Wednesday 11 March 2020

அகரம் தமிழரின் சிகரம்

அகரம் தமிழரின் சிகரம் 

தினகரன் செய்தி - கீழடி அருகேயுள்ள அகரத்தில் அகழாய்வு பணிகள் இன்று (12.03.2020)  துவக்கம்.


திருப்புவனம்: கீழடி அருகே அகரம் கிராமத்தில் அகழாய்வு பணிகள் இன்று துவங்க உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி ஜன. 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியை தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொந்தகையில் தற்போது மயானத்திற்கு அருகே அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது. மணலூர் அருகே கழுகேர்கடை ஊராட்சியை சேர்ந்த அகரம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடத்தை தொல்லியல் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர்.
அகரம் துவக்கப்பள்ளி அருகே உள்ள ஊருணிக்கு எதிரே அக்ரஹாரம் என்றும், கோட்டை மேடு என்றும் கிராமத்தினரால் அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆய்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நேற்று கிராமத்தினர் கழுகேர்கடை ஊராட்சி தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பூமி பூஜை நடத்தி ஆயத்தப்பணிகளை துவக்கினர். இன்று முதல் அகழாய்வுப்பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570636
---------------------------------------------------


அகரம் தமிழரது சிகரம் - பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும். 

கோட்டைக் கருப்பணசாமி   (https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும். 

கூடல் மாநகரில் பாண்டியரின் அரண்மனை இருந்த இடமே அகரம் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும் ஆகும்.  தொல்லியல் ஆய்வுகள் சிறக்கட்டும்.
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post_25.html

தொல்தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்மாநகர் போற்றவோம்,
அகரம் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Monday 9 March 2020

சேல் என்ற சொல் இடம் பெற்ற பாடல்களின் தொகுப்பு

சங்க இலக்கியங்களில் சேல் என்ற சொல் இடம் பெற்றதாக அறியப்படவில்லை.
பக்தி இலக்கியங்களில் சேல் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு இது.
--------------------------------------
திருஞானசம்பந்தர் தேவாரம்  சேல் (16)
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:57/3
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே - தேவா-சம்:515/4
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் - தேவா-சம்:887/3
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே - தேவா-சம்:1265/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே - தேவா-சம்:1402/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் - தேவா-சம்:1499/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா - தேவா-சம்:1868/2
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை - தேவா-சம்:1926/3
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் - தேவா-சம்:2020/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு - தேவா-சம்:2041/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று - தேவா-சம்:2265/3
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் - தேவா-சம்:2358/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் - தேவா-சம்:2367/2
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் - தேவா-சம்:2822/1
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே - தேவா-சம்:3608/4
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் - தேவா-சம்:4092/1
------------------------------------------------------------------
அப்பர் தேவாரம் சேல் (4)
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு - தேவா-அப்:199/3
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:651/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:657/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற - தேவா-அப்:2422/3
சேல்கள் (1)
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி - தேவா-அப்:534/1
சேலின் (1)
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் - தேவா-அப்:312/1
சேலை (1)
சேலை ஆடிய கண் உமை பங்கனார் - தேவா-அப்:1567/2
சேலொடும் (1)
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை - தேவா-அப்:1415/3
------------------------------------
சுந்தரர் தேவாரத்தில் சேல் (3)
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் - தேவா-சுந்:87/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு - தேவா-சுந்:884/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் - தேவா-சுந்:947/3
சேலொடு (2)
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:599/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1008/4
----------------------------------------
திருவாசகத்தில்   சேல் (3)
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ - திருவா:11 14/4
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு - திருவா:25 10/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே - திருவா:49 3/6
சேலும் (1)
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருவா:23 9/4
----------------------------------
திருக்கோவையில்    சேல் (1)
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் - திருக்கோ:390/1
-------------------------------
பெரியபுராணத்தில் சேல் (6)
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் - 4.மும்மை:1 5/4
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து - 4.மும்மை:5 25/3
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை - 4.மும்மை:5 42/1
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று - 5.திருநின்ற:1 213/3
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச - 6.வம்பறா:1 151/2
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா - 6.வம்பறா:1 310/2
சேலும் (1)
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் - 10.கடல்:3 1/3
-------------------------------------
கம்பராமாயணத்தில் சேல் (8)
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் - பால:2 13/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் - அயோ:7 8/3
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து - அயோ:7 24/2
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட - அயோ:8 33/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய - அயோ:11 36/3
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற - அயோ:13 53/2
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் - யுத்2:18 98/2
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் - யுத்3:29 21/1
-----------------------------------------
நளவெண்பாவில் சேல் (3)
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் - நள 154/3
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை - நள 204/3
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய - நள 257/1
-------------------------------------
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்  சேல் (15)
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:457/4
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:654/3
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1179/4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் - நாலாயி:1232/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து - நாலாயி:1236/3
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/3
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே - நாலாயி:1253/4
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1314/3
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி - நாலாயி:1323/3
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த - நாலாயி:1397/1
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் - நாலாயி:1436/3
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன - நாலாயி:2074/2
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் - நாலாயி:3348/3
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3557/3
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் - நாலாயி:3578/3
சேல்கள் (2)
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே - நாலாயி:1156/4
சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை - நாலாயி:1847/2
--------------------
திருப்புகழில்  சேல் (22)
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் - திருப்:66/7
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை - திருப்:102/1
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி - திருப்:108/15
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே - திருப்:121/7
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட - திருப்:197/3
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே - திருப்:358/6
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட - திருப்:377/1
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ - திருப்:436/4
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் - திருப்:482/3
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் - திருப்:529/1
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி - திருப்:591/13
செ சாலி சாலத்து ஏறி சேல் உற்று ஆணித்து பொழில் ஏறும் - திருப்:595/5
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி - திருப்:667/1
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி - திருப்:712/2
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே - திருப்:743/7
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி - திருப்:746/1
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் - திருப்:834/13
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் - திருப்:884/1
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர - திருப்:980/15
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா - திருப்:1034/7
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக - திருப்:1090/5
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் - திருப்:1228/1
 சேல்கள் (3)
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே - திருப்:361/7
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா - திருப்:561/6
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா - திருப்:790/5
---------------------------------------------------------
நன்றி -  மேற்கண்ட பாடல்வரிகள் http://tamilconcordance.in/ என்ற இணையதளத்தின் உதவியுடன் தொகுக்கப்பெற்றன.

Tuesday 3 March 2020

‘சுர்’ என்று வற்றிய சுனாமி (கடல்கோள்)

‘சுர்’ என்று வற்றிய சுனாமி


2004ஆம் வருடம் கடல் கரையைக் கடந்து, கடற்கரை ஓரம் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சுனாமி (கடல்கோள்) குறித்து அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. 
ஆனால் கடல்கோள் (சுனாமி) பற்றித் திருவிளையாடற் புராணம் வெகுவாக விவரித்துக் கூறுகிறது.  இதுபோன்றதொரு கடல்கோள் (சுனாமி) வர்ணனை  வேறுபிற இலக்கியங்களில் இல்லை.  இணையத்தில் பதிவுகள் ஏதும் பார்க்கக் கிடைக்கவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லாலும், “கடல்கோள், ஆழிப்பேரலை” என்ற தமிழ்ச் சொற்களாலும் குறிப்பிடுகின்றனர். 
திருவிளையாடற் புராணத்தில், சலதி பௌவம் முந்நீர் உததி என்ற சொற்களால் கடல் குறிப்பிடப்படுகிறது.  கடல்கோளை அல்லது கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் திருவிளையாடல் புராணம் பாடியுள்ளார்.   திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது . ஊழிக் காலத்தில் ஏழுகடல்களும் பொங்கி, ஏழு கண்டங்களும் கடலில் மூழ்கின என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது . 

மதுரையை அழித்திடு - 
கடலுக்கு அரசன் வருணன். வருணனுக்குத் தலைவன் இந்திரன்.  இந்திரன் வருணனை அழைத்து, நீ விரைந்து சென்று, பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும், சினந்து வளைந்து, அரிய காவலையுடைய “மதுரையை அழிப்பாயாக” என்று கூறி ஏவினான் (பாடல் எண் 1037).  கடலுக்கு அரசனாகிய வருணனும்,  பேயும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டிருளில் நேரத்தில், வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப் பதியைச் சூழ்ந்து, விரைவாக அழிக்கக்  கருதினான்.

கொதித்துப் பொங்கி எழுந்த கடல் -
கடலானது,  கொதித்து பொங்கி, அலையாகிய கைகள், அண்டகூட முழுதும் ஊடுருவிச் சென்று, நடுக்க முண்டாக்கி வருத்த, ஊழிக்காலத்தில் ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், சந்திர மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வருகின்ற ஒரு கரிய மலை தோன்னாற்போல, மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது(பாடல் எண் 1039). 


கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் -
மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, இரவினிடத்ததாகிய சந்திரன்மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராசு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும்(பாடல் எண் 1040);  இது மேகங்கள், மதுரையை மறைத்தற்கு வருதலைப் போன்று இருந்தது.  இப்படியில்லாமல் இதை வேறு எப்படிக் கூறுவது?

பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -
மேலும், வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக,  வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக,  பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது  எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.

(Seaturtle.org - MTN 130:22-24 Marine Turtles Stranded by the Samoa Tsunami)

இங்ஙனம் எழுந்த கடலானது மதுரையை நெருங்கும் போது, முகில் உறங்கப் பெறும் மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், நடு இரவில், பாண்டி மன்னன் கனவில் கண், வெள்ளியம்பலவாணர்,ஒரு சித்த மூர்த்தியாய், முன்னே தோன்றி, அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார்.

உக்கிரப் பெரு வழுதிப் பாண்டியனே, உனது நகரத்தை அழிக்கும் பொருட்டு, கடலானது வருகின்றது (ஆதலால்), நீ விரைந்து எழுந்து, போய், வெற்றி பொருந்திய வேற்படையை விடுத்து வென்றி பெறுவாயாக என்று கூற, உலகினைப் பாதுகாத்தலை யுடைய உக்கிர வழுதி, கூப்பிய சிவந்த கைகளை யுடையனாய், துதிக்கின்ற நாவினை யுடையவான், எழுந்து, பேயும் உறங்குகின்ற நள்ளிரவில் தான் கண்ட கண வினை யுணர்ந்து,

கனவிலே தோன்றிய சித்தமூர்த்தி, நனவிலும் எழுந்தருளி வந்து, மன்னனது எண்ணத்தை உணர்ந்து, அப்பனே நீ காலந்தாழ்க்க நிற்பது என்னை, சினந்து கடல் வடிவாக வந்த பகைமை, அதனது மிக்க வலிகெட, கூரிய வேற்படையை எறிந்து (வென்று), உலகிற்கு வரும் அழிவை நீக்குவாய் என்று கூறினார்.

சுர் என வற்றிய சுனாமி - (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று.

எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று,

பண் அமைந்த வேதத்திற் கூறிய வேள்வியைத் தடுப்பதல்லாமல், உலகனைத்தும் அழியுமாறு பிறிது சூழ்ச்சி செய்த, தேவேந்திரனின் ஏவலினால், பெருகிவந்த கடலானது வலி யழிந்தது; வஞ்சனையுடைய தீயோர்க்கு உதவி செய்து அதனால் இந்தக் கடலானது தன் வலிமையை இழப்பது எக்காலத்தும் உள்ள தொரு செயலே போலும்,

பகைவருடலில் நுழைந்த வேலினால், கடலைப் புறங்கொடுக்கச் செய்த உக்கிர பாண்டியன் முன்னர், நிலத்தின்கண் நின்றருளிய சித்தமூர்த்தி, விசும்பிலே மறைந்து (பின்), ஞானக்கண்ணிலே நிறைந்து தோன்றும் தனது திருவருளினால்,  திருவுருவந் தாங்கி, உமை யம்மையாரொடும், வானின்கண், இடப ஊர்தியில் வெளிப்பட்டு நின்றருளினார் 

மூன்று கண்களையும் நான்கு திருத்தோள்களையும், குழவித் திங்களைக் கண்ணியாக அணிந்த சிவந்த அழகிய சடையையும், நீலகண்டத்தையும், பாண்டியன் தரிசித்து, அப்பக்கத்தையே நோக்கி வணங்கி எழுந்து, விரிந்த பெரிய அன்பும் தானுமாக, விதிப்படி அஞ்சலி செய்து துதித்து, புவியின்மேல் நடந்து செல்கின்றான்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடற் புராணம் ஆராய்ச்சியாளர்,
திருப்பூவணப் புராணம் ஆராய்ச்சியாளர்,
காளையார்கோயில் புராணம் ஆராய்ச்சியாளர்.
----------------------------------------------------------------------------

கடல்கோள் குறித்த திருவிளையாடற் பாடல்கள் -

பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென
இருங்கட லுடுத்தபா ரேமு மூழிநாள்
ஒருங்கடுவெள்ளமொத் துருத்துப் போய்வளைந்
தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான்.(1037)

விளைவது தெரிகிலேன் வேலை வேந்தனும்
வளவயன் மதுரையை வளைந்திட் டிம்மெனக்
களைவது கருதினான் பேயுங் கண்படை
கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய்.(1038)

கொதித்த லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய்
அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய்
மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப்
புதித்த தொத்து மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே.(1039)

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)

வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே
பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள்
விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல்
அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே.(1041)

இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ்
நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா
மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார்.(1042)

வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைணீ
எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத்
தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக்
கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான்.(1043)

கனவில் வந்த வேடர் நனவில் வந்து காவலோன்
நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென.(1044)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1045)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1046)

சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ்
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால்
வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய்
திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம்.(1047)

புண்ணிடை நுழைந்த வேலாற் புணரியைப் புறங்கண் டோன்பால்
மண்ணிடை நின்ற சித்தர் வானிடை மறைந்து* ஞானக்
கண்ணிடை நிறைந்து தோன்றுங் கருணையால் வடிவங் கொண்டு
விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்.(1048)

முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த
செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன்
பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந்
தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான்.(1049)
----------------------------------------------

சோமவார விரதம், திங்கள் கிழமை விரதம், விரதம் இருக்கும் முறைகளும், விரத பலன்களும்

சோமவார விரதம் 
(திங்கள் கிழமை விரதம்) 
விரதம் இருக்கும் முறையும், விரத பலன்களும்
(திருவிளையாடற் புராணத்தில் உள்ளபடி)


புராணகாலத்தில் 12 வருடங்கள் பஞ்சம் ஏற்பட்டது. மூவேந்தர்களும் அகத்தியமுனிவரிடம் வேண்டினர்.  அவரும் கோள்களின் நிலைகளை ஆராய்ந்து பார்த்து, மிக்க சினமுள்ள குரியனும் செவ்வாயும்.  முன் செல்ல, ஒளி வீசும் சுக்கிரனாகிய குரவன், அவற்றிற்கும் பின்னே செல்லும் இந்தச் செயலினால், கடலாகிய ஆடையையுடைய இந்நிலவுலகில், பன்னிரண்டு ஆண்டுகள் வரை, மழையில்லை.  மழைக்கு அதிபதியாகிய இந்திரனிடத்திற் சென்று கேளுங்கள் என்று கூறி அருளினார்.
அகத்திய முனிவரே, நாங்கள் இந்திர லோகத்திற்கு எங்ஙனம் செல்வோம்? என்று கேட்டனர்.  அதற்கு, ஐம்புலன்களையும் வென்றவனாகிய அந்தக் குறுமுனிவர், நீங்கள் மூவரும் சோமவார விரதம் மேற்கொள்ளுங்கள்.  மதுரை அருள்மிகு வெள்ளியம்பலவாணன் திருவருளைப் பெற்றுக் கொண்டு, வானின் வழியே செல்லும் ஆற்றலைப் பெறுவீர்கள் என்றார்.  மேலும்,  அந்த மேருமாலையாகி வலிய வில்லையுடைய சிவபிரானது விரதத்தின் விதிமுறைகளைக் கூறினார்.

சோமவார விரதத்தின் மகிமை - மிக்கமேன்மையுடைய தேவர்களுள் சிவபிரான் மேலோனாவன்.  மிக்க மேன்மையுடைய சத்திகளுள்ளே உமாதேவியார் மேன்மையுடையராவர். உத்தமமான விரதங்கங்களுள் மிகவும் மேன்மையுடைய விரதங்கள் பல உள்ளன.  அவற்றுள், சோமவார விரதம் மேன்மையுடையது என்று வேதம் முதலான நூல்கள் கூறுகின்றன.

இந்தச் சோமவார விரதத்தைக் காசி முதலிய திருப்பதிகளில் இருந்து மேற்கொண்டால் அதிக பலன் உண்டு.  ஆனாலும், இந்த நல்ல விரதத்தை மதுரையம்பதியில் இருந்து மேற்கொள்பவர்களுக்குக் கோடிப்பங்கு பயன்மிகும்; இவ்வாறு கூடுதலான பலன் கிடைப்பதற்குக்  காரணம் என்னவென்றால், சோமவார மானது சோமசுந்தரக் கடவுளக்கு உரிய வாரம்.
ஆகையால் இந்த மதுரைப்பதியில், சூரியனோடு சந்திரன் பொருந்த அந்நாளுடன் கூடிய சோமவார விரதத்தை, விதிப்படி மேற்கொள்ள பவர்களுக்கு, அப்பயனிலும் அதிகப்பயன் உண்டு; இப்பதியில், நீதி வழியாக ஈட்டிய பொருளினால் இயற்றும், நன்மையாகிய அவ்விரதப் பயன்,  அதனிலும் அதிக முடையதாய் ஒன்று பலவாகப் பெருகும். 

சோமவார விரத நாட்கள் - நன்மை நிறைந்த சோமவார விரதம் இருக்கத் தொடங்குகின்ற   நாள்கள் எவை? கார்த்திகை மாதத்திலாவது மார்கழி மாதத்திலாவது, அல்லது இரண்டு அமாவாசை சேர்ந்த மலமாதங்களை நீக்கி மற்றைய மாதங்களிலாவது, முற்பக்கத்தில், பரந்த கிரணத்தையுடைய ஞாயிற்றுக்கிழமையின் இரவில் உணவு கொள்ளாது, வேற்றிடத்தில் தூங்கி,
விடியற் காலையில் எழுந்து,  அருள்மிகு அங்கயற்கண்ணியின் மணாளாராகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து, அன்று செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்து, காம முதலிய குற்றங்களை மனத்தினின்றும் நீக்கி, மலர்ந்த பொற்றாமரைக் குளத்தை அடைந்து, விரலில் பவித்திரம் தரித்து, உரையும் உடலும் உள்ளமும் ஒன்றுபட, சங்கற்பம் சிறந்தெடுத்துச் சொல்லி,  கடப்ப மரத்தின் அடியிலே தோன்றிய மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற சோமசுந்தரக் கடவுளை, சிந்தித்து, பூமியில் உள்ள தீர்த்தங்கள் எல்லாவற்றிலும், மூழ்கிய பயனை, இங்கு உறுதி பெறத் தருவாயாக என்று வேண்டி, அலைகளையுடைய பொற்றாமரையில் நீராடி, வெள்ளிய திருநீற்றை உடம்பில் தரித்து, உருத்திராக்க மாலையை ஒளியுண்டாக விதிப்படி தாங்கி,  வெள்ளைமந்தாரை மலரும் முல்லை மலரும் மல்லிகை மலரும் வெடித்த வாயையுடைய சாதி மலரும், தேனொடு மலர்ந்த இருவாட்சி மலரும் முதலிய வெள்ளை மலர்களை எடுத்து, சித்தி விநாயகக் கடவுளை முன்னே வழிபட்டு, குறை யிரந்து( இரத்தல் = யாசித்தல்), சங்கற்பங் கூறி, உள்ளே சென்று, முடியின்மேல் பன்னிரண்டு அங்குல அளவின் உயர்ச்சிக்குமேல்,  உண்மையறிவானந்த வடிவாகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து வைத்து, அச்சிவ வடிவாயிருந்து, மண்முதலாகச் சிவம் ஈறாக வுள்ள தத்துவாத்துவாவின் வடிவமான சிவலிங்கப் பெருமானை, ஆசனமும் மூர்த்தியும் மூலமும் முதலிய மந்திரங்களாலும் ஆகம விதிப்படி, பூசிக்க பஞ்சாமிர்தமும், பஞ்ச கவ்வியமும், நறிய கனிகள் ஐந்தும், சிவந்த தேனும், சந்தனக் குழம்பும், மலர் பெய்த குளிர்ந்த நீரும், தூய நீருமாகிய இவைகளால், திருமஞ்சனஞ் செய்து, அழகிய வெண் பட்டாடையும், பச்சைக் கர்ப்பூரச் சுண்ணமும், சந்தனமும், மணம் பொருந்திய மல்லிகை முதலான வெள்ளிய மலராலாகிய மாலையும், அணிந்து மணிகள் இழைத்த பொன்னாலாகிய திருவாபரணஞ் சாத்தி, ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த திருவடி முதலாகத் திருவங் கங்களைப் பூசித்து, கயல்(மீன்)போன்ற  கண்ணினையுடைய எங்கும் நிறைந்த பராசக்தியை, அவ்வாறே, இறைவனுடைய திருவைந்தெழுத்தைப் பெண்பாலுக்குப் பொருந்த உச்சாத்துப் பூசித்து, குற்றமற்ற இனிய பாலுடன் பலந்து சமைத்த இனிய திருவமுதுடன்,  பல காரவகைகளும் பானக்கமும் ஆகிய இவைகளை நிவேதித்து, மணம் பொருந்திய தாம்பூலம் கொடுத்து, நறிய மணமுள்ள தூபத்தையும் தீபத்தையும் வரையறுத்தவாறு சுழற்றி, கண்ணாடி முதலய மற்றை உபசாரங்களையும் சோமசுந்தரக் கடவுள் திருமுன் காண்பித்து, வில்வத்தினால் அருச்சனை செய்ய வேண்டும்.

திரிபுரம் எரித்த இறைவனின் இச்சா ஞானக் கிரியைவடிவாயுள்ள வில்வமரத்தின் அடியைச் சார்ந்து, மூன்று நாட்கள்வரை உணவும் தூக்கமும்  இல்லாமல், அரகரவென்று முழங்குவோர் செய்த, ஐந்து பெரிய பாவங்களும், அறிவின்றிச் செய்த கொலைப்பாவங்களும் நீங்கும், ஆகலின், வில்வம் சிறந்தது.  வில்வத்தின் இதழ் மடங்கிச் சுருங்கி யிருத்தலும், வாடிக் காய்ந்திருத்தலும், மயிர்ச் சிக்குண்டிருத்தலும், வளைந்த கால்களையுடைய சிலம்பிப்பூச்சி கூடுகட்டியிருத்தலும், புழுக்கள் கடித்திருத்தலும், முதலிய குற்றங்கள் அடங்கியிருந்தாலும் குற்றம் ஆகாது. வில்வம் சிறந்ததாகும்; நீண்டகையில் அதனைக் கொண்டு, சிவபெருமானுடைய ஆயிரந் திருநாமங்களையும் கூறி அருச்சிக்க வேண்டும்.

“ஒப்பிலாத உமையை ஒரு பாகத்தில் உடையவனே, அடியேன் செய்கின்ற குற்றங்கள் ஒவ்வொருநாளும் எண்ணிறந்தனவாம்; கொடிய நஞ்சினையும் அமுதாகக் கொண்ட நீ, யான் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொண்டு காத்தருள்வாய்” என்று வேண்டி, திருவடியில் முடி பொருந்துமாறு வீழ்ந்து வணங்கி, மூன்றுமுறை வலஞ்செய்து துதித்து, வலிய மனமானது கரைந்துருக நின்று வேண்டிய வரங்களைக் கூறிக் குறையிரக்க(இரக்க = யாசிக்க), நல்ல கல்யாணப் போறும், நன் மக்கட்பேறும், நல்ல வாக்கும் கல்வியும் பொருளும், மனதிற்கு இனிய போகமும், பகைவரைப் புறங்காணுதலும், இப்பிறப்பிலே அரசுரிமையும் பிறநலங்களும், எண்ணியவாறே உண்டாகும் .

முதன்மையான இச் சொக்கலிங்கப் பெருமானைத் தொட்டுப் பூசித்தற்கு, உரியரல்லாத வேதம் உணர்ந்த வேதியர் முதலோார், ஆன்மார்த்த இலிங்கத்தின்கண், இம் முறைப்படி வழிபட்டு, மேலே கூறிய சோமவார விரதம் நோற்கக் கடவர்; அவ்வான்மார்த்த பூசனைக்கு உரிமை அளிக்கப்படாத சாரியார், பொருள் கொடுத்து ஆதிசைவர்களால் பூசித்து நோற்கக்கடவர்.

உச்சிப் பொழுதில் உண்ணுதலும், இரவிலுண்ணுதலும், இரண்டு வேளை உணவையும் நீக்குதலும், துயிலாதிருத்தலும், நான்கு சாமமும் அருச்சனை புரிதலும் என்று, ஒப்பற்ற இந்த விரதமானது, ஐந்து வகையினை யுடையது; ஆராய்ந்து பார்க்கின், இந்த ஐந்து வகையும், ஒன்று மிகவும் சிறந்ததாகும்; நோற்கும் ஆண்டின் அளவு, ஒன்றும் இரண்டும் மூன்றும் பன்னிரண்டும் ஆகிய ஆண்டினளவும் வாழ் நாளளவும் ஆகும்; இவற்றினுள் வாழ்நாள் அளவு கருதி நோற்கின்றவர் (தமக்கு உத்தியாபனம் இல்லை யாகலின்), முதலில் அவ்விரதம் பூர்த்தி யாதற்காக முன் செய்யும் கிரியையைச் செய்து நோற்கங்க கடவர்;  மேற்கூறிய அவ்வாண்டுகளின் அளவில் நோற்கும் விரதத்திற்கு, (உத்தியாபனம்) முடிவிற் செய்ய தக்கதாகும்;

உத்தியாபன விதி - இதழ் விரிந்த மாலை நாற்றிய மண்டபமும், குண்டமும் மண்டலமும் வகுத்து, உமை கேள்வனாகிய சிவபெருமானை,  பரந்த ஒளியையுடைய முப்பது கழஞ்சு வெள்ளியினால் திருவுருவம் அமைத்து,
விடியற் காலையில் ஆசிரியனது சொல்லின் வழியே, நாட் கடமைகளை முடித்து, உசிப்பொழுது தொடங்கி மாலைப்பொழுது வரையும், சிவபுராணங்களைக் கேட்டும், மாலைப் பொழுது தொடங்கி நான்கு யாமத்தினும், கயல் போலும் கண்களையுடைய இறைவியை ஒரு கூற்றிலுடைய சிவபெருமானைப் பூசிக்கக் கடவர்; அப்பூசை இறுதியில், மூலமந்திரம் நூற்றெட்டால் நூற்றெட்டு முறையின் ஆகுதி முடித்தல் - சில மூலமந்திரம் நூற்றெட்டினால் நூற்றெட்டு முறை ஆகுதி செய்யக் கடவர்.

ஆயிரம் வில்வங்களைக்கொண்டு ஆயிரம் திருப்பெயர்களையும் கூறி, நான்கு யாமங்களினும் அருச்சிக்கக் கடவர்; நல்ல  திருவைந்தெழுத்தினால்,  அந்த ஐந்தெழுத்தினையும் உருவமாகவுடைய இறைவனுக்கு அருக்கியங் கொடுக்கக் கடவர்; அளவிறந்த மூலமந்திரங்களாலும், மற்றைய மந்திரங்களினாலும்,  விளங்குகின்ற வேள்வித்தீயை வளர்த்துப் பூரணாகுதி செய்து, முடிவில்லாத சோமசுந்தரக் கடவுளின் வேள்வியை முடிக்கக்கடவர்.

விடிந்தபின், நித்தியக் கடன்களைச் செய்து முடித்து, வாழையின் செழித்த பசிய இலைகள் பதின்மூன்றில்,  நன்மையைத் தருகின்ற தூய வெள்ளிய அரிசியை நிரப்பி, இனிமையுடைய நல்ல காய்கறிகளைப் பரப்பி, அமைவுபெற ஆவின்பால் நிறைந்த குடங்கள் பதின்மூன்றனை, அவ்வரிசியின் மேலே வைத்து, சிவபெருமான் திருவடியில் ஒன்றுபட்ட அன்பினையுடையவராய், சிவபெருமானை அருச்சித்தற்குரிய ஆதிசைவர்களை அழைத்து காதிலணியும் குண்டலமும்,  கையில் அணியும் காப்பும்,  பொலிவுபெறத் தந்து,  அன்பு மிக,  (அவர்களைச்) சிவபெருமானாகவே கருதி,  அருச்சித்து,  பெரிய தக்கிணையுடன், பாதமாகிய மலரிலணியும் பாதுகையும்,  விசிறியும் குளிர்ந்த குடையும் அழகிய ஆடையுமாகிய இவை முதலிய பலவற்றையும், சிறந்த தானமாகக் கொடுத்து,  பின்பு, குரவனை (இந்த வழிபாட்டை நடத்திக் கொடுக்கும் குருவை) அவனுடைய கற்பு நிறைந்த மின்போலும் இடையினை யுடைய மனைவியுடன் தவிசில் இருக்க, இம் முறையாக உத்தியாபனத்தை முடித்து, ஆசிரியன் கட்டளையினால், சிவபிரான் திருவடிக்கண் அன்புடைய அடியார்களுடனும், மக்களோடும் சுற்றத் தோடும், அமுது உண்ணல் முறையாகும்;

இச் சோமவார விரதத்தை, முன்னே திருமாலும், தேனையுடைய தாமரை மலரில் வதியும் பிரமனும், இந்திரன் முதலிய தேவர்களும், பதினெண் கணத்தாரும் ஆகிய எல்லாரும் மேற்கொண்டனர்.  மனிதர்களும் நோற்றுப் பெறுதற்கரிய போகத்தையும் வீடுபேற்றையும் அடைந்தனர்.
இவ்விரதத்தை நோற்பவர், கொடிய பகையும் மனத்துன்பமும் நீங்கி, அளவிறந்த பிறவிகளிற் செய்த தீமை பொருந்திய வினைகள் நீங்கி, எடுத்த பிறப்பிலேயே வீடுபேறு எய்துவர்;

இவ் விரதத்தைக் கூறினவர்களும் கேட்டவர்களும், மனைவியர் புதல்வர் சுற்றத்துடன் இன்பத்தோடு வாழ்ந்து, தேவருலகில், சிறந்த பதினான்கு இந்திரப் பட்டமளவும் அவன் பதத்தில், இனிதாக வீற்றிருப்பார்கள் என்று அகத்திய முனிவன் அருளிச்செய்தனன்.

அங்ஙனம் அவன் அருளிச் செய்த முறைப்படி, சோமசுந்தரக் கடவுளுடைய சோமவார விரதத்தை நோற்கும் பொருட்டு, ஒளிவீசும் மணிக்கலன்களை யணிந்த மன்னர் மூவரும், அம் முனிவனிடத்தில் விடைபெற்றுச் சென்று, அழகிய அகவிதழ்களை யுடைய பொற்றாமரை வாவியில் நீராடி, அங்கயற்கண் அம்மையையும் அவர் ஒரு பாகத்திற் பொருந்திய சோமசுந்தரக் கடவுளையும், வழிபட்டுப் பரவி அவ்விரதத்தை மேற்கொண்டார்கள்.  அதன் பயனாக வான்வழியாகச் சென்று இந்திரனது உலகத்தை அடைந்தனர்.  இந்திரன் அவர்களை வரவேற்று உபசரித்தான்.

அகத்திய முனிவர் மூவேந்தர்களுக்கும் அருளிச் செய்த சோமவார விரதத்தை விதிப்படி நாமும் மேற்கொண்டு சிவபெருமானின் திருவருளைப் பெறுவோமாக.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 20, (03.03.2020) செவ்வாய்கிழமை.

--------------------------------------------
திருவிளையாடற் புராணம் பாடல்கள் -
காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால் வெள்ளித்
தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர்த
தூசின வுலகிற் பன்னீ ராண்டுவான் சுருங்கு மென்று
பேசின நூல்கள் மாரி பெய்விப்போற் சென்று கேண்மின்.(1056)

என்றவ னெதிர்யா மெவ்வா றேகுது மென்றா ரைந்தும்
வென்றவன் சோம வார விரதநீர் நோற்று வெள்ளி
மன்றவ னருளைப் பெற்று வான்வழிச் சென்மி னென்றக்
குன்றவன் சிலையா னோன்பின் விதியினைக் கூறுகின்றான்.(1057)

உத்தம வானோர் தம்மு ளுத்தம னாகு மீசன்
உத்தம சத்தி மாரு ளுத்தமி யுருத்தி ராணி
உத்தம விரதந் தம்மு ளுத்தமந் திங்க ணோன்பொன்
றுத்தம மறைநூ லாதி யுரைக்குமிச் சோம வாரம்.(1058)

மந்தரங் காசி யாதிப் பதிகளில்* வதிந்து நோற்கத்
தந்திடும் பயனிற் கோடி தழைத்திடு மதுரை தன்னில்
இந்தநல் விரத நோற்போர்க் கதிகம்யா தென்னிற் சோம
சுந்தர னுரிய வார மாதலாற் சோம வாரம்.(1059)

அங்கதி னதிகப்பேறுண் டருக்கனின் மதிதோய்ந் தொன்றித்
தங்கிய திங்க ணோன்பு தகுதியி னோற்க வல்லார்க்
கிங்கதி னதிக நீதி யீட்டிய பொருள்கொண் டாற்றும்
மங்கர விரதப் பேறொன் றனந்தமாய் வளரு மன்றே.(1060)

நலமலி விரத நோற்கத் தொடங்குநா ணவில்வாந் தேளிற்
சிலையினி லாத லன்றி யிரட்டிய தெரிசஞ் சேர்ந்த
மலமதி யொழித்து மற்றை மதியிலு முந்தைப் பக்கத்
தலர்கதிர் வாரத் தல்லூ ணயின்றிடா தயலிற் றுஞ்சா.(1061)

வைகறை யெழுந்து சேற்கண்ண மணாளனை யுள்கி யற்றைச்
செய்கட னிறீஇக்கா மாதி சிந்தைநீத் தலர்பொற் கஞ்சப்
பொய்கையை யடைந்து கையிற் பவித்திரம் புனைந்து வாக்கு
மெய்கருத் தொருப்பா டெய்தச் சங்கற்பம் விதந்து கூறி.(1062)

கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை நினைந்து ஞாலத்
திடம்படு தீர்த்த மெல்லா மாடிய பயனை யீண்டுத்
திடம்படத் தருதி யென்னாத் திரைத்தடம் படிந்து வெண்ணீ
றுடம்பணிந் தக்க மாலை யொளிபெற விதியாற் றாங்கி.(1063)

வெள்ளைமந் தார முல்லை மல்லிகை வெடிவாய்ச் சாதி
கள்ளவிழ் மயிலை யாதி வெண்மலர் கவர்ந்து வேழப்
பிள்ளையை முந்தப் பூசித் திரந்துசங் கற்பம் பேசி
உள்ளணைந் துச்சி மேற்பன் னிருவர லுயர்ச்சிக் கும்பர்.(1064)

சத்திய ஞானா னந்த தத்துவந் தன்னை யுள்கி
வைத்ததன் வடிவங் கொண்டு மண்முதற் சிவமீ றான
அத்துவ விலிங்கந் தன்னை யாசன மூர்த்தி மூல
வித்தைமற் றாலு நூலின் விதியினாற் பூசை செய்க.(1065)

ஐந்தமு தாவி னைந்து நறுங்கனி யைந்து செந்தேன்
சந்தன தோயம் புட்பத் தண்புனன் மணிநீ ராட்டிச்
சுந்தர வெண்பட் டாடை கருப்புரச் சுண்ணஞ் சாந்தங்
கந்தமல் லிகைமுன் னான வெண்மலர்க் கண்ணி சாத்தி.(1066)

காசணி பொலம்பூண் சாத்திக் கனைகழ லாதி யங்க
பூசனை செய்து சேற்கட் பூரண பரையை யவ்வா
றீசனைந் தெழுத்தைப் பெண்பாற் கிசையவுச் சரிததுப் பூசித்
தாசறு சுரபித் தீப்பா லட்டவின் னமுதி னோடும்.(1067)

பண்ணிய வகைபா னீய நிவேதனம் பண்ணி வாசம்
நண்ணிய வடைக்காய் நல்கி நறுவிரைத் தூபந் தீபம்
எண்ணிய வகையாற் கோட்டிக் கண்ணடி யேனை மற்றும்
புண்ணியன் றிருமுன் காட்டி வில்வத்தாற் பூசை செய்தல்.(1068)

புரகர னிச்சா ஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ
மரமுத லடைந்து மூன்று வைகலூ ணுறக்க மின்றி
அரகர முழக்கஞ் செய்வோ ரைம்பெரும் பாத கங்கள்
விரகில்வெய் கொலைக டீரு மாதலால் விசேடம் வில்வம்.(1069)

மடங்கிதழ் சுருங்கல் வாடி யுலர்ந்தது மயிர்ச்சிக் குண்டல்
முடங்குகாற் சிலம்பிக் கூடு புழுக்கடி முதலாங் குற்றம்
அடங்கினுங் குற்ற மில்லை* யுத்தம மாகும் வில்வந்
தடங்கை கொண்டீச னாம மாயிரஞ் சாற்றிச் சாத்தல்.(1070)

அடியனேன் செய்யுங் குற்ற மன்றைக்கண் றனந்த மாகுங்
கொடியநஞ் சமுதாக் கொண்டாய் குற்றமுங் குணமாக் கொண்டு
படியெழு தரிய நங்கை பங்கனே காத்தி யென்று
முடியுற வடியில் வீழ்ந்து மும்முறை வலஞ்செய் தேத்தி.(1071)

வன்மனங் கரைய நின்று வேண்டிய வரங்கள் வேண்ட
நன்மணப் பேறு மக்கட் பேறுநல் வாக்குக் கல்வி
பொன்மனக் கினிய போகந் தெவ்வரைப் புறகு காண்டல்
இம்மையி லரசு மற்று மெண்ணியாங் கெய்து மன்னோ.(1072)

ஆதியிவ் விலிங்கந் தீண்டற் கருகரல் லாத வேத
வேதியர் முதலோ ரிட்ட விலிங்கத்திவ் விதியா லர்ச்சித்
தோரிய விரத நோற்க வர்ச்சனைக் குரிய ரல்லாச்
சாரியர் பொருணேர்ந் தாரி சைவராற் பூசை செய்தல்.(1073)

பொருவிலிவ் விரத மைவகைத் துச்சிப்  போதிலு னிரவிலூ ணிரண்டும்
ஒருவுத லுறங்கா திருத்தலர்ச் சனைநால் யாமமு முஞற்றுத லென்னக்
கருதினிவ் வைந்து மொன்றினுக் கொன்று கழியவு மதிகமா நோற்கும்
வருடமொன் றிரண்டு மூன்றுபன் னிரண்டு வருடம்வாழ் நாளள விவற்றுள்.(1074)

உடலள வெண்ணி நோற்பவர் முந்த வுந்தியா பனஞ் செய்து நோற்கக்
கடவரவ் வருடக் கட்டளைக் கிறுதி கழிப்பதுத் தாபன விதிதான்
மடலவிழ் மாலை மண்டபங் குண்ட மண்டலம் வகுத்துமா பதியைப்
படரொளி வெள்ளி முப்பது கழஞ்சிற் படிமையா னிருமிதஞ் செய்து.(1075)

காலையி லாசான் சொல்வழி நித்தக் கடன்முடித் துச்சி தொட் டந்தி
மாலையி னளவும் புராணநூல் கேட்டு மாலைதொட் டியாமமோர் நான்குஞ்
சேலன கண்ணாள் பங்களைப் பூசை செய்கவப் பூசனை முடிவின்
மூலமந் திரநூற் றெட்டுநூற் றெட்டு முறையினா லாகுதி முடித்தல்.(1076)

வில்வமா யிரங்கொண் டாயிர நாமம் விளம்பிநால் யாமமுஞ் சாத்தல்
நல்லவைந் தெழுத்தா லைந்தெழுந் துருவி னாதனுக் கருக்கியங் கொடுத்தல்
எல்லையின் மூல மந்திரத் தாலு மேனைமந் திரங்களி னாலும்
வில்லழ லோம்பிப் பூரணா குதிசெய் தீறிலான் வேள்வியை முடித்தல்.(1077)

புலர்ந்தபின் னித்த வினைமுடித் தரம்பைப்  பொதுளும்பா சிலைபதின் மூன்றின்
நலந்தரு தூவெள் ளரிசிபெய் தினிய நறியகாய் கறியொடு பரப்பி
அலந்தர வான்பா னிறைகுடம் பதின்மூன்  றரிசிமேல் வைத்தர னடியிற்
கலந்தவன் பினராய்ச் சிவார்ச்சனைக் குரிய  கடவுள்வே தியர்களை வரித்து.(1078)

காதணி கலனுங் கையணி கலனுங் கவின்பெற வளித்தர னாக
ஆதரம் பெருக நினைந்தருச் சனைசெய்  தரியதக் கிணையொடும் பாதப்
போதணி காப்பு விசியிதன் கவிகை பூந்துகின் முதற்பல வுடனே
மேதகு தானஞ் செய்துபின் குருவைக் கற்புடை மின்னிடை யோடும்.(1079)

ஆசனத் திருத்திப் பொலந்துகில் காதுக் கணிகள்கைக் கணிகளு மணிந்து
வாசநன் மலரிட் டருச்சனை செய்து மலைமக டலைவனை வரைந்து
பூசனை செய்த படிமையோ டம்பொன் பூதலம் பதாதிகள் பிறவுந்
தூசலர் மாலை கோட்டணி புனைந்த சுரவிமா தானமுஞ் செய்து.(1080)

இனையவா றுத்தா பனமுடித் தாசா னேவலாற் சிவனடிக் கன்பர்
தனையரோ டொக்க லுடனமு தருந்த றகுதியிவ் விரதமுன் கண்ணன்
நனையதா மரையோ னிந்திரன் முதல்வா னாடவர் மூவறு கணத்தோர்
அனைவரு நோற்றார் மனிதரு மனுட்டித் தரும்பெறற் போகம்வீ டடைந்தார்.(1081)

ஈதுநோற் பவர்வெம் பகைமனத் துயர்தீர்ந் தாயிரம் பிறவியி லியற்றுந்
தீதுசேர் வினைதீர்ந் தெடுத்தயாக் கையினிற் சிவகதி யடைவரிவ் விரதம்
ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்க ளோக்கலோ டினிதுவாழ் தும்பர்
மேதகு பதினா லிந்திரன் பதத்தில் வீற்றினி திருப்பரென் றறவோன்.(1082)

சொல்லிய நெறியாற் சோம சுந்தரன் விரத நோற்பான் 
வில்லிடு மணிப்பூண் வேந்தர் முனிவனை விடைகொண் டேகி
அல்லியங் கனகக் கஞ்சத் தாடியங் கயற்கண் வல்லி
புல்லிய பாகன் றன்னை வழிபடீஅப் போற்றி நோற்றார்.(1083)