Monday 30 December 2019

கீழடி - கூடல் என்ற கைவிடப்பட்ட நகரம்

கீழடி - ஓர் கைவிடப்பட்ட நகரம்

மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை கொந்தகை மணலூர் அகரம் என்ற கிராமங்களில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  இங்கே பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.  சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த மத்திய மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரைப் போற்றுவோம், அவர்களுக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

மணலூர்க் கண்மாய்க்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் முதன்முதலாகத் தொல்லியல் ஆய்வைத் திரு அமர்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார். 

மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  புராண காலத்தில், இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு  மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.   இது மணலூர் எனப் பழைய திருவிளையாடலிலும், “மணலூர் புரம்” என வடமொழி வியாசபாரதத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

மணவூரும் மதுரையும் - 
உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு  கடல்கோள் (பெருஞ் சுனாமி) உண்டாகி மதுரை எழுகடல்தெருவரை வந்து அழித்துள்ளது.  இந்தக் கடல்கோளிலால் மணவூரை மண்மூடி விட்டது.   மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான்.  மணவூரிலிருந்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பெற்ற (இன்றைய) மதுரை நகரில் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)


சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது. 

மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.  மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.  இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு வடக்கே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்

No comments:

Post a Comment