Thursday, 21 May 2020

தண்டபாணித் தெய்வம்

தண்டபாணி
கருப்புச் சட்டை போட்ட எல்லோரும் தி.க.வினர் என்று சொல்வது போலக் காவி கட்டிய எல்லோரைம் பாஜக.வினர் என்று சொல்லி வருகின்றனர்.  பரவாயில்லை.   ஆனால் போகிற போக்கில், கையில் தண்டம் வைத்துள்ள தெய்வத்தை “லகுலீசர்” என்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர். அவர் தலைக்கு மேலே எழுதியும் வைத்து விடுகின்றனர்.  

கையில் தண்டம் வைத்திருப்பவரைத் தண்டபாணி என்றுதானே சொல்லிட வேண்டும்.  ஆனால் ஆடையணிந்து, ஆபரணங்களும் அணிந்து, சடாமகுடம் தாங்கிச் சர்வ அலங்காரத்துடன், 
 இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தரையில் ஊன்றி அமர்ந்து, இடதுகையில் தண்டம் ஏந்தி இருப்பவரைத் தண்டபாணித் தெய்வம் என்று சொல்லாமல் “லகுலீசர்” என்கின்றனர்.   


மேலேயுள்ள தெய்வம்  மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டி குடைவரைக் கோயிலில் சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் உள்ளது.  இந்தத் தெய்வத்தின் பெயர் இலகுலீசர் என்று எழுதி வைக்கப் பெற்றுள்ளது.  சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் பிள்ளையார் உள்ளார்.



இந்தக் குடை வரை கோயிலானது மலையைக் குடைந்து செய்யப்பட குடைவரை கோவில் ஆகும். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். இக்கோயில் வாயிலில் துவாரகபாலகர்களும் , குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது. (ref - ta.wikipedia.org/s/pob)
--------------------------
இலகுலீசர் - இலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் குலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார். பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அவதாரமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன. இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்: கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன. (ref - ta.wikipedia.org/s/5mk1)
-----------------------------------
இலகுலீசர் = இல + குலீசர் என்று பிரித்துப் பொருள் காண வேண்டும்.
குலிசம் என்றால் எலும்பினால் செய்யப்பெற்ற வச்சிராயுதம் என்று பொருள்.  இதற்குத் தமிழில் சான்றுகள் நிறைய உள்ளன.  (குலிசத் தமரர்கோன் = இந்திரன்  - கம்பராமாயணம்).  இலக்கியச் சான்றுகள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.

தண்டம் வேறு, குலிசம் வேறு.
தண்டாயுதம் வேறு, குலிச ஆயுதம் வேறு.
தண்டப்படை என்பது வேறு.  குலிசப் படை என்பது வேறு.

குலிசம் என்பது வச்சிராயுதம் ஆகும். இது முனிவரால் இந்திரனுக்கு வழங்கப் பெற்ற ஆயுதம் ஆகும். 
தண்டம் என்பது கர்லாக்கட்டை போன்ற ஆயுதம் ஆகும்.  இது முருகன் மற்றும் கருப்பணசாமி தெய்வங்களிடம் உள்ள ஆயுதம் ஆகும்.

அரிட்டாபட்டியில் குடவரைக்கோயிலில் சிவலிங்கத்திற்கு இடப்பக்கம் உள்ளவர் பிள்ளையார்.  வலப்பக்கம் உள்ளவர் தண்டபாணித் தெய்வம் ஆவர்.  இவர் பெயர் இலகுலீசர் அல்ல. குலீசர் என்பது குலிசம் (வச்சிராயுதம் ஏந்திய) இந்திரனைக் குறிக்கும்.  

---------------------------
(படத்தில் தண்டாயுதம் வழிபாடு)

(படத்தில் தண்டம் ஏந்திச் சண்டைக்குத் தயாரான நிலையில்)

(படத்தில் தண்டம் ஏந்திப் போரிடும் மகிசாசுரன்)

சங்கப்பாடல்கள், திருக்குறள் மற்றும் திருவிளையாடற் புராணத்தில் 'தண்டம்', ‘குலிசம்’ என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு  கீழே இணைக்கப் பெற்றுள்ளது.

தண்டபாணித் தெய்வத்தை வணங்குதல் செய்வோம்.  தண்டனைகள் இல்லா வாழ்க்கை பெறுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-----------------------------------------------------------------------------------------
திருக்குறளில் தண்டம் 
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7

திருவிளையாடற் புராணத்தில் 
163.
மழுக்கள் வச்சிரம் கார் முகம் வாளி முக் குடுமிக்
கழுக்கள் சக்கரம் உடம் பிடிகப் பண நாஞ்சில்
எழுக்கள் நாந்தகம் பலகை தண்டி இவை முதல் படையின்
குழுக்கள் ஒடி இகல் விந்தை வாழ் கூடமும் பல ஆல்.

370.
விழுங்கிய படை எலாம் வேறறத் திரண்டு
ஒழுங்கிய தான் முதுகம் தண்டு ஒன்றியே
எழும் கதிர்க் குலிசம் ஆம் அதனை எய்து முன்
வழங்குவன் கருணை ஒர் வடிவம் ஆயினான்.      
(பொருள் -  அவ்வாறு விழுங்கப்பட்ட படைகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு,  முதுகெலும்பைப் பொருந்தி ஒழுங்குபட்டது;  அது எழுகின்ற ஒளியையுடைய வச்சிரப்படை (குலிசம்) ஆகும். நீ சென்று கேட்பதற்கு முன்னே, கருணையே ஒரு உருவமாகிய அம்முனிவன் அந்த வச்சிரப் படையை உனக்குக் கொடுப்பான்)
    
379.
அம்முனி வள்ளல் ஈந்த அடுபடை முதுகந் தண்டைத்
தெம் முனை அடுபோர் சாய்க்கும் திறல் கெழு குலிசம் செய்து
கம்மிய புலவன் ஆக்கம் கரைந்து கைகொடுப்ப வாங்கி
மைம் முகில் ஊர்தி ஏந்தி மின் விடு மழைபோல்நின்றான்.    
(பொருள்  - அந்த முனியாகிய வள்ளலால் கொடுக்கப்பட்ட கொலைத் தொழிலை யுடைய படைகள் திரண்ட முதுகெலும்பினை, பகைவர் முனைகின்ற, கொல்லுகின்ற போரைப் பின்னிடச் செய்யும் வலிபொருந்திய வச்சிரப் படையாகச் (குலிசம்) செய்து, தேவதச்சன்  ஆக்கங் கூறி இந்திரனின்  கையில் கொடுக்க, அதைப் பெற்று, கரிய மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் கையில் ஏந்தி, மின்னலை வீசும் முகில் போல் நின்றான்.)

386.
தொக்கன கழுகு சேனம் சொரி குடர் பிடுங்கி ஈர்ப்ப
உக்கன குருதி மாந்தி ஒட்டல் வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்தம் ஆடப்
புக்கன பிணத்தின் குற்றம் புதைத்த பார் சிதைத்த தண்டம்.   

609.
செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன
அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால்
கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து
பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும் தடக்கையானை.

630.
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.

637.
துண்டம் படவே துணித்து அக்கண வீரர் தம்மைத்
தண்டம் கொடு தாக்கினள் சாய்ந்தவர் சாம்பிப் போனார்
அண்டங்கள் சரா சரம் யாவையும் தானே ஆக்கிக்
கொண்டு எங்கு நின்றாள் வலி கூற வரம்பிற்று ஆமோ.

664.
முத்தில் பாளை செய்து அவிர் மரகதத்தின் ஆன் மொய்த்த பாசிலை துப்பின்
கொத்தில் தீம் பழம் வெண் பொனால் கோழரை குயின்ற பூகம் உந்துப் பின்
தொத்தில் தூங்கு பூச் செம் பொன்னால் பழுக்குலை தூக்கிப் பொன்னால் தண்டு
வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாழையும் நிரை வித்தார்.

707.
நிருதி ஆடி கொண்டு எதிர்வர அடிக்கடி நிதி முகத்து அளகைகோன்
கருதி ஆயிரம் சிதறிடத் தண்டி நன்கு ஆம் சுகர் வினை செய்யப்
பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் பல்மணி விளக்கு ஏந்தச்
சுருதி நாயகன் திருவடி முடியின் மேல் சுமந்து பின் புறம் செல்ல.

1105. காய்சின மடங்கல் அன்னான் கை வளை சுழற்றி வல்லே
வீசினான் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான் சென்னித்
தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடும்
கூசினன் அஞ்சிப் போனான் குன்று இற கரிந்த வீரன்.
(பொருள் - மிக்க சினத்தையுடைய சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதி, கையிலுள்ள திகிரிப்படையைச் சுழற்றி விரைந்து வீசினன்; அப்படையானது வச்சிரப் (குலிசம்) படையை அழித்து, குலிசம் படையை விடுத்தவனாகிய இந்திரனது, தலையிலுள்ள ஒளி வீசும் நல்ல முடியைக் கீழே வீழ்த்தி அழித்தது;
குலிசம் உடைந்ததைக் கண்ட உடனே, மலையின் சிறைகளை அறுத்த வீரனாகிய இந்திரன் நாணமும் அச்சமும் உடையனாய் ஓடினான்.)

1171.
கண்டிகை தொடுத்து இரு கரத்தினொடு வாகு
தண்டின் இடு மாலை விட வாள் அரவு தள்ள
வெண் துகிலின் ஆன விரி கோவண மருங்கில்
தண்டரிய பட்டிகை வளைந்து ஒளி தழைப்ப.

1222.
மாதண்ட அவுணன் மாற்றம் மகபதி கேட்டு வந்து
கோதண்ட மேருக் கோட்டிக் கொடும் புரம் பொடித்தான் வெள்ளி
வேதண்டம் எய்தி ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் நீ அப்போது
அண்டர்க் கூட்ட வா வாய்ப் போது வாய் வல்லை என்றான்.

1415.
இங்கித நெடும் கோதண்டம் இடம் கையில் எடுத்து நார
சிங்க வெம் கணை தொட்டு ஆகம் திருக முன் இடத்தாள் செல்ல
அங்குலி இரண்டால் ஐயன் செவி உற வலித்து விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது அன்றே.

1416.
கொண்டலின் அலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலும் என்னத் துண் என வெருவிப் போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால் யானை.

1422.
எடுத்தனர் கையில் தண்டம் எறிந்தனர் மறிந்து சூழ் போய்த்
தடுத்தனர் கரகம் தூள் ஆத் தகர்த்தனர் பீலி யோடும்
தொடுத்தனர் உடுத்த பாயை துணி படக் கிழித்துக் கால்வாய்
விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை.

1516.
ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான்
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான் கொலை செய்வான்.

1532.
தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச் செலுத்திக்
கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான்.

1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம்                                                      சொல்வாம்.

1593.
குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்து உரை நாவைத் தொட்ட
சரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி என்று என்று
உரைத்து உரை தவற்றுக்கு எல்லாம் உறும் முறை தண்டம் செய்து
சிரத்தினைத் தடிந்து வீட்டித் திரு உரு மறைந்து நின்றான்.

1641.
பணி நா அசைக்கும் படி என்னக் கழுத்தில் வீர
மணி நா அசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை
பிணி நாண் சிறு கிண் கிணி பிப்பல மாலைத் தொங்கல்
அணி நாண் அலம்பச் சிலம்பு ஆர்ப்ப வடிகண் நான்கும்.              

2236.
மண்ணில் குதித்து வலிக்கண்டு வராக வேந்தை
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.
(பொருள் - நிலத்திலே குதித்து, வலியினைக் கண்டு பன்றியரசனை மதித்து, கையிலுள்ள இருப்பு  உலக்கையாலே தலையில் அடித்தான்; அந்தப் புண்ணினின்று பொழியும் குருதியாறு புவியை மூட,  சூரிய மண்டலத்தைக் கிழித்து விமான மீதேறி விண்ணுலகடைந்தனன். )

2241.
இரும்பு செய் தண்டினை இம் என ஓங்கிப்
பொரும் படை சென்னி புடைத்து விளிந்தான்
விருந்தினர் ஆய் இருவோரும் விமானத்து
அரும் திறல் வானம் அடைந்தனர் அன்றே.
(பொருள் - இரும்பாற் செய்த தண்டத்தை, விரைந்து ஓங்கி,  போர் புரியும் பெண் பன்றியின் தலையில் அடித்து இறந்தனன்; அவ்விருவரும், விமானத்திலேறி, வீரசுவர்க்கத்துக்கு விருந்தினராகச் சென்றனர்.)

3191.
முண்டிதம் செய்த தலையராய் முறுக்கு உறி தூங்கும்
குண்டிகை கைத் தடம் கையராய்க் கோவணம் பிணித்த
தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன் பேர் நாவில்
கொண்டு அசைத்தனராய் எங்கும் குலாவவும் கண்டேம்.
(பொருள் - முண்டிதம் செய்த தலையினை உடையராய்,  முறுக்கிய உறியில் தொங்கும் கமண்டலத்தை உடைய பெரிய கையினை உடையராய்,  கோவணங்கட்டிய கோலினைத் தாங்கிய பிடரினை உடையராய், சிவன் பெயரை நாவிற்கொண்டு கூறுபவராய்ப் பலர்,  எங்கும் உலாவுதலைப் பார்த்தேம்.)

நன்றி = பாடல் தொகுப்பு உதவி  http://www.tamilvu.org/ta/library
---------------------------------------------------
சங்கப்பாடல்களில் 'தண்டம்', என்ற சொல் உள்ள பாடல்வரிகளின் தொகுப்பு  - (குறிப்பு - ‘குலிசம்’ என்ற சொல் சங்கப்பாடல்களில் கண்டறியப் பெறவில்லை)
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை - பரி 10/60
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் - பரி 20/64
 
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை - பெரும் 170
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது - நற் 260/3
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் - குறு 146/3
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு - பதி 41/12
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் - அகம் 274/8
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று - புறம் 243/12
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் - அகம் 392/9
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் - கலி 85/36
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து - குறு 156/3
நன்றி = பாடல் தொகுப்பு உதவி  http://tamilconcordance.in
---------------------------------------------------