Tuesday 6 August 2019

தமிழரும் துருக்கரும்

திருவிளையாடல் புராணத்தில் 
‘துருக்கர் (துலுக்கர்)’என்ற சொல் 
உள்ள பாடல்கள்

திருவிளையாடற் புராணத்தில் மூன்று பாடல்களில் துருக்கர் (துலுக்கர்) பற்றிய செய்திகள் உள்ளன.



1) மாணிக்கம் விற்ற படலத்தில் (படலம் எண் 17), சிவபெருமான் விற்கக் கொண்டு வந்த பல்வேறுவிதமான உயர்ரகக் கற்கள் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.  முட்கள் பொருந்திய நாளத்தினையுடைய தாமரையின் மலர்போலும் கண்களையுடைய திருமால், மோகினிப் பெண் வடிவாகி ஓட,  அழகிய பாதி மதியினைச் சடையிற் சூடிய சிவபெருமான், ஒரு திருவிளையாட்டாக, மந்தரமலையின் எல்லையளவாக, துள் அரி ஏறு போலத் தொடர்ந்து சென்று, பழிப்பில்லாத சிவந்த தீயாகிய இந்திரியத்தைச் சிந்தினான்.  அப்போது,  தூய அவ்விந்தில் ஐயன் (ஐயனார்) என்பான், காட்டிலுறையும் பரிவார தெய்வங்களோடும் வந்தனன்; அந்த விந்தினை, வலமிக்க கருடன் கௌவி, கடலிலும் துருக்க நாட்டிலும் பரவ விடுத்தது,  அதனால், கலுழப் பச்சை கற்கள் தோன்றின என்கிறது திருவிளையாடற் புராணம்.

மாணிக்கம் விற்ற படலம் (பாடல் எண் 1259)
அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான 
வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து 
துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும் 
பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை”.
-------------------------------------------------------------------

2) மெய்க் காட்டிட்ட படலத்தில் (படலம் எண் 30) குலபூடணபாண்டியனக்குச் சுந்தரசாமந்தன் என்னும் பல்வேறு நாட்டிற்கும் ஓலை அனுப்பிப் படை திரட்டிய செய்து கூறப்படுகின்றது.  அதில் துருக்க நாட்டிற்கும் ஓலை அனுப்பி செய்தி பதிவு செய்யப்பெற்றுள்ளது.

மெய்க் காட்டிட்ட படலம் ( பாடல் எண் 1677)
எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை 
எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை 
எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை 
எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான்”.
-------------------------------------------------------------------


3)  சுந்தரப்பேர் அம்பு எய்த படலத்தில் (படலம் எண் 50)  வங்கிய சேகர பாண்டியன் மீது விக்கிரமசோழன் படையெடுத்து வந்தான்.  விக்கிரமசோழனுடைய படையில், போர்த்துணையாகி வந்த, வடக்கே உள்ள நாட்டிலுள்ளாராகிய துருக்கரும் ஒட்டியரும், இவரொழிந்த ஏனையோரும் இருந்துள்ளனர். அவர்கள் சோழனைச் சூழ்ந்து நின்று,  “நிற்பாயாக என்று கூறிச் சினந்து வைது,  நீ போருக்குத் தோற்றுப் போகின்றாய்;  இது உனது கருத்தானால், ஆண் தன்மை யாரிடத்தது; உனது பெருமை என்னாகும்” என்று சோழனைப் பழித்த செய்தி பதிவு செய்யப் பெற்றுள்ளது.

சுந்தரப்பேர் அம்பு எய்த படலம் 2373.
செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார் 
துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில் என்று 
உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது உன் 
கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம் என்னாம்”.
-------------------------------------------------------------------

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆடி 21 (06.08.2019) செவ்வாய் கிழமை.


No comments:

Post a Comment