சித்திரா பௌர்ணமி
வழிபாட்டுச் சிறப்பு
சித்திரா பௌர்ணமியின் சிறப்பைச் சிறப்பாகத் திருவிளையாடற் புராணம் எடுத்துக் கூறியுள்ளது.
பருவகாலங்களில் சிறந்தது வேனில் காலம்,
12 மாதங்களில் சிறந்தது “வான்தகர் மாதம்” (தகர் என்றால் ஆடு என்று பொருள், வான் தகர் என்றால் வானிலுள்ள ஆடு, அதாவது மேஷராசி, சித்திரைமாதம் என்று பொருள்),
நட்சித்திரங்களில் சிறந்தது சித்திரை நட்சத்திரம்,
திதிகளில் சிறந்தது பூரணை( பௌர்ணமி)......
“சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், சித்திரா பௌர்ணமி நாளன்று மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டு வணங்கினால் வருடம் 365 நாட்களும் வணங்கிய பலன் கிடைக்கும்” என்று அருள்மிகு சோமசுந்தரேசுவரர் இந்திரனுக்கு அருளிச் செய்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இதன்படியே தேவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் சித்திராபௌர்ணமி நாளன்று மதுரைக்குவந்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேசவரரை வழிபடுகின்றனர் என்பது ஐதீகம். இவ்வாறு வணங்கிய இந்திரன் சிவபெருமானிடம் “உனது அடியார்களுள் ஒருவனாக அடியேனும் இருக்க அருளிச் செய்ய வேண்டும்” என வரம் வேண்டிப் பெற்றுள்ளான்.
இந்திரன் முதற்றான தேவர்கள் போல், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரின் அடியார்களாகிய நாமும் வரும் ஸ்ரீ சுபகிருது வருடத்தில், சித்திரைமாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்திரா பௌர்ணமி (சித்திரை 3(16.04.2022) சனிக்கிழமை) நாளன்று வழிபட்டு வேண்டிய வரங்கள் பெறுவோம். அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரேசுவரரின் அடியாராய் வாழ்ந்து உய்வடைவோம்.
அன்பன்,
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்,
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்,
மதுரை.
(மேனாள் துணைப் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி)
---------------------------------------------------------
திருவிளையாடற் புராணம் பாடல் எண் 437 -
“இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும், பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும், மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம் தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்”
உரை - பருவங்களுள் உயர்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச்சிறந்த சித்திரை மாதமும், ஒப்பற்ற நாள்மீன்களுள்(நட்சத்திரங்களுள்) உயர்ந்த சித்திரை நட்சத்திரமும், திதிகளுள் உயர்ந்த பௌர்ணமியும், ஆகிய இவைகள் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும், வந்து வந்து வழிபடுவாயாக, ஓர் ஆண்டுக்கு வரையறுத்து, முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும், அருச்சனை செய்தலால் வரும் பயன் (உன்னை, இந்திரனை) அடையும்.
------------------------------------
திருவிளையாடற் புராணம்வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
“சித்திரை மதியிற் சேர்ந்த சித்திரை நாளிற் றென்னன்
மைத்திரண் மிடற்று வெள்ளி மன்றுளாற் களவு மாண்ட
பத்திமை விதியிற் பண்டம் பற்பல சிறப்ப நல்கிப்
புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்த லுற்றான்.”
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1289.)
சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் தென்னன் மைத்திரள் மிடற்று வெள்ளி மன்று உளாற்கு களவு மாண்ட பத்திமை விதியில் பண்டம் பலபல சிறப்ப நல்கிப் புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்தல் உற்றான்.
உரை - அபிடேக பாண்டியன், சித்திரைத் திங்களில் வந்த சித்திரை நாளில் கருமை மிக்க மிடற்றினையுடைய வெள்ளியம்பல வாணனுக்கு, அளவிறந்த அன்பினால், ஆகம நெறிப்படி, பூசைப் பொருள்கள் பலவற்றைச் சிறக்க அளித்து, போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கும் பூசையை நடாத்தத் தொடங்கினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.
-------------------------------------------------
திருவிளையாடற் புராணம்
இந்திரன் பழி தீர்த்த படலம்
பாடல்கள் -
435.
ஐய நின் இருக்கை எல்லைக்கு அணியன் ஆம் அளவின் நீங்கா
வெய்ய என் பழியினோடு மேலை நாள் அடியேன் செய்த
மையல் வல் வினையும் மாய்ந்து உன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவும் உரியன் ஆனேன் சிறந்த பேறு இதன் மேல் யாதோ.
436.
இன்ன நின் பாதப் போதே இவ்வாறே என்றும் பூசித்து
உன் அடியாருள் யானும் ஓர் அடித் தொண்டன் ஆவேன்
அன்னதே அடியேன் வேண்டத் தக்கது என்று அடியில் வீழ்ந்த
மன்னவன் தனக்கு முக்கண் வரதனும் கருணை பூத்து.
437.
இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம்
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.
438.
துறக்க நாடு அணைந்து சுத்த பல் போகம் துய்த்து மேல் மல பரி பாகம்
பிறக்க நான் முகன் மால் முதல் பெரும் தேவர் பெரும் பதத்து ஆசையும் பிறவும்
மறக்க நாம் வீடு வழங்குதும் என்ன வாய் மலர்ந்து அருளி வான் கருணை
சிறக்க நால் வேதச் சிகை எழு அநாதி சிவபரம் சுடர் விடை கொடுத்தான்.
நன்றி - திருவிளையாடற் புராணம் பாடல்கள் தொகுப்பு உதவி --
தமிழ் இணையக் கல்விக்கழகம் https://www.tamilvu.org/
-------------------------------------------------
சங்கப்பாடல்களில் “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளின் தொகுப்பு -
அகை என்றால் 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர் என்று பொருள். அகைதல் என்றால் எரிதல், கிளைத்து எரிதல். அகைத்தல் என்றால் கிளைத்தல், விட்டுப் பிரிதல், செல்லுதல், எழுதல், உயர்த்துதல், வலிய மலர்த்துதல், முறித்தல் போன்ற வினைகளைச் சுட்டும்.
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு - கலி 55/2
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர - கலி 74/5
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் - கலி 139/26
கொய் அகை முல்லை காலொடு மயங்கி (கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்) - அகம் 43/9
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து (தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் ) - அகம் 106/1
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் - அகம் 106/2
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை - அகம் 116/1
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் - அகம் 277/14
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி (தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற) - அகம் 283/10
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் - அகம் 295/2
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய/இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி - அகம் 339/8,9
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப/உறை கழிந்து உலந்த பின்றை பொறைய - அகம் 345/13,14
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் - அகம் 351/7
குப்பை கீரை கொய் கண் அகைத்த/முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப/பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - நற் 5/4,5
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய/நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - நற் 172/2,3
எரி அகைந்து அன்ன வீ ததை இணர - நற் 379/3
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு/அழுத கண்ணள் ஆகி - குறு 366/5,6
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் (யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்) - மலை 429
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை - பொரு 159
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ - பதி 25/12
கயன் அகைய வயல் நிறைக்கும் - மது 92
நன்றி - “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in
----------------------------------------------------
No comments:
Post a Comment