கீழடி, சங்ககால மதுரையா ?
கண்டியறியப்பட்டுள்ள இடம்
குடியிருப்பா அல்லது தொழிற்கூடமா ?
தொல்லியலாளர் திரு கி.அமர்நாத் அவர்கள் கீழடியைத் தோண்டிக் கண்டறிவதற்கு முன்பும்(1986), கண்டறிந்த போதும்(2015), இந்நாளிலும் (2019) தொடர்ந்து நேரில் பலமுறை சென்று முயன்று பார்த்து வருகிறேன்.
எனது பார்வையில்... கருத்தில் ....
தொல்லியலாளர் திரு கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டிருக்கும் கோணம் மிகவும் சரியானது என்பதே எனது கருத்து.
திரு அமர்நாத் அவர்களால் கீழடி யருகே கண்டறியப்பட்டுள்ள நகரமானது மதுரையல்ல என்றும், அந்த இடம் ஒரு தொழிற்கூடம் என்றும் சான்றில்லாத கருத்துக்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். இவை தவறான கருத்துகளாகும். இக்கருத்துக்களைக் கொண்டுள்ளோர் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தமிழில் உள்ள புராணங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும். பலாப்பலத்தின் தோலை நீக்கிவிட்டு உள்ளேயுள்ள பலாச்சுளையைச் சாப்பிடுவது போன்று, சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ள புனைவுகளை (பலாப் பழத்தின் தோலை ) நீங்கிவிட்டு, அதில் பொதிந்துள்ள கருத்துகளை அனைவரும் விருப்பு வெறுப்பின்றி (பலாச்சுளையை)க் கருத்திற் கொள்ள வேண்டும்.
கீழடிதான் பண்டைய மதுரையா ....
அகநானூறும் புறநானூறும் நக்கீரரும் திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே பாண்டியர்களின் தலைநகரான கூடல் என்ற மதுரை மாநகர் உள்ளது என்று பாடியுள்ளனர். ஆனால் இப்போதுள்ள மதுரை மாநகரமானது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே உள்ளது.
திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே அவனியாபுரம் உள்ளது. அவனியாபுரம் அருகே கோவலன் பொட்டல் உள்ளது. எனவே இப்போதுள்ள அவனியாபுரமே சங்ககாலத்து மதுரையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்அறிஞர்கள் பலரும் ஆராய்ந்து பார்த்துள்ளனர். இவர்களுள் பேராசிரியர் தெய்வத்திரு சங்கரராஜீலு அவர்களும் ஒருவர். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகப் பணியாற்றினார். 1986ஆம் ஆண்டில் அவனியாபுரம் மற்றும் புதூர் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் நேரில் சென்றுபார்த்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்தார்.
சங்கப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல்மாநகரின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு உள்ள தொல்லியல் மேடு எதையும் அவனியாபுரம் அருகே கண்டறிய முடியவில்லை. எனவே அவனியாபுரம் சங்ககாலக் கூடல் மாநகரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார். அதற்காக அவரைத் திராவிடர் என்றும் கூறி அவரது முடிபைப் புறந்தள்ளினர் சிலர்.
கீழடி அருகே தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ளது. சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் செங்கலாலான மதில்சுவர் இங்கே கண்டறியப்பட்டுள்ளது. மேலு ஆற்றுமணல் திட்டுகளும் உள்ளன. கூடல் நகரின் பல்வேறு சிறப்புக்களையும் இந்தப் புதையுண்டுள்ள நகரம் கொண்டுள்ளது. எனவே நக்கீரரும் சங்கத்தமிழ்ப் புலவர் பலரும் பாடியுள்ள “கூடல்” மாநகர் இதுதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஐயந்திரிபற அறிவியல் அடிப்படையில் கூறிட வேண்டுமென்றால், தொல்லியலாளர்கள் தோண்டும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே தொன்மையான சிவலாயம் ஒன்று புதையுண்டுள்ளது. அதைத் தோண்டிக் கண்டறிந்தால் அதில் சங்ககாலக் கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.
இது குடியிருப்பா அல்லது தொழில் நகரமா ....
இங்கே கண்டறிப்பட்டுள்ள கட்டுமானங்கள், நெசவுத்தொழிற் கூடமாக அல்லது குயவர்களின் பானைத் தொழிற்கூடமாக இருக்கலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள்யாரும் இக்கருத்துகளுக்குச் சான்றுகள் எதையும் குறிப்பிடவில்லை.
திரு அமர்நாத் அவர்கள், “இத் தொழில்கள் நடைபெற்றதற்கான எச்சங்கள் ஏதும் இங்கே கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த இடம் தொழிற்கூடமாக இருக்க வாய்ப்பில்லை” என்று விளக்கம் அளித்துள்ளர்.
ஆனால் இந்தப் குறிப்பிட்ட கட்டுமானமானது குடியிருப்பும் அல்ல, தொழிற்சாலையும் அல்ல. இது ஒரு மாட்டுத் தொழும், மாட்டுப் பண்ணை என்பது எனது கருத்து. இங்கே கண்டறிப்பட்டுள்ள அடுக்குப் பானைகள் மாடுகளுக்குத் தீவனமும் தண்ணீரும் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
உறைகிணறு – சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை வைகை ஆற்றுப் படுகைகளில் வாழ்வோர், வைகையின் ஊற்றுநீரை உண்டே வாழ்ந்தனர். எனவே, மாடுப்பண்ணை, மாட்டுத் தொழுவங்களுக்கு உறைகிணறு பயன்படுத்தப் பெற்றிருக்கலாம். இங்கே வாழ்ந்த பழந்தமிழர் வையை ஆற்றின் ஊற்றுநீரை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதவேண்டியுள்ளது.
வெள்ளைநிறத்தில் படிகம் போன்றுள்ள ஒரு பொருளை நாக்கில் தடவிப் பார்த்துவிட்டு அது உப்பாக உள்ளது என்று கூறுவது அறிவியல் அல்ல. அந்தப் பொருளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்து அவர்கள் இதைச் சோதனை செய்து, “இது உப்பு” என்று சொல்ல வேண்டும். இதுவே அறிவியல் ஆய்வு முடிவாக அமையும். எனவே இந்த இடத்தில் கண்டறியப்பெற்றுள்ள பானைகளின் உள்ளே இருந்த பொருட்கள் என்னென்ன என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதுவே அறிவியல் அடிப்படையிலான சரியான முடிவாக இருக்கும். இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளே இங்கே இருந்தது குடியிருப்பா? தொழிற்கூடமா? அல்லது மாட்டுப் பண்ணையா? என்பதை உறுதி செய்யும்.
மேலும் சான்றுகள் கிடைக்கும் பொழுது முடிவுகள் தெளிவாகக் கூடும்.
இந்த தொல்லியல்மேடு சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இப்போதுதான் சுமார் 5 ஏக்கர்வரை தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.
இன்னும் அகரம், மணலூர், கொந்தகை யெல்லாம் தோண்டிக் கண்டறியப்பெற வேண்டும்.
அகரம் “கோட்டைக் கருப்பணசாமி” உள்ள இடமே பண்டைய கூடல் மாநகரின் கோட்டைக் கிழக்குவாயிலாக இருக்க வேண்டும் என்பது எனது யூகம். இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்றொப்ப 50 மீட்டர் மேற்கே உள்ள மேடான பகுதியானது பாண்டின் செழியனின் அரண்மனையாக இருந்திருக்கலாம்.
சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கம் வளர்த்த கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா. கி. காளைராசன்
புரட்டாசி 28 (15.10.2019) செவ்வாய் கிழமை.
No comments:
Post a Comment