அன்னை மீனாட்சி
திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த அரசர்கள்
எண்ணற்ற பாண்டி மன்னர்கள் அரசாண்டுள்ளனர். அவர்களுள் தலையானவன் மலயத்துவச பாண்டியன். இவனது ஒரே மகளுக்குத் திருமணம். திருமண ஓலை (பத்திரிக்கை) அனைத்து அரசர்களும் முறைப்படை அனுப்பி வைக்கப் பெற்றது. திருமணச் செய்தி குறித்த ஓலைவரும் செய்தியை அறிந்த மன்னர்கள் எதிர்கொண்டு அதனை வரவேற்றனர். வந்து வணங்கிக் கையில் வாங்கி, மணிகள் பொறுத்தப்பெற்ற தங்களது முடியின்மேல் (கிரீடத்தின் மேல்) ஏற்றி வைத்தனர். திருமணச் செய்தி அடங்கிய ஓலையைக் கொண்டு வந்தவர்களுக்கு அரிய அணிகளும் ஆடைகளும் அளித்து மகிழ்வித்தனர். மிகுந்த மனமகிழ்ச்சியுடன் ஓலையைக் பெற்றுக் கொண்டு திருமணத்தில் கலந்து கொள்ள மதுரை சென்றனர்.
1) கொங்கு நாட்டரசரும், 2) சிங்களநாட்டரசரும், 3) பல்லவநாட்டரசரும், 4) விற்கொடியை உடைய சேர(கேரள) அரசரும், 5) கோசல நாட்டரசரும், 6) பாஞ்சால நாட்டரசரும், 7) வங்க நாட்டரசரும், 8) சோனக நாட்டரசரும், 9)சீன நாட்டரசரும், 10) சாளுவ நாட்டரசரும், 11) மாளவ நாட்டரசரும், 12) காம்போச நாட்டரசரும், 13) அங்க நாட்டரசரும், 14) மகத நாட்டரசரும், 15) ஆரிய நாட்டரசரும், 16) நேரி மலையையுடைய சோழ வரசரும், 17) அவந்தி நாட்டரசரும், 18) விதர்ப்ப நாட்டரசரும், 19) கங்க நாட்டரசரும், 20) கொங்கண நாட்டரசரும், 21) விராட நாட்டரசரும், 22) மராட நாட்டரசரும், 23) நருநட நாட்டரசரும், 24) குரு நாட்டரசரும்,
25) கலிங்க நாட்டரசரும், 26) சாவக நாட்டரசரும், 27) கூவிள நாட்டரசரும், 28) ஒட்டிய நாட்டரசரும், 29) கடார நாட்டரசரும், 30) காந்தார நாட்டரசரும், 31) குலிங்க நாட்டரசரும், 32) கேகய நாட்டரசரும், 33) விதேக நாட்டரசரும், 34) பூருமரபினரசரும், 35) கொல்ல நாட்டரசரும், 36) கலியான நாட்டரசரும், 37) தெலுங்க நாட்டரசரும், 38) கூர்ச்சர நாட்டரசரும், 39) மச்ச நாட்டரசரும், 40) மிரேச்ச நாட்டரசரும், 41) செஞ்சை நாட்டரசரும், முதலாக, பிறநாட்டு அரசர்களும், வழிகள் தோறும், நெருங்கி, பூமி மறையும்படி நெருங்கி வந்திருந்தனர்.
நிலமகளின் முதுகு ஒடிந்து விடுமோ என்று அச்சப்படும் வகையில், பல நாட்டு மன்னர்களும், எள்ளவும் இடமில்லாத அளவிற்கு நெருங்கி இருந்தனர். பசிய கடலைப் போன்ற பரந்த சேனைகளை உடையவர்களாகிய இந்த மன்னர்கள் தங்களது நாட்டிலுள்ள பலவகையான வளங்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தனர். மதுரைக்கு வந்துசேரும் பல வழிகள் தோறும், கூட்டம் கூட்டமாக நெருங்கி மதுரைக்கு வந்தனர்.
திருமண முரசு அதிரும் பழமைவாய்ந்த பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை நகரெங்கும், பாண்டிய மன்னனாகிய மலயத்துவசன் திருமகளான தடாதகைப் பிராட்டி என்ற மீனாட்சியம்மையின் திருமணத்திற்கு 41 தேசத்து அரசர்களும் மற்றும் பிற நாட்டு அரசர்களும் வந்துதிருந்தார்கள் என்கிறது திருவிளையாடற் புராணம்.
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 672)
“தென்னர் சேகரன் றிருமக டிருமணத் திருமுகம் வரவேற்று
மன்னர் வந்தெதிர் தொழுதுகைக் கொண்டுதம் மணிமுடி மிசையேற்றி
அன்ன வாசகங் கேட்டனர் கொணர்ந்தவர்க் கருங்கலந் துகினல்கி
முன்ன ரீர்த்தெழு களிப்புற மனத்தினு முந்தினர் வழிச்செல்வார்”
“தென்னர் சேகரன் திருமகள் திருமணத் திருமுகம் வரவேற்று
மன்னர் வந்து எதிர் தொழுது கைக் கொண்டு தம் மணி முடி இசை ஏற்றி
அன்ன வாசகம் கேட்டனர் கொணர்ந்து அவர்க்கு அரும் கலம் துகில் நல்கி
முன்னர் ஈர்த்து எழு களிப்பு உற மனத்தினும் முந்தினர் வழிக் கொள்வார்”
பொருள் - பாண்டியர்களின் முடிபோல்பவனாகிய மலயத்துவச பாண்டியன் திருப்புதல்வியாரின் திருமணங் குறித்த ஓலையை, வரவேற்பாராய், மன்னர்கள் எதிர்கொண்டு வந்து, வணங்கி, கையில் வாங்கி, தம்முடைய மணிகள் அழுத்திய முடியின்மேல் ஏற்றி, அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும் அளித்து, முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக, மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள்
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 673)
“கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர் பாஞ்சாலர்
வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்
அங்கர் மாகத ராரியர் நேரிய ரவந்தியர் வைதர்ப்பர்
கங்கர் கொங்கணர் விராடர்கள் மராடர்கள் கருநடர் குருநாடர்”
“கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர் பாஞ்சாலர்
வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்
அங்கர் மாகதர் ஆரியர் நேரியர் அவந்தியர் வைதர்ப்பர்
கங்கர் கொங்கணர் விராடர் கண் மராடர்கள் கருநடர் குருநாடர்”
பொருள் - கொங்கு நாட்டரசரும், சிங்களநாட்டரசரும், பல்லவநாட்டரசரும், விற்கொடியை உடைய சேர(கேரள) அரசரும், கோசல நாட்டரசரும், பாஞ்சால நாட்டரசரும், வங்க நாட்டரசரும், சோனக நாட்டரசரும், சீன நாட்டரசரும், சாளுவ நாட்டரசரும், மாளவ நாட்டரசரும், காம்போச நாட்டரசரும், அங்க நாட்டரசரும், மகத நாட்டரசரும், ஆரிய நாட்டரசரும், நேரி மலையையுடைய சோழ வரசரும், அவந்தி நாட்டரசரும், விதர்ப்ப நாட்டரசரும், கங்க நாட்டரசரும், கொங்கண நாட்டரசரும், விராட நாட்டரசரும், மராட நாட்டரசரும், நருநட நாட்டரசரும், குரு நாட்டரசரும்,
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 674)
“கலிங்கர் சாவகர் கூவிள ரொட்டியர் கடாரர்கள் காந்தாரர்
குலிங்கர் கேகயர் விதேகர்கள் பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்
தெலுங்கர் கூர்ச்சரர் மச்சர்கள் மிலேச்சர்கள் செஞ்சையர் முதலேனைப்
புலங்கொண் மன்னருந் துறைதொறு மிடைந்துபார் புதைபட வருகின்றார்”
“கலிங்கர் சாவகர் கூவிளர் ஒட்டியர் கடாரர்கள் காந்தாரர்
குலிங்கர் கேகயர் விதேகர்கள் பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்
தெலுங்கர் கூர்ச்சரர் மச்சர்கள் மிலேச்சர்கள் செஞ்சையர் முதல் ஏனை
புலம்கொள் மன்னரும் துறைதொறும் இடைந்து பார்புதை பட வருகின்றார்”
பொருள் - கலிங்க நாட்டரசரும், சாவக நாட்டரசரும், கூவிள நாட்டரசரும், ஒட்டிய நாட்டரசரும், கடார நாட்டரசரும், காந்தார நாட்டரசரும், குலிங்க நாட்டரசரும், கேகய நாட்டரசரும், விதேக நாட்டரசரும், பூருமரபினரசரும், கொல்ல நாட்டரசரும், கலியான நாட்டரசரும், தெலுங்க நாட்டரசரும், கூர்ச்சர நாட்டரசரும், மச்ச நாட்டரசரும், மிரேச்ச நாட்டரசரும், செஞ்சை நாட்டரசரும், முதலாக, பிற நாட்டரசாகளும், வழிகள் தோறும், நெருங்கி, பூமி மறையும்படி வருகின்றார்கள்.
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 675)
“இத்த கைப்பல தேயமன் னவர்களு மெண்ணிடம் பெறாதீண்டிப்
பைத்த வாழிபோ னிலமகள் முதுகிறப் பரந்ததா னையராகித்
தத்த நாட்டுள பலவகை வளனொடுந் தழீஇப்பல நெறிதோறும்
மொய்த்து வந்தனர் செழியர்கோன் திருமகள் முரசதிர் மணமூதூர்”
“இத்தகைப் பல தேய மன்னவர்களும் எள் இடம் பெறாது ஈண்டிப்
பைத்த ஆழிபோல் நிலமகள் முதுகு இறப் பரந்த தானையர் ஆகித்
தத்த நாட்டு உள பலவகை வளன் ஒடும் தழீஇப் பல நெறி தோறும்
மொய்த்து வந்தனர் செழியர் கோன் திருமகள் முரசு அதிர் மணமூதூர்”
பொருள் - அத்தன்மையை யுடைய பல நாட்டு மன்னர்களும், எள்ளிடவும் இடமில்லையாக நெருங்கி, பசிய கடலைப் போல, பார்மகளின் முதுகு ஒடியுமாறு, (எங்கும்) பரந்த சேனையையுடையவராகி, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள, பலவகை வளங்களையும் எடுத்துக்கொண்டு, பல வழிகள் தோறும், நெருங்கி, பாண்டியர் மன்னனாகிய மலயத்துவசன் திருமகளாரது, மணமுரசு முழங்காநின்ற பழமையாகிய மதுரை நகர்க்கு, வந்தார்கள்