Friday 29 April 2022

ஓங்கல் - புராணத்தில் புவியறிவியல்


புராணம் கூறும்  புவி அறிவியல்

1954 இல் ஒரு இந்திய ஆய்வு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீ (29,029 அடி) என நிர்ணயித்தது, இது நேபாள அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த குழுக்கள் கூட்டாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய உயரத்திற்கு ஒப்புக்கொண்டன, இது சர்வே ஆஃப் இந்தியாவின் அசல் கணக்கீட்டை விட 0.86 மீ (2.8 அடி) அதிகமாகும்.  (பார்வை https://www.bbc.com/future/article/20220407-how-tall-will-mount-everest-get-before-it-stops-growing).  நடைபெற்றுள்ள ஆய்வுகளின்படி பூகம்பங்களின்ல் எவரெஸ்ட் சிகரமானது வளர்ந்து வருகின்றது என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.    

ஆச்சரியம் என்னவென்றால், இதே கருத்தைத் திருவிளையாடல்  புராணமும் கூறுகிறது. ஒவ்வொரு ஊழிக் (இயற்கைப் பேரழிவுக்) காலத்திலும் இமயமலை யானது உயர்ந்து ஓங்கி வளர்ந்து வருகின்றது என்கிறது திருவிளையாடற் புராணம்.

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், இமயமலையானது ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் ஓங்கி வளர்கிறது என்றொரு புவியியல் அறிவியல் கருத்து பதிவு செய்யப்ட்டுள்ளது.  திருவிளையாடற் புராணம் 2 பாடல்களில் இமயமலையை “ஓங்கல்” என்ற பெயர்ச் சொல்லால் குறிக்கிறது.  ‘செங்கல்’ அனைருக்கும் தெரியும்.  இமயமலையானது ஓங்கி வளரும் கல்லாம்.  அதனால் இமயமலையயை “ஓங்கல்” என்ற பெயரால் புராணம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் அளந்து சொல்லும் அதே கருத்தைத் திருவிளையாடற் புராணமும் பதிவு செய்துள்ளது வியப்பிலும் வியப்பாக உள்ளது அல்லவா?


திருவிளையாடற் புராணம் பாடல் எண் 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்
பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்
உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

---------------------------------------

கற்றவை 

திருவிளையாடற் புராணத்தின் பாடல்கள் மூலமும் உரையும்

புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.

     (இ - ள்.) புரந்த ஆதி வானவர் பதம் - இந்திரன் முதலிய இமையவர் உலகும், போது உறை புத்தேள் - தாமரை மலரில் உறையும் அயனுடைய, பரந்த வான்பதம் - அகன்ற உயர்ந்த சத்தியலோகமும், சக்கரப்படை உடைப்பகவன் -  திகிரிப்படையினையுடைய திருமாலின், வரம் தவாது வாழ் பதம் - மேன்மை கெடாது வாழ்கின்ற பரம பதமும், எலாம் - ஆகிய எல்லாமும், நிலைகெட வரும் ஊழி நாள் தோறும் - அழிய வருகின்ற ஊழிக்காலந்தோறும், அ ஓங்கல் - அத்திருக்கைலாய மலையானது, உரம் தவாது நின்று ஓங்கும் - வலி கெடாது நிலைபெற்று வளரும் 

புரந்தராதி : வடமொழித் தீர்க்க சந்தி. பகவன் ஆறு
குணங்களையுடையவன்; சிவன், திருமால் முதலிய பல கடவுளர்க்கும் இப்பெயர் உரித்து. வரும் ஊழி நாள் எனச் சொற்கள் மாற்றப்பட்டன; வருநாள் நின்று அவ்வூழிதோறும் என வுரைத்தலுமாம்;  உம்மை தொக்கது. 'கைலை மூவுலகும் ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கம்' என முன்னுங் கூறினார்; ஆண்டுக் காட்டிய  'ஊழிதோ றூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலைய'  என்பதனை ஈண்டுங் கொள்க. ஓங்கல் என்பது மலைக்குத் தொழிலாகுபெயர்; அல் : பெயர் விகுதி யென்னலுமாம். (2)

------------

சலிக்கம் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி
கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டேர்
வலிக்கும் பரிமள் ளர்வழங்கொலி வாங்கி நேரே
ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல்.

(இ - ள்.) சலிக்கும் புரவுத் தடம் தேர் உடைத் தம்பிராட்டி - செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடாதகைப் பிராட்டியார், கலிக்கும் பல தூரியம் - ஒலிக்கின்ற பல இயங்களின் ஒலியையும், கைவரை - யானைகளும், தெய்வத் திண்தேர் - தெய்வத் தன்மையையுடைய வலிய தேர்களும், வலிக்கும் பரி - கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், மள்ளர் - வீரர்களும், வழங்கு ஒலி - செல்கின்ற ஒலியையும் வாங்கி நேரே ஒலிக்கும்படி - ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு, ஊழி தோறு ஓங்கும் ஓங்கல் கிட்டினள் - ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற கயிலை மலையை அடைந்தார் எ - று.

தூரியம் அதன் ஒலிக்காயிற்று; தூரியமும் நால்வகைச் சேனையும் ஒலிக்கின்ற வொலி யென்னலுமாம். வலித்தல் - கருதுதல். ஓங்கல்வாங்கி எதிரொலி செய்ய. ஊழி தோறும் ஓங்குதலை.
"ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே"
என்னும் ஆளுடைய நம்பிகள் தேவாரத்தா னறிக; முன்னரும் உரைக்கப் பெற்றது. (26)

------------------------------------------------------------------------------------

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிரொன் றேனையது 
தன்னே ரிலாத தமிழ் - பழம் பாடல்

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் - ஆங்கு அவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிர் ஒன்றேனை அது
தன் நேர் இலாத தமிழ் - பழம் பாடல்

ஓங்கல் = ஓங்கிய மலை, இமயமலை
இடை வந்து = இமயமலையின் இடையே உள்ள திருக்கயிலாயம்
உயர்ந்தோர் தொழ விளங்கி = உயர்வானவர்கள் தொழும்படியாக விளங்கி,
ஏங்கு ஒலி நீர் = அலைகளை வந்து வந்து திரும்பிச் செல்லும் ஒலியை உடைய கடல்நீர்
ஞாலத்து = உலகத்தின்
இருள் அகற்றும் = இருளை அகற்றும்
இப்பாவில் சூரியனுக்கும். தமிழுக்கும் உள்ள இரு ளகற்றுவதாகிய ஒப்புமை கூறி, பின் அவற்றுக்கிடையே யுள்ள வேற்றுமையைக் கூறுகின்றார். (இவ்வாறு கூறுவது வேற்றுமையணி இலக்கணம்)

------------------------------------------

நன்றி =  பாடல் தொகுப்பு உதவி -  தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment