Tuesday, 18 December 2018

மதுரை பெயர்க்காரணம், ஊரும் பேரும்

மதுரை பெயர்க்காரணம்


Meaning of the name 'Madurai'

 

சிறப்புகள் மிகுந்த பழமையான ’மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

வீட்டுமனை(plots for sale) விற்பனையே சிறந்ததொரு வணிகமாக உள்ளது.  ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி, அந்த இடத்தை, வீட்டுமனை, சாலை, விளையாட்டுத் திடல், பூங்கா, வழிபாட்டுத் தலம் என்றெல்லாம் திட்டமிட்டுப் பிரித்து விற்பனை செய்கின்றனர். இந்த வணிகம் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் வருவாய் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வசதி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே கிடைக்கின்றன.

இவ்வாறு இக்காலத்தில் திட்டமிட்டு நகரங்கள் உருவாக்கப்படுவது போன்று வாஸ்து இலக்கணப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் மதுரை ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பெற்று குலசேகர பாண்டியமன்னனால் நிருமாணிக்கப் பெற்ற நகரம்.

மதுரைக்குக்  கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுராநகர் எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.  மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டானது .

மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?
மதுரை என்ற சொல்லை இலக்கணப்படி பிரித்து எழுதினால் ம=குறில், து=குறில், ரை=நெடில். எனவே மது.ரை = நிரை நேர்
மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்
மதுரை என்றால் “அழகிய தலைவன் = சுந்தர ஈசுவரன்” என்று பொருள்


மதுரை, மதுரை பெயர்க் காரணம்


எது அழகு? சுந்தரம் என்றால் என்ன?  
மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று,  உடலுக்கும் இலக்கணம் உண்டு. உடலின் அமைப்பை (லட்சணத்தை) 32 ஆகப் பிரித்துக் கூறுகிறது சாமுத்திரிகாலட்சணம். இந்த எண் நான்கு (8 x 4 =32) மேனி இலக்கணங்களும் நேர்த்தியாக அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை சுந்தரேசுவரர்என்றும், இதன் காரணமாகவே இந்தச் சிவலிங்கத்திற்குச் “சுந்தரேசுவரர்“ என்று பெயர் வைத்துத் தேவர்கள் வழிபட்டதாகவும் பரஞ்சோதிமுனிவர் தமிழிலில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  இதனால் சிவலிங்கத்திற்கான தமிழ்ப்பெயரே அந்த ஊருக்கும் ஆகிவந்துள்ளது.
எனவே, மதுரை என்றால் “அந்தமில் அழகன்“, “அழகியபிரான்“, “சுந்தரேசுவரன்“ என்று பொருள் கொள்ள வேண்டும்.

மதுரை என்றால் சுந்தரேசுரவன் என்று பொருள்.  சிவலிங்கத்திற்கான பெயரே ஊருக்கும் ஆகி நிலைபெற்றுள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வாசிக்கப்பட்டவை........................................................

மதுராபுரி = மதுர் + ஆர் + புரி
மதுர் = ஒரு நடிகரின் பெயர்?
மதுரா / மதுரம் = அழகிய+வாயல் = மதுரவாயல்
மதுராந்தகம்
மதுராஷ்டகம்
......................................................................................

திருவிளையாடற் புராணம்
மூர்த்திவிசேடப் படலம்

ஆலவா யலர்ந்த செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்க மேன்மை முறையினா லறைய லுற்றாம்.

     (இ - ள்.)திருவாலவாயின் கண் மலர்ந்த சிவந்த பொற்றாமரை ஆகிய, பெருமை பொருந்திய தீர்த்தத்தின் சிறப்புமிக்க பெருமைகளைக் கூறுவார் எவரே; அவ்விடத்து, மிக்க கருமையுடைய கண்டத்தினையும், மூன்று கண்களையும் உடைய,சோமசுந்தரக் கடவுளாகிய, ஞானானந்த வடிவான, பெருமை பொருந்திய மூல விலிங்கத்தின்,பெருமையை, முறைப்படி சொல்லுதல் உற்றோம்.

பொன்னெடு மேலு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்.

     (இ - ள்.) பொன்னாகிய நெடிய மேரு மலையும், கைலைமலையும், மந்தரமலையும், திருக்கேதாரமும், வலிய நெடிய மதில் சூழ்ந்த, காசி  முதலாகவுள்ள, சொல்லுதற்கரிய திருப்பதிகளின் கண், பராபர இலிங்கங்கள்  தோன்றுவதற்கு முன்பே, இக்கடம்ப மரத்தினடியில், இந்தச் சிவலிங்கம் தோன்றி அருளியது.

அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரண மிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ.

     (இ - ள்.) மகாமேரு முதலிய திருப்பதிகளிலுள்ள இலிங்கங்கள் அனைத்தும், அருட்குறியாகிய இந்தச் சிவலிங்கத்தினில் கிளைத்துத் தோன்றின.
இந்த இரண்டு ஏதுக்களாலும், ஒப்பில்லாத, ஞானவொளி திரண்டாற் போன்ற, இந்தத் திப்பிய இந்தத் திவ்விய இலிங்கமானது, மூல லிங்கமாகச் சிறந்து விளங்கும்.

இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்* துறக்க வாணர்.

     (இ - ள்.) இந்தப் பெருமை பொருந்திய லிங்கத்தின் கண்,முப்பத்திரண்டு
இலக்கணங்களையுடைய,  ஞானவடிவாகிய,  முடிவில்லாத அழகினையுடைய இறைவன், ஒரு பாகத்தில் உமையம்மை யோடும், அழகினைச் செய்து, எப்போதும், அருள் பாலிக்கின்ற, தன்மையைக் கண்டு, தேவர்கள்,சோமசுந்தரன் என்று பெயர் கூறினார்கள்.

திருவிளையாடற் புராணப் பாடல்கள் - தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-------------------------------

No comments:

Post a Comment