Wednesday, 19 January 2022

127 சோகாப்பர் நாகாக்க

 


கி. காளைராசன் to thiruppuvanam

13 Mar 2019, 18:32:44


“நாக்குல சனி” என்பார்கள்.  நாவைக் காக்காவிட்டால் சோகத்தைக் காப்பார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ குற்றமுடைய சொற்களைச் சொல்லி அதனால் துன்பப்படுகின்றனர்.

“யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற் 

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ”

என்கிறது திருக்குறள் (127).  

ஒருமுறை குறள்வடிவில் இருந்த ஒரு முனிவரை ஏளனம் செய்த காரணத்தினால் , மூன்று தேவியருள்  ஒருவரான மகாலெட்சுமி  நேர்ந்த இழுக்குப் பற்றியும், அந்த இழுக்கு எவ்வாறு நீங்கியது என்பது பற்றியும் திருப்பூவணப் புராணத்தில் ஒரு கதை உள்ளது.

வைகுண்டத்திலே, பொன்மண்டபத்தில் சிங்காசனத்திலே, இலக்குமியுடன் திருமால் வீற்றிருக்கிறார்.  அவர் திருமுன்பு வித்தியாதரர் பாடினார். அரம்பை முதலாயினோர் ஆடினார். தேவர் முதலாயினோர் துதித்தனர்.

அதன்பின்னர், இலெட்சுமிதேவி திருவடிப் பணிவிடை செய்யத் திருமால் நித்திரை புரிந்தார். அப் பொழுது,  ஒன்னேமுக்கால் அடி உயரமுடைய வாலகில்லி என்ற குள்ளமான முனிவர் திருமாலைப் பார்க்க வந்தார்.

வந்தரை வாயில்காப்போர் எதிர்சென்று வணங்கி உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தனர்.   வைகுண்டத்தின் உள்ளே போய்ச் சேடியர்களை அழைத்து முனிவர்கள் வரவைத் திருமாலுக்கு விண்ணப்பம் செய்தனர்.

அதனைச் சேடியர்கள் இலெட்சுமிதேவியிடம் தெரிவித்தனர்.  மலைபோன்ற தோள்களை உடைய மாபெரும் திருமேனியை உடைய திருமாலையே அனுதினமும் கண்பவள் இலெட்சுமிதேவி. 

மிகவும் குள்ள உருவமாய் இருந்த வாலகில்லி முனிவரின் உருவத்தைப் பார்த்ததும் இலக்குமிதேவி பெரிதும் நகையாடினள்.  இதனால் முனிவர் பெரிதும் வருந்தித் திருமாலைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டார்.

திருமால் நித்திரைநீங்கி எழுந்து நிகழ்ந்தவைகளை உணர்ந்து கொண்டார்.  இலக்குமியைப் பார்த்து, நீ முனிவரை அவமரியாதை செய்துவிட்டாய் என்று கூறிச் சபித்து விலக்கினர். 

திருமாலின் இந்தச் சாபத்தை எப்படி நீங்குவது எனப் பலவாறும் ஆராய்ந்து பார்த்தார்.  முனிவரின் உருவம் குள்ளமாய் இருப்பதைக் கேலி செய்தது, அறிந்து செய்த பாவம் ஆகும்.

அறிந்து செய்த பாவத்தை நீக்கக்கூடிய திருத்தலம் திருப்பூவணம் ஆகும்.  எனவே இலக்குமிதேவி திருப்பூவண்ம் சேர்ந்து தவஞ் செய்தாள்.

இலக்குமியை விலக்கிய பின்பு திருமால் பயந்து விரைந்து சென்று வாலகில்லி முனிவரைச் சந்தித்து “இலக்குமி செய்த தவறை மறந்து கருணை புரிய வேண்டும்” என்று வேண்டினார்.

அதற்கு முனிவரும் மனமிரங்கி, திருமாலே, 12 ஆண்டுகள் திருமகள் திருப்பூவணத்திலே தவம் செய்து முடித்தவுடன் அவளது பாவம் நீங்கிவிடும். நீ சென்று அவளை அழைத்து வந்து முன்போல் வைகுண்டத்தில் வாழ்வாயாக என்று அருளினார்கள். 

உடனே திருமால் மகிழ்ந்து, "முனிவரே, நீங்கள் என்னைக் காண வைகுண்டம் வந்த காரண யாது?" என்று கேட்டார்.

அதற்கு அம் முனிவர், முனிவர்களாகிய நாங்கள் செய்யும் வேள்வியைத் திருமாலாகிய நீங்கள் காத்தல் வேண்டும் என்றனர். 

அங்ஙனமே முனிவர்கள் வேள்வியைக் காத்து அருளினார்.

12 வருடங்கள் நடைபெற்ற வேள்வியும் திருமாலின் திருவருளாலே சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

வேள்வி முடிந்த பின்பு திருமாலும் திருப்பூவணம் சேர்ந்து இலக்குமி தேவியுடன் சேர்ந்து சென்று சிவலிங்கத்தைப் பூசித்தார்.  இதனால் திருப்பூவணத்தில் சுயம்புலிங்கத்தின் நெற்றியில் திருநாமம் போன்ற அடையாளம் காணப்படும்.  இதனை திரிசூல அடையாளம் என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.  இந்த அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தில் காணலாம்.

திருப்பூவணத்தில் உள்ள சுயம்புலிங்கத்தைப் பூசித்ததனால் இலக்குமி அறிந்து செய்த பாவமும் அதனால் உண்டான சாபமும் நீங்கின.  

திருமாலும் இலக்குமிதேவியும் வைகுண்டஞ் சார்ந்து வாழ்ந்தனர். 

திருப்பூவணநாதருக்கு மேற்குத் திசையிலே, இரண்டம்பு செல்லுந்தூரத்திலே, திருமால் தம் பெயராலே ஒரு சிவலிங்கப் பிரதிட்டை செய்தனர். ஒரு தீர்த்தமுண்டாக்கினர். சித்திரை மாதத்திலே, ஆதிவாரத்திலே, அத்தீர்த்தத்திலே மூழ்கி விஷ்ணுலிங்கத்தை வழிபட்டோர் பாவநீங்கிப் பதமுத்தி பெறுவர்.

குற்றமில்லாத சொற்களைச் சொல்லிடவும், குற்றமுடைய  நமது சொற்களால் நமக்கு உண்டாகும் தீமைகளில் இருந்து விடுபடவும் திருப்பூவணம் சென்று நாமும் வழிபடுவோம்.  நல்வாழ்வு வாழ்வோம்.

https://thiruppuvanam-kalairajan.blogspot.com/2012/03/blog-post_8258.html  

அன்பன்

கி. காளைராசன்

No comments:

Post a Comment