கூடலை (கீழடியை) ஆண்ட கரடி
சிவந்த செங்கற்களால் நீண்ட மதில்களையும் நெடிய பல கட்டிடங்களையும் கொண்டுள்ள இந்த நகரத்தைக் “கருப்புக் கரடி” ஒன்று அரசாண்டுள்ளதாம். நம்பும்படியாகவா உள்ளது? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இப்படிச் சொல்வது நானல்ல, முத்தமிழ்ச் சங்கப் புலவர் எருக்காட்டூர்த் தாய்ங் கண்ணனார்.
திருப்பரங்குன்றத்திற்கும் திருப்பூவணத்திற்கும் இடையே கீழடி உள்ளது. கீழடி அருகே தொல்லியலாளர் ஒரு பெரிய நகர நாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்து உலகு அறியச் செய்துள்ளனர். ஐயம் தெளிவுற அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து, இந்தத் தொன்மையான நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது என அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
கரையான் புற்றும் கரடியும் - சிறிய உருவத்தை உடையது கரையான். கரையானின் வாய் மிகவும் சிறியது. இருப்பினும் ஆயிரக்கணக்கான கரையான்கள் ஒன்று சேர்ந்து அரும்பாடுபட்டு இரவுபகலாக உழைத்து, அவற்றின் மிகச் சிறிய வாயில் சிறிதுசிறிதாக மண்ணை எடுத்துச் சிவந்த நிறத்தில் உயரமான புற்றை ஒன்றைக் கட்டிவிடும். இந்தப் புற்றினுள் உள்ளே உண்டக்கட்டிச் சோறு போன்று இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துக் குடும்பம்போல் கூடி வாழும். இந்தச் சிவந்து உயர்ந்த கரையான் புற்றைக் கரிய நிறமுடைய கரடியானது தனது பெரிய கையில் உள்ள நீண்ட நகத்தினால் தோண்டி எடுத்து, உள்ளே உள்ள கரையான் புற்றுச் சோற்றையும் தின்று தீர்த்து விட்டது.
வெளைப்பூவும் வெள்ளைவாய்க் கரடியும் - கரையான் புற்றில் எப்படித் துளை உள்ளதோ அதேபோன்று துளை உடைய வெள்ளைநிறப் பூ உள்ளது. கரையான் புற்றினுள்ளே உள்ள அறையில் சோறு இருப்பது போல், இந்தப் பூவின் துளையினுள்ளே உள்ள அறையில் தேன் நிறைந்து இருக்கும். கரையான் புற்றின் சோற்றைத் தின்றுதீர்த்தும் திருப்தி அடையாத இந்தக் கரிய கரடியானது, வான் உயர வளர்ந்திருக்கும் மரத்தின் மேலே ஏறி, இந்த வெள்ளைநிறப் பூவையும் பறித்து அதன் தேனைக் குடித்து மகிழ்ந்து இருக்கிறது.
செழியனும் கரடியும் - இந்தக் கரடி போன்றவனாம் செழியன். இவன் கரையான் போன்ற சிறுசிறு சிற்றரசர்கள் பெரிதும் முயன்று கட்டிய மண் கோட்டைகளைத் தனது வலிமையான நகம்போன்ற வேல்படையால் அழித்து, அதனுள்ளே உள்ள செல்வதை எடுத்துச் சென்றுவிட்டான். ஆனாலும் இவனுக்குத் திருப்தி இல்லை.
சேரநாட்டில் முசிறி உள்ளது. சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அந்த நுரைகள் சிதறிப் போகுமாறு சிறந்த தொழில்நுட்பம் கொண்ட மரக்கப்பல்கள் செல்கின்றன. அந்தக் கப்பல்களில் யவனர்கள் பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர். வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால் எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது இந்த முசிறி நகரம்.
கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்று அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.
கூடலும் கரடியும் - கரிய கரடி போன்ற செழியனுடைய கொடி அசையும் தெருக்களையுடையது கூடல் நகரம். இந்தக் கூடல் மாநகருக்கு மேற்குப்புறத்தே திருப்பரங்குன்றம் இருக்கிறது. இந்தத் திருப்பரங் குன்றத்தில் பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக் கொடி உயர்த்து பறக்கிறது.
நெஞ்சமே! நான் இந்தச் சிவந்த செங்கற்களை உடைய நீண்ட இரண்டை மதிலையும், நெடிய மாளிகைகளையும் உடைய இந்த இடத்திலிருந்து எனது முப்பாட்டன் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்தைப் பார்த்து வணங்கி மகிழ்ந்திருப்பேன். இதைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக!
முப்பாட்டன் முருகனைப் போற்றுவோம். கூடல் என்ற மாமதுரையை ஆண்ட மன்னன் செழியனைப் போற்றுவோம். தொல்லியலாளர் போற்றவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 18 (05.10.2019) சனிக்கிழமை.
நன்றி - 1) https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
2) படங்கள் இணைத்தில் இருந்தவை. அவற்றைப் பதிவு செய்தோருக்கு நன்றி.
கற்றது -
1) அகம் 149.
எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19
- எருக்காட்டூர் தாயங்கண்ணனார் (அகம்-149)
2) https://kalairajan26.blogspot.com/2018/06/world-wide-big-corporate-tamils.html
பரவாயில்லை..சு.வெங்கடேசன் வகையறா மத சம்மந்தப்பட்ட பொருட்களே இல்லை அந்த காலத்தில் என மீண்டும் மீண்டும் சொன்னாலும் அந்தக்காலம் எவ்வளவுதான் பின்னோக்கி போனாலும் இதுதான் மதுரை என்றால் திருப்பரங்குன்றம் உள்ளவரை இறை வழிபாடும் பின்னோக்கிய செல்லும்..
ReplyDeleteதொல்லியல்மேட்டின் நடுவில் உள்ள “அண்ணல் கோயில்” உள்ள இடத்தைத் தொல்லியலாளர் அகழாய்வு செய்யும் போது, புதைந்துள்ள இந்தத் தொன்மையான நகரமானது பண்டைய கூடல் நகராகும் என்பது உறுதியாகும் ஐயா. அதுவரை காத்திருப்போம்.
Delete