Monday, 31 October 2022

சுமதி பெயர்ச்சொல்

சுமதி பெயர்ச்சொல் விளக்கம்

சுமதி என்றால் என்ன பொருள்?


அருள்மிகு மீனாட்சியம்மன் (தடாதகைப் பிராட்டியார்) திக்விஜயம் செய்த போது அம்மன் தேர்ப்பாகனாகத் தேரை ஓட்டிச் சென்றவர் பெயர் சுமதி.

திருவிளையாடற் புராணம் பாடல் வரிசை எண் 619.

அங்கய னோக்கி மான்றேர்க் கணித்தொரு தடந்தே ரூர்ந்து

வெங்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி யென்போன்

நங்கைதன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையஞ் செல்லச்

செங்கையிற் பிரம்பு நீட்டிச் சேவகஞ் செலுத்திச் செல்ல.


அம் கயல் நோக்கி மான்தேர் அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து

வெம்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என்போன்

நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையும் செல்லச்

செம் கையில் பிரம்பு நீட்டிச் சேவகம் செலுத்திச் செல்ல.


(இ - ள்.) வெம் கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என் போன் - விரும்பும் ஒளியினையுடைய வியாழனது சூழ்ச்சியினும் சிறந்த சூழ்ச்சியினையுடைய சுமதி என்னும் முதலமைச்சன், 

அம் கயல் நோக்கிமான் தேர்க்கு - அழகிய கயல்போலுங் கண்களை யுடைய பிராட்டியாரின் தேருக்கு, 

அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து  - அணித்தாக ஒரு பெரிய தேரினைச் செலுத்தி, 

நங்கைதன் குறிப்பு நோக்கி - அப்பிராட்டியாரின் குறிப்பினை ஆராய்ந்து நால்

பெரும்படையும் செல்ல - பெரிய நால்வகைச் சேனைகளும் செல்லுமாறு, 

செம் கையில் பிரம்பு நீட்டி - சிவந்த கையிலுள்ள பிரம்பினாற் சுட்டிக் காட்டி, 

சேவகம் செலுத்திச் செல்ல -  சேவகத்தைச் செலுத்திச் செல்லா நிற்பவும் 


எ - று.

அணித்து - அணியதாக. வெம்மை - விருப்பம். வியாழன் -  பிருகற் பதி; 

தேவர்க்கு அமைச்சுப் பூண்டவ னென்பதுபற்றி யெடுத்துக் கூறினார். 

சூழ்ச்சியினும் என உருபும் உம்மையும் விரிக்க 

சேவகம் - வீரமும், பணியுமாம். இங்கே படையினைப் பணிகொள்ளுதலாகிய வீரமும், 

பிராட்டிக்குப் பணிசெய்தலாகிய தொண்டும் கொள்க. (20)


சுமதி பொருள் :  நல்லறிவு,  அறிஞன்,  சுமைதலை, தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர்,  நுண் அறிவுடையவர்,  படைப்பு, அதிர்ஷ்டம், நட்பு, மகிழ்ச்சியான, செயலில்

No comments:

Post a Comment