Saturday, 25 February 2023

ஐராவதநல்லூர்

மதுரை 

ஐராவதநல்லூரில் வழிபாடு செய்தால்

தலைக்கு வருவன தலைப்பாகையோடு போகும்

 

(அருள்மிகு ஐராவதம் விநாயகர் கோயில்)

(அருள்மிகு ஐராவதம் விநாயகர் கோயில்)


(அருள்மிகு ஐராவதேசுவரர்)

(துர்வாச முனிவர் சிவலிங்க வழிபாடு செய்து சிவபெருமானிடம் இருந்து மலர் பெறுவதும், அந்த மலரை இந்திரனுக்கு அளிப்பதும்)

(ஐராவதம் ஐராவத கணேசரையும் ஐராவதேசுவரரையும் வணங்குதல்)

திருவிளையாடல் புராணம் -  சிவபெருமானது 64 திருவிளையாடல்களில், மதுரைக்காண்டத்தில் 18 படலங்கள் உள்ளன. கூடற்காண்டத்தில் 30 படலங்கள் உள்ளன.  திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்கள் உள்ளன.

மதுரைக் காண்டத்தில். இந்திரன் பழி தீர்த்த படலம் முதலாவது படலமாகும்.  இரண்டாவது படலமாக வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் இடம் பெற்றுள்ளது.  இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது.

கதைச் சுருக்கம் -  இந்திரன் சிவலிங்கத்தினைப் பூசை செய்து விசுவரூபனை கொன்ற பழியிலிருந்து தப்பித்தபின், இந்திரலோகத்திற்கு தேவர்களுடன் சென்றார்.   அங்கே இந்திரனுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.   இதனால் இந்திரன் மிகவும் மகிழ்ந்து தலைக்கணம் கொண்டான்.  அவனது வாகனமான ஐராவதமும் மிகவும் பெருமிதம் கொண்டு இருந்தது.

துர்வாசரின் சாபம் - அந்நாளில், துர்வாச முனிவர் சிவலிங்க பூசை செய்தார்.  அவரது பூசையை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தன் சடைமுடியிலிருந்த தாமரை மலர் ஒன்றை எடுத்துக் கொடுத்து ஆசிர்வதித்தார்.  அந்த மலரைத் தன் கமண்டலத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.   இந்திரனின் வெற்றியை வாழ்த்திப் போற்றும் வகையில் இந்திரனிடம் அந்த மலரை முனிவர் கொடுத்தார்.    வெற்றிச் செருக்கில் இருந்த இந்திரன் அந்த மலரை வாங்கி அவனது யானையான ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்தான்.   ஆனால் ஐராவதமோ அதன் துதிக்கையால் அந்த மலரை எடுத்துக் கீழே போடு அதன் காலால் நசுக்கி விட்டது. 

இதைக் கண்ட துர்வாசர் மிகவும் கோபம் கொண்டு “ உன் தலை பாண்டிய மன்னனின் சக்கராயுதத்தால் துண்டிக்கப்படட்டும்,  ஐரவாதம் அதனுடைய வெள்ளை நிறத்தையும் நான்கு தந்தங்களையும் இழந்து காட்டு யானையாக மாறிப் போகட்டும்” என்று சாபம் இட்டார்.

இது கேட்ட இந்திரன் பெரிதும் வருந்தி,  துர்வாசரிடம் “ஐம்புலன்களையும் வென்ற முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும், எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள்” என்று இந்திரன் வேண்டினான்.

சாப விமோசனம் - இந்திரனது பணிவு கண்டு கோபம் நீங்கிய முனிவர், “ உன் தலைக்கு வரும் ஆபத்து உன் முடிக்கு ஆகட்டும்,  காட்டுயானையாகி நூறாண்டு கழிந்தபின் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் பெருங் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறட்டும்” என்று கூறினார்.

சோமசுந்தரேசுவரர் அருளுதல் - முனிவரின் சாபத்தால் ஐராவதம் அதனுடைய வெண்மைநிறம் இழந்து காட்டுயானையாக மாறிப் பூலோகத்தில் காடுகளில் சுற்றித் திரிந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியில் கடம்ப வனத்தில் பொற்றாமரைக் குளத்தினையும், சொக்கநாதரையும் கண்டு பொற்றாமரைத் தீர்த்த நீரினைக் கொண்டு அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது.

ஐராவதத்தின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சோமசுந்தரேசுவரர் அதற்குக் காட்சி அருளி “உனக்கு வேண்டிய வரம் கேள்”  என்றார்.   அது கேட்ட ஐராவதம் பெரிதும் மகிழ்ந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரைப் பணிந்து, “தங்களது விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகித் இந்த இந்திர விமானத்தைத் தாங்கவேண்டும், தங்களைப் பிரியாது இருக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டது.  அதற்கு சொக்கநாதரும் “இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்” என்று கூறி பல வரங்களை அருளினார்.  வெள்ளையானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும், ஐராவதேச்சுரர் லிங்கத்திருமேனியையும், ஐராவத விநாயகப் பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்துவர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை “வருவேன்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது.  பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும், அவ்வூரில் இந்திரேச்சுரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது.  இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று தேவலோகம் சென்றது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் -  இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்ற வெள்ளையானை வழிபட்ட ஐராவதேச்சுரரை நாமும் வழிபடுவோம்.  இந்திரனின் தலைக்குவந்த ஆபத்து அவனது தலையிலிருந்த கீரிடத்துடன் நீங்கியது போன்று, சாபம் நீங்கி ஐராவதம் பொழிவு பெற்றது போன்று, நமது தீவினைகளும் இறையருளால் நீங்கப் பெற்று, இம்மையில் எல்லா வளங்களும் பெற்று, மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவோம்.  

தல இருப்பிடம் -  மதுரை வண்டியூர் தெப்பக்குளத்திற்கு அருகே 1 கி.மீ. தொலைவில் ஐராவதநல்லூர் உள்ளது.

----------------------------------------------------

ஐராவதம் ஐராவதத் தீர்த்தத்தில் நீராடி, ஐராவத கணபதியை வணங்கி, ஐராவதேசுவரரை பணிந்த நிகழ்வைக் குறிப்பிடும் திருவிளையாடல் புராணம் 

பாடல் எண் 467
விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை
    மேற்றிசை யடைந்துதன் பெயரால்
தடமுமற் றதன்பா லரனையுங் கணேசன்
     றன்னையுங் கண்டருச் சனைசெய்
திடையறா வன்புந் தானுமங் கிருக்கு
     மெல்லையிச் செய்திகேட் டருள்கூர்
கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
     களிற்றினைக் கொணர்கென விடுத்தான்.

விடைகொடு வணங்கி ஏகும் வெள்ளாணை
    மேல் திசை  அடைந்து தன் பெயரால்
தடமும் மற்று அதன் பால் ஆனையும் கணேசன் 
    தன்னையும் கண்டு அருச்சனை செய்து
இடையறா அன்பும் தானும் அங்கு இருக்கும்
    எல்லை இச் செய்தி கேட்டு அருள் கூர்
கடவுளர் பெருமான் உழையரை விளித்து எம்
    களிற்றினைக் கொணர்க என விடுத்தான்.

பொருள் -  விடை பெற்று வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேற்குத் திக்கினை யடைந்து,  தனது பெயரால், ஓர் பொய்கையினையும், அப் பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும் பிரதிட்டை செய்து,  அருச்சித்து,  நீங்காத அன்புந் தானுமாக அங்கிருக்கும் பொழுதில், இச் செய்தியைக் கேள்வியுற்று, கருணைமிக்க தேவேந்திரன், ஏவலாளரை அழைத்து,  எமது யானையைக் கொண்டு வாருமென அனுப்பினான்.

-------------------

பாடல் எண் 468
வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
     வருவலென் றெழுந்துகீழ்த் திசையோர்
எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண்*
     டிந்திரேச் சுரனென+விறைவன்
றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத்
     தூயபூ சனைசெய்தங் கிருப்பக்
கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங்
     களிறுவந் திலதெனப் பின்னும்.


வல்லை வந்து அழைத்தார் தம்மை முன் போக்கி
                   வருவல் என்று எழுந்து கீழ்த் திசை ஓர்
எல்லை வந்து ஓர் ஊர் தன் பெயரால் கண்டு
                   இந்திரரேச் சுரன் என இறைவன்
தொல்லை வண் பெயரால் ஒன்று கண்டு அரனைத்
                    தூயபூசனை செய்து அங்கு இருப்பக்
கல்லை வன் சிறகு தடிந்தவன் இன்னும் களிறு
                    வந்திலது எனப் பின்னும்.

பொருள் - விரைந்து வந்து அழைத்தவர்களை, வருவேன் என்று கூறி, முன்னே போகச் செய்து, அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓர் இடத்தை எய்தி, ஓர் ஊர் தன் பெயரால் அமைத்து,  தன் தலைவனது பழமையான அழகிய பெயரால்,  இந்திரேச்சுரன் என்று ஓர் சிவலிங்கமமைத்து,  அவ்விறைவனைத் தூய்மையான பூசனை செய்து கொண்டு அங்கேயே இருக்க, மலைகளைச் சிறகின் கண் வெட்டியவனாகிய இந்திரன்,  இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும்.

------------------------------------

பாடல் எண் 469.

மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப
     வானடைந் திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட்
     புன்கணோ யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு
     களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ
     மினிதுவீற் றிருந்தது மாதோ.


மனத்தினும் கடிய தூதரை விடுப்ப
    வான் அடைந்து   இறைவனை வணங்கிப்
புனத்தினும் கடிய கல்லினும் பன்னாள்
    புன்கணோ உற வரு சாபம்
கனத்தினும் கரிய கண்டனைக் கண்டு
    களைந்ததும் கிளந்து இக் கயத்தின்
இனத்தினும் கழிந்த தெய்வத வேழம்
    இனிது வீற்று இருந்தது மாதோ.

பொருள் -  மனத்தினை விட விரைந்து செலவினையுடைய தூதர்களை அனுப்ப (அவர்களோடும்),  விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி,  காட்டிலும் வலிய மலைகளிலும்,  பலநாடகள் வரை, துன்ப நோயானது மிகவந்த சாபத்தினை (நுகர்ந்ததும்), முகிலினுங் கரிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை, தரிசித்து,  (அச்சாபத்தைப்) போக்கியதும், கூறி, எண்டிசை யானைகளாகிய இனத்தினும், மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளை யானையானது,  இனிதாக வீற்றிருந்தது .

------------------------------

பாடல் எண் 470

குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங்
     குடைந்தயி ராவத கணேசக்
கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக்
     கடவுளைப் பணிந்தவர்
சாபத் 
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர்
     சுராதிபன் களிறுசென் னெறிபோய்
இடர்கெட வையை படிந்துதென் கரையி
     லிந்திரேச் சுரனடி பணிவார்.  
470.

குடவயின் அயிரா வதப் பெரும் தீர்த்தம் குடைந்து அயிராவத கணேசக்
கடவுளைத் தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய்
இடர் கெட வைகை படிந்து தென் கரையில் இந்திரேச் சுரன் அடி பணிவோர்.

பொருள் - மேற்குத் திசையிலுள்ள, பெருமை பொருந்திய அயிராவத தீர்த்தத்தில் நீராடி, அயிராவத விநாயகக் கடவுளை வணங்கி, அயிராவதேச்சுரப் பெருமானைத் தொழுதவர்கள், சாபத் தொடர்ச்சியினின்றும், தீவினைத் தொடர்ச்சியி னின்றும், நீங்குவர்; தேவேந்திரனது வெள்ளையானையானது, சென்ற வழியிலே சென்று,  துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி, அதன் தென்கரையி லெழுந்தருளி யிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவர்கள் 


471.

இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி
அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்.

இம்மையில் அறமுன் மூன்றால் எய்திய பயனை எய்தி
அம்மையின் மகவான் நீர் ஏழ் அரும் பதம் அளவும் வானில்
வெம்மை இல் போகம் மூழ்கி வெறுப்பு வந்து அடைய  உள்ளச்
செம்மையில் விளை பேரின்ப சிவகதி செல்வார் ஆவார்.

பொருள் -   இப்பிறவியில், அற முதலிய மூன்றானும் வரும்பயனை நுகர்ந்து,  மறுமையில்,  பதி னான்கு இந்திரர்களின் அரிய காலம் வரையும், வெப்பமில்லாத (குளிர்ந்த) போகத்தில் திளைத்து, (பின் அதில்) உவர்ப்புத் தோன்ற, மனத்தூய்மையில் விளைகின்ற,  பேரின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வத்தையுடையவராவார்

---------------------------------------

நன்றி

1) படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தப் படங்களை இணையத்தில் பதிவு செய்து வைத்துள்ள அன்பர்களுக்கு நன்றி.

2) திருவிளையாடல் புராணம் பாடல்களைப் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ள “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு” நன்றி.

No comments:

Post a Comment