மதுரை அகழியும் கோட்டையும்
பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது. மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வணிகன் ஒருவன் அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான். மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான். தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்[1].
ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்[2]. ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?
பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன. 1757ஆம் ஆண்டு வரைபடத்தில் மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன.
1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர். மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது.
1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன. (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).
மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது எஞ்சி இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
வங்கியசேகர பாண்டியன் அமைத்த அகழிக்கு வெளிப்புறம் அமைந்திருத்த சாலையானது வெளிவீதிகளாக உள்ளன. மதுரையின் கோட்டைக்கு உள்ளே அமைக்கப்பட்ட சாலையானது பெருமாள் மேஸ்திரி வீதிகளாகவும் மாரட் வீதியாகவும் உள்ளன.
(நன்றி – The Hindu, The West Gate of the old Fort of Madurai. Photo:G.Moorthy | Photo Credit: G_Moorthy)
அகழியும் கோட்டையும் அமைத்த மன்னனின் பெயரை மாமதுரை வீதிகளுக்குச் சூட்டாமல், தொன்மைச் சிறப்பு மிக்க தொல்லியல் தடையங்களை அழித்த மாரட் மற்றும் மேஸ்திரி இவர்களது பெயர்களால் வீதிகள் இன்றும் அழைக்கப்படுவது வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது.
அன்பன்
கி. காளைராசன்
திருவிளையாடல் புராணம் – 'இஞ்சி' 'எயில்' 'மதில்' ’ அகழி. வாயில் ’, என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு.
106.
எறியும் வாளையும் அடிக்கடி எழுந்து உடல் பரப்பிப்
பறியும் ஆமையும் வாளோடு கேடகம் பற்றிச்
செறியும் நாள் மலர் அகழியும் சேண் தொடு புரிசைப்
பொறியுமே ஒன்றி உடன்று போர் புரிவன போலும்.
110.
மாக முந்திய கடி மதின் மதுரை நாயகர் கைந்
நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில் விழுங்கி
மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன்
ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும்.
112.
சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்
அண்ட கோளமும் பரந்து நீண்டு அகன்ற கோபுரங்கள்
விண்ட வாயில் ஆல் வழங்குவ விட அரா வங்காம்
துண்ட போல் பவும் உமிழ்வன போல் பவும் உழலா.
113.
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து அகழிச்
சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி
அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.
114.
எல்லைத் தேர் வழித் தடை செயும் இம் மதில் புறம் சூழ்ந்து
தொல்லை மேவலர் வளைந்துழி உடன்று போர் ஆற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல அம் மதில் பொழி செயு மறம் சிறது உரைப்பாம்.
117.
எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத்
தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல்
கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத்
துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே.
172.
கொடி முகில் துழாவு மிஞ்சிக் கோ நகர் வடகீழ் ஞாங்கர்
முடி மிசை வேம்பு நாற முருகு அவிழ் ஆரும் போந்தும்
அடி மிசை நாறத் தென்னர் வழி வழி அரசு செய்யும்
இடி முரசு உறங்கா வாயில் எழுநிலை மாடக் கோயில்.
187.
ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்
ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில் எட்டாய்ச்
சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்
மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம்.
244.
அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி
பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித ஆசான்
பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும் என்றும்
தன்னிகர் ஆல வாயில் வதிபவர் தமை விட்டு ஏகும்.
336.
சென்னி பொருட்டு எயில் வாயில் திறந்து அடைத்து விடை பொறித்த செயலும் சென்னி
மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப் பந்தர் வைத்த வாறும்
பொன்னனையாள் பொருட்டுஇ ரதவாத வினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை தந்த வாறும்.
509.
வலம் வயின் இமய வல்லி பொன் கோயில் மாளிகை அடுக்கிய மதில் வான்
நிலவிய கொடிய நெடிய சூளிகை வான் நிலா விரி தவள மாளிகை மீன்
குலவிய குடுமிக் குன்று இவர் செம் பொன் கோபுரம் கொண்டல் கண் படுக்கும்
சுல வெயில் அகழிக் கிடங்கு கம்மி நூல் தொல் வரம்பு எல்லை கண்டு அமைத்தான்.
650.
பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும் பெட்பு உறச்
சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார்
வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை பொன் குடம்
பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில் பரப்புவார்.
715.
முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி
அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக
நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன்
துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.
1042.
இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்
நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா
மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார்.
1044.
கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில் பல கடந்து
உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே
மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு
எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய்.
1051.
அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்
இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்
பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி
மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ.
1052.
வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண்
விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள் ஆடும்
தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்துக்
களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல் வேந்தன்.
1147.
கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு அணியன் ஆகிப்
பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக் கண்டு தாழ
உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து
வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.
1148.
அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள முத்தின்
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான்.
1339.
சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக்
குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி
மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்
அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும் அடைந்து.
1465.
பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.
1508.
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன் என்றார்.
1576.
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்.
1613.
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.
1620.
தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர் எங்கணும் செறிந்த
காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி
கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து
தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள்.
1721.
ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து விசும்பு இழிந்த
கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக் கொழுந்து அனையது
ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய பெரு
வாயில் பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின் வரம்பு அறிந்தான்.
1739.
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.
1744.
மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின்
என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை கேட்டு எழில் மயில் போல்
துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர்
மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்.
1789.
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.
1790.
தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை விழிக்குயில் இள முளை
கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங்
காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன் என்று
ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில் கொள் கச்சி உளான் அவன்.
1801.
வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில் திறந்து போய்
நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர் வேந்தனைச்
சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து
அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம் புகுவித்தரோ.
1808.
கங்குலின் அரும் கை குறைப்பான் எனச்
செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும்
எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து
அங்கண் வாயில் திறப்பவர் ஐயுறா.
1809.
மற்றை வாயில் கண் மூன்றினும் வல்லை போய்
உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய
கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு
எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார்.
1810.
போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி
மாற்றி உத்தர வாயில் கதவு அதில்
ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று
ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார்.
1813.
மட்டது அலம்பிய தாதகி மாலையான்
உட்ட தும்பி ஒழுகிய அன்பினால்
கட்டு இல் அங்கு எயில் கச்சியில் காடு எலாம்
வெட்டி நம் புடை வித்திய பத்தியான்.
1814.
வந்து நமை வழி பட வேண்டினான்
இந்த வாயில் திறந்து அழைத்து இன் அருள்
தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ
நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா.
1939.
சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி
மன்றவன் கோயில் வாயில் வந்து வந்தனை செய்து அம் பொன்
குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி
வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப.
1982.
பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்
தேசத்தவன் கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.
1986.
வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து நீங்கற்கு
அருமையால் வாயில் தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து
வரை துளைத்து அன்ன மேலை வாயிலால் போவான் அன்ன
திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள்.
2065.
நீல வண்ணன் தேறா நிமலன்
ஆல வாயில் அமர்ந்தான் என்னே
ஆல வாயான் அலரில் வாசம்
போல் என் உளமும் புகுந்தான் என்னே.
2312.
இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின் நாள்
அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான்
வன் நிலை மதில் சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து
மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் என்னா.
2345.
சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்
பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச்
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து
வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி.
2346.
தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான்.
2347.
அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர்
நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்
புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக்
கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்.
2348.
கொடிகள் நீள் மதில் மண்டபம் கோபுரம் வீதி
கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து
அடிகள் சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான்
2360.
அளந்து சூழ் திரு ஆலவாய் மதில் இன்புறத் தக ஆழிபோல்
வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து எழு பஞ்சவன்
கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு படைஞரும்
களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர் செய்வர் ஆல்.
2395.
வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில்
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.
2640.
அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு மின்னுக்
கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும்
உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்
வட திரு ஆல வாயில் வந்து வீற்று இருந்த வள்ளல்.
2660.
சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த
தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.
2799.
அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்
தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி
வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்
நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.
2858.
துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்
அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்
கன்னி மா மதில் சூழ் கடி நகர்க் கரைக் காதம்
என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.
2860.
மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே
பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல்
துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம்
பொன் எயில் மணிவாயில் புகுவன இது போதில்.
2863.
ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்
போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்
காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச
ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான்.
2946.
கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத்
தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ்
ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும்
குட்டியோடு அணைத்து எயில் இறக் குதிப்பன சிலவே.
2957.
கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு
மங்குல் தோய் பெரு வாயில்கள் திறந்தலும் மாறா
தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப்
பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம்.
2983.
கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில் புறம் போய்
இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல் வாய்ச்
செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்
புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே.
3024.
ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள் ஐயர்
வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில் பெய்து
பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக் கொண்டு
நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் உற்றார்.
3162.
வாயில் எங்கணும் தூபமும் மங்கல விளக்கும்
தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச்
சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக்
கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார்.
பாடல்கள்
நன்றி – தமிழ் இணையக் கல்விக் கழகம்
http://www.tamilvu.org/library
________________________________________
[1] திருவிளையாடல் புராணம் 49 திருவாலவாயான படலம்
[2] திருவிளையாடல் புராணம் பாடல் எண் 2345