Sunday 20 October 2019

தெய்வம் தொழும் தமிழர்

தெய்வம் தொழும் தமிழர்


தூங்கி எழும்போது தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்கி எழுகிறாள் - என்கிறார் திருவள்ளுவர். 
சங்கத் தமிழர் இயற்கையை வழிபட்டார்களா? தெய்வங்களையும் வழிபட்டார்களா?

கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிட வில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது.  எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே தெய்வம் என்ற சொல் 42  இடங்களில் இடம் பெற்றுள்ளது.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர். 
தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

இதில் உள்ள சங்கப்பாடல்களில் மட்டுமே 42 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. கடவுள் என்ற சொல் 93 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

தெய்வங்களின் பெயர்களையும் தனித்தனியாகத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும் இருக்கும்.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல்மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும்.

நாம் நமது முப்பாட்டன்கள் வழி நின்று நமது கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ள 42 பாடல்வரிகளும் இணைப்பில் உள்ளன. 
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)

---------------------------------------------------
எட்டுத்தொகை நூல்களில் 34 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி - குறு 263/4

அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4

அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40

தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் - கலி 124/18
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் - கலி 132/21

கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
----------------------------------------------

பத்துப் பாட்டில் 8 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
----------------------------------------

No comments:

Post a Comment