Wednesday, 19 December 2018

திருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர் பாடியருளிய வரலாறு

திருவிளையாடல் புராணம் 
பரஞ்சோதி முனிவர்  மொழிபெயர்த்துப் பாடி அருளிய வரலாறு


சிவபெருமான் மதுரையில் அருளிச் செய்த நிகழ்ச்சிகளைத்                ‘திருவிளையாடல் புராணம்’ கூறுகிறது.  வடமொழியில் இருந்த இந்தக் கதைகளைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார்.  பரஞ்சோதி என்பது சிவபெருமானின் பெயர்களுள் ஒன்றாகும்.   நாரைக்கு முத்தி கொடுத்த திருவிளையாடலைக் கூறும்  திருவிளையாடல் புராணம் 2310ஆவது பாடல் சிவபெருமானைப் சிவபரஞ்சோதி என்று குறிப்பிடுகிறது.

மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா.  அவற்றுள் 64 நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  மதுரை மாநகருக்குக் கடம்பவனம், கூடல்நகர், நான்மாடக் கூடல், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.

பாடல் -
" அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை அரங்கேற்று மா போல் 
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி 
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும் 

அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே."

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் பிறந்தவர்.  இவர் தமிழும் வடமொழியிலும் புலமை மிகுந்தவர்.  சங்கர சங்கிதை என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்து எழுதித்தர வேண்டும் எனப் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த வடமொழிநூலை மொழிபெயர்த்துப் பாடிச் சொக்கநாதர் (மீனாட்சி சுந்தரேசுவரர்) சந்நிதியில் அரங்கேற்றியதாகக் கந்தசாமிப் புலவர்  மேலேயுள்ள அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகிறார்.


(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 24.)
அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால் சனற்குமாரன்
உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு
எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின் மாதோ.

 (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 25.)
அறைந்திடப் பட்டது ஆகும் ஆலவாய் புகழ்மை அந்தச்
சிறந்திடும் வடநூல் தன்னைத் தென் சொலால் செய்தி என்று இங்கு
உறைத்திடும் பெரியோர் கூறக் கடைப் பிடித்து உறுதி இந்தப்
பிறந்திடும் பிறப்பில் எய்தப் பெறுதும் என்று உளம் தேறா.

18 புராணங்களில் ஒன்று காந்தத் தீச சங்கிதை என்ற புராணம் ஆகும்.  இதில் ஈசனது கதைகள் பாடப்பெற்றுள்ளன.

திருவிளையாடற் புராணம் பாடல் எண்  221

இன்ன ஆறனுள் சங்கர சங்கிதை என்று
சொன்ன நூலினை உணர்த்தினான் சங்கரன்  துணைவிக்கு
அன்ன போது அவள் மடியினில் இருந்து கேட்டு அதனை
மின்னு வேல் பணி கொண்ட வேள் வெளிப்பட உணந்தான்.

குன்று எறிந்த வேள் வழிபடு குறு முனிக்கு உரைத்தான்
அன்று தொட்டு அஃது அகத்திய சங்கிதை ஆகி
நின்ற தன்னது கேட்பவர்க்கு அரன் அடி நீழல்
ஒன்றும் இன்ப வீடு அளிப்பதா ஒரு தலன் உரைக்கும்.

14
சங்கிதை என்ற வடநூலில் உள்ளதை மொழிபெயர்த்துப் பாடுகிறேன் என்று பரஞ்சோதி முனிவரே குறிப்பிடுகிறார். 


இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.  திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது.   மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.  மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.

இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment