Saturday 27 July 2019

கீழடி அழிந்தது எவ்வாறு?

கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம் அழிந்தது எவ்வாறு?
இரட்டைச் சுவரிடம் கேளுங்கள், அது சொல்லும்.




மதுரைக்குக் கிழக்கேயுள்ள கீழடி அருகே தொல்லியல்துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.   இங்கே நான்குகட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்து விட்டன.  கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பெற்று நடைபெற்று வருகிறது.   இந்த 5 ஆம் கட்ட அகழாய்வில் இரட்டைச் சுவர் இருப்பது கண்டறியப் பெற்றுள்ளது.  ஆனால் இது அரண்மனைச் சுவரா அல்லது கோட்டைச் சுவரா என்று கண்டறியமுடியவில்லை என்றும், சுவரின் தொடர்ச்சியயையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவ்வப்போது ஜி.பி.ஆர். எனப்படும் புவி ஊடுருவும் கருவி மூலம் பூமிக்கடியில் இருப்பவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன(பார்வை 1).

கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.

புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?

உள்ளது.
தொல்லியல் அறிஞர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப்பெற்றுள்ள இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா, அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா என்று எளிதில் கண்டறிந்து விடலாம். புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள இரட்டைச் சுவரின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக்கொண்டு கண்டறிந்து விடலாம்.

புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது, வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது.  எனவே புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள இரட்டைச் சுவரின் சிதைந்த  பாகங்கள் இந்தச் சுவற்றிற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டால், இது கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.  மாறாக, இரட்டைச் சுவரின் சிதைந்த பாகங்கள் சுவற்றிற்கு கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இரட்டைச் சுவரிடம் கேளுங்கள், அது சொல்லும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

நன்றி.
பார்வை (1) – 
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jul/25/அகழாய்வுப்-பணிகள்-தீவிரம்-கீழடியில்-தங்கும்-தொல்லியல்-ஆய்வாளர்கள்-3199474.html
படங்கள் - செய்தித்தாள்களில் வந்தவை.

No comments:

Post a Comment