கச்சியப்ப சிவச்சாரிய சுவாமிகள்
அருளிச் செய்தகந்தபுராணத்தில் 'காசிப' முனிவர் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
508.
மறை தேவரும் வசிட்டன் மரீசிமிகக்
குறி தாம் முனியத் திரி கோதமன் நல்
அறிவால் உயர் காசிபன் ஆதியராம்
துறவோர் தமது ஆற்றல் தொலைத்திலனோ.
1785.
வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
ஆறு கோடியது ஆகிய அவுணருக்கு அரசன்
மாறு இல் மங்கல கேசி ஆம் அரக்கியை மணந்து
பேறது ஆகவே சுரசை என்று ஒரு மகள் பெற்றான்.
1791.
வாச மாமலர் மடந்தையும் வந்து அடி வணங்கப்
பேச ஒணாதது ஓர் பேர் அழகு உருக் கொடு பெயர்ந்து
காசிபன் தனை அடைந்து நின் வல்லபம் காட்டி
ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில்.
1795.
மயிலை அன்னவள் அவுணர் தம் மன்னற்கும் இனைய
செயலை ஓதியே அவன் விடையும் கொடு சென்று
கயிலை என்ன நீறு ஆடியே காசிபன் இருந்து
பயிலும் நோன்பு உடை எல்லையை நாடியே படர்ந்தாள்.
1799.
சென்ற மாயை அக் காசிபன் இருக்கையில் திருவாழ்
மன்றல் வாவியும் தடங்களும் சோலையும் மணிசெய்
குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமும்
தன் தன் ஆணையால் துண் எனச் சூழ்தரச் சமைத்தாள்.
1800.
இனைத்தெலாம் அவண் வருதலும் எந்தை தன் அடியை
மனத்தினில் கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்
தனித்து நோற்றிடும் காசிபன் புகுந்த அத் தகைமை
அனைத்தும் நோக்கி ஈது என்கொல் என்று அதிசயம் அடைந்தான்.
1849.
யாது நின் குலம் யாது நின் வாழ் பதி
யாது நின் பெயர் யார் உனைத் தந்தவர்
ஓதுவாய் என்று உரைத்தனன் உள்ளுறு
காதலான் மிகு காசிபன் என்பவே.
1857.
மற்று இவ் வண்ணம் மயில் புரை சாயலாள்
சொற்ற காலை அனையவள் சூழ்ச்சியை
முற்றும் ஓர்ந்து முதிர் கலை யாவையும்
கற்று உணர்ந்திடு காசிபன் கூறுவான்.
1860.
ஈதலான் மற்று எனக்கு ஒரு பேறு இலை
ஆதலால் உனையே அடைந்தேன் எனக்
காதல் மாதும் அக் காசிபற் கண் உறீஇ
ஓதலாம் பரிசு ஒன்றை உணர்த்துவாள்.
1887.
தந்தை காசிபன் என்று ஓதும் தவமுனி அவன் பால் சார
வந்துளாள் யாயே அன்றோ மற்று இவர் தலைப் பெய்கின்ற
முந்து உறு புணர்ச்சி காண்டல் முறை கொலோ புதல்வற்கு என்னாச்
சிந்தை செய்து அகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான்.
1903.
ஆனதோர் காலையில் அமரர் தம்மையும்
தானவர் தம்மையும் தந்த காசிபன்
வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா
மேனியது அடைதலும் வெதும்பினான் அரோ.
1913.
இனையன மருட்கையால் இசைத்த காசிப
முனிவரன் என்பவன் முன்னை மாயையை
நினைபவன் ஆகியே நெடிது காதலால்
அனையவள் தனை விளித்து அரற்றல் மேயினான்.
1922.
கந்தார் மொய்ம்பில் காசிபன் என்போன் கடிது அம்கண்
வந்தாள் செய்கை காணுதலோடு மகிழ்வு எய்தி
அந்தா உய்ந்தேன் யான் என மின்கண்டு அலர்கின்ற
கொந்தார் கண்டல் போல் நகையொடும் குலவு உற்றான்.
1931.
புல்லலும் எதிர் தழீஇப் புகரில் காசிபன்
தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்
வல்லை இல் வாங்குறு மரபில் அன்னவன்
மெல் இதழ் அமிர் தினை மிசைதல் மேயினாள்.
1960.
நீங்கிய சூர் முதல் நெறியின் ஏகியே
ஆங்கு அவர் அடி தொழுது அருள் செய் மேலையீர்
யாங்கள் செய்கின்றது என் இசைமின் நீர் என
ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான்.
2270.
அன்னது சரதமே அறிதிர் ஆதலால்
இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பு என
முன்னுறு காசிப முனிவன் செப்பலும்
நல் நய மாயவள் நகைத்துக் கூறுவாள்.
2301.
ஆசிகள் செய்து நின் அரிய நோன்பு ஒரீஇக்
காசிப மெலிவது கழறுக என்றலும்
பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டு உளம்
கூசினன் அவன் மனம் கொள்ளத் தேற்றுவான்.
2308.
மாறு அகல் நான்முகன் வாய்மை தேர்தலும்
தேறினன் மையல் நோய் தீர்ந்து காசிபன்
ஏறு அமர் கடவுளை இதயத்து உன்னியே
வீறு ஒடு நோற்றனன் வினையின் நீங்குவான்.
2310.
காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்
ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும்
பேசினம் அங்கு அவர் பெற்ற பேற்றினை
ஈசனது அருளினால் இனி இயம்புவாம்.
2389.
காலம் எண் இல தவம் புரி காசிப முனிவன்
பாலன் ஈண்டையில் வலியினோர் மகம் அது பயில
ஏல நீடு தீ உலகு எலாம் உருக்கியது என்னில்
மேலவன் செய்யும் பரிசு எலாம் யாவரே விதிப்பார்.
2404.
மாயை தரும் புதல்வா மா தவம் செய் காசிபற்கு
நேயம் உருகா நிருதர் குலத்து இறைவா
காயம் உடன் நின்னை யான் காணேனால் எங்கு ஒளித்தாய்
தீய மகம் பல நாள் செய்து பெற்ற பேறு இதுவோ.
2431.
தந்தை ஆவான் காசிபனே தாயும் மாயை தான் என்பான்
மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலர் உண்டால்
எம் தம் அன்னை பணி தன்னால் யாங்கள் ஈசன் தனக்காக
இந்த வனத்தில் மூவரும் இவ் வேள்வி தன்னை இயற்றினமே.
2467.
உன்னி உள்ளத்து உணர் உறு காசிபன்
தன்னின் வந்த தனயரை நோக்கியே
முன்னை நும் கண் முதல் குருப் பார்க்கவன்
அன்னவன் கண் அடைகுதிர் அன்பினீர்.
2476.
ஓங்கு வேள்வி உலப்புறச் செய்ததும்
ஆங்கனம் வந்து அரன் அருள் செய்ததும்
தாங்கரும் வளம் தந்ததும் காசிபன்
பாங்கர் வந்த பரிசும் பகர்ந்து மேல்.
2632.
அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கு ஒர் தூது எய்தி நம்தம்
கடி நகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர்
கொடிய வெம் சேனை என்னக் கூற்று எனும் கடவுள் கேளா
இடி உறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான்.
2688.
வாசவன் வளத்தை எல்லாம் அவுணர்கள் வவ்விச் செல்லப்
பேசரு மகிழ்ச்சி கொண்டு பின் அவர் பாங்கு ஏகக்
காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகம் சூழ
ஓசை கொள் மறைகள் ஆர்க்கும் உயர் மகலோகம் புக்கான்.
2695.
காதலான் மிகு காசிபன் மைந்தன்
ஆதலால் அவுணர்க்கு இறை நின் மூ
தாதையான் சரதம் இது நின் சீர்
ஏதும் என் புகழ் யான் பிறன் அன்றே.
2714.
மாசு அறு பேர் ஒளி மான மீமிசைத்
தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில்
காசிபன் அருள் மகன் கண்டு சேண் இடை
ஈசனை எதிர்ந்து என எதிர் கொண்டு ஏகினான்.
2718.
பங்கம் இல் காசிபன் பன்னி ஆகிய
நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான்
சங்கை அற்று இருந்த தானவரைத் தாங்கினான்
எங்களுக்கு ஓர் துணை என்னும் தன்மையான்.
2780.
கண்டு தானவர் காசிபன் காதலன்
புண்ட ரீகப் பொலன் கழல் தாழ்ந்து எழா
அண்ட ஒணா மகிழ்வால் அடும் தேறலை
உண்டு உளாரின் உளம் களிப்பு எய்தினார்.
3071.
குணப்பெரும் குன்றம் அன்ன கோது இலா அறிவன் இன்ன
புணர்ப்பினை இசைத்தலோடும் புரந்தரன் பொருமல் நீங்கிக்
கணிப்பு இலா மகிழ்ச்சி எய்திக் காசிபன் சிறுவர் கொண்ட
அணிப் பெரும் திருவும் நாடும் அடைந்தனன் போன்று சொல்வான்.
3355.
காசிபன் தரும் கலதி கூற்றுவன்
பாசம் அன்ன கைப் பட்டு விம்மினாள்
வாசவன் தனி மனைவி வெம் கொலைப்
பூசை வாய்ப்படும் புள்ளின் பேடை போல்.
4267.
ஆயதோர் காசிபன் அதிதி தங்கள் பால்
சேயனாய் வந்த ஒரு சிந்தன் போன்று உலாய்த்
தூயவான் புவி எலாம் அளப்பச் சூழ்ந்திடு
மாயனே இவன் என மதிக்கின்றார் சிலர்.
4294.
தாதை ஆகியோன் காசிபன் ஆங்கு அவன் தனயன்
ஆதலால் உனக்கு அமரரைச் சிறை செய்வது அறனோ
வேத மார்க்கமும் பிழைத்தனை சிறு பொருள் விழைந்தாய்
நீதியால் உலகு அளிப்பதே அரசர் தம் நெறியே.
5472.
சீற்றமே தகு காசிபன் மதலை போர் செய்யும்
ஆற்றலார் தமை அடுவன் ஆல் விரைந்து என மதித்துக்
காற்றின் முந்து செல் தேர் இடைக் கடிது வந்து எய்திக்
கூற்றின் வெம் பசி தணிப்பது ஓர் சிலையினைக் குனித்தான்.
5674.
என்று காசிபன் இடந்தனில் வந்தான்
அன்று தான் முதலா அசுரேசன்
வென்றியே கொடு வியப்பொடு இருந்தான்
உன் தன் ஓடு பொருது ஓடினன் இன்றே.
6943.
மைம் மலை இடை விராய் வதிந்த மோட்டுடைக்
கைம் மலை அரற்றியே கவிழ்வ காசிபன்
செம் மலை அரியென நோக்கித் தேம்பியே
விம்மலை எய்தியே வீழ்வது என்னவே.
7523.
துணிப்பு உறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி
தணப்பு அற விடுத்த லோடும் சண்முகன் அவற்றை எல்லாம்
கணைப் பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது செம்மல்
அணிப் படு தோள் மேல் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான்.
7559.
தொடர்ந்து தன் மனத்தில் செல்லும் தொல்லை மால் இரதத்தோடும்
கடந்த பேர் ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோடு இகல் போர் ஆற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத்து அண்டம் போனான்.