தொடரும் திருவிளையாடல்கள்
கடந்த மாசிமாதம் 25ஆம் நாள் (9.மார்ச்.2014) ஞாயிற்றுக்கிழமை மாலை தேவகோட்டை தியாகிகள் சாலையில் உள்ள ‘இராம ஏகம்மை‘ திருமண மண்டபத்தில் ‘ஞானதான சபை‘யின் பத்தாம் ஆண்டுவிழா நடைபெற்றது.
விழாவிற்குச் சபையின் நிறுவுனர் தலைவர் திரு.சுப.செட்டியப்பன் அவர்கள் (80)ஆசியுரை வழங்கினார். கயிலைமணி பேராசிரியர்இராம.திண்ணப்பன் (திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் தலைவர்) அவர்கள் தலைமை ஏற்றார்.
1) தேவகோட்டை இலக்கியமேகம் ந.சீனிவாசன் அவர்களது “பெருங்கருணைப்பேராறு“ என்ற தலைப்பிலான சிறப்புரையாற்றினார். கண்ணப்பநாயனாருக்கு மட்டுமே சிவலிங்கத்தில் கண் தெரிந்தது, மதுரையை ஆண்ட ராஜசேகரபாண்டியனுக்கு மட்டுமே நடராசனின் கால்வலிக்குமே என்ற உணர்வு தோன்றியது முதலான சில கருணைப் பேறுகளை எடுத்து விரித்துரைத்தார். அளவு பெரியதாக இருப்பதால் இவரது உரையின் ஒலிப்பதிவை இணைக்க இயலவில்லை.
2) சொல்லோவியர் பொற்கிழிக்கவிஞர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களது “திருவாகத் தேன்“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேய ஆட்சியருக்கு அன்னைமீனாட்சி அருளியதை வரலாற்றைக் கூறித் ”தேனில் எப்பக்கம் சுவை இருக்கிறது என்று கேட்டால் எப்படி?” என்று கேட்டுச் சிறப்பானதொரு உரையை யாற்றினார். இவரது உரை மீண்டும் மீண்டும் கேட்கும்படியாக அமைந்துள்ளது. அளவு மிகப் பெரியதாக இருப்பதால் இவரது உரையையும் இணைக்க இயலவில்லை.
3) சிறப்பு விருந்தினராக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தக்கார் உயர்திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மதுரையம் பதியிலே இன்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருவிளையாடல்கள் தொடர்ந்து நாளும் நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளன என்றார். கோயிலில் சிதலமடைந்த கற்தூண்களை அகற்றிப் புதியன பதித்த பணியிலும், குடமுழுக்குநாள் குறித்துச் சர்ச்சைகள் உண்டானபோதும், குடமுழுக்கு நாளன்று தனக்கு இறைவன் இறைவியர் வழங்கிய கருணையையும் எடுத்துக் கூறினார். இவரது உரையின் ஒலிப்பதிவும் மிகப் பெரியதாக இருப்பதால் இணைக்க இயலவில்லை.
இம்மூவரது உரைகளும் தேவாமிர்தம் போன்றிருந்தன என்றால் அது மிகையல்ல.
இப்போதைக்கு உயர்திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் வழங்கிய இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னையின் அருட்காட்சி
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் கும்பஅபிஷேகத்திற்கு நாள் குறித்துப் பணிகள் எல்லாம் நடைபெற்று முடியும் தருவாய்க்கு வந்து விட்டன. ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில் சில காரணகாரியங்களால் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று சில ஸ்தானிகங்கள் (பரம்பரை பரம்பரையாகக் கோயிலில் பூசைகள் செய்வோர்) தடுத்தனர். வேறுசில ஸ்தானிகங்கள் அந்தக் குறிப்பிட்ட நாளில் உள்ள நல்லனவற்றை எடுத்துக்கூறி நடத்தலாம் என்றனர்.
ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கூட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. மாறாக இரண்டு கருத்துக்களைக் கொண்டவர்களும் குழுவாகக் கூடிக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொண்டனர். அவர்களுக்குள் இருந்த மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் ஒரு வலுவான சண்டை உருவாகிக் கொண்டிருந்து.
ஒருநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி எப்படியாகிலும் இரண்டில் ஒன்றை முடிவெடுத்தே தீர்வது என்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி அன்றைய தினமும் கூட்டத்தினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு தங்களுக்குள் சண்டையிடத் துவங்கிவிட்டனர்.
நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
என் மனதுக்குள் ஏதோ ஒன்று ”நீ பேசு, நீ பேசு“ என்று சொல்லிக் கொண்டே இருந்தது! நாம் எழுந்து பேசினால், பிரச்சனை தீர்வதற்கான வழியே இல்லை. எந்தப் பக்கம் பேசினாலும், மாற்றுக் கருத்துடையோர் எனது கருத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்று எனது அறிவு சொன்னது....
ஆனாலும்,
ஏதோ ஒன்று ” நீ பேசு, நீ பேசு“ என்று சொல்லிக் கொண்டே இருந்தது!
என்னால் எனது அந்த உள்ளுணர்வை அடக்க முடிய வில்லை.
ஆனால் என்ன பேசுவது?
என் மனதில் குழப்பமே மேலோங்கி நின்றது.
இருப்பினும் இன்று இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும் என்ற நிலையிலும் எழுந்து நின்றேன்.
சிறிது நேரத்தில் எல்லோரும் அமைதியாகினர்.
நான் அவர்களிடம், “இந்தத் திருவிழா அன்னை மீனாட்சியுடன் தொடர்புடையது, எனவே நாம் அனைவரும் அன்னையிடம் சென்று கேட்போம்“ என்று கூறி அழைத்துச் சென்றேன்.
ஆமாம், சரி.
இல்லை. வேண்டாம்.
என இரண்டு சீட்டு எழுதினேன்.
இரண்டு சீட்டுக்களையும் அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்து எடுத்து வரச் சொன்னேன். அவ்வாறே அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்து எடுத்து வந்து ஒரு தாம்பாளத்தில் வைத்தனர்.
அன்னையின் சந்நிதிவாயிலில் பெரும் பக்தர்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. மெய்யன்பர்கள் வரிசையாக வந்து வழிபட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
இரண்டு சீட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் ஆளைத் தேடினேன்.
அப்போது ஒரு சிறுமி வரிசையில் வந்தாள்.
அந்தச் சிறுமியை அழைத்து, ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டேன்.
அவளும் எடுத்துக் கொடுத்தாள்.
பிரித்துப் பார்த்தோம்.
ஆமாம், சரி என்று இருந்தது.
என்னுடைய மனதிற்குள் மட்டட்ற மகிழ்ச்சி.
அம்மா உனது பெயர் என்ன? என்று கேட்டேன்.
“என் பெயர் மீனாட்சி“ என்றாள் அந்தச் சிறுமி.
அங்கிருந்த அனைவரும் அப்படியே உறைந்து போனோம்.
என்னையையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, அன்னை மீனாட்சி அருட்காட்சி வழங்கியதை எண்ணியெண்ணி என்னுள்ளம் என்றும் பூரிப்படைந்தேன்.
இப்போது யாரும் யாருடனும் குடமுழுக்குநாள் குறித்துத் தர்க்கம் செய்து கொள்ளவில்லை.
குறிப்பிட்ட தேதியன்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
குடமுழுக்குநாளான்று மீண்டும் ஒரு அற்புதம் நடைபெற்றது.
அந்த அற்புதத்தை என்னவென்று எடுத்துரைப்பது.,.,
திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்களின் அனுபவங்கள் தொடரும்,,,,
64 திருவிளையாடல்களுக்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து திருவிளையாடல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.
அவற்றில் திருமலைநாயக்கர் மடியில் வந்து அமர்ந்து மீனாட்சி பிள்ளைத்தமிழ் கேட்டது.
பீட்டர் பாண்டியன் என்ற வெள்ளைக்கார அதிகாரிக்கு அருள்வழங்கியது, எனச் சில பதிவாகி உள்ளன. https://youtu.be/WVoFI9OsGuk
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
No comments:
Post a Comment