Monday 22 July 2019

கூலிப்படை

பாண்டிய மன்னனின் கூலிப்படை

இந்நாளில், கூலிப்படை (mercenary) என்பவர்கள் பணத்துக்காகப் போர் செய்பவர்கள், கொலை செய்பவர்கள்.  இவர்களுக்கும் கொலை செய்யப்படுபவருக்கும் எந்தவொரு விரோதமும் இருக்காது.  இருந்தாலும் பணத்திற்காகச் சண்டை செய்வார்கள், கொலையும் செய்வார்கள்.
கூலிக்காகச் சண்டை செய்வதோ, போர் செய்வதோ இந்நாளில் ஏற்பட்டதல்ல.

அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூடண பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் சேதிராயன் என்றொரு வேடன் மன்னனுடன் போரிடத் துணிந்துள்ளான்.  இந்த வேடனைத் தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொலை செய்ய அதிகமான படைவீரர்கள் பாண்டிய மன்னனுக்குத் தேவைப் பட்டுள்ளனர்.  அதனால் அவன் அவனது கருவூலத்தைத் (கஜானாவைத்) திறந்துவைத்து அதிலிருந்த பொன்னைக் (தங்கத்தைக்) கூலியாகத் கொடுத்து அண்டை நாட்டுப் படைகளைத் திரட்டியுள்ளான் என்கிறது திருவிளையாடற் புராணம்.

குலபூடணனுக்குச் சுந்தரசாமந்தன் என்னும் சேனாதிபதி இருந்தான்.
ஒருசமயம் சேதிராயன் என்னும் வேடர் தலைவன் பாண்டியன் மேல் படையெடுக்கக் கருதினான்.  அதனை யுணர்ந்த பாண்டியன் சேனாதிபதி சுந்தரசாமந்தனை அழைத்துப் பொன்னறை (பொன் நிறைந்த கருவூலம்) முழுவதும் திறந்து வைத்து, வேண்டிய பொன்னை எடுத்துச் செலவு செய்து மேலும் பல சேனைகளைத் திரட்டுமாறு கூறினான்.  ஆனால் சாமந்தன் பொன்னை யெல்லாம் சிவப்பணிகளுக்குச் செலவு செய்துவிட்டு, எல்லா தேசத்தினருக்கும் ஓலை அனுப்பியது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.   ஒருநாள் பாண்டியன் சேனாதிபயை அழைத்து ஓலை எழுதப்பெற்ற நாடுகளில் இருந்து சேனைகள் ஏதும் வராதது கண்டு, நாளை சூரியன் மறைவதற்கும்ள சேனைகள் அனைத்தும் வரவேண்டும் எனக் கட்டளை யிட்டான்.  சுந்தரசாமந்தன் செய்வதறியாமல் திகைத்து, மதுரை அருள்மிகு சோமசுந்தரரை வேண்டினான்.   சோமசுந்தரின் திருவருளால் சிவகணங்கள் யாவும் பலவகைப் படைகளாக உருமாறி மதுரையில் திரண்டு நின்றனர்.  திரண்டு வந்திருந்த சேனைகளைச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு இவர்கள் என்னென்ன தேசத்தவர்கள் என மெய்காட்டி அறிவித்தான்.

கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர் அணிவகுந்து நின்றனர்.  இவர்கள் தமிழரல்லாத அண்டை நாட்டினர் என மெய்காட்டிச் சாமந்தன் பாண்டியனுக்கு அறிவித்தான்.

மேலும், காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர்.  இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் “நம்முடைய (பாண்டிய) நாட்டோர்” ஆவர் எனவும் மெய்க் காட்டிச்  சாமந்தன் குலபூடண பாண்டியனுக்கு அறிவித்தான்.

கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.  மேலும் இவர்களை “நம்முடைய (பாண்டிய) நாட்டோர்” என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.

இதனால் அனந்தகுணபாண்டியனின் மகனாகிய குலபூடணபாண்டியன் காலத்திலேயே  கூலிக்குப் படையமர்த்திக் கொள்ளும் முறை, கூலிப்படை முறை இருந்துள்ளது என அறிய முடிகிறது.

மேலும், அந்தக் காலத்திலேயே பாண்டியருக்குக் கூலிப்படையாகக் கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர்  இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

பார்வை - பரஞ்சோதிமுனிவர் மொழிபெயர்த்துப் பாடிய திருவிளையாடல் புராணம் (30) மெய்க் காட்டிட்ட படலம், பாடல் எண் 1664 முதல் 1704 முடிய.

----------------------------
திருவிளையாடற் புராணம் பாடல்கள்
1692.
தெவ் அடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ நோக்கி
எவ் எவ் தேயத்து உள்ளோர் இவர் என எதிரே நின்று
கௌவையின் மனச் சாமந்தன் கையில் பொன் பிரம்பு நீட்டி
அவ் அவர் தொகுதி எல்லாம் மணி அணி நிறுவிக் கூறும்.
1693.
கொங்கர் இவர் ஐய குரு நாடர் இவர் ஐய
கங்கர் இவர் ஐய கருநாடர் இவர் ஐய
அங்கர் இவர் ஐய இவர் ஆரியர்கள் ஐய
வங்கர் இவர் ஐய இவர் மாளவர்கள் ஐய.
1694.
குலிங்கர் இவர் ஐய இவர் கொங்கணர்கள் ஐய
தெலுங்கர் இவர் ஐய இவர் சிங்களர்கள் ஐய
கலிங்கர் இவர் ஐய கவுடத்தர் இவர் ஐய
உலங்கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் ஐய.
1695.
கொல்லர் இவர் ஐய இவர் கூர்ச்சர்கள் ஐய
பல்லவர் இவர் ஐய இவர் பப்பரர்கள் ஐய
வில்லர் இவர் ஐய இவர் விதேகர் இவர் ஐய
கல் ஒலி கழல் புனை கடாரர் இவர் ஐய.
1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.
1697.
இத்தகைய சேட் புலன் உளாரை இவண் உய்த்த
இத்தகைமை என் என வினாவி அருள் செய்யேல்
அத்த நின்னரும் பொருள் அனைத்தும் வரையாதே
உய்த்தலின் அடைந்தனர்கள் என உரைத்தான்.
1698.
அந் நெடும் சேனை தன்னுள் சேண் இடை அடல் மா ஊர்ந்து
பின் உற நிற்கும் ஒற்றைச் சேவகப் பிரானை நோக்கி
மன்னவன் அவர் யார் என்னச் சாமந்தன் வணங்கி ஐய
இன்னவர் சேனை வெள்ளத்து யாரை என் அறிவது என்றான்.
1699.
அவரை இங்கு அழைத்தி என்றான் அரசன்தன் வழிச் செல்வார் போல்
கவயம் இட்டவரும் போந்தார் காவலன் களி கூர்ந்து அம் பொன்
நவமணிக் கலன் பொன் ஆடை நல்கினான் உள்ளத்து அன்பு
தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து தன் தமர்க்கும் ஈந்தார்.

பாடல்கள் - நன்றி  http://www.tamilvu.org/library

No comments:

Post a Comment