Tuesday 3 March 2020

சோமவார விரதம், திங்கள் கிழமை விரதம், விரதம் இருக்கும் முறைகளும், விரத பலன்களும்

சோமவார விரதம் 
(திங்கள் கிழமை விரதம்) 
விரதம் இருக்கும் முறையும், விரத பலன்களும்
(திருவிளையாடற் புராணத்தில் உள்ளபடி)


புராணகாலத்தில் 12 வருடங்கள் பஞ்சம் ஏற்பட்டது. மூவேந்தர்களும் அகத்தியமுனிவரிடம் வேண்டினர்.  அவரும் கோள்களின் நிலைகளை ஆராய்ந்து பார்த்து, மிக்க சினமுள்ள குரியனும் செவ்வாயும்.  முன் செல்ல, ஒளி வீசும் சுக்கிரனாகிய குரவன், அவற்றிற்கும் பின்னே செல்லும் இந்தச் செயலினால், கடலாகிய ஆடையையுடைய இந்நிலவுலகில், பன்னிரண்டு ஆண்டுகள் வரை, மழையில்லை.  மழைக்கு அதிபதியாகிய இந்திரனிடத்திற் சென்று கேளுங்கள் என்று கூறி அருளினார்.
அகத்திய முனிவரே, நாங்கள் இந்திர லோகத்திற்கு எங்ஙனம் செல்வோம்? என்று கேட்டனர்.  அதற்கு, ஐம்புலன்களையும் வென்றவனாகிய அந்தக் குறுமுனிவர், நீங்கள் மூவரும் சோமவார விரதம் மேற்கொள்ளுங்கள்.  மதுரை அருள்மிகு வெள்ளியம்பலவாணன் திருவருளைப் பெற்றுக் கொண்டு, வானின் வழியே செல்லும் ஆற்றலைப் பெறுவீர்கள் என்றார்.  மேலும்,  அந்த மேருமாலையாகி வலிய வில்லையுடைய சிவபிரானது விரதத்தின் விதிமுறைகளைக் கூறினார்.

சோமவார விரதத்தின் மகிமை - மிக்கமேன்மையுடைய தேவர்களுள் சிவபிரான் மேலோனாவன்.  மிக்க மேன்மையுடைய சத்திகளுள்ளே உமாதேவியார் மேன்மையுடையராவர். உத்தமமான விரதங்கங்களுள் மிகவும் மேன்மையுடைய விரதங்கள் பல உள்ளன.  அவற்றுள், சோமவார விரதம் மேன்மையுடையது என்று வேதம் முதலான நூல்கள் கூறுகின்றன.

இந்தச் சோமவார விரதத்தைக் காசி முதலிய திருப்பதிகளில் இருந்து மேற்கொண்டால் அதிக பலன் உண்டு.  ஆனாலும், இந்த நல்ல விரதத்தை மதுரையம்பதியில் இருந்து மேற்கொள்பவர்களுக்குக் கோடிப்பங்கு பயன்மிகும்; இவ்வாறு கூடுதலான பலன் கிடைப்பதற்குக்  காரணம் என்னவென்றால், சோமவார மானது சோமசுந்தரக் கடவுளக்கு உரிய வாரம்.
ஆகையால் இந்த மதுரைப்பதியில், சூரியனோடு சந்திரன் பொருந்த அந்நாளுடன் கூடிய சோமவார விரதத்தை, விதிப்படி மேற்கொள்ள பவர்களுக்கு, அப்பயனிலும் அதிகப்பயன் உண்டு; இப்பதியில், நீதி வழியாக ஈட்டிய பொருளினால் இயற்றும், நன்மையாகிய அவ்விரதப் பயன்,  அதனிலும் அதிக முடையதாய் ஒன்று பலவாகப் பெருகும். 

சோமவார விரத நாட்கள் - நன்மை நிறைந்த சோமவார விரதம் இருக்கத் தொடங்குகின்ற   நாள்கள் எவை? கார்த்திகை மாதத்திலாவது மார்கழி மாதத்திலாவது, அல்லது இரண்டு அமாவாசை சேர்ந்த மலமாதங்களை நீக்கி மற்றைய மாதங்களிலாவது, முற்பக்கத்தில், பரந்த கிரணத்தையுடைய ஞாயிற்றுக்கிழமையின் இரவில் உணவு கொள்ளாது, வேற்றிடத்தில் தூங்கி,
விடியற் காலையில் எழுந்து,  அருள்மிகு அங்கயற்கண்ணியின் மணாளாராகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து, அன்று செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்து, காம முதலிய குற்றங்களை மனத்தினின்றும் நீக்கி, மலர்ந்த பொற்றாமரைக் குளத்தை அடைந்து, விரலில் பவித்திரம் தரித்து, உரையும் உடலும் உள்ளமும் ஒன்றுபட, சங்கற்பம் சிறந்தெடுத்துச் சொல்லி,  கடப்ப மரத்தின் அடியிலே தோன்றிய மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற சோமசுந்தரக் கடவுளை, சிந்தித்து, பூமியில் உள்ள தீர்த்தங்கள் எல்லாவற்றிலும், மூழ்கிய பயனை, இங்கு உறுதி பெறத் தருவாயாக என்று வேண்டி, அலைகளையுடைய பொற்றாமரையில் நீராடி, வெள்ளிய திருநீற்றை உடம்பில் தரித்து, உருத்திராக்க மாலையை ஒளியுண்டாக விதிப்படி தாங்கி,  வெள்ளைமந்தாரை மலரும் முல்லை மலரும் மல்லிகை மலரும் வெடித்த வாயையுடைய சாதி மலரும், தேனொடு மலர்ந்த இருவாட்சி மலரும் முதலிய வெள்ளை மலர்களை எடுத்து, சித்தி விநாயகக் கடவுளை முன்னே வழிபட்டு, குறை யிரந்து( இரத்தல் = யாசித்தல்), சங்கற்பங் கூறி, உள்ளே சென்று, முடியின்மேல் பன்னிரண்டு அங்குல அளவின் உயர்ச்சிக்குமேல்,  உண்மையறிவானந்த வடிவாகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து வைத்து, அச்சிவ வடிவாயிருந்து, மண்முதலாகச் சிவம் ஈறாக வுள்ள தத்துவாத்துவாவின் வடிவமான சிவலிங்கப் பெருமானை, ஆசனமும் மூர்த்தியும் மூலமும் முதலிய மந்திரங்களாலும் ஆகம விதிப்படி, பூசிக்க பஞ்சாமிர்தமும், பஞ்ச கவ்வியமும், நறிய கனிகள் ஐந்தும், சிவந்த தேனும், சந்தனக் குழம்பும், மலர் பெய்த குளிர்ந்த நீரும், தூய நீருமாகிய இவைகளால், திருமஞ்சனஞ் செய்து, அழகிய வெண் பட்டாடையும், பச்சைக் கர்ப்பூரச் சுண்ணமும், சந்தனமும், மணம் பொருந்திய மல்லிகை முதலான வெள்ளிய மலராலாகிய மாலையும், அணிந்து மணிகள் இழைத்த பொன்னாலாகிய திருவாபரணஞ் சாத்தி, ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த திருவடி முதலாகத் திருவங் கங்களைப் பூசித்து, கயல்(மீன்)போன்ற  கண்ணினையுடைய எங்கும் நிறைந்த பராசக்தியை, அவ்வாறே, இறைவனுடைய திருவைந்தெழுத்தைப் பெண்பாலுக்குப் பொருந்த உச்சாத்துப் பூசித்து, குற்றமற்ற இனிய பாலுடன் பலந்து சமைத்த இனிய திருவமுதுடன்,  பல காரவகைகளும் பானக்கமும் ஆகிய இவைகளை நிவேதித்து, மணம் பொருந்திய தாம்பூலம் கொடுத்து, நறிய மணமுள்ள தூபத்தையும் தீபத்தையும் வரையறுத்தவாறு சுழற்றி, கண்ணாடி முதலய மற்றை உபசாரங்களையும் சோமசுந்தரக் கடவுள் திருமுன் காண்பித்து, வில்வத்தினால் அருச்சனை செய்ய வேண்டும்.

திரிபுரம் எரித்த இறைவனின் இச்சா ஞானக் கிரியைவடிவாயுள்ள வில்வமரத்தின் அடியைச் சார்ந்து, மூன்று நாட்கள்வரை உணவும் தூக்கமும்  இல்லாமல், அரகரவென்று முழங்குவோர் செய்த, ஐந்து பெரிய பாவங்களும், அறிவின்றிச் செய்த கொலைப்பாவங்களும் நீங்கும், ஆகலின், வில்வம் சிறந்தது.  வில்வத்தின் இதழ் மடங்கிச் சுருங்கி யிருத்தலும், வாடிக் காய்ந்திருத்தலும், மயிர்ச் சிக்குண்டிருத்தலும், வளைந்த கால்களையுடைய சிலம்பிப்பூச்சி கூடுகட்டியிருத்தலும், புழுக்கள் கடித்திருத்தலும், முதலிய குற்றங்கள் அடங்கியிருந்தாலும் குற்றம் ஆகாது. வில்வம் சிறந்ததாகும்; நீண்டகையில் அதனைக் கொண்டு, சிவபெருமானுடைய ஆயிரந் திருநாமங்களையும் கூறி அருச்சிக்க வேண்டும்.

“ஒப்பிலாத உமையை ஒரு பாகத்தில் உடையவனே, அடியேன் செய்கின்ற குற்றங்கள் ஒவ்வொருநாளும் எண்ணிறந்தனவாம்; கொடிய நஞ்சினையும் அமுதாகக் கொண்ட நீ, யான் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொண்டு காத்தருள்வாய்” என்று வேண்டி, திருவடியில் முடி பொருந்துமாறு வீழ்ந்து வணங்கி, மூன்றுமுறை வலஞ்செய்து துதித்து, வலிய மனமானது கரைந்துருக நின்று வேண்டிய வரங்களைக் கூறிக் குறையிரக்க(இரக்க = யாசிக்க), நல்ல கல்யாணப் போறும், நன் மக்கட்பேறும், நல்ல வாக்கும் கல்வியும் பொருளும், மனதிற்கு இனிய போகமும், பகைவரைப் புறங்காணுதலும், இப்பிறப்பிலே அரசுரிமையும் பிறநலங்களும், எண்ணியவாறே உண்டாகும் .

முதன்மையான இச் சொக்கலிங்கப் பெருமானைத் தொட்டுப் பூசித்தற்கு, உரியரல்லாத வேதம் உணர்ந்த வேதியர் முதலோார், ஆன்மார்த்த இலிங்கத்தின்கண், இம் முறைப்படி வழிபட்டு, மேலே கூறிய சோமவார விரதம் நோற்கக் கடவர்; அவ்வான்மார்த்த பூசனைக்கு உரிமை அளிக்கப்படாத சாரியார், பொருள் கொடுத்து ஆதிசைவர்களால் பூசித்து நோற்கக்கடவர்.

உச்சிப் பொழுதில் உண்ணுதலும், இரவிலுண்ணுதலும், இரண்டு வேளை உணவையும் நீக்குதலும், துயிலாதிருத்தலும், நான்கு சாமமும் அருச்சனை புரிதலும் என்று, ஒப்பற்ற இந்த விரதமானது, ஐந்து வகையினை யுடையது; ஆராய்ந்து பார்க்கின், இந்த ஐந்து வகையும், ஒன்று மிகவும் சிறந்ததாகும்; நோற்கும் ஆண்டின் அளவு, ஒன்றும் இரண்டும் மூன்றும் பன்னிரண்டும் ஆகிய ஆண்டினளவும் வாழ் நாளளவும் ஆகும்; இவற்றினுள் வாழ்நாள் அளவு கருதி நோற்கின்றவர் (தமக்கு உத்தியாபனம் இல்லை யாகலின்), முதலில் அவ்விரதம் பூர்த்தி யாதற்காக முன் செய்யும் கிரியையைச் செய்து நோற்கங்க கடவர்;  மேற்கூறிய அவ்வாண்டுகளின் அளவில் நோற்கும் விரதத்திற்கு, (உத்தியாபனம்) முடிவிற் செய்ய தக்கதாகும்;

உத்தியாபன விதி - இதழ் விரிந்த மாலை நாற்றிய மண்டபமும், குண்டமும் மண்டலமும் வகுத்து, உமை கேள்வனாகிய சிவபெருமானை,  பரந்த ஒளியையுடைய முப்பது கழஞ்சு வெள்ளியினால் திருவுருவம் அமைத்து,
விடியற் காலையில் ஆசிரியனது சொல்லின் வழியே, நாட் கடமைகளை முடித்து, உசிப்பொழுது தொடங்கி மாலைப்பொழுது வரையும், சிவபுராணங்களைக் கேட்டும், மாலைப் பொழுது தொடங்கி நான்கு யாமத்தினும், கயல் போலும் கண்களையுடைய இறைவியை ஒரு கூற்றிலுடைய சிவபெருமானைப் பூசிக்கக் கடவர்; அப்பூசை இறுதியில், மூலமந்திரம் நூற்றெட்டால் நூற்றெட்டு முறையின் ஆகுதி முடித்தல் - சில மூலமந்திரம் நூற்றெட்டினால் நூற்றெட்டு முறை ஆகுதி செய்யக் கடவர்.

ஆயிரம் வில்வங்களைக்கொண்டு ஆயிரம் திருப்பெயர்களையும் கூறி, நான்கு யாமங்களினும் அருச்சிக்கக் கடவர்; நல்ல  திருவைந்தெழுத்தினால்,  அந்த ஐந்தெழுத்தினையும் உருவமாகவுடைய இறைவனுக்கு அருக்கியங் கொடுக்கக் கடவர்; அளவிறந்த மூலமந்திரங்களாலும், மற்றைய மந்திரங்களினாலும்,  விளங்குகின்ற வேள்வித்தீயை வளர்த்துப் பூரணாகுதி செய்து, முடிவில்லாத சோமசுந்தரக் கடவுளின் வேள்வியை முடிக்கக்கடவர்.

விடிந்தபின், நித்தியக் கடன்களைச் செய்து முடித்து, வாழையின் செழித்த பசிய இலைகள் பதின்மூன்றில்,  நன்மையைத் தருகின்ற தூய வெள்ளிய அரிசியை நிரப்பி, இனிமையுடைய நல்ல காய்கறிகளைப் பரப்பி, அமைவுபெற ஆவின்பால் நிறைந்த குடங்கள் பதின்மூன்றனை, அவ்வரிசியின் மேலே வைத்து, சிவபெருமான் திருவடியில் ஒன்றுபட்ட அன்பினையுடையவராய், சிவபெருமானை அருச்சித்தற்குரிய ஆதிசைவர்களை அழைத்து காதிலணியும் குண்டலமும்,  கையில் அணியும் காப்பும்,  பொலிவுபெறத் தந்து,  அன்பு மிக,  (அவர்களைச்) சிவபெருமானாகவே கருதி,  அருச்சித்து,  பெரிய தக்கிணையுடன், பாதமாகிய மலரிலணியும் பாதுகையும்,  விசிறியும் குளிர்ந்த குடையும் அழகிய ஆடையுமாகிய இவை முதலிய பலவற்றையும், சிறந்த தானமாகக் கொடுத்து,  பின்பு, குரவனை (இந்த வழிபாட்டை நடத்திக் கொடுக்கும் குருவை) அவனுடைய கற்பு நிறைந்த மின்போலும் இடையினை யுடைய மனைவியுடன் தவிசில் இருக்க, இம் முறையாக உத்தியாபனத்தை முடித்து, ஆசிரியன் கட்டளையினால், சிவபிரான் திருவடிக்கண் அன்புடைய அடியார்களுடனும், மக்களோடும் சுற்றத் தோடும், அமுது உண்ணல் முறையாகும்;

இச் சோமவார விரதத்தை, முன்னே திருமாலும், தேனையுடைய தாமரை மலரில் வதியும் பிரமனும், இந்திரன் முதலிய தேவர்களும், பதினெண் கணத்தாரும் ஆகிய எல்லாரும் மேற்கொண்டனர்.  மனிதர்களும் நோற்றுப் பெறுதற்கரிய போகத்தையும் வீடுபேற்றையும் அடைந்தனர்.
இவ்விரதத்தை நோற்பவர், கொடிய பகையும் மனத்துன்பமும் நீங்கி, அளவிறந்த பிறவிகளிற் செய்த தீமை பொருந்திய வினைகள் நீங்கி, எடுத்த பிறப்பிலேயே வீடுபேறு எய்துவர்;

இவ் விரதத்தைக் கூறினவர்களும் கேட்டவர்களும், மனைவியர் புதல்வர் சுற்றத்துடன் இன்பத்தோடு வாழ்ந்து, தேவருலகில், சிறந்த பதினான்கு இந்திரப் பட்டமளவும் அவன் பதத்தில், இனிதாக வீற்றிருப்பார்கள் என்று அகத்திய முனிவன் அருளிச்செய்தனன்.

அங்ஙனம் அவன் அருளிச் செய்த முறைப்படி, சோமசுந்தரக் கடவுளுடைய சோமவார விரதத்தை நோற்கும் பொருட்டு, ஒளிவீசும் மணிக்கலன்களை யணிந்த மன்னர் மூவரும், அம் முனிவனிடத்தில் விடைபெற்றுச் சென்று, அழகிய அகவிதழ்களை யுடைய பொற்றாமரை வாவியில் நீராடி, அங்கயற்கண் அம்மையையும் அவர் ஒரு பாகத்திற் பொருந்திய சோமசுந்தரக் கடவுளையும், வழிபட்டுப் பரவி அவ்விரதத்தை மேற்கொண்டார்கள்.  அதன் பயனாக வான்வழியாகச் சென்று இந்திரனது உலகத்தை அடைந்தனர்.  இந்திரன் அவர்களை வரவேற்று உபசரித்தான்.

அகத்திய முனிவர் மூவேந்தர்களுக்கும் அருளிச் செய்த சோமவார விரதத்தை விதிப்படி நாமும் மேற்கொண்டு சிவபெருமானின் திருவருளைப் பெறுவோமாக.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 20, (03.03.2020) செவ்வாய்கிழமை.

--------------------------------------------
திருவிளையாடற் புராணம் பாடல்கள் -
காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால் வெள்ளித்
தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர்த
தூசின வுலகிற் பன்னீ ராண்டுவான் சுருங்கு மென்று
பேசின நூல்கள் மாரி பெய்விப்போற் சென்று கேண்மின்.(1056)

என்றவ னெதிர்யா மெவ்வா றேகுது மென்றா ரைந்தும்
வென்றவன் சோம வார விரதநீர் நோற்று வெள்ளி
மன்றவ னருளைப் பெற்று வான்வழிச் சென்மி னென்றக்
குன்றவன் சிலையா னோன்பின் விதியினைக் கூறுகின்றான்.(1057)

உத்தம வானோர் தம்மு ளுத்தம னாகு மீசன்
உத்தம சத்தி மாரு ளுத்தமி யுருத்தி ராணி
உத்தம விரதந் தம்மு ளுத்தமந் திங்க ணோன்பொன்
றுத்தம மறைநூ லாதி யுரைக்குமிச் சோம வாரம்.(1058)

மந்தரங் காசி யாதிப் பதிகளில்* வதிந்து நோற்கத்
தந்திடும் பயனிற் கோடி தழைத்திடு மதுரை தன்னில்
இந்தநல் விரத நோற்போர்க் கதிகம்யா தென்னிற் சோம
சுந்தர னுரிய வார மாதலாற் சோம வாரம்.(1059)

அங்கதி னதிகப்பேறுண் டருக்கனின் மதிதோய்ந் தொன்றித்
தங்கிய திங்க ணோன்பு தகுதியி னோற்க வல்லார்க்
கிங்கதி னதிக நீதி யீட்டிய பொருள்கொண் டாற்றும்
மங்கர விரதப் பேறொன் றனந்தமாய் வளரு மன்றே.(1060)

நலமலி விரத நோற்கத் தொடங்குநா ணவில்வாந் தேளிற்
சிலையினி லாத லன்றி யிரட்டிய தெரிசஞ் சேர்ந்த
மலமதி யொழித்து மற்றை மதியிலு முந்தைப் பக்கத்
தலர்கதிர் வாரத் தல்லூ ணயின்றிடா தயலிற் றுஞ்சா.(1061)

வைகறை யெழுந்து சேற்கண்ண மணாளனை யுள்கி யற்றைச்
செய்கட னிறீஇக்கா மாதி சிந்தைநீத் தலர்பொற் கஞ்சப்
பொய்கையை யடைந்து கையிற் பவித்திரம் புனைந்து வாக்கு
மெய்கருத் தொருப்பா டெய்தச் சங்கற்பம் விதந்து கூறி.(1062)

கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை நினைந்து ஞாலத்
திடம்படு தீர்த்த மெல்லா மாடிய பயனை யீண்டுத்
திடம்படத் தருதி யென்னாத் திரைத்தடம் படிந்து வெண்ணீ
றுடம்பணிந் தக்க மாலை யொளிபெற விதியாற் றாங்கி.(1063)

வெள்ளைமந் தார முல்லை மல்லிகை வெடிவாய்ச் சாதி
கள்ளவிழ் மயிலை யாதி வெண்மலர் கவர்ந்து வேழப்
பிள்ளையை முந்தப் பூசித் திரந்துசங் கற்பம் பேசி
உள்ளணைந் துச்சி மேற்பன் னிருவர லுயர்ச்சிக் கும்பர்.(1064)

சத்திய ஞானா னந்த தத்துவந் தன்னை யுள்கி
வைத்ததன் வடிவங் கொண்டு மண்முதற் சிவமீ றான
அத்துவ விலிங்கந் தன்னை யாசன மூர்த்தி மூல
வித்தைமற் றாலு நூலின் விதியினாற் பூசை செய்க.(1065)

ஐந்தமு தாவி னைந்து நறுங்கனி யைந்து செந்தேன்
சந்தன தோயம் புட்பத் தண்புனன் மணிநீ ராட்டிச்
சுந்தர வெண்பட் டாடை கருப்புரச் சுண்ணஞ் சாந்தங்
கந்தமல் லிகைமுன் னான வெண்மலர்க் கண்ணி சாத்தி.(1066)

காசணி பொலம்பூண் சாத்திக் கனைகழ லாதி யங்க
பூசனை செய்து சேற்கட் பூரண பரையை யவ்வா
றீசனைந் தெழுத்தைப் பெண்பாற் கிசையவுச் சரிததுப் பூசித்
தாசறு சுரபித் தீப்பா லட்டவின் னமுதி னோடும்.(1067)

பண்ணிய வகைபா னீய நிவேதனம் பண்ணி வாசம்
நண்ணிய வடைக்காய் நல்கி நறுவிரைத் தூபந் தீபம்
எண்ணிய வகையாற் கோட்டிக் கண்ணடி யேனை மற்றும்
புண்ணியன் றிருமுன் காட்டி வில்வத்தாற் பூசை செய்தல்.(1068)

புரகர னிச்சா ஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ
மரமுத லடைந்து மூன்று வைகலூ ணுறக்க மின்றி
அரகர முழக்கஞ் செய்வோ ரைம்பெரும் பாத கங்கள்
விரகில்வெய் கொலைக டீரு மாதலால் விசேடம் வில்வம்.(1069)

மடங்கிதழ் சுருங்கல் வாடி யுலர்ந்தது மயிர்ச்சிக் குண்டல்
முடங்குகாற் சிலம்பிக் கூடு புழுக்கடி முதலாங் குற்றம்
அடங்கினுங் குற்ற மில்லை* யுத்தம மாகும் வில்வந்
தடங்கை கொண்டீச னாம மாயிரஞ் சாற்றிச் சாத்தல்.(1070)

அடியனேன் செய்யுங் குற்ற மன்றைக்கண் றனந்த மாகுங்
கொடியநஞ் சமுதாக் கொண்டாய் குற்றமுங் குணமாக் கொண்டு
படியெழு தரிய நங்கை பங்கனே காத்தி யென்று
முடியுற வடியில் வீழ்ந்து மும்முறை வலஞ்செய் தேத்தி.(1071)

வன்மனங் கரைய நின்று வேண்டிய வரங்கள் வேண்ட
நன்மணப் பேறு மக்கட் பேறுநல் வாக்குக் கல்வி
பொன்மனக் கினிய போகந் தெவ்வரைப் புறகு காண்டல்
இம்மையி லரசு மற்று மெண்ணியாங் கெய்து மன்னோ.(1072)

ஆதியிவ் விலிங்கந் தீண்டற் கருகரல் லாத வேத
வேதியர் முதலோ ரிட்ட விலிங்கத்திவ் விதியா லர்ச்சித்
தோரிய விரத நோற்க வர்ச்சனைக் குரிய ரல்லாச்
சாரியர் பொருணேர்ந் தாரி சைவராற் பூசை செய்தல்.(1073)

பொருவிலிவ் விரத மைவகைத் துச்சிப்  போதிலு னிரவிலூ ணிரண்டும்
ஒருவுத லுறங்கா திருத்தலர்ச் சனைநால் யாமமு முஞற்றுத லென்னக்
கருதினிவ் வைந்து மொன்றினுக் கொன்று கழியவு மதிகமா நோற்கும்
வருடமொன் றிரண்டு மூன்றுபன் னிரண்டு வருடம்வாழ் நாளள விவற்றுள்.(1074)

உடலள வெண்ணி நோற்பவர் முந்த வுந்தியா பனஞ் செய்து நோற்கக்
கடவரவ் வருடக் கட்டளைக் கிறுதி கழிப்பதுத் தாபன விதிதான்
மடலவிழ் மாலை மண்டபங் குண்ட மண்டலம் வகுத்துமா பதியைப்
படரொளி வெள்ளி முப்பது கழஞ்சிற் படிமையா னிருமிதஞ் செய்து.(1075)

காலையி லாசான் சொல்வழி நித்தக் கடன்முடித் துச்சி தொட் டந்தி
மாலையி னளவும் புராணநூல் கேட்டு மாலைதொட் டியாமமோர் நான்குஞ்
சேலன கண்ணாள் பங்களைப் பூசை செய்கவப் பூசனை முடிவின்
மூலமந் திரநூற் றெட்டுநூற் றெட்டு முறையினா லாகுதி முடித்தல்.(1076)

வில்வமா யிரங்கொண் டாயிர நாமம் விளம்பிநால் யாமமுஞ் சாத்தல்
நல்லவைந் தெழுத்தா லைந்தெழுந் துருவி னாதனுக் கருக்கியங் கொடுத்தல்
எல்லையின் மூல மந்திரத் தாலு மேனைமந் திரங்களி னாலும்
வில்லழ லோம்பிப் பூரணா குதிசெய் தீறிலான் வேள்வியை முடித்தல்.(1077)

புலர்ந்தபின் னித்த வினைமுடித் தரம்பைப்  பொதுளும்பா சிலைபதின் மூன்றின்
நலந்தரு தூவெள் ளரிசிபெய் தினிய நறியகாய் கறியொடு பரப்பி
அலந்தர வான்பா னிறைகுடம் பதின்மூன்  றரிசிமேல் வைத்தர னடியிற்
கலந்தவன் பினராய்ச் சிவார்ச்சனைக் குரிய  கடவுள்வே தியர்களை வரித்து.(1078)

காதணி கலனுங் கையணி கலனுங் கவின்பெற வளித்தர னாக
ஆதரம் பெருக நினைந்தருச் சனைசெய்  தரியதக் கிணையொடும் பாதப்
போதணி காப்பு விசியிதன் கவிகை பூந்துகின் முதற்பல வுடனே
மேதகு தானஞ் செய்துபின் குருவைக் கற்புடை மின்னிடை யோடும்.(1079)

ஆசனத் திருத்திப் பொலந்துகில் காதுக் கணிகள்கைக் கணிகளு மணிந்து
வாசநன் மலரிட் டருச்சனை செய்து மலைமக டலைவனை வரைந்து
பூசனை செய்த படிமையோ டம்பொன் பூதலம் பதாதிகள் பிறவுந்
தூசலர் மாலை கோட்டணி புனைந்த சுரவிமா தானமுஞ் செய்து.(1080)

இனையவா றுத்தா பனமுடித் தாசா னேவலாற் சிவனடிக் கன்பர்
தனையரோ டொக்க லுடனமு தருந்த றகுதியிவ் விரதமுன் கண்ணன்
நனையதா மரையோ னிந்திரன் முதல்வா னாடவர் மூவறு கணத்தோர்
அனைவரு நோற்றார் மனிதரு மனுட்டித் தரும்பெறற் போகம்வீ டடைந்தார்.(1081)

ஈதுநோற் பவர்வெம் பகைமனத் துயர்தீர்ந் தாயிரம் பிறவியி லியற்றுந்
தீதுசேர் வினைதீர்ந் தெடுத்தயாக் கையினிற் சிவகதி யடைவரிவ் விரதம்
ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்க ளோக்கலோ டினிதுவாழ் தும்பர்
மேதகு பதினா லிந்திரன் பதத்தில் வீற்றினி திருப்பரென் றறவோன்.(1082)

சொல்லிய நெறியாற் சோம சுந்தரன் விரத நோற்பான் 
வில்லிடு மணிப்பூண் வேந்தர் முனிவனை விடைகொண் டேகி
அல்லியங் கனகக் கஞ்சத் தாடியங் கயற்கண் வல்லி
புல்லிய பாகன் றன்னை வழிபடீஅப் போற்றி நோற்றார்.(1083)

No comments:

Post a Comment