Monday, 30 December 2019

கீழடி - கூடல் என்ற கைவிடப்பட்ட நகரம்

கீழடி - ஓர் கைவிடப்பட்ட நகரம்

மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை கொந்தகை மணலூர் அகரம் என்ற கிராமங்களில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  இங்கே பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.  சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த மத்திய மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரைப் போற்றுவோம், அவர்களுக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

மணலூர்க் கண்மாய்க்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் முதன்முதலாகத் தொல்லியல் ஆய்வைத் திரு அமர்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார். 

மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  புராண காலத்தில், இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு  மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.   இது மணலூர் எனப் பழைய திருவிளையாடலிலும், “மணலூர் புரம்” என வடமொழி வியாசபாரதத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

மணவூரும் மதுரையும் - 
உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு  கடல்கோள் (பெருஞ் சுனாமி) உண்டாகி மதுரை எழுகடல்தெருவரை வந்து அழித்துள்ளது.  இந்தக் கடல்கோளிலால் மணவூரை மண்மூடி விட்டது.   மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான்.  மணவூரிலிருந்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பெற்ற (இன்றைய) மதுரை நகரில் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)


சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது. 

மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.  மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.  இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு வடக்கே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்

Tuesday, 24 December 2019

சூரிய கிரகணம், பகலில் இரவு

  பகலில்  சிறு இரவு  


மார்கழி 10  (2612.2019) வியாழக்கிழமை.   மதுரை, சிவகங்கை, காரைக்குடி,  இராமேசுவரம், கோவை,  புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், உதகை, கரூா், அவிநாசி,  (சில பகுதிகள்) உள்ளிட்ட ஊர்களில் சூரியகிரகணம் முழுமையாக இருக்கும்.  சூரியகிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.16 மணி வரை இருக்கும்.  மூன்று நிமிடங்களுக்கு காலை 9.31 மணி முதல் 9.33 மணி வரை முழுமையாக இருக்கும்.  பிற பகுதிகளிலும் கிரகணம் தெரியும், ஆனால் முழுமையாக மறைத்த தோற்றத்தைக் காண முடியாது.

கண் பாதுகாப்பு அவசியம் - 
குவியாடியைச் சூரியஒளியில் காட்டி அதையொரு தாளில் குவித்திட்டால், அந்தத் தாள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம்.  நமது கண்ணுக்கு உள்ளேயும் ஒரு குவியாடி (லென்ஸ்) உள்ளது. இதுவே ஒளியை நமது கண்ணுள் உள்ள விழித்திரையில் குவியச் செய்கிறது.   சூரியக் கிரகணத்தின் போது,  சூரியனை  வெறுங் கண்ணால் பார்த்தால்,  சூரியஒளி நமது விழித்திரையில் குவிந்து விழித்திரையை கருக்கிவிடும் அபாயம் உள்ளது.  இதனால் பார்வைக் கோளாறு ஏற்படும்.  எனவே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.  அதுவும் உற்றுப் பார்க்கவே கூடாது, கூடாது.



சூரியகிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்ப்பது எப்படி?
சற்று அகலமான காகிதஅட்டையில் ஒரு ஓட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும்.  அதன் வழியாகச் சூரியஒளி ஊடுறுவி வரும்போது வட்டமாகத் தெரியும்.  அதில் கிரகணம் நன்றாகத் தெரியும், நிழலில் தெரியும் கிரணத்தை நன்றாகப் பார்க்கலாம்.

15 சனவரி 2010 அன்றும் இதுபோன்றதொரு சூரியகிரகணம் நிகழ்ந்தது.  அப்போது எடுத்த எடுத்த படத்தை இணைத்துள்ளேன்.



அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

பாண்டியரைக் கண்டுமிரண்ட ராவணன்

Gowtham Tamilan in FB
27.11.2019
பாண்டியரைக்  கண்டுமிரண்ட ராவணன்!!
+++++++++
மாகவி காளிதாசரின் இரகுவம்சத்தில்!!
+++++++

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:--

அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:

புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:-- தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர்  அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62)

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.

ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம்  என்பதும் தெளிவாகிறது.

இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்

Wednesday, 4 December 2019

கீழடி - புதையுண்டுள்ள நகரம் எப்போது அழிந்தது? எப்படி அழிந்தது?

கீழடி -
கூடல் என்ற மதுரை 
எப்போது உருவாகியது ? எப்போது அழிந்தது ?


கீழடியருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது, கைவிடப்பட்ட பண்டைய கூடல்  என்ற மதுரை என்பது எனது கருத்து.

புதையுண்டுள்ள இந்த நகரத்தின் ஈமக்காடானது கொந்தகை அருகே சாலையின் ஓரத்தில் உள்ளது என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிடுகிறார்.  இங்கே ஏராளமான முதுமக்கள்தாழிகள் உள்ளன.  இது புதையுண்டுள்ள நகரம் உயிருடன் இருந்தபோது இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்காடு ஆகும். இந்த ஈமக்காட்டில் வரும் ஆண்டில் (2020)  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவுள்ளன என அறிகிறேன்.

இந்த ஈமக்காட்டில் பழந்தமிழரின் பெயர்கள் அடங்கிய முதுமக்கள் தாழிகள் நிறையக் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளன.   நடைபெறவுள்ள இந்த ஆய்வின் வழியாகப் பழந்தமிழரின் உணவுப் பழக்கவழங்களும், நீத்தார்வழிபாட்டு முறைகளும் அறிவியல் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன்.

புதையுண்டுள்ள இந்நகரில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இந் நகரம் அழிந்திருந்தால்,  இங்கு வாழ்ந்த மக்களும் அவர்களது உடைமைகளும் ஒன்றுசேரப் புதையுண்டு போயிருக்க வேண்டும்.  ஆனால் மக்களின் எலும்புகள் ஏதும் இந்நகரில் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்நகரம் அழியும்போது இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

இந்நகரம் மண்ணால் புதையுண்டு அழிந்திருப்பதற்கு இரண்டு காரணிகள்தான் இருக்கமுடியும். 1) கடல்கோள் அல்லது சுனாமி (இதற்குத் திருவிளையாடல் புராணத்தில் சான்றுகள் உள்ளன. 2) வைகை யாற்றுப் பெருக்கு (வைகை யாற்றுப் பெருக்கிற்கு இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.  ஆனால் ஆற்றுப் பெருக்கால் நகரம் ஏதும் அழிந்ததாகக் குறிப்புகள்  இல்லை).

இந்த நகரம் எவ்வாறு அழிந்தது? கடல்கோளாலா அல்லது ஆற்றுப் பெருக்காலா? என இதுநாள்வரை அறிவியல் அடிப்படையில் ஆராயப்படவில்லை.  முறையினா அறிவியல்  ஆய்வுகள் நடைபெற்று  முடிவுகள் தெரியவரும்போதுதான், இந்நகரம் அழிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.  அதுவரை பண்டைய புராணக் கருத்தைப் புளுகு என்று கற்பனையாகக் கருதி ஒதுக்கிவிட இயலாது.


கடல்கோளால் இந்நகரம் அழிவைச் சந்தித்திருந்தால்,  கிழக்கிலிருந்து வந்த கடல்நீரினால் இங்கு வசித்த மக்கள் மேற்குநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருப்பர்.  எனவே அவர்களது உடல்கள் இந்த நகருக்கு மேற்கே புதையுண்ட கிடக்க வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு மேற்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கிலிருந்து பாய்ந்து வரும் வைகை ஆற்றுப்பெருக்கினால்  இந்நகரம் அழிந்திருந்தால்,  இந்நகரில் வசித்தவர்களின் உடல்கள் கிழக்கே அடித்துச் செல்லப்பட்டு இந்த நகருக்குக் கிழக்கே புதையுண்டு கிடக்கும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்குக் கிழக்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

அப்படி எந்தவொரு தடயமும் இதுநாள் ஆராயப்படவில்லை. இங்கு படிந்துள்ள மண் அல்லது மணற் திட்டுக்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் படிந்துள்ளனவா? அல்லது மேற்கிலிருந்து கிழக்காகப் படிந்துள்ளனவா? எனக் கண்டறியப்பட வில்லை. 

மேலும், இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களோ மிருகங்களோ இறந்துபோன தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் எலும்போ அல்லது கால்நடைகளின் எலும்போ கண்டறியப்பட வில்லை..
எனவே, திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி,  இந்நகரில் வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னரே, இந்நகரம் அழிந்துள்ளது என்பது உறுதி.


நகரின் காலக்கணிப்பு
பண்டைய ஆலவாய் என்ற மதுரை நகரம் அழிந்ததை ஊழிக்காலம் என்று புராணமும் பரிபாடலும் கூறிப்பிடுகிறன.   ஊழிக்குப் பின்னர் கலிகாலம் தோன்றி 5112 ஆண்டுகள் ஆகின்றன என்று பஞ்சாங்கக் கணிப்பு உள்ளது.  ஊழிக் காலத்திற்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் கூடல் என்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
எனவே, இவற்றின் அடிப்படையில் கீழடி யருகே புதையுண்டுள்ள இந்நகரம் (கூடல் என்ற மதுரை) தோன்றி 5112 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஆலவாய் என்ற மதுரை இருந்த இடம் கண்டறியப்படுகிறது.  அந்தத் தொன்மையான ஆலவாய் என்ற மதுரை இருந்த இடத்தில் புதிதாக மதுரை நகர் உருவாக்கப்படுகிறது. 
கூடல் என்ற மதுரையில் இருந்த மக்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரைக்கு சென்று குடியேறுகின்றனர்.  அதனால் இந்தக் கூடல் என்ற மதுரை நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறிவிடுகிறது.

பின்னாளில்,  மற்றொரு கடல்கோள் (சுனாமி) உண்டாகியுள்ளது.  இந்தக் கடல்கோளில்  இப்போதிருக்கும் மதுரையின் எழுகடல்தெருவில் உள்ள வாவி (குளம்) வரை கடல்நீர் வந்து சேர்ந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.  எழுகடல்தெருவரை மட்டுமே வந்து திரும்பிய இந்தக் கடல்வெள்ளத்தால்  இன்றிருக்கும் மதுரை அழியவில்லை.  ஆனால் மதுரைக்குக் கிழக்கே யிருந்தன எல்லாமும் கடல்வெள்ளத்தில் சிதைந்து அழிந்து போயுள்ளன.

இந்தக் கடல்கோளால்தான் (சுனாமியினால்தான்) கீழடியருகே கைவிடப்பட்ட கூடல் என்ற  மதுரைநகரும் அழிந்து புதைந்துள்ளது.  புதையுண்டுள்ள நகரம் (கூடல் என்ற மதுரை) அழிந்த காலம் இன்னதென்று  தெரியவில்லை.  தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தால்தான் உண்டு.

ஆலவாய் என்ற மதுரை போற்றுவோம்.
கூடல் என்ற மதுரை போன்றுவோம்,
மதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Tuesday, 3 December 2019

கீழடி, தொலைந்து போனவைகளே தோண்டி எடுக்கப்படுகின்றன

தொலைந்து போன பொருட்களே 
கீழடியில்
தொல்லியலாளர்களால் 
தோண்டி எடுக்கப்படுகின்றன


கீழடி அகழாய்வில் தங்கத்திலான பொருட்களும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினால் ஆன சீப்பு கிடைத்துள்ளது.  மிருகங்களின் எலும்புகள் கிடைத்துள்ளன.  சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட  குழாய்களும், பானைகளும், பானைஓடுகளும் நிறையவே கிடைத்துள்ளன. ஆனால் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை.

கீழடியருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் மேட்டைத் திரு அமர்நாத் அவாகளது தலைமையிலான தொல்லியல்துறையினர் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்தனர்.   தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  100 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல்மேட்டில் சுமார் 8 ஏக்கர் அளவுள்ள இடத்தில் மட்டுமே இதுவரை தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுள்ளது.  எல்லா இடங்களையும முழுமையாகத் தோண்டிக் கண்டறிய இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

“இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில மனித எலும்புக்கூடுகள் ஏதும் கிடைக்கவில்லை.   இந்தக் காரணத்தினால் இது ஒரு கைவிடப்பட்ட நகரநாகரிகமாக இருக்கலாம்” என்று கருதுகின்றனர்.

கைவிடப்பட்ட நகரத்தில் தங்கத்தினால் ஆன அணிகலன்,  மணிகளால் ஆன அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு எப்படிக் கிடைக்கும்?  என்ற ஐயம் எழுகிறது.

பண்டைய மதுரையின் அருகே வடக்கே மணவூர் (மணலூர்) இருந்தது என்றும்,  மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனின் மகனான உக்கிரசேன பாண்டியனுக்கு மணவூரில் வசித்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தார்கள் என்றும்.   பாண்டியர்களின் குலவழிவந்த குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்றும்,  இந்தக் குலசேகரபாண்டியன் இப்போதிருக்கும் மதுரையைப் புதிதாக உருவாக்கினான் என்றும், அப்போது  இங்கே வசித்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினான் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.   இங்கிருந்த மக்கள் எல்லோரும் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்குச் சென்று குடியேறிவிட்ட காரணத்தினால், இது “கைவிடப்பட்ட நகரம்” ஆகிறது.


மதுரை நகருக்குக் குடியேறுவதற்கு முன்பு, இங்கு வசித்த  மக்களால் தொலைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட  பொருட்களே இன்று தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன எனக் கருதவேண்டியுள்ளது.   தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன பொருட்கள் தொலைக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.  பானைகள் கைவிடப்பட்ட பொருட்களில் அடங்கும் எனவும் கருதுகிறேன்.

(குறிப்பு - இது தொல்லியல் ஆய்வுக் கருத்து அல்ல, எனது தனிப்பட்ட கருத்து ஆகும்)

தொல்லியலாளர் போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 17 (03.12.2019) செவ்வாய்கிழமை.