Showing posts with label கூடல். Show all posts
Showing posts with label கூடல். Show all posts

Monday, 26 January 2026

கூடல் மாநகர் கோயில்கள் எங்கெங்கு உள்ளன

கூடல் மாநகர் கோயில்கள்  எங்கெங்கு உள்ளன


கீழடியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் உள்ள இடத்தில் புதைந்துள்ள நந்தி.
---------

கூடல் மாநகர் கோயில்கள்  எங்கெங்கு உள்ளன என்பதற்குத் தெளிவான பதிகல்கள் கல்லாடத்தில் உள்ளன.


கீழேயுள்ளது திரு நூ த லோ சு ஐயா அவர்களின் பதிவு.

N D Logasundaram

9 Oct 2019, 20:13:52
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Kanaka Ajithadoss, Suresh Kumar, Thenee MK, thirumurai, Raji M, Muthu muthali

நூ த லோ சு
மயிலை
 இந்த கூடல் மாநகருகு   கோயில்கள் எப்படி எங்கெங்கு இருந்தன என்பது காட்டும் சீரிய தமிழ் மொழி நூல் >> கல்லாடம் >> ஏறக்குறைய 10 ம் நூற்றாண்டு வாழ்ந்ததாக கருதப்படும் கல்லாடர் எனும் 'தமிழ் கெழுகூடல்' நகரில் வாழ்ந்திருக்கக்கூடிய புலவரின் வாய்வழி பெற்ற வரிகள் இவை கற்பனை கலவாத நூறு சதம் தமிழன் தன் கண்முன் கண்ட காட்சிகள் விளக்கும்  வரிகள்

(1) வடதிருஆலவாய் // (2) திருநடுவூர்
(3) வெள்ளியம்பலம் // (4) நள்ளாறு // (5) இந்திரை//
(6) பஞ்சவனீச்சரம் // அஞ்செழுத்து அமைத்த
(7) சென்னிமாபுரம் // (8) சேரன்திருத்தளி                             25
(9)கன்னிசெங்கோட்டம் // (10)கரியோன்திருவுறை
விண்ணுடைத்(து) உண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறிதிரைக் கடலுள் மானக் கவிழ்ந்த
களவுடல்  பிளந்த ஒளிகெழு திருவேல்
பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்              30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவிஅம் சாரல் ஒரு (11)பரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடல்எம்  பெருமான்
கூடல் என தனியாக கோயில் ஏதும் இல்லை எல்லாம் சூழ்ந்து அமைந்துள்ள கூடல் நகரம் 

மிகவும் பின்னாளில் இயற்றப்பெற்ற ஓர் புராணத்துள் சொக்கப்பெருமான் ஓர் பாம்பினை எறிந்து நகர எல்லையை வளைத்து விளக்கினான் என்றும் நான்மாடக் கூடலாகிய படலத்தில் நான்மாடம்  (பிழை) நாண்மாடம் = நால்மாடம் = தொங்குகின்ற மாடங்கள் (balcony)  உடைத்த கட்டிடங்கள் படைத்ததாய்  நன்கு வளர்ந் நகரம் ஆகியது எனவரும் என்பது வேறு  
-----------

வடதிரு ஆலவாய் 
இதனில் (வட=ஆலமரமும் வடக்கு நோக்கில் இருந்ததும் ஆகலாம் - ஆலம் எனும் சொல் வழி ஓர் நீரோடும் துறையின்  வாயிலில் = வையை அருகு  அமைந்தது ஆகும்) சிவனுறை கோயில் தேவாரம் (ஆவணம்)  குறிப்பிபடும் தேவகுலம் (இறையனார் களவியலூரை சொல் ) ஆகும் 

வெள்ளியம்பலம் = வெள்ளி எனும் ஓர் மாழை யால் செய்த கூறை ஏற்ற சிவனின் மன்றம் என பொருட் காட்ட தயக்கம் உள்ளது .  ஏனெனில் வெள்ளில் எனும் ஓர் வகை வில்வ மரம் அதன் கீழமைந்த  அம்பலம் எனும்  எளிமையே சிறப்பு என்பேன் ஆடல்வல்லான் உருவ வழிபாடு கொண்டது என பொருள்  காட்ட பாடல் எண்  33 இல் "வெள்ளி அம்பலத்து துள்ளிய பெருமான்" எனபதால் அறியமுடியும் அப்போதும் கடை லகர மெய் குறைந்தது எனபது கருத்து   வெள்ளி(ல்) தான் மூலம் என்பேன் மேலும்  கால் மாறி ஆடிய கருத்து பிற்கால புராணம் சார்ந்தது எனல் வேண்டும்   
 
பஞ்சவனீச்சரம் //  சென்னிமாபுரம் // சேரன்திருத்தளி     இம்மூன்றும் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றில் ஆண்ட மன்னர்களின் பெயரால் எழுந்தவை. ஈச்சரம் = சிவன் / புரம் பாதுகாப்பு அமைந்த இடம்/ இவர்கள் கட்டினோர் பெயரால் அமைந்தன என்பதுதான் எளிமையான கருத்து   ஏனைய புறத்த பொருள / பஞ்சவன்=பாண்டியன் // சென்னி = சோழன் (காவிரியின் அருகும் பரந்தும் ஆன புலம்  // சேரன் >>  மேலை  தமிழ் நாட்டினன்// தளி கருங்கல்லால் அமைந்தது எனக்  காட்டக்கூடும் 

இந்திரை / கன்னி செங்கோட்டம்  = தமிழகமெங்கும் (ஏன் நாடெங்கிலும் கூட) எண்ணிக்கையால் மிக்கும் பரந்தும் செறிந்தும்  காணும் பலவித தாய் தெய்வ உருவ வழிபாடு கொண்டவை என்பதே பொருந்தும் 

திருநடுவூர் = பொருள் வெளிப்படை நகரின் நடுவண் அமைந்தது - இங்கு இறை சிவனே ஆகலாம் 

நள்ளாறு = 'நள்' எனும் தனித்த இரவுஓசை (இரீங்காரம்) மட்டும் சிறப்பக்கேட்க நகரின் ஒருபக்கமாக இருந்து சலசல என எழுப்பும் ஒலியின்றி நீரோடும் ஓர் புழை அருகு அமைந்த கோயில் ஆகவேண்டும் இறை = சிவன் தேவார காலத்திலேயே ஞான சம்பந்தரால் பாடப்பெற்றது
 இக்கோயில் பின்னாளில்  எனோ மறைந்தது போலும் அதனால் தான் சேக்கிழார் பெருந்தகை தன் அறியாமையால் (மன்னிக்க இது தனி நபர் போற்றாது பொய்யை பொய் மெய்யை மெய்யாகவே காட்டும்  நிலை) தன் புராணத்தில்  பனைஏடுகளை தீயிலிடும் வாதத்தில் முன்பே பாடிய பாடலின் சுவடியில் கயிறு சார்த்தி பெற்ற பாடலை தீயிலிட்டர் = என  நடக்காத ஒன்றை (புராண) தேவையால் புகுத்தினார் ஆனால் ஞானசம்பந்தர் பதிகத்தின் 11 ஆம் பாடலில் வெகு தெளிவாகவே ஐயமின்றி "நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன் கொற்றவன் எதிரிடை எரியில் இட இவை கூறிய " என மன்னன் எதிரிலேயே நடக்கும் வாதத்தின் போதே நேரிடையாக இயற்றிய பதிகமாகத்தான் ஆவணச் சான்று காட்டுகின்றது அதுவன்றி திருஆலவாயும் திருநள்ளாறும் என இரு தலங்களை இணைத்து பாடிய ஓர் பதிகமும் உள்ளது அதனிலுள் மிக தெளிவாக அருகேயுள்ள கூடலில் உள்ளது போல் (ஒலியும் நடமாட்டமும்)  இல்லாது 'நள்- எனும் ஓசையுடன் ஆற்றின் ஓசையின்றி அமர்ந்ததாகவே பாடப் பெற்றுள்ளது காணலாம் ஆக நள்ளாறு சற்று தூத்தே ஓர் ஒல்லையூரில் அமைந்ததும்  ஆகலாம் 

கல்லாடர் வழி உள்ளது நள்ளாறு (10 ம் நூற்றாண்டு )
சேக்கிழார் வழிதான்  அறியாதது (12  ம் நூற்றாண்டு 
 சம்பந்தர் கல்லாடருக்கும் முந்தியவர் 
இவர் வைக்கும் சான்று இரண்டு உள்ளன 
எனவே உள்ளதுதான் சிறக்கும் 
இல்லாதது அய்யப்பாடுடையதான் இழியும்  

 நள்ளாறு எனும் பெயரில் ஆறுகள் சிலஇடத்தில் காணக்கூடும் என்பதால் குறைந்தது இரு சம்பந்தரின் நள்ளாற்றுப் பதிகங்கள் ( 1-7 நட்டபாடை) + ( 2-7 சாதாரி) பாண்டிய நாட்டினைச் சார்ந்ததுதான் சோழ நாட்டினது அல்ல (காரைக்கால்). இந்த கருத்துரை 52 ஆண்டுகளுக்கு முன் நான் மிக்க இளைய வயதில் திருமணம் ஆகாதவனாக இருந்தபோது சைவசித்தாந்த மகாசாமாசத்தின் பருவவெளியீடான 'சித்தாந்த'த்தில் வெளிவந்தது 
 (இங்கு இப்போது வரைந்ததும் ஓர் மீள்பதிவே புதியோருக்காக மற்றோர்க்கு நினைவூட்டல் என்க) 

கரியோன் திருஉறை  >> இன்றைய நகரத்தில் உள்ளது ஆழ்வார் குறித்ததாக்க காட்டடப்படும் ஓர் கூடல் அழகர் மிகப் பழமையானதாக தெரியவில்லை. திருமாலிருஞ்சோலை என சிறிதே  தூரத்திருந்தும் அந்த அழகரே பழமை தொடர்பும் பேர் பெற்றும்  விளங்குவதால் கல்லாடப் பாடல் காட்டுவது அதுவே எனலாம்.

திருப்பரங்குன்றம் =  இன்று  வடமேற்கு தென் கிழக்காக ஓடும் வையை ஆற்றினுக்கு தென் நோக்கு  10  கிமீ. ரில்  பலர் அறிந்து  பேர் பெறறும்   இயற்கையான ஓர் பாறைக் குடைவறைக் குகையிலும்  உள்ள முருகன்தலம் திருமுருகாற்றுப்படை குறித்த ஓர் படை வீடு சுந்தரரும் தன தேவாரத்தில் குறித்துள்ளார். மற்றவைகளுக்கு இல்லாது மேற்கண்ட கல்லாடப்பாடலில் முருகனை 6 வரிகளில் விளக்கியமை காண்க  
பல நூல்களில் சுட்டப்பெறும் பீடுடையதே.

Sunday, 16 November 2025

கீழடி அல்ல, அது செழியன் ஆண்ட கூடல்

கீழடி அல்ல,  

அது செழியன் ஆண்ட கூடல் என்ற மதுரை 


கூடல் என்ற மதுரையைச் செழியன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான்.



இவன் கரடி போன்றவனாம்.  

கரையான் போன்றவர்கள் சிறுசிறு சிற்றரசர்கள்.   

கரையான் மண்ணால் புற்று கட்டி அதன் உள்ளே வாழும்.

கரையான் போன்று இந்தச்  சிற்றரசர்கள் பெரிதும் முயன்று மண்-கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.

கரடி போன்ற  செழியன்  தனது வலிமையான நகம்போன்ற வேல்-படையால் அந்த மண்-கோட்டைகளை அழித்தான். 

அந்த மண்-கோட்டைகளுக்குள் உள்ளே இருந்த செல்வத்தை எடுத்துச் சென்றுவிட்டான்.  

ஆனாலும் அவனுக்குத் திருப்தி இல்லை.


சேரநாட்டில் மலை மேல் முசிறி என்ற நகரம் உள்ளது.  

அதன் அருகே சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது.  

அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.  

அந்த நுரைகள் சிதறுமாறு மரக்கப்பல்கள் செல்கின்றன.  

அந்தக் கப்பல்களில் யவனர்கள் சேரநாட்டிற்கு வந்து வணிகம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர்.  

இந்த முசிறி நகரத்தில் வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால், எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது.


கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், 

யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்றான்.

அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.

செழியன் ஆண்ட கூடல் நகரம் கீழடியின் கீழே புதைந்து உள்ளது.

அந்தக் கூடல் நகரைத் தொல்லியலாளர்கள் தோண்டிக்  கண்டறிந்துள்ளனர்.

கூடுதலான விவரங்களுடன்  படங்களையும் இணைத்துள்ளேன்.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post.html 

Saturday, 23 April 2022

மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன்

 மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன் 




மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்

(கீழடி) மணலூர், கூடல், முடத்திருமாறன் பற்றிய தகவல்


செந்தமிழ்  பக்கம் 246

ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும்.  கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன.  அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது.  எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.

பாண்டியன் முடித்திருமாறன் -

குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன்.  ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.

இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5) 

இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன.   இச்செய்தியை,

“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க.  தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும்.  இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள்.   இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர்.  இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)

பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர்.  இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........

-----------------------------------------------

நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்”  அவர்கள்

Wednesday, 11 March 2020

அகரம் தமிழரின் சிகரம்

அகரம் தமிழரின் சிகரம் 

தினகரன் செய்தி - கீழடி அருகேயுள்ள அகரத்தில் அகழாய்வு பணிகள் இன்று (12.03.2020)  துவக்கம்.


திருப்புவனம்: கீழடி அருகே அகரம் கிராமத்தில் அகழாய்வு பணிகள் இன்று துவங்க உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி ஜன. 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியை தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொந்தகையில் தற்போது மயானத்திற்கு அருகே அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது. மணலூர் அருகே கழுகேர்கடை ஊராட்சியை சேர்ந்த அகரம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடத்தை தொல்லியல் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர்.
அகரம் துவக்கப்பள்ளி அருகே உள்ள ஊருணிக்கு எதிரே அக்ரஹாரம் என்றும், கோட்டை மேடு என்றும் கிராமத்தினரால் அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆய்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நேற்று கிராமத்தினர் கழுகேர்கடை ஊராட்சி தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பூமி பூஜை நடத்தி ஆயத்தப்பணிகளை துவக்கினர். இன்று முதல் அகழாய்வுப்பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570636
---------------------------------------------------


அகரம் தமிழரது சிகரம் - பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும். 

கோட்டைக் கருப்பணசாமி   (https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும். 

கூடல் மாநகரில் பாண்டியரின் அரண்மனை இருந்த இடமே அகரம் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும் ஆகும்.  தொல்லியல் ஆய்வுகள் சிறக்கட்டும்.
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post_25.html

தொல்தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்மாநகர் போற்றவோம்,
அகரம் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Monday, 30 December 2019

கீழடி - கூடல் என்ற கைவிடப்பட்ட நகரம்

கீழடி - ஓர் கைவிடப்பட்ட நகரம்

மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை கொந்தகை மணலூர் அகரம் என்ற கிராமங்களில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  இங்கே பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.  சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த மத்திய மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரைப் போற்றுவோம், அவர்களுக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

மணலூர்க் கண்மாய்க்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் முதன்முதலாகத் தொல்லியல் ஆய்வைத் திரு அமர்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார். 

மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  புராண காலத்தில், இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு  மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.   இது மணலூர் எனப் பழைய திருவிளையாடலிலும், “மணலூர் புரம்” என வடமொழி வியாசபாரதத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

மணவூரும் மதுரையும் - 
உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு  கடல்கோள் (பெருஞ் சுனாமி) உண்டாகி மதுரை எழுகடல்தெருவரை வந்து அழித்துள்ளது.  இந்தக் கடல்கோளிலால் மணவூரை மண்மூடி விட்டது.   மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான்.  மணவூரிலிருந்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பெற்ற (இன்றைய) மதுரை நகரில் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)


சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது. 

மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.  மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.  இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு வடக்கே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்

Wednesday, 4 December 2019

கீழடி - புதையுண்டுள்ள நகரம் எப்போது அழிந்தது? எப்படி அழிந்தது?

கீழடி -
கூடல் என்ற மதுரை 
எப்போது உருவாகியது ? எப்போது அழிந்தது ?


கீழடியருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது, கைவிடப்பட்ட பண்டைய கூடல்  என்ற மதுரை என்பது எனது கருத்து.

புதையுண்டுள்ள இந்த நகரத்தின் ஈமக்காடானது கொந்தகை அருகே சாலையின் ஓரத்தில் உள்ளது என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிடுகிறார்.  இங்கே ஏராளமான முதுமக்கள்தாழிகள் உள்ளன.  இது புதையுண்டுள்ள நகரம் உயிருடன் இருந்தபோது இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்காடு ஆகும். இந்த ஈமக்காட்டில் வரும் ஆண்டில் (2020)  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவுள்ளன என அறிகிறேன்.

இந்த ஈமக்காட்டில் பழந்தமிழரின் பெயர்கள் அடங்கிய முதுமக்கள் தாழிகள் நிறையக் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளன.   நடைபெறவுள்ள இந்த ஆய்வின் வழியாகப் பழந்தமிழரின் உணவுப் பழக்கவழங்களும், நீத்தார்வழிபாட்டு முறைகளும் அறிவியல் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன்.

புதையுண்டுள்ள இந்நகரில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இந் நகரம் அழிந்திருந்தால்,  இங்கு வாழ்ந்த மக்களும் அவர்களது உடைமைகளும் ஒன்றுசேரப் புதையுண்டு போயிருக்க வேண்டும்.  ஆனால் மக்களின் எலும்புகள் ஏதும் இந்நகரில் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்நகரம் அழியும்போது இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

இந்நகரம் மண்ணால் புதையுண்டு அழிந்திருப்பதற்கு இரண்டு காரணிகள்தான் இருக்கமுடியும். 1) கடல்கோள் அல்லது சுனாமி (இதற்குத் திருவிளையாடல் புராணத்தில் சான்றுகள் உள்ளன. 2) வைகை யாற்றுப் பெருக்கு (வைகை யாற்றுப் பெருக்கிற்கு இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.  ஆனால் ஆற்றுப் பெருக்கால் நகரம் ஏதும் அழிந்ததாகக் குறிப்புகள்  இல்லை).

இந்த நகரம் எவ்வாறு அழிந்தது? கடல்கோளாலா அல்லது ஆற்றுப் பெருக்காலா? என இதுநாள்வரை அறிவியல் அடிப்படையில் ஆராயப்படவில்லை.  முறையினா அறிவியல்  ஆய்வுகள் நடைபெற்று  முடிவுகள் தெரியவரும்போதுதான், இந்நகரம் அழிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.  அதுவரை பண்டைய புராணக் கருத்தைப் புளுகு என்று கற்பனையாகக் கருதி ஒதுக்கிவிட இயலாது.


கடல்கோளால் இந்நகரம் அழிவைச் சந்தித்திருந்தால்,  கிழக்கிலிருந்து வந்த கடல்நீரினால் இங்கு வசித்த மக்கள் மேற்குநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருப்பர்.  எனவே அவர்களது உடல்கள் இந்த நகருக்கு மேற்கே புதையுண்ட கிடக்க வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு மேற்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கிலிருந்து பாய்ந்து வரும் வைகை ஆற்றுப்பெருக்கினால்  இந்நகரம் அழிந்திருந்தால்,  இந்நகரில் வசித்தவர்களின் உடல்கள் கிழக்கே அடித்துச் செல்லப்பட்டு இந்த நகருக்குக் கிழக்கே புதையுண்டு கிடக்கும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்குக் கிழக்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

அப்படி எந்தவொரு தடயமும் இதுநாள் ஆராயப்படவில்லை. இங்கு படிந்துள்ள மண் அல்லது மணற் திட்டுக்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் படிந்துள்ளனவா? அல்லது மேற்கிலிருந்து கிழக்காகப் படிந்துள்ளனவா? எனக் கண்டறியப்பட வில்லை. 

மேலும், இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களோ மிருகங்களோ இறந்துபோன தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் எலும்போ அல்லது கால்நடைகளின் எலும்போ கண்டறியப்பட வில்லை..
எனவே, திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி,  இந்நகரில் வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னரே, இந்நகரம் அழிந்துள்ளது என்பது உறுதி.


நகரின் காலக்கணிப்பு
பண்டைய ஆலவாய் என்ற மதுரை நகரம் அழிந்ததை ஊழிக்காலம் என்று புராணமும் பரிபாடலும் கூறிப்பிடுகிறன.   ஊழிக்குப் பின்னர் கலிகாலம் தோன்றி 5112 ஆண்டுகள் ஆகின்றன என்று பஞ்சாங்கக் கணிப்பு உள்ளது.  ஊழிக் காலத்திற்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் கூடல் என்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
எனவே, இவற்றின் அடிப்படையில் கீழடி யருகே புதையுண்டுள்ள இந்நகரம் (கூடல் என்ற மதுரை) தோன்றி 5112 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஆலவாய் என்ற மதுரை இருந்த இடம் கண்டறியப்படுகிறது.  அந்தத் தொன்மையான ஆலவாய் என்ற மதுரை இருந்த இடத்தில் புதிதாக மதுரை நகர் உருவாக்கப்படுகிறது. 
கூடல் என்ற மதுரையில் இருந்த மக்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரைக்கு சென்று குடியேறுகின்றனர்.  அதனால் இந்தக் கூடல் என்ற மதுரை நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறிவிடுகிறது.

பின்னாளில்,  மற்றொரு கடல்கோள் (சுனாமி) உண்டாகியுள்ளது.  இந்தக் கடல்கோளில்  இப்போதிருக்கும் மதுரையின் எழுகடல்தெருவில் உள்ள வாவி (குளம்) வரை கடல்நீர் வந்து சேர்ந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.  எழுகடல்தெருவரை மட்டுமே வந்து திரும்பிய இந்தக் கடல்வெள்ளத்தால்  இன்றிருக்கும் மதுரை அழியவில்லை.  ஆனால் மதுரைக்குக் கிழக்கே யிருந்தன எல்லாமும் கடல்வெள்ளத்தில் சிதைந்து அழிந்து போயுள்ளன.

இந்தக் கடல்கோளால்தான் (சுனாமியினால்தான்) கீழடியருகே கைவிடப்பட்ட கூடல் என்ற  மதுரைநகரும் அழிந்து புதைந்துள்ளது.  புதையுண்டுள்ள நகரம் (கூடல் என்ற மதுரை) அழிந்த காலம் இன்னதென்று  தெரியவில்லை.  தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தால்தான் உண்டு.

ஆலவாய் என்ற மதுரை போற்றுவோம்.
கூடல் என்ற மதுரை போன்றுவோம்,
மதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Tuesday, 3 December 2019

கீழடி, தொலைந்து போனவைகளே தோண்டி எடுக்கப்படுகின்றன

தொலைந்து போன பொருட்களே 
கீழடியில்
தொல்லியலாளர்களால் 
தோண்டி எடுக்கப்படுகின்றன


கீழடி அகழாய்வில் தங்கத்திலான பொருட்களும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினால் ஆன சீப்பு கிடைத்துள்ளது.  மிருகங்களின் எலும்புகள் கிடைத்துள்ளன.  சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட  குழாய்களும், பானைகளும், பானைஓடுகளும் நிறையவே கிடைத்துள்ளன. ஆனால் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை.

கீழடியருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் மேட்டைத் திரு அமர்நாத் அவாகளது தலைமையிலான தொல்லியல்துறையினர் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்தனர்.   தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  100 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல்மேட்டில் சுமார் 8 ஏக்கர் அளவுள்ள இடத்தில் மட்டுமே இதுவரை தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுள்ளது.  எல்லா இடங்களையும முழுமையாகத் தோண்டிக் கண்டறிய இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

“இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில மனித எலும்புக்கூடுகள் ஏதும் கிடைக்கவில்லை.   இந்தக் காரணத்தினால் இது ஒரு கைவிடப்பட்ட நகரநாகரிகமாக இருக்கலாம்” என்று கருதுகின்றனர்.

கைவிடப்பட்ட நகரத்தில் தங்கத்தினால் ஆன அணிகலன்,  மணிகளால் ஆன அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு எப்படிக் கிடைக்கும்?  என்ற ஐயம் எழுகிறது.

பண்டைய மதுரையின் அருகே வடக்கே மணவூர் (மணலூர்) இருந்தது என்றும்,  மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனின் மகனான உக்கிரசேன பாண்டியனுக்கு மணவூரில் வசித்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தார்கள் என்றும்.   பாண்டியர்களின் குலவழிவந்த குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்றும்,  இந்தக் குலசேகரபாண்டியன் இப்போதிருக்கும் மதுரையைப் புதிதாக உருவாக்கினான் என்றும், அப்போது  இங்கே வசித்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினான் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.   இங்கிருந்த மக்கள் எல்லோரும் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்குச் சென்று குடியேறிவிட்ட காரணத்தினால், இது “கைவிடப்பட்ட நகரம்” ஆகிறது.


மதுரை நகருக்குக் குடியேறுவதற்கு முன்பு, இங்கு வசித்த  மக்களால் தொலைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட  பொருட்களே இன்று தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன எனக் கருதவேண்டியுள்ளது.   தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன பொருட்கள் தொலைக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.  பானைகள் கைவிடப்பட்ட பொருட்களில் அடங்கும் எனவும் கருதுகிறேன்.

(குறிப்பு - இது தொல்லியல் ஆய்வுக் கருத்து அல்ல, எனது தனிப்பட்ட கருத்து ஆகும்)

தொல்லியலாளர் போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 17 (03.12.2019) செவ்வாய்கிழமை.

Tuesday, 15 October 2019

கீழடி, சங்ககால மதுரையா ? குடியிருப்பா அல்லது தொழிற்கூடமா ?

கீழடி,  சங்ககால மதுரையா ?
கண்டியறியப்பட்டுள்ள இடம் 
குடியிருப்பா  அல்லது தொழிற்கூடமா ?


தொல்லியலாளர் திரு கி.அமர்நாத் அவர்கள் கீழடியைத் தோண்டிக் கண்டறிவதற்கு முன்பும்(1986), கண்டறிந்த போதும்(2015), இந்நாளிலும் (2019) தொடர்ந்து நேரில் பலமுறை சென்று முயன்று பார்த்து வருகிறேன்.

எனது பார்வையில்... கருத்தில் ....
தொல்லியலாளர் திரு கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள்  கொண்டிருக்கும் கோணம் மிகவும் சரியானது என்பதே எனது கருத்து.
திரு அமர்நாத் அவர்களால் கீழடி யருகே கண்டறியப்பட்டுள்ள நகரமானது மதுரையல்ல என்றும், அந்த இடம் ஒரு தொழிற்கூடம் என்றும் சான்றில்லாத கருத்துக்களைச் சிலர் பரப்பி வருகின்றனர்.  இவை தவறான கருத்துகளாகும்.  இக்கருத்துக்களைக் கொண்டுள்ளோர் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தமிழில் உள்ள புராணங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.  பலாப்பலத்தின் தோலை நீக்கிவிட்டு உள்ளேயுள்ள பலாச்சுளையைச் சாப்பிடுவது போன்று, சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ள புனைவுகளை (பலாப் பழத்தின் தோலை ) நீங்கிவிட்டு, அதில் பொதிந்துள்ள கருத்துகளை அனைவரும் விருப்பு வெறுப்பின்றி (பலாச்சுளையை)க் கருத்திற் கொள்ள வேண்டும்.



கீழடிதான்  பண்டைய மதுரையா .... 
அகநானூறும் புறநானூறும் நக்கீரரும் திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே பாண்டியர்களின் தலைநகரான கூடல் என்ற மதுரை மாநகர் உள்ளது என்று பாடியுள்ளனர்.  ஆனால் இப்போதுள்ள மதுரை மாநகரமானது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே உள்ளது.
திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே அவனியாபுரம் உள்ளது. அவனியாபுரம் அருகே கோவலன் பொட்டல் உள்ளது.   எனவே இப்போதுள்ள அவனியாபுரமே சங்ககாலத்து மதுரையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்அறிஞர்கள் பலரும் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.  இவர்களுள் பேராசிரியர் தெய்வத்திரு சங்கரராஜீலு அவர்களும் ஒருவர்.  இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகப் பணியாற்றினார்.   1986ஆம் ஆண்டில் அவனியாபுரம் மற்றும் புதூர் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் நேரில் சென்றுபார்த்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்தார். 
சங்கப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல்மாநகரின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு உள்ள தொல்லியல் மேடு எதையும் அவனியாபுரம் அருகே கண்டறிய முடியவில்லை. எனவே அவனியாபுரம் சங்ககாலக் கூடல் மாநகரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  அதற்காக அவரைத் திராவிடர் என்றும் கூறி அவரது முடிபைப் புறந்தள்ளினர் சிலர்.
கீழடி அருகே தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ளது.  சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் செங்கலாலான மதில்சுவர் இங்கே கண்டறியப்பட்டுள்ளது.  மேலு ஆற்றுமணல் திட்டுகளும் உள்ளன.  கூடல் நகரின் பல்வேறு சிறப்புக்களையும் இந்தப் புதையுண்டுள்ள நகரம் கொண்டுள்ளது.  எனவே நக்கீரரும் சங்கத்தமிழ்ப் புலவர் பலரும் பாடியுள்ள “கூடல்” மாநகர் இதுதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  ஐயந்திரிபற அறிவியல் அடிப்படையில் கூறிட வேண்டுமென்றால், தொல்லியலாளர்கள் தோண்டும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே தொன்மையான சிவலாயம் ஒன்று புதையுண்டுள்ளது.  அதைத் தோண்டிக் கண்டறிந்தால் அதில் சங்ககாலக் கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.


இது  குடியிருப்பா  அல்லது தொழில் நகரமா ....  
இங்கே கண்டறிப்பட்டுள்ள கட்டுமானங்கள், நெசவுத்தொழிற் கூடமாக அல்லது குயவர்களின் பானைத் தொழிற்கூடமாக இருக்கலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர்.   ஆனால் இவர்கள்யாரும் இக்கருத்துகளுக்குச் சான்றுகள் எதையும் குறிப்பிடவில்லை. 
திரு அமர்நாத் அவர்கள், “இத் தொழில்கள் நடைபெற்றதற்கான எச்சங்கள் ஏதும் இங்கே கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த இடம் தொழிற்கூடமாக இருக்க வாய்ப்பில்லை” என்று விளக்கம் அளித்துள்ளர்.
ஆனால் இந்தப் குறிப்பிட்ட கட்டுமானமானது குடியிருப்பும் அல்ல, தொழிற்சாலையும் அல்ல. இது ஒரு மாட்டுத் தொழும்,  மாட்டுப் பண்ணை என்பது எனது கருத்து.  இங்கே கண்டறிப்பட்டுள்ள அடுக்குப் பானைகள் மாடுகளுக்குத் தீவனமும் தண்ணீரும் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

உறைகிணறு – சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை வைகை ஆற்றுப் படுகைகளில் வாழ்வோர், வைகையின் ஊற்றுநீரை உண்டே வாழ்ந்தனர்.   எனவே,  மாடுப்பண்ணை, மாட்டுத் தொழுவங்களுக்கு உறைகிணறு பயன்படுத்தப் பெற்றிருக்கலாம்.   இங்கே வாழ்ந்த பழந்தமிழர் வையை ஆற்றின் ஊற்றுநீரை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதவேண்டியுள்ளது.
வெள்ளைநிறத்தில் படிகம் போன்றுள்ள ஒரு பொருளை நாக்கில் தடவிப் பார்த்துவிட்டு அது உப்பாக உள்ளது என்று கூறுவது அறிவியல் அல்ல.  அந்தப் பொருளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்து அவர்கள் இதைச் சோதனை செய்து, “இது உப்பு” என்று சொல்ல வேண்டும்.  இதுவே அறிவியல் ஆய்வு முடிவாக அமையும்.   எனவே இந்த இடத்தில் கண்டறியப்பெற்றுள்ள பானைகளின் உள்ளே இருந்த பொருட்கள் என்னென்ன என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.  அதுவே அறிவியல் அடிப்படையிலான சரியான முடிவாக இருக்கும்.  இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளே இங்கே இருந்தது குடியிருப்பா? தொழிற்கூடமா? அல்லது மாட்டுப் பண்ணையா? என்பதை உறுதி செய்யும்.

மேலும் சான்றுகள் கிடைக்கும் பொழுது முடிவுகள் தெளிவாகக் கூடும். 
இந்த தொல்லியல்மேடு சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இப்போதுதான் சுமார் 5 ஏக்கர்வரை தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.
இன்னும் அகரம், மணலூர், கொந்தகை யெல்லாம் தோண்டிக் கண்டறியப்பெற வேண்டும்.


அகரம்  “கோட்டைக் கருப்பணசாமி”  உள்ள இடமே பண்டைய கூடல் மாநகரின் கோட்டைக் கிழக்குவாயிலாக இருக்க வேண்டும் என்பது எனது யூகம்.  இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்றொப்ப 50 மீட்டர் மேற்கே உள்ள மேடான பகுதியானது பாண்டின் செழியனின் அரண்மனையாக இருந்திருக்கலாம்.

சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கம் வளர்த்த கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா. கி. காளைராசன்
புரட்டாசி 28 (15.10.2019) செவ்வாய் கிழமை.

Saturday, 12 October 2019

தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல்

தமிழரின் 
தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் 
இவற்றின் இருப்பிடங்கள் பற்றிய ஒரு சிறு விளக்கம்.



 தென் மதுரை  
பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. மிகமிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தென்மதுரை என்று அழைத்துள்ளனர்.
தென்மதுரை (1) = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  இதன் இருப்பிடம் இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டும்.   ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே (மொரிசியசு தீவு) ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்க வேண்டும்.  முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.



 மதுரை 
கடல்கொண்ட தென்மதுரையிலிருந்த தமிழர் புலம்பெயர்ந்து இன்றைய மதுரை இருக்கும் இடத்தில் குடியேறி உள்ளனர்.   இதுவே பழைமையான  மதுரை ஆகும்.  
1) இன்றை மதுரை இருக்கும் இடத்தில் இந்தப் பழைமையான மதுரை(1) இருந்தது.  இந்த மதுரை (1) மிகவும் தொன்மையானது.   இது கடல்கோளால் அழிந்தது.  இரண்டாம் கடல்கோளால் அழிந்துபோன மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் உண்டானது.
  மதுரை(1) = ஆலவாய்.


2) கடல்கோளுக்குப் பின்னர் புதிதாக மதுரை(2) நகரைப் பாண்டியர்கள் உண்டாக்கி அரசாளுகின்றனர்.  இதன் பெயர் கூடல். இந்தக் கூடல் மாநகரைத்தான் கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  
 மதுரை(2) = கூடல் 

(குறிப்பு - கீழடி வேறு, கீழடி யருகே புதையுண்டுள்ள கூடல் நகரம் வேறு. கீழடி அருகே உள்ள மணலூர் வேறு.  மணலூரின் தொன்மையான பெயர் மணவூர்.  மணலூரும் மணவூரும் ஒன்றுதான். மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன.)

3) கூடலை ஆளும்போது பண்டைய மதுரை (1) இருந்த இடம் கண்டறியப்படுகிறது. உடனே அந்த இடத்தில்  புதிதாக நகரை உண்டாக்கிக் கூடலில் வாழ்ந்த மக்கள் குடியேறுகின்றனர்.  இந்த நகரமே இன்றைய மதுரை ஆகும். மதுரை (1) இருந்த இடத்தில் மதுரை (3) உருவாக்கப்படுகிறது. 
  மதுரை(3) = இன்றைய மதுரை.

4) மதுரை(3)வரை மீண்டும் ஒரு கடல்கோள்.  இந்த மூன்றாவது  கடல்கோளால் கைவிடப்பெற்ற கூடல்நகரம் (மதுரை 2) அழிந்து போகிறது.  திருஞானசம்பந்தர் கடல்கோளால் அழிந்த மதுரை(1) மற்றும் கூடல் என்ற மதுரை(2) என்ற இரண்டு நகரங்களையும் இணைத்துக்  ”கூடல் ஆலவாய்” என்று பாடியுள்ளார்.
  மதுரை(1)யும், கூடல் என்ற மதுரை(2)யும் = கூடல் ஆலவாய்.
கூடலை அழிந்த மூன்றாவது கடல்கோளால் மதுரை (3) அழியாமல் அப்படியே இன்றும் இருக்கிறது.



5) இந்நாளில், கடல்கொண்ட கூடல் என்ற மதுரை(2)யை தொல்லியலாளர்கள் கீழடி அருகே கண்டறிந்து ஆய்வுகள் செய்துவருகின்றனர்.

6) மதுரை(3)யின் அடியிலே  மதுரை(1) புதையுண்டுள்ளது.

மேற்கண்ட விளக்கமானது, தமிழ்ச்சங்கப்பாடல்கள் மற்றும் திருவிளையாடற்புராணம் பாடல்களின் அடிப்படையிலானது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 26 (13.10.2019) ஞாயிறு கிழமை.

Monday, 7 October 2019

கீழடி அல்ல, இது சங்கத்தமிழரின் கூடல் மாநகரம்

கீழடி அல்ல, 
இது கூடல் ஆலவாய் என்ற 
சங்கத்தமிழ் மதுரை மாநகரம் ஆகும்

கீழடி அருகே தொல்லியலாளர் தொன்மையான நகரநாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  புதையுண்டுள்ள இந்த நகரமானது தற்போதுள்ள கீழடி என்ற ஊரின் அருகே உள்ளது.  இக் காரணத்தால், இந்தத் தொன்மையான நகரத்தையும் கீழடி என்றே அனைவரும் குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  ஆனால் புதையுண்டுள்ள இந்த நகரத்தின் பெயர் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப் பெற்ற பண்டைய மதுரை ஆகும். 

பண்டைய பாண்டியரின்  தலைநகரம் மதுரை.   மதுரையில் தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  மதுரைக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.  அவற்றில் ஆலவாய், கூடல், மதுரை என்ற மூன்று பெயர்களே சிறப்புப் பெற்றுள்ளன.


(1) கபாடபுரம். இது தொல்காப்பியருக்கும் முந்திய அகத்தியர் காலத்தது.  இது கடல்கோளால் அழிந்தது.
(2) ஆலவாய் என்பது முதல் மதுரையாகும்.  இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.
(3) கூடல் என்பது இரண்டாவது மதுரையாகும்.  இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறன திருவிளையாடற் புராணமும் திருஞானசம்பந்தரின் தேவாரமும்.
(4) மதுரை என்பது மூன்றாவது மதுரையாகும்.  இது பண்டைய ஆலவாய் என்ற முதல்மதுரை இருந்த அதே இடத்திலேயே புதிதாக உருவாக்கப் பெற்ற நகரமாகும்.
இதுவே இன்றைய மதுரை மாநகரமாகும் என்கிறது திருவிளையாடற் புராணம்.



புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான கூடல் நகரைச் சங்கத் தமிழ்ப்பாடல்களும் பக்திஇலக்கியப் பாடல்களும் வெகுவாக விவரித்து எழுதியுள்ளன.
புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரமே முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த கூடல் மாநகரமாகும்.
இதுவே செண்பக பாண்டியன் சங்கம் கூட்டித் தமிழாய்ந்த தமிழ்கூடல் நகரமாகும்.
இதுவே செழியன் பாண்டியனின் தலைநகராகும்.
இதுவே கண்ணகி எரித்த கூடல் என்ற மதுரை ஆகும்.


கடல்வாய்ச் சென்ற ஆலவாய் போற்றுவோம்.
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 21 (08.10.2019)  செவ்வாய் கிழமை.
-------------------------------------------------------------------

கற்றவை - 

1) மதுரை என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்களின் தொகுப்பு

மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5

2) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகளின் தொகுப்பு.

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/31,32
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி 17/45,46
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி 20/106,107
காமரு வையை சுடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/4,5
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி 24/26,27
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/46,47
உரு கெழு கூடலவரொடு வையை - பரி 24/92
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் - கலி 27/12
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்/புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/17,18
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6

3) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரம் பாடல் வரிகளின் தொகுப்பு.
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்   ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - சிலப்.மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - சிலப்.மது 14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல்   பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் - சிலப்.மது 14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட - சிலப்.மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் - சிலப்.மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் - சிலப்.மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட - சிலப்.மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் - சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - சிலப்.மது 16/131
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் - சிலப்.மது 19/58,59
கூடலான் கூடு ஆயினான் - சிலப்.மது 20/101
நல் தேரான் கூடல் நகர் - சிலப்.மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் - சிலப்.மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத - சிலப்.மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் - சிலப்.மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் - சிலப்.மது 23/123
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை  தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - சிலப்.வஞ்சி 24/111,112
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை - சிலப்.வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட - சிலப்.வஞ்சி 30/149
----------------------------------------


4) கூடல் ஆலவாய் - திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளின் தொகுப்பு

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:74/4
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று - தேவா-சம்:75/1
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் - தேவா-சம்:188
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் - தேவா-சம்:1018/1
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே - தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3351/3
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3352/1
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3354/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3355/3
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3358/2
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3359/3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் - தேவா-சம்:3920/2
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு - தேவா-சம்:3966/1

நன்றி - இங்கே பயன்படுத்துப்பெற்றுள்ள (புராணப்பாடல்கள் தவிர்த்த) தொடரடைவுகள் அனைத்தும் பேராசிரியர் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களால்  எழுதப்பட்ட http://tamilconcordance.in கணினி நிரல்களின் மூலம் தொகுப்பெற்றவை. ஐயா அவர்களுக்கு நன்றி.