‘சுர்’ என்று வற்றிய சுனாமி
2004ஆம் வருடம் கடல் கரையைக் கடந்து, கடற்கரை ஓரம் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சுனாமி (கடல்கோள்) குறித்து அவ்வளவு விழிப்புணர்வு இல்லை.
ஆனால் கடல்கோள் (சுனாமி) பற்றித் திருவிளையாடற் புராணம் வெகுவாக விவரித்துக் கூறுகிறது. இதுபோன்றதொரு கடல்கோள் (சுனாமி) வர்ணனை வேறுபிற இலக்கியங்களில் இல்லை. இணையத்தில் பதிவுகள் ஏதும் பார்க்கக் கிடைக்கவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லாலும், “கடல்கோள், ஆழிப்பேரலை” என்ற தமிழ்ச் சொற்களாலும் குறிப்பிடுகின்றனர்.
திருவிளையாடற் புராணத்தில், சலதி பௌவம் முந்நீர் உததி என்ற சொற்களால் கடல் குறிப்பிடப்படுகிறது. கடல்கோளை அல்லது கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் திருவிளையாடல் புராணம் பாடியுள்ளார். திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது . ஊழிக் காலத்தில் ஏழுகடல்களும் பொங்கி, ஏழு கண்டங்களும் கடலில் மூழ்கின என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது .
மதுரையை அழித்திடு -
கடலுக்கு அரசன் வருணன். வருணனுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் வருணனை அழைத்து, நீ விரைந்து சென்று, பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும், சினந்து வளைந்து, அரிய காவலையுடைய “மதுரையை அழிப்பாயாக” என்று கூறி ஏவினான் (பாடல் எண் 1037). கடலுக்கு அரசனாகிய வருணனும், பேயும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டிருளில் நேரத்தில், வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப் பதியைச் சூழ்ந்து, விரைவாக அழிக்கக் கருதினான்.
கொதித்துப் பொங்கி எழுந்த கடல் -
கடலானது, கொதித்து பொங்கி, அலையாகிய கைகள், அண்டகூட முழுதும் ஊடுருவிச் சென்று, நடுக்க முண்டாக்கி வருத்த, ஊழிக்காலத்தில் ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், சந்திர மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வருகின்ற ஒரு கரிய மலை தோன்னாற்போல, மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது(பாடல் எண் 1039).
கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் -
மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, இரவினிடத்ததாகிய சந்திரன்மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராசு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும்(பாடல் எண் 1040); இது மேகங்கள், மதுரையை மறைத்தற்கு வருதலைப் போன்று இருந்தது. இப்படியில்லாமல் இதை வேறு எப்படிக் கூறுவது?
பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -
மேலும்,
வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக, வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக, பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.
(Seaturtle.org - MTN 130:22-24 Marine Turtles Stranded by the Samoa Tsunami)
இங்ஙனம் எழுந்த கடலானது மதுரையை நெருங்கும் போது, முகில் உறங்கப் பெறும் மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், நடு இரவில், பாண்டி மன்னன் கனவில் கண், வெள்ளியம்பலவாணர்,ஒரு சித்த மூர்த்தியாய், முன்னே தோன்றி, அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார்.
உக்கிரப் பெரு வழுதிப் பாண்டியனே, உனது நகரத்தை அழிக்கும் பொருட்டு, கடலானது வருகின்றது (ஆதலால்), நீ விரைந்து எழுந்து, போய், வெற்றி பொருந்திய வேற்படையை விடுத்து வென்றி பெறுவாயாக என்று கூற, உலகினைப் பாதுகாத்தலை யுடைய உக்கிர வழுதி, கூப்பிய சிவந்த கைகளை யுடையனாய், துதிக்கின்ற நாவினை யுடையவான், எழுந்து, பேயும் உறங்குகின்ற நள்ளிரவில் தான் கண்ட கண வினை யுணர்ந்து,
கனவிலே தோன்றிய சித்தமூர்த்தி, நனவிலும் எழுந்தருளி வந்து, மன்னனது எண்ணத்தை உணர்ந்து, அப்பனே நீ காலந்தாழ்க்க நிற்பது என்னை, சினந்து கடல் வடிவாக வந்த பகைமை, அதனது மிக்க வலிகெட, கூரிய வேற்படையை எறிந்து (வென்று), உலகிற்கு வரும் அழிவை நீக்குவாய் என்று கூறினார்.
சுர் என வற்றிய சுனாமி - (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று.
எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று,
பண் அமைந்த வேதத்திற் கூறிய வேள்வியைத் தடுப்பதல்லாமல், உலகனைத்தும் அழியுமாறு பிறிது சூழ்ச்சி செய்த, தேவேந்திரனின் ஏவலினால், பெருகிவந்த கடலானது வலி யழிந்தது; வஞ்சனையுடைய தீயோர்க்கு உதவி செய்து அதனால் இந்தக் கடலானது தன் வலிமையை இழப்பது எக்காலத்தும் உள்ள தொரு செயலே போலும்,
பகைவருடலில் நுழைந்த வேலினால், கடலைப் புறங்கொடுக்கச் செய்த உக்கிர பாண்டியன் முன்னர், நிலத்தின்கண் நின்றருளிய சித்தமூர்த்தி, விசும்பிலே மறைந்து (பின்), ஞானக்கண்ணிலே நிறைந்து தோன்றும் தனது திருவருளினால், திருவுருவந் தாங்கி, உமை யம்மையாரொடும், வானின்கண், இடப ஊர்தியில் வெளிப்பட்டு நின்றருளினார்
மூன்று கண்களையும் நான்கு திருத்தோள்களையும், குழவித் திங்களைக் கண்ணியாக அணிந்த சிவந்த அழகிய சடையையும், நீலகண்டத்தையும், பாண்டியன் தரிசித்து, அப்பக்கத்தையே நோக்கி வணங்கி எழுந்து, விரிந்த பெரிய அன்பும் தானுமாக, விதிப்படி அஞ்சலி செய்து துதித்து, புவியின்மேல் நடந்து செல்கின்றான்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடற் புராணம் ஆராய்ச்சியாளர்,
திருப்பூவணப் புராணம் ஆராய்ச்சியாளர்,
காளையார்கோயில் புராணம் ஆராய்ச்சியாளர்.
----------------------------------------------------------------------------
கடல்கோள் குறித்த திருவிளையாடற் பாடல்கள் -
பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென
இருங்கட லுடுத்தபா ரேமு மூழிநாள்
ஒருங்கடுவெள்ளமொத் துருத்துப் போய்வளைந்
தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான்.(1037)
விளைவது தெரிகிலேன் வேலை வேந்தனும்
வளவயன் மதுரையை வளைந்திட் டிம்மெனக்
களைவது கருதினான் பேயுங் கண்படை
கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய்.(1038)
கொதித்த லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய்
அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய்
மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப்
புதித்த தொத்து மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே.(1039)
வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)
வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே
பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள்
விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல்
அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே.(1041)
இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ்
நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா
மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார்.(1042)
வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைணீ
எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத்
தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக்
கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான்.(1043)
கனவில் வந்த வேடர் நனவில் வந்து காவலோன்
நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென.(1044)
எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1045)
எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1046)
சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ்
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால்
வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய்
திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம்.(1047)
புண்ணிடை நுழைந்த வேலாற் புணரியைப் புறங்கண் டோன்பால்
மண்ணிடை நின்ற சித்தர் வானிடை மறைந்து* ஞானக்
கண்ணிடை நிறைந்து தோன்றுங் கருணையால் வடிவங் கொண்டு
விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்.(1048)
முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த
செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன்
பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந்
தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான்.(1049)
----------------------------------------------