Sunday, 10 April 2022

இராசி என்பதற்கான தமிழ்ச் சொல் “அகை”

இராசி என்பதன் தமிழ்ச் சொல்லா?
அல்லது 
இராசி என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன?


இராசி என்பதற்கான தமிழ்ச் சொல் “அகை”


இராசி என்ற சொல்லை “அகை” என்ற செந்தமிழ்ச் சொல்லால் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  சங்கப்பாடல்களில் இடம்பெற்றள்ள அகை, அகைய, அகைந்து என்ற சொற்களின் பொருட்கள் மேலும் ஆய்விற்கு உரியனவாக உள்ளன.

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 437 -

“இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்,  பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்,  மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம்  தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்”

உரை  -  பருவங்களுள்  உயர்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச்சிறந்த சித்திரை  மாதமும்,  ஒப்பற்ற நாள்மீன்களுள்(நட்சத்திரங்களுள்)  உயர்ந்த சித்திரை நட்சத்திரமும்,  திதிகளுள் உயர்ந்த பௌர்ணமியும், ஆகிய இவைகள் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும்,  வந்து வந்து வழிபடுவாயாக,  ஓர் ஆண்டுக்கு வரையறுத்து,  முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும், அருச்சனை செய்தலால் வரும் பயன் (உன்னை, இந்திரனை) அடையும். 

அன்பன்,
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்,
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்,
மதுரை.
(மேனாள் துணைப் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி)

------------------------------------

திருவிளையாடற் புராணத்தில் “அகை”   -
இந்திரன் பழி தீர்த்த படலம் -  பாடல் வரிசை எண் 437.

இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து  அருச்சித்தோர் வருடம்
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.

நன்றி -   பாடல் பதிவு தமிழ் இணையக் கல்விக்கழகம்  https://www.tamilvu.org/

-------------------------------------------------

சங்கப்பாடல்களில் “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளின் தொகுப்பு -

அகை என்றால் 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர் என்று பொருள்.  அகைதல் என்றால் எரிதல், கிளைத்து எரிதல். அகைத்தல் என்றால் கிளைத்தல், விட்டுப் பிரிதல், செல்லுதல், எழுதல், உயர்த்துதல், வலிய மலர்த்துதல், முறித்தல் போன்ற வினைகளைச் சுட்டும்.

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு - கலி 55/2

கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர - கலி 74/5

அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் - கலி 139/26

கொய் அகை முல்லை காலொடு மயங்கி (கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்) - அகம் 43/9

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10

எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து (தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் ) - அகம் 106/1

பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் - அகம் 106/2

எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை - அகம் 116/1

அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15

அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் - அகம் 277/14

கண் அகை இளம் குழை கால் முதல் கவினி (தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற) - அகம் 283/10

குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் - அகம் 295/2

கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய/இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி - அகம் 339/8,9

மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப/உறை கழிந்து உலந்த பின்றை பொறைய - அகம் 345/13,14

அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் - அகம் 351/7

குப்பை கீரை கொய் கண் அகைத்த/முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10

நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப/பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - நற் 5/4,5

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய/நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - நற் 172/2,3

எரி அகைந்து அன்ன வீ ததை இணர - நற் 379/3

வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு/அழுத கண்ணள் ஆகி - குறு 366/5,6

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் (யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்) - மலை 429

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை - பொரு 159

கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ - பதி 25/12

கயன் அகைய வயல் நிறைக்கும் - மது 92

நன்றி - “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in

-------------------------------------------------

No comments:

Post a Comment