Tuesday, 3 December 2019

கீழடி, தொலைந்து போனவைகளே தோண்டி எடுக்கப்படுகின்றன

தொலைந்து போன பொருட்களே 
கீழடியில்
தொல்லியலாளர்களால் 
தோண்டி எடுக்கப்படுகின்றன


கீழடி அகழாய்வில் தங்கத்திலான பொருட்களும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினால் ஆன சீப்பு கிடைத்துள்ளது.  மிருகங்களின் எலும்புகள் கிடைத்துள்ளன.  சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட  குழாய்களும், பானைகளும், பானைஓடுகளும் நிறையவே கிடைத்துள்ளன. ஆனால் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை.

கீழடியருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் மேட்டைத் திரு அமர்நாத் அவாகளது தலைமையிலான தொல்லியல்துறையினர் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்தனர்.   தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  100 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல்மேட்டில் சுமார் 8 ஏக்கர் அளவுள்ள இடத்தில் மட்டுமே இதுவரை தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுள்ளது.  எல்லா இடங்களையும முழுமையாகத் தோண்டிக் கண்டறிய இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

“இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில மனித எலும்புக்கூடுகள் ஏதும் கிடைக்கவில்லை.   இந்தக் காரணத்தினால் இது ஒரு கைவிடப்பட்ட நகரநாகரிகமாக இருக்கலாம்” என்று கருதுகின்றனர்.

கைவிடப்பட்ட நகரத்தில் தங்கத்தினால் ஆன அணிகலன்,  மணிகளால் ஆன அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு எப்படிக் கிடைக்கும்?  என்ற ஐயம் எழுகிறது.

பண்டைய மதுரையின் அருகே வடக்கே மணவூர் (மணலூர்) இருந்தது என்றும்,  மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனின் மகனான உக்கிரசேன பாண்டியனுக்கு மணவூரில் வசித்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தார்கள் என்றும்.   பாண்டியர்களின் குலவழிவந்த குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்றும்,  இந்தக் குலசேகரபாண்டியன் இப்போதிருக்கும் மதுரையைப் புதிதாக உருவாக்கினான் என்றும், அப்போது  இங்கே வசித்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினான் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.   இங்கிருந்த மக்கள் எல்லோரும் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்குச் சென்று குடியேறிவிட்ட காரணத்தினால், இது “கைவிடப்பட்ட நகரம்” ஆகிறது.


மதுரை நகருக்குக் குடியேறுவதற்கு முன்பு, இங்கு வசித்த  மக்களால் தொலைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட  பொருட்களே இன்று தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன எனக் கருதவேண்டியுள்ளது.   தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன பொருட்கள் தொலைக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.  பானைகள் கைவிடப்பட்ட பொருட்களில் அடங்கும் எனவும் கருதுகிறேன்.

(குறிப்பு - இது தொல்லியல் ஆய்வுக் கருத்து அல்ல, எனது தனிப்பட்ட கருத்து ஆகும்)

தொல்லியலாளர் போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 17 (03.12.2019) செவ்வாய்கிழமை.

No comments:

Post a Comment