Thursday, 2 September 2021

சூழியம் விழுங்குசிறு கொண்டை

 கீழடியில் கிடைத்த கொண்டை

சூழியம் விழுங்குசிறு கொண்டை


மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் கீழடி தொல்லியல் அகழாய்வில் அகரத்தில் கிடைத்த சிறு கொண்டயுடைய பெண் உருவச் சுடுமண் பொம்மையின் படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  16 ஜுலை 2021 அன்று தினமலர்[1] நாளிதல் இச்செய்தியை வெளியிட்டுத் தமிழரின் தொன்மையை உலகறியச் செய்துள்ளது.  கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் ஏழு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மூன்றாவதாக தோண்டப்பட்ட குழியில் 65 செ.மீ., ஆழத்தில் இந்தச் சுடுமண் உருவத்தைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.

            பெருத்த கண்கள், மூக்கு, உதடு எனப் பேரழகியாகத் தோன்றும் இந்தப் பெண் தன்னுடைய தலைமுடியை இடதுபுறம் அள்ளிச் சுருட்டி முடிந்து பெரிதாக கொண்டை போட்டுக் கொண்டுள்ளாள்.  முகத்திற்கு மேலும் அழகூட்ட முகத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறச் சாயம் பூசியுள்ளாள்.  இரண்டு காதுகளிலும் கலைநயத்துடன்கூடிய பெரிய காதணிகளை அணிந்துள்ளாள்.  நெற்றியின்  நடுவில் பதக்கத்துடன் இரண்டு பக்கங்களிலும் பூக்களால் தொடுக்கப்பட்ட ஆபரணத்தால் நெற்றியையும் தலைமுடியையும் சுற்றிக் கட்டிக் கொண்டுள்ளாள். 

            நெற்றிச் சுட்டியும், சூழியமும் -  தலைமுடியில் நேர்வகிடு எடுத்து நடு நெற்றியில் ஒரு பதக்கத்தைத் தொங்கவிட்டிருப்பர்.  இந்த ஆபரணத்திற்கு “நெற்றிச் சுட்டி” என்று பெயர்.  நெற்றியின் நடுவே பதக்கம் வைத்து, இரண்டு பக்கத்திலும் மலர்களை மாலைபோல் தொடுத்து, நெற்றியையும் தலைமுடியையும் சூழ்ந்து கட்டப்பட்டுள்ள இந்த ஆபரணத்திற்குச் “சூழியம்” என்று பெயர். 

            பூமாலையால் சுற்றிக் கட்டப்பெற்ற கொண்டையைச் சங்கப்பாடலான பரிபாடல் பூ மாலை கொண்டைஎன்று குறிப்பிடுகிறது. (பரிபாடல் 24).

 


நெற்றிச் சுட்டி அணிந்துள்ளார்

சூழியம் அணிந்துள்ளார்

“சூழியம் விழுங்கு சிறு கொண்டை” மலையத்துவச பாண்டியனின் மகளாகத் தடாதகைப் பிராட்டியாக அன்னை மீனாட்சி அவதரித்தபோது, அவளது சிறு கொண்டையில் “சூழியம்” அணிந்து தோன்றினாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.   தென்னவன் பாண்டியன் மலையத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் குழந்தைப்பேறு வேண்டி மாபெரும் யாகம் செய்கின்றனர்.  அந்த யாக குண்டத்தில், ஒளிபொருந்திய முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட சிறிய கொண்டையுடன்,  மார்பில் முத்துமாலை சந்திரனைப் போன்று ஒளிவிடவும், ஒளிமிக்க உதயசூரியனைப் போன்று ஒளிவிடுகின்ற கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும்தெளிந்த அமுதம் போன்ற, மெல்லிய மழலைுச் சொற்கள் தோன்றவும், புன்னகை பூக்கும் கூரிய பற்கள் வெளிப்படவும், இகழ்தல் இல்லாத பல உயிர்களையும் எல்லா உலகங்களையும் பெற்றவளாகிய உமையவள், மூன்று முலைகளை உடைய  ஒருபெண் மகவாக, மூன்று வயதுடன் தோன்றி நின்றாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.

            சூழியம் விழுங்கு சிறு கொண்டை” உடையவளாக மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் இன்றும் அடியார்களுக்குக் காட்சி அருளி, உலக உயிர்களை யெல்லாம் காத்து அருளி வருகிறாள். 

 சாய்ந்த கொண்டைச் சடையோன் -

            அன்னை மீனாட்சியின் கொண்டையானது அவளது இடதுபுறமாகச் சாய்ந்திருக்கும்.  மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவர் கொண்டையானது எப்போதும் நேராக நிமிர்ந்து இருக்கும். ஆனால் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி மதுரைக்கு ஓட்டிக் கொண்டு வந்து, பாண்டியனிடம் குதிரைகளை ஒப்படைத்த போது, சிவபெருமானின் கொண்டையானது சாய்ந்து இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.

            “ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும்,  திருமுடிச்சாத்தும், திருமுடிப்பாகையும், ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிகைகளும், வீரவளைகளும்  குண்டலங்களும், திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த திருநுதலும், வெள்ளிய ஆடையும் கவசமும் அணிந்துகொண்டு, தொண்டர்களின் மனத்தினின்றும் நீங்காத சிவபெருமான் ஆவணிமூல நாளில் குதிரைகளை ஓட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்” என்கிறது திருவிளையாடற் புராணம். 

(பாடல் வரிசை எண் 2836).  இத் திருவிளையாடலையெல்லாம் சோமசுந்தரர் மீனாட்சியிடம் கூறித் தமது திருக்கோயிலில் வீற்றிருந்தார் என்கிறது புராணம்.   


கீழடியல்ல இது கூடல் என்ற மதுரை -

            கீழடியருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்லியல் மேடு சுமார் 5 கி.மீ. சுற்றளவு உடையது. இது இன்றைய மதுரையின் நான்கு வெளிவீதிகளின் சுற்றளவுக்குச் சமமாகும். அதாவது இன்றைய மதுரையின் சுற்றளவும்,  கீழடி தொல்லியல் மேடும் ஒரே பரப்பளவு உடையன.  கூடல்  என்ற மதுரை மாநகருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளதாம்.  இதை  ''மாடமலி மறுகிற் கூடற் குடவயின் ....'' என்று முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.  “திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே கூடல் மாநகர் இருந்துள்ளது” என்பதை இந்தப் பாடல்வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.   இதை உறுதி செய்யும் வகையில், “செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது“ என்று எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149) என்ற சங்கப் புலவரும் பாடியுள்ளார்.  இவ்வாறாகத் தமிழ் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும்,  தொல்லியல் மேட்டின் பரப்பளவின் அடிப்படையிலும் கீழடியருகே புதைந்துள்ள நகரத்தின் பெயர் “கூடல் என்ற மதுரை” என்பது தெளிவாகிறது.

            இந்தக் கருத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அகரத்தில் கிடைக்கப் பெற்றுள்ள சுடுமண்ணால் செய்யப்பெற்றுள்ள பெண்ணின் முக அமைப்பும் அலங்காரமும், அன்னை மீனாட்சியின் முகச்சாயலையும் அலக்காரத்தையும் ஒத்துள்ளது.  இன்றைய மதுரை மாநகரின் வாஸ்து இலக்கணத்தைக் கருத்திற் கொண்டால், இந்தச் சுடுமண் பொம்மை உருவம் கிடைக்கப் பெற்றுள்ள அகரத்திற்குக் கீழே கூடல்நகரின் அரண்மனை புதையுண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

            சூழியம் விழுங்கு சிறு கொண்டையுடன் அன்னை தடாதகைப்பிராட்டி மலையத்துவச பாண்டியனின் வேள்விக்குண்டத்தில் தோன்றி இந்தப் பாரததேசம் முழுமையும் வென்று ஆண்டாள்.  அன்னை மீனாட்சியின் முக அமைப்பை ஒத்துள்ள, சூழியம் விழுங்கு சிறுகொண்டையுடைய சுடுமண் உருவம் அகரத்தில் அகழாய்வுக் குழியிலிருந்து தோன்றியுள்ளது.  இதனால், அன்னை மீனாட்சியின் அம்சமாக மதுரையில் தோன்றும் பெண் ஒருத்தி அகண்டபாரதத்தை ஆளப்போவது உறுதி என்றாகிறது. இது மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு ஆகும். 

கீழடியில் கிடைப்பனவும் கிடைக்காதனவும்    

            கீழடியருகே “மணலூர்” உள்ளது.  இந்த ஊரின் பண்டைய பெயர் “மணவூர்” ஆகும். இந்த மணவூரைத் தலைநகராகக் கொண்டு “குலசேகரபாண்டியன்” ஆண்டு வந்துள்ளான்.  அவன் மணவூருக்கு மேற்கே இருந்த கடம்பவனத்தை அழித்து தற்போதுள்ள மதுரையை மீட்டுருவாக்கம் செய்து, மணவூரில் வாழ்ந்த மக்களையெல்லாம் மதுரையில் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.  கீழடியருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது குலசேகரபாண்டியனால் “கைவிடப்பட்ட தலைநகரமாகும்”.  இங்கிருந்த மக்கள் அனைவரும் இப்போதுள்ள மதுரைக்குக் குடிபெயர்ந்து செல்லும்போது,  அவர்களது வழிபாட்டுப் பொருட்களையும், புழங்கு பொருட்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.  இதனால், கீழடி அகழாய்வில் பண்டைய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த,  உபயோகித்துக் கொண்டிருந்த எந்தவொரு பொருளும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.  மாறாக, தொலைந்துபோன, உடைந்து போன அல்லது கைவிடப்பட்ட பொருட்கள் மட்டுமே  அகழாய்வில் கிடைக்கும்.  

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்,

ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.

மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

28 அ, குருநாதர் கோயில் தெரு, கோட்டையூர் 630106, சிவகங்கை மாவட்டம்.

அலைபேசி 834 826 6418, பகிரி +91 94435 01912

மின்னஞ்சல் - kalairajan26@gmail.com


 

கற்றவை -

 1)  https://www.dinamalar.com/news_detail.asp?id=2803206 

 ஜூலை 16, 2021  01:29

------------------------------------------------------------------

 2) திருவிளையாடற் புராணம்  

பாடல் வரிசை எண் 533

நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக்

கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்

தைதவிழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்

மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

பாடல் வரிசை எண்  534.

விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை

வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்

கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை

சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப.         

பாடல் வரிசை எண்  535.

தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி

ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன

வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி

வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால.

பாடல் வரிசை எண்  536.

சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ்

பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப

வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை

சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட.

பாடல் வரிசை எண்  537.

தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல்

முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர் பெண்

பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள்

எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள்.

----------------------------

பாடல் வரிசை எண் 2836.

சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம்

வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்

காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும்

ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.

---------------------------

கொண்டை  என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகள் -

1) செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே - பரி 9/43

2) புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை/எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட - பரி  24/51,52

3) கொண்டை கூழை தண் தழை கடைசியர் - புறம் 61/1

(நன்றி - http://tamilconcordance.in/SANG-18A.html)


 

சூழியம் விழுங்கு சிறு கொண்டை யுடைய சுடுமண் உருவ பொம்மை.  கூடல் மாநகரின் அரண்மனை இருந்திருக்கலாம் என்று கருதப்படும் இடத்தில் கிடைத்துள்ளது.


சூழியம் விழுங்கு கொண்டையுடன் அருள்மிகு மதுரை மீனாட்சியம்மன்  அருளாட்சி செய்யும் அற்புதக் காட்சி.





No comments:

Post a Comment