மதுரை
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்
ஒருங்கிணைப்பாளர்கள் முகாம்
மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் நிறுவுனத் தலைவர் திரு கா.சந்திரசேகரன் அவர்கள், “சிறப்புமிக்க திருவிளையாடல் புராண ஆராய்ச்சி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுமாறு அடியேனை அழைத்தார்.
அடியார்களுடன் கலந்திருப்பதும், கால்மாறி ஆடிய கருணைக்கடலின் திருவிளையாடல்களின் சிறப்புகளைத் திருவிளையாடல் புராணத்தில் உள்ளபடி எடுத்துக் கூறுவதும் ஒரு கொடுப்பினை யல்லவா? எனவே மிகவும் மகிழ்ந்து ஒத்துக் கொண்டேன்.
நேற்று மார்கழி 15 (30.12.2018) ஞாயிற்றுக் கிழமை யன்று காலை மணி 10.30க்கு துவரிமான் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எனது சிறப்புரை நிகழ்ந்தது.
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பெற்று 64 திருவிளையாடல்களாகச் சொல்லப் பெற்றுள்ளதற்கான காரணம், மதுரைக்கு மதுரை மதுராபுரி கூடல்நகர் திருஆளவாய் என்ற பெயர்கள் உண்டானதற்கான காரண காரியங்கள், மற்றும் புராணம் காட்டும் மானிடவாழ்க்கைநெறி முதலானவற்றைப் புராணத்தின் அடிப்படையில் விளக்கிக் கூறினேன். “கண்ணகி பற்றித் திருவிளையாடல் புராணத்தில் குறிப்புகள் ஏதும் ஏன் இடம்பெறவில்லை?” என்ற காரணங்களைத் தொகுத்துக் கூறினேன். “திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ள பொன்னனையாளை 64 நாயன்மார்களின் வரிசையில் வைத்துச் சுந்தரர் பெருமான் ஏன் பாடவில்லை ?” என்பதற்கான காரணங்களையும் தொகுத்துக் கூறினேன். அடியார் பலரும் மிகுந்த கவனத்துடன் செவிமடுத்துக் கேட்டது எனக்கு மட்டட்ற மகிழ்ச்சியை அளித்தது.
மதிய உணவிற்குப் பிறகு, மதுரை திருப்பணிச் செம்மல் உயர்திரு. கருமுத்து க. தியாகராசன் அவர்கள் உரையாற்றினார்கள். 36ஆவது திருவிளையாடல் நடைபெறக் காரணமான பொன்னனையாளின் சிறப்பையும் அவள் நடத்தி வந்த அன்னதானத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறினார்.
புராணங்களைப் பொய் யென்று பேசியும் எழுதியும் வருகின்றனர் சிலர். சிலர் புராணங்களைத் தொன்மம் என்றும் கட்டுக் கதைகள் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது போன்ற சில அற்புதமான நிகழ்ச்சிகள் அன்றாடம் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன எனச் சில நிகழ்ச்சிகளை உதாரணத்துடன் எடுத்துக்காட்டி விளக்கினார் உயர்திரு.கருமுத்து க. தியாகராசன் அவர்கள்.
திருமலை நாயக்கர் குமரகுருபரரை அழைத்து மீனாட்சியம்மன் சந்நிதியில் அமர்த்தி மீனாட்சி பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்கிறார். அப்போது சிறுபெண்குழந்தை வடிவில் அன்னை மீனாட்சி வந்து மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.
இப்போது நடைபெற்று முடிந்துள்ள குடமுழுக்குத் திருப்பணியின் போது, குடமுழுக்கை எந்த நாளில் வைத்துக் கொள்ளலாம் எனச் சீட்டு எழுதிப் போட்டு அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொண்டபோது, ஒரு சிறுமியே மீனாட்சி உருவத்தில் வந்து சீட்டு எடுத்துக் கொடுத்தும் தன்னுடைய பெயர் மீனாட்சி என்று கூறி அருளிச் செய்த நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார்.
இதுபோன்று அன்றாடம் நடைபெறும் திருவிளையாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்திட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அவரது பக்தியில் தோய்ந்த உரையை நிறைவு செய்தார்.
கூட்டத்திற்கு வந்திருந்த அடியார்கள் ஒவ்வொருவராக, அவரவர் செய்துவரும் திருப்பணிகளை எடுத்துக்கூறி அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து கொண்டனர்.
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்களும், செயலாளர் முனைவர்.கண்ணன் அவர்களும், பொருளாளர் திரு. சரவணன் அவர்களும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அடியார்களைப் பெரிதும் உபசரித்து மகிழ்ந்தனர்.
முகாம் நிறைவடைந்தவுடன், நானும் திருப்பூவணம் பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் பொருளாளருமான ஐயா முத்துக்குமாரசாமி அவர்களும் கோயில் எதிரே உள்ள அருள்மிகு முனீசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம். அனைவரும் முனீசுவரர் மேல் மிகுந்த பக்தியும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். முனீசுவரர் கோயில் வளாகத்தில் கிராமத்தினர் யாரும் காலணி அணிந்து செல்வதில்லை. உலகமக்களெல்லாம் கணினியுடனும் கைபேசியுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கலிகாலத்தில், காலில் செருப்பு அணியாமல் கடவுளுடன் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கிராமத்தினரைக் கண்டு பெரிதும் வியந்து மகிழ்ந்தோம்.
மொத்தத்தில் என் வாழ்நாளில் நான் வாழ்ந்த நாளில் ஒருநாளாக நேற்றைய மார்கழி 15ஆம் நாள் விளங்கியது.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------------------------------------
தினமலர் பத்திரிக்கைச் செய்தி
மார்கழி 16 ( 31.12.2018) திங்கள் கிழமை,வாடிப்பட்டி: மதுரை துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் முகாம் நடந்தது.மைய நிறுவன தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை ஓய்வு பெற்ற துணை பதிவாளர் காளைராஜன், தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் பலர் பேசினர். நிகழ்ச்சியை நிர்வாகி முருகேசன் ஒருங்கிணைத்தார்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2180902
No comments:
Post a Comment