Tuesday 18 August 2020

கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும்.

 கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும்

இன்றைய தினமலரில் என் பார்வை -

https://www.dinamalar.com/news_detail.asp?id=2596936

தென்மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகளே நடக்காதிருந்த நிலையில், மதுரைக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் கீழடி மணலுார் கண்மாயை அடுத்துள்ள தென்னந்தோப்பில் தொல்லியல் ஆய்வை முதன்முதலாக மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மிகவும் தொன்மையான 2600 வருடங்களுக்கு முற்பட்ட நகர நாகரிகம் ஒன்றைத் தோண்டிக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்தார்.கீழடியில் பூமிக்குள் புதைந்துள்ள தமிழரின் தொன்மையான நகரைக் கண்டு உலகமே வியந்தது.அமர்நாத் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல்துறையினர் பள்ளிச்சந்தை கொந்தகை, மணலுார், அகரம் போன்ற கிராமங்களிலும் தொடர்ந்து அகழாய்வு செய்து வருகின்றனர்.

தமிழரின் தொன்மையான நகரநாகரிகத்தை உலகறியச் செய்த மத்திய, மாநிலத் தொல்லியல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

கிடைத்தன -   கீழடி அகழாய்வில் சங்கத்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், மனிதரின் மண்டையோடுகள், குழந்தைகளின் எலும்புகள், மிகப் பெரிய விலங்கின் எலும்பு, நத்தை ஓடுகள், நாணயங்கள், பன்றிச் சின்னம் பொறிக்கப்பட்ட பவள முத்திரை, சுடுமண்ணாலான மனிதஉருவங்கள், சுடுமண்ணாலான விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், தங்கக் காதணிகள், வளையல்கள், பிற அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு, இரும்பு ஆயுதங்கள், செம்பு ஆயுதங்கள், சுடுமண்ணாலான தண்ணீர்த் துாம்புகள், மிக நீண்ட செங்கல் கட்டுமானங்கள் என எண்ணற்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. ரோம் நாட்டில் கி.மு. 2ம் நுாற்றாண்டில் புழக்கத்தில் இருந்த 'அரிட்டைன் பானை ஓடும்' கிடைத்திருக்கிறது.கீழடியில் கிடைத்துள்ள பொருட்களில் 3 பொருட்கள் முக்கியமானவை.

வழிபாட்டில் இருந்தவையா -  ஒன்று சுடுமண்ணால் செய்யபெற்ற கோரைப் பற்களுடன் காதுகள்வரை அகண்ட வாயை உடைய உருவபொம்மை. மற்றொன்று கழுத்தில் மாலையணிந்த மாட்டின் தலை. மூன்றாவது பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பவளம். இந்த மூன்று பொருட்களும் வழிபாட்டில் இருந்தவையா? என்பதை உறுதியாகச் சொல்ல இயவில்லை என்கின்றனர்.

இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “இந்த நகர நாகரிகத்தில் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடுகள்தான் இருந்தன. மதங்கள் கிடையாது. அந்த காலகட்டத்தில் இயற்கையைக் கண்டுதான் மனிதன் பயந்தான். ஆகவே இயற்கையை வழிபட்டான். வழிபாட்டிற்கான உருவங்கள் கிடைக்காது” என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றனர்.

காவல் தெய்வம் -  நீலிபன்றி உருவம் பொறிக்கப்பட்ட பவளத்தைச் சூதுபவளம் என்று குறிப்பிடுகின்றனர்.மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஐயங்கள் எழுகின்றன.1. கோரைப்பற்களுடன் காதுகள்வரை வாய் அகன்ற உருவம் எதைக் குறிக்கிறது. இயற்கையில் இப்படியொரு உருவம் உள்ளதா. சுடுமண்ணால் அழகிய மனிதத் தலையை செய்திட்ட பழந்தமிழர் எதற்காக இவ்வளவு அகோரமான உருவத்தைச் செய்துள்ளனர்.

இந்த உருவம் எதைக் குறிக்கிறது. இந்த உருவத்திற்கும் இயற்கை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு. இது மதுரையின் காவல்தெய்வமான நீலி யின் உருவம் இல்லையா.

2. கழுத்தில் மாலையணிந்த மாட்டின் உருவம் நந்திவழிபாட்டுடன் தொடர்புடையது இல்லையா. அல்லது தமிழரின் ஏறு தழுவுதல் மற்றும் சல்லிக்கட்டு விளையாட்டுடன் தொடர்புடைய இல்லையா.

3. பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றியின் உருவத்திற்கும் சூதுக்கும் என்ன தொடர்பு. மதுரையில் சிவபெருமான் பன்றி அவதாரம் எடுத்துத் திருவிளையாடல் செய்தார். பன்றி வம்சத்தினர் 12 பேர் அமைச்சர்களாய் இருந்து பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினர் என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

இந்தக் கதைகளுக்கும் பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றி உருவத்திற்கும் தொடர்பு இல்லையா. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தானே கீழடியில் வழிபாட்டுப் பொருட்களே கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல இயலும்.

மணவூரிலிருந்து மதுரைக்கு -  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மணலுார் உள்ளது.மணலுார் மிகவும் தொன்மையான ஊராகும். மணலுாரை பெருமணலுார் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த ஊரை மணலுார் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இந்த ஊரின் பழைய பெயர் மணவூர் என்கிறது பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம்.

இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலுாருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.மதுரைக்கு அருகே வடக்குதிசையில் மணவூர் இருந்தது என்றொரு செய்தியையும் திருவிளையாடற் புராணம் பதிவு செய்துள்ளது.

கிடைக்கவே கிடைக்காது -  கீழடிக்குக் கீழே எங்கு தோண்டித்தோண்டிப் பார்த்தாலும் வழிபாடு தொடர்பான பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது. ஏனென்றால் இந்தத் தொன்மையான நகர் அங்கு வசித்த மக்களால் கைவிடப்பட்ட நகரமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்று புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரையில் குடியேறியுள்ளனர். மதுரைக்கு குடிபெயர்ந்து செல்லும் போது, அவர்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றிருப்பர்.

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வழிபாட்டுப் பொருட்களே தலையானவை. எனவே வழிபாட்டில் உள்ள பொருட்களையே முதலாவதாகத் தலையில் துாக்கிவைத்து எடுத்துச் சென்றிருப்பார்கள். கீழடியில் மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களால் தொலைக்கப்பட்ட, அல்லது கைவிடப்பட்ட பொருட்களே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டு வருகின்றன.

வழிபாட்டுப் பொருட்கள் தொலைந்து போயிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தொலைந்து போயிருந்தாலும், அவற்றை அந்த மக்கள் அப்போதே தேடிக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள். மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் போது வழிபட்ட கோயில்கள், தெய்வ கோட்டங்களைக் கைவிட்டுச் சென்றிருப்பர். எனவே கோயில் கட்டுமானங்களின் எச்சங்கள் தொல்லியல் அகழாய்வில் கிடைத்திட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

புதையுண்டுள்ள சிவாலயம் -  அகழாய்வு செய்த இடத்திற்கு நேர் கிழக்கே 500 மீட்டர் தொலைவில் ஒரு சிவாலயம் மணலுார் கண்மாய்க்கரையில் புதையுண்டுள்ளது. இங்கு மிகப்பெரிய நந்தியையும், சிதைவுபட்டுள்ள சுற்றுச் சுவரையும் இன்றும் காணலாம். இந்த குறிப்பிட்ட இடத்தை அகழாய்வு செய்யாமல் சங்கத் தமிழர் இயற்கை வழிபாடுதான் செய்தார்கள், தெய்வ வழிபாடு செய்ய வில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

திருவிளையாடற் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ள தொல்பொருட்களுடன் ஏன் பொருத்திப் பார்க்க மறுக்கின்றனர்? தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை திருவிளையாடற் புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர். புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன. சங்கத் தமிழரின் தொன்மையையும், திருவிளையாடற் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

முனைவர். நா.ரா.கி.காளைராசன்

அமைப்பாளர், 

திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம், 82482 66418

https://www.dinamalar.com/news_detail.asp?id=2596936

என் பார்வையைத் தமிழ்மக்களிடம் கொண்டு சேர்த்த தினமலருக்கு நன்றி.

No comments:

Post a Comment