திருவிளையால் புராணத்தில்
கண்ணகியின்கதை இல்லையே?
என்னிடம் கேட்டால்(ர்)!
சிவனடியார் ஒருவரைச் சந்தித்தேன். சிவ சிந்தனைகள் நிறைந்திருந்தன. தேவார திருவாசகப் பாடல்களை யெல்லாம் தெளிவான உச்சரிப்பில் பொருள் விளங்கும்படி அருமையாகப் பாடினார். மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தொடர்ந்து, பேச்சின் நடுவே திருவிளையாடற் புராணம் பற்றிக் கூறினேன். அவ்வளதுதான் அவரது முகம் சிறிது வாட்டம் கண்டது. திருமுறைகளே உண்மை, புராணங்கள் எல்லாம் பொய்-ஆரிய பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்றார். இது கேட்ட எனது முகமும் சிறிது வாட்டம் கண்டது.
திருவிளையாடற் புராணத்தில் என்ன பிழை கண்டுள்ளீர்கள் ? என்று கேட்டேன்.
திருமுறைகள் 7ஆம் நூற்றாண்டு, திருவிளையாடற் புராணம் 13ஆம் நூற்றாண்டு என்றார். “கண்ணகி தமிழ்ப் பெண்” என்ற காரணத்தினால் திருவிளையாடல் புராணத்தில் கண்ணகியைப் பார்ப்பனர்கள் எழுதாமல் விட்டுவிட்டனர் என்றார்.
எனக்குத் தெரிந்த பதிலைக் கூறலாமா? என்று கேட்டுவிட்டுச் சொன்னேன்.
1) எந்தவொரு தமிழ் நூலும் எந்தக்காலத்தில் எழுதப்பட்டிருந்தால் என்ன?
நேற்று எழுதினாலும் சரி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது என்றாலும் சரி, அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தானே நமக்கு முக்கியம். அந்த நூலின் காலக் கணிப்பினால் நமக்கு (மனிதர்களுக்கு) ஆகப்போகவது ஏதுமில்லையே. இன்னம் ஒருபடி மேலே சொல்வது என்றால், அந்த நூலின் ஆசிரியர் யார்? என்பது கூடத் தேவையற்றதே ஆகும். இவ்வாறான சிந்தனையால்தான் தமிழ்ப்புலவர் பலரும் தம் பெயரையோ காலத்தையோ எழுதிடவில்லை போலும் என்றேன். மேலும்
2) திருவிளையாடற் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பரஞ்சோதி முனிவரின் காலம் வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். ஆனால் திருவிளையாடற் புராணத்திற்கான மூலநூல் எது?
18 புராணங்களில் ஒன்றான “காந்தத் தீச சங்கிதை” என்ற புராணம் ஆகும். இந்தப் புராணம் எழுதப்பெற்ற காலம் மிகவும் புராதனமானது. இன்ன காலம் என்று கணித்தல் அரிதாக உள்ளது.
எனவே திருவிளையாடற் புராணம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது என்பது தவறாகும். இது எப்படி யெனில், திருக்குறள் அச்சடிக்கப்பட்ட காலத்தைத் திருக்குறள் தோன்றிய காலம் என்பது போல் ஆகிவிடும்.
3) திருவிளையாடற் புராணத்தில் கதையாகச் சொல்லப்பட்டுள்ளன அனைத்தும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் திருவிளையாடல் ஆகும். அவரை வணங்கிய அடியார்களுக்கு அவர் அருள்புரிந்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரைக் கண்ணகியோ கோவலனோ வழிபாட்டதாக சொல்லப்படவில்லை. மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரை வழிபட்டுப் பலன் அடைந்தவர்களின் பட்டியலில், வழிபடாதவரை எங்ஙனம் சேர்க்க இயலும்?
இந்தக் காரணத்தினால்தான் கண்ணகி கோவலன் கதை திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறாமல் ஆகியிருக்கலாம் என்றேன்..
திருவிளையாடற் புராணம் முழுக்கமுழுக்க மதுரையின் அண்ணலான அருள்மிகு சோமசுந்தரரேசுவரரின் திருவிளையாடல்களையும், மற்றும் மதுரை வாழ் தமிழ் மக்களின் சிறப்புகளையுமே கூறுகிறது. இப்படியிருக்கக் கண்ணகி ஓர் தமிழ்ப் பெண் என்ற காரணத்தினால் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறவில்லை என்ற கற்பனைக் கருத்தை எப்படி ஏற்க இயலும் என்றேன்.
நீண்ட நேரம் மௌனம் காத்தார் எனது நண்பர். எனது இந்தக் கருத்துகளை அவர் ஒத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை, மறுத்ததாகவும் தெரியவில்லை.
எனது கருத்துகள் சரியானவையா? உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளனவா?
அன்பன்
காசிசீர், முனைவர், நா. ரா. கி. காளைராசன்
ஆடி 5 (21.07.2022) வியாழக்கிழமை.
--------------------------------------------------------
கண்ணகி எரித்த கூடலும் - இன்றைய மதுரை மாநகரமும்
கண்ணகி எரித்த கூடல் மதுரை மாநகர் அழிந்துபட்டது. இன்றிருக்கும் மதுரை மாநகரமானது குலசேகரபாண்டியனால் புதிதாகத் தோற்றுவிக்கப் பெற்றதாகும்.. கூடலில் வாழ்ந்த மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து இன்றைய மதுரைக்கு வந்து விட்டனர். எனவே கூடல் என்ற நகரம் வைவிடப்பட்ட நகரமானது, கடல்கோளால் புதையுண்டு போனது. அந்த க் கூடல் மாநகரத்தைத்தான் இன்றைய நாளில் தொல்லியலாளர்கள் கீழடி அருகே தோண்டிக் கண்டறிந்துள்ளனர் என்று கருதி அதற்கான சான்றுகளை யெல்லாம் தொகுத்து எழுதியுள்ளேன்.
நேரம் கிடைக்கும்போது அன்பர்கள் கீழடி தொடர்பான அந்தக் கட்டுரைகளையும் கண்ணுற்றுக் கருத்துக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
--------------------------------------------------------
No comments:
Post a Comment