உ
புலிக்கரை ஐயனார் துணை
மதுரை மாநகருக்கு “மதுரா நகர்“ என்ற பெயர் அமைந்ததற்கானகாரணம்
மதுரை நகருக்குக் கடம்பவனம், ஆலவாய், நான்மாடக் கூடல், சிவபுரம், மன்றல், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன. அவற்றுள் “மதுரா நகர்“ என்ற பெயரும் ஒன்று. பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் உள்ள கீழ்க்கண்ட பத்துப் பாடல்களில் மதுரா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இப் பத்துப் பாடல்களில், 513ஆவது பாடலிலும், 1624 பாடலிலும் “மதுரா நகர்“ என்ற பெயர் எவ்வாறு உண்டானது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் தன் தலையில் அணிந்துள்ள வளர்பிறை மதி(திங்கள் அல்லது சந்திரன்) யின் அமுதத்தை மதுரை நகரில் தெளித்தான். பிரளயகாலத்தில் கடல்பொங்கி எழுந்து அழித்த மதுரையைச் சிவபெருமான் சிந்திய திங்களின் அமுது சிதறிச் சாந்தி செய்த காரணத்தினால் மதுரை நகருக்கு ‘மதுரா நகர்‘ என்ற பெயர் இட்டு அழைத்துள்ளனர் தமிழர். வானிலிருந்து அமிழ்தம் விழுந்த இந் நிகழ்ச்சியைத் திருக்குறளும் வான்சிறப்பு என்ற அதிகாரத்தின் முதற் குறளில்,
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று“ (குறள் 11)
பதிவு செய்துள்ளது. மழையின் சிறப்பைப் புகழத் தலைப்பட்ட திருவள்ளுவர், “வானிலிருந்து விழுந்து அமிழ்தத்தை ஒத்த சிறப்புடையது மழை“ என்று சிறப்பிக்கிறார்.
மதுரா என்ற பெயர்தான் மதுரை என்று ஆனதாகச் சிலர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் மதுரை மாநகரின் மற்றொரு பெயர்தான் மதுரா ஆகும். மதுரை என்பது சிவலிங்கத்திற்கான பெயராகும். சிவலிங்கத்தின் பெயர் மதுரை என்பதால் அதுவே ஊருக்கும் பெயராகி உள்ளது. மதுரைப் பெயர்க்காரணம் பற்றிய விளக்கத்தை இதே வளைப்பூவில் “மதுரை - பெயர்க்காரணம்” என்ற தலைப்பில் காணலாம்.
“மதுரா” என்ற சொல் இடம்பெரும் திருவிளையாடல் புராணப் பாடல்களின் தொகுப்பு
325.
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத்
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.
513.
பொன் மயமான சடை மதிக் கலையின் புத்தமுது உகுத்தனர் அது போய்ச்
சின் மயமான தம் அடி அடைந்தார்ச் சிவமயம் ஆக்கிய செயல் போல்
தன் மயம் ஆக்கி அந்நகர் முழுதும் சாந்தி செய்து அதுவது மதுர
நன் மயம் ஆன தன்மையான் மதுரா நகர் என உரைத்தனர் நாமம்.
548.
தூமரபின் வரு பெரு மங்கல கவிகட்கு இரு நிதியம் துகில் பூண்பாய்மா
காமர் கரி பரித் தடம் தேர் முதலாய பல் பொருளும் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடும் எண்ணெய் விழாக் குளிப்ப நல்கி
மா மதுரா நகர் அன்றி மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க.
645.
என்ற நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயம் சூழக்
குன்றம் அன்னது ஓர் மேல் கொடு தூரியும் குரைகடல் என ஆர்ப்ப
நின்ற தெய்வ மால் வரைகளும் புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி
மன்றல் மா மதுரா புரி அடைந்தனள் மதிக் குல விளக்கு அன்னாள்.
971.
அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற
பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து
மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம்
தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும்.
1357.
செல்லார் பொழில் சூழ் மதுரா புரிச் சித்தர் எல்லாம்
வல்லார் அவர் ஆடலை யார் உரை செய்ய வல்லார்
எல்லாரும் வியப்பு உற இத் தனிச் சித்த சாமி
கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம்.
1461.
திருத்தராய் மதுரா புரி மேவிய சித்தர் ஆகியச் செல்வர்
விருத்தராய் இளையவரும் ஆய் மழவும் ஆய் வேடம் கொண்டு அடல் ஏற்றின்
ஒருத்தர் ஆய் விளையாடிய ஆடலை உரைத்தனம் இனி மன்றுள்
நிருத்தர் ஆயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம்.
1624.
அருள் கடல் அனைய ஆதிநாயகன் தன் அவிர் சடை அணி மதிக் கொழுந்தின்
பெருக்கு அடை அமுதத் தண் துளி சிறிது பிலிற்றினான் பிலிற்றிடலோடும்
பொருக்கு என எங்கும் பாலினில் பிரை போல் புரை அறக் கலந்து பண்டு உள்ள
திருக்கிளர் மதுரா நகரம் ஆப் புனிதம் செய்த அச்சிறுதுளி அம்மா.
2096.
இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு இடை அறா நேயம்
திகழ்ந்த பத்திரன் அன்பையும் தேவரைக் காப்பான்
அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் வியந்து
புகழ்ந்து போய் மதுரா புரிப் புனிதனைப் பணியா.
3356.
திரு மணி மைந்தன் மைந்தன் முடி சூட விற்ற திருமல்கு செல்வ சரணம்
மருமகன் என்று மாமன் உருவாய் வழக்கு வலிபேசு மைந்த சரணம்
குரு மொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடி தந்த எந்தை சரணம்
வரு பழி அஞ்சி வேட மகனுக்கு இரங்கு மதுரா புரேசசரணம்.
*****
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.
No comments:
Post a Comment