Thursday, 29 August 2019

கீழடி (ஆலவாய் என்ற மதுரை) அழிந்தது எவ்வாறு?

கீழடி (குலசேகரபாண்டியன் ஆண்ட 
ஆலவாய் என்ற மதுரை) 
அழிந்தது எவ்வாறு?

கழிவு நீர் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும்.



கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.
சில அறிஞர்கள் வைகை ஆற்றுப் பெருக்கால் அழிந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?
உள்ளது.

புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவுநீர்க் குழாயின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக் கொண்டு, இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா? அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா? என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.
புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது. 

எனவே கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவூநீர்க்குழாய் அதனுடைய இருப்பிடத்திற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டிருந்தால்,  இந்த நகரம் கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்கே கிடக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
மாறாக, இந்தக் கழிவுநீர்க் குழாயானது அதனுடைய இருப்பிடத்திற்குக்  கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இந்த நகரமானது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இந்தக் கழிவூநீர்க் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும் இந்தத் தொன்மையான ஆலவாய் நகரம் எப்படி அழிந்தது என்று !

அன்பன்
காசீசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன்
ஆவணி 12 (29.08.2019) விழாயன் கிழமை

பார்வை  - திஇந்து நாளிதழ் செய்தி.
திருப்புவனம்  - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.  2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/29/large/513341.jpg
இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
https://www.hindutamil.in/news/tamilnadu/513341-discovery-of-underground-hot-tub-1.html

Tuesday, 6 August 2019

தமிழரும் துருக்கரும்

திருவிளையாடல் புராணத்தில் 
‘துருக்கர் (துலுக்கர்)’என்ற சொல் 
உள்ள பாடல்கள்

திருவிளையாடற் புராணத்தில் மூன்று பாடல்களில் துருக்கர் (துலுக்கர்) பற்றிய செய்திகள் உள்ளன.



1) மாணிக்கம் விற்ற படலத்தில் (படலம் எண் 17), சிவபெருமான் விற்கக் கொண்டு வந்த பல்வேறுவிதமான உயர்ரகக் கற்கள் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.  முட்கள் பொருந்திய நாளத்தினையுடைய தாமரையின் மலர்போலும் கண்களையுடைய திருமால், மோகினிப் பெண் வடிவாகி ஓட,  அழகிய பாதி மதியினைச் சடையிற் சூடிய சிவபெருமான், ஒரு திருவிளையாட்டாக, மந்தரமலையின் எல்லையளவாக, துள் அரி ஏறு போலத் தொடர்ந்து சென்று, பழிப்பில்லாத சிவந்த தீயாகிய இந்திரியத்தைச் சிந்தினான்.  அப்போது,  தூய அவ்விந்தில் ஐயன் (ஐயனார்) என்பான், காட்டிலுறையும் பரிவார தெய்வங்களோடும் வந்தனன்; அந்த விந்தினை, வலமிக்க கருடன் கௌவி, கடலிலும் துருக்க நாட்டிலும் பரவ விடுத்தது,  அதனால், கலுழப் பச்சை கற்கள் தோன்றின என்கிறது திருவிளையாடற் புராணம்.

மாணிக்கம் விற்ற படலம் (பாடல் எண் 1259)
அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான 
வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து 
துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும் 
பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை”.
-------------------------------------------------------------------

2) மெய்க் காட்டிட்ட படலத்தில் (படலம் எண் 30) குலபூடணபாண்டியனக்குச் சுந்தரசாமந்தன் என்னும் பல்வேறு நாட்டிற்கும் ஓலை அனுப்பிப் படை திரட்டிய செய்து கூறப்படுகின்றது.  அதில் துருக்க நாட்டிற்கும் ஓலை அனுப்பி செய்தி பதிவு செய்யப்பெற்றுள்ளது.

மெய்க் காட்டிட்ட படலம் ( பாடல் எண் 1677)
எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை 
எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை 
எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை 
எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான்”.
-------------------------------------------------------------------


3)  சுந்தரப்பேர் அம்பு எய்த படலத்தில் (படலம் எண் 50)  வங்கிய சேகர பாண்டியன் மீது விக்கிரமசோழன் படையெடுத்து வந்தான்.  விக்கிரமசோழனுடைய படையில், போர்த்துணையாகி வந்த, வடக்கே உள்ள நாட்டிலுள்ளாராகிய துருக்கரும் ஒட்டியரும், இவரொழிந்த ஏனையோரும் இருந்துள்ளனர். அவர்கள் சோழனைச் சூழ்ந்து நின்று,  “நிற்பாயாக என்று கூறிச் சினந்து வைது,  நீ போருக்குத் தோற்றுப் போகின்றாய்;  இது உனது கருத்தானால், ஆண் தன்மை யாரிடத்தது; உனது பெருமை என்னாகும்” என்று சோழனைப் பழித்த செய்தி பதிவு செய்யப் பெற்றுள்ளது.

சுந்தரப்பேர் அம்பு எய்த படலம் 2373.
செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார் 
துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில் என்று 
உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது உன் 
கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம் என்னாம்”.
-------------------------------------------------------------------

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆடி 21 (06.08.2019) செவ்வாய் கிழமை.