெள்ளம் வரும்போது, இந்த நதியிலும் வெள்ளம் ஓடியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால் நதி, இப்போது சீரழிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மட்டும் இந்த நதி முன்பு 120 அடி அகலத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளது. காலம் செல்லச்செல்ல நதியின் இரண்டு கரையும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, தற்போது குறுகி விட்டது. கிருதுமால் நதி முகப்பு பகுதியில் தண்ணீராகவும், மதுரை நகருக்குள் வரும்போது சாக்கடையாகவும் ஓடிக்கொண்டுள்ளது. மதுரை நகரில் உள்ள கழிவுகளை மாநகராட்சி இந்த நதியில் கலந்துவிடுகிறது. பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், அழகப்பன் நகர், கீரைத்துறை, சிந்தாமணி போன்ற பகுதிகளில் உள்ள, சிறு தொழிற்சாலைகளின் கழிவு, சாயப்பட்டறை, தோல் பட்டறை கழிவு, ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சிக்கழிவுகள் நேரடியாக கலக்கின்றன. இந்தநதி முன்பு மதுரை தென்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இதில் தண்ணீர் ஓடும் போது மதுரையின் மையப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்த நிலையில் இருந்தது. இந்த நதியின் ஆக்கிரமிப்பை அகற்ற அரசும் முன்வரவில்லை. இதனால் மதுரை நகரின் நிலத்தடி  நீர் மட்டம் தற்போது 700 அடிக்கு கீழ் சென்றுள்ளது.
2004ல் இந்த நதியை மேம்படுத்த ரூ.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள, நிலவள மேம்பாடு மூலம் ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த நதியை சுத்தம் செய்கிறோம் என்றனர். அதேபோன்று, மாநகராட்சி சிறப்பு நிதியாக ரூ.250 கோடி ஒதுக்கியதாக  தெரிவித்தது.  இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தும், நதியை சுத்தம் செய்யவோ, ஆக்கிரமிப்பை அகற்றி, அதனை பராமரிக்கவோ அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மறுக்கிறது. காரணம் பாதாளச்சாக்கடை கழிவுநீரை மாநகராட்சி பல இடங்களில் கிருதுமால் நதியில் விட்டுள்ளது. கிருதுமால் நதி அசுத்தம் ஆவதற்கு மாநகாரட்சிதான் மிகப்பெரிய காரணம். தற்போது வடகிழக்கு பருவமழையால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் செல்கிறது. ஆனால், தொன்மையான கிருதுமால் நதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் கனகவேல்பாண்டியன், முத்துகருப்பன் ஆகியோர் கூறுகையில், ‘‘மதுரை நகர் பகுதியில் முன்பு நிலத்தடி நீராதாரமாக இருந்த கிருதுமால் நதி, தற்போது தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. வைகையில் தற்போது மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. வீணாக ஆற்றில் செல்லும் நீரில் ஒரு பகுதியை கிருதுமால் நதியில் திருப்பிவிட்டால், நகரில் நிலத்தடிநீர் மட்டம் உயரும். இந்த நதியில் ஆண்டுக்கொரு முறை தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்த நதியில் உள்ள 3 மாவட்ட பாசன பகுதியிலும், பாசனம் நடைபெறும். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நன்றி - http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=538317
 2019-11-04@ 11:42:04

No comments:

Post a Comment