புராணத்தில் விமானம் (Flights on Puranams)
ரைட் சகோதர்கள் 1903ஆம் ஆண்டு விமானத்தைக் கண்டுபிடித்தனர் என்று படித்துள்ளோம். ஆனால் வடநூலில் இருந்து கி.பி.1620 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் விமானங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது வியப்பாக உள்ளது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்தபின் மேற்கே சென்று மலையின் முகட்டில்நிற்கும்போது ஒரு விமானம் வந்து அவளை அழைத்துச் சென்றாக பாடப்பெற்றுள்ளது. இது போல் திருப்பூவணத்துடன் தொடர்புடைய புராணக்கதைகளில் விமானம் பற்றிய குறிப்புகள் உள்ள 14 பாடல்களில் விமானம் இடம் பெற்றுள்ளது.
திருவிளையாடற் புராணத்தில் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் விமானத்தில் இருந்து இறங்கிவந்ததாக ஒரு பாடல் உள்ளது.
விமானத்தில் பறந்து விண்ணில் பயணம் செய்வது பற்றிய சிந்தனையானது புராணகாலத்திலேயே தமிழர்களிடம் இருந்துள்ளதை இந்தப் பாடல்களின் வழியாக அறியமுடிகிறது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
--------------------
திருப்பூவணப் புராணம் சூரியன் பூசனைச் சருக்கத்திலே, சூரியன் திருப்பூவணனை வணங்கி வரம் பெற்ற பின்னர் விமானத்தில் ஏறிச் சென்றதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
“வையகத்தின் மலமாயை கன்மம் அறம் ஆற்றியே வதியும் அந்தணீர்
பொய்யில் அன்பு கொடு பொங்கிலிங்கம் அது போற்றிசெய்து புரிபூசையாற்
தெய்விகம்தரு ‘விமானம்’ மீது கொடு செஞ்சுடர்ப் பரிதிவானவன்
வெய்யமாமணியின் மிக்கு இலங்கு அணிவிளங்கு தன்னுலகின் மேயினான்”
திருப்பூவணப் புராணம் துன்மனன் சருக்கத்திலே, துன்மனன் மரணமடைந்த பின்னர் அவனைக் கூட்டிச் செல்ல சிவதூதர் விமானத்தில் வந்ததையும், துன்மனனை ஒரு விமானத்தில் அழைத்துச் சென்றதையும் இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
“சோதிவிடுகின்ற திரிசூலர் சிவதூதர்
மாதிரம் விளங்கு கதிர்மன்னு மணிதுன்னுங்
கோதில் பல் ‘விமானம்’ அவை கொண்டு அவண் விரைந்து
நாதன் அருளான் மகிழ்வினண்ணினர்கண்மன்னோ”
“தங்கொளியின்மிக்குயர்தினத்தனி‘விமானத்’
தங்கவரையந்நிலையினன்பினவைமேல்கொண்
டெங்கள்பெருமானுரியவின்னருளினேயோ
புங்கவர்தொழச்சிவபுரத்தினிடைபுக்கார்”
திருப்பூவணப் புராணம் தருமஞ்ஞன் ஆயுள் முடிந்தவுடன் விமானத்தில் ஏறிச் சென்றதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
“அங்கவருபதேசந்தனையுற்றேயரிய ‘விமானத்து’ உரிமையின் ஏறிச்
சங்கரனருள்கூர்கிங்கரராவார்சரதமிதருள்வழிசெவியினிறைப்போர்
வெங்கனலாயிரம் வேள்வியர்வேள்விமேயநல்வாசபேயம்மோர்நூறு
பொங்குலகஞ்செய்தபுண்ணியநண்ர்வர்பொழில்புரிபாவமுமொழிகுவரன்றே
திருப்பூவணப்புராணம் சர்வபாவமோசனச் சருக்கத்திலே, திருப்பூவணத்திலே பிதுர்களுக்குத் திதி தர்பணம் செய்வோர் அவரது ஆயுள் முடிந்தவுடன் விமானத்தில் செல்வர் என இப்பாடல்கள் குறிப்பிடுகிறது.
“தந்தைதாய்வர்க்கத்தோடுந்தகும்பெருங்கிளைஞரோடுஞ்
சுந்தரந்துதைந்திலங்குந்தூய நல் ‘விமானம்’ நூறு
முந்துறவந்துசூழமுடுகியேகடிதினேகி
யெந்தைசேர்கயிலைவெற்பினிடத்தினிதமர்வரன்றே”
“தக்கபன்மணிப்பதாகைத்தவள நல் ‘விமானத்து’ ஏறி
மிக்கசீர்விளங்குமந்தவிரிஞ்சனதுலகமெய்தித்
தொக்கசெம்மணிகள்வானிற்சுடரவன்வெயின்மறைத்தொண்
டிக்கிலகொளிபரப்புஞ்சித்திரமண்டபத்தில்”
திருப்பூவணப் புராணத்திலே, விண்டு (விஷ்ணு) தீர்த்தத்திலே மூழ்கி, விண்டு(விஷ்ணு)லிங்கத்தை வழிபட்டோர் விமானம் ஏறி வின்னுலகு செல்வர் என்று இலக்குமி சாபமோசனச் சருக்கப் பாடலிலே குறிப்பிடப் பெற்றள்ளது.
“மின்னுமாமணி ‘விமானம்’ மேவியே
துன்னரம்பையர்சூழ்ந்துபோற்றவே
தென்னுறுந்திசைசேர்தராமலே
மன்னுபேரின்பமருவிவாழ்வரே”
திருப்பூவணப்புராணம் உமாதேவி திருவவதாரச் சருக்கத்திலே, தக்கனின் ஆயிரம் புதல்வர்களும் விமானத்தில் ஏறிச் சென்று அவரவர்க்குரிய இடத்தை அடைந்து தவம் செய்தனர் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.
“விடுத்தவாயிரமைந்தருமே ‘விமான’தமா
மடுத்தலத்திடைவைகியேமாதவம்புரிய
வடுத்தனன்முனமகன்றநாரதனருள்வீடு
கொடுத்திடும்படிகோதிலாக்குமரர்கடம்முன்
திருப்பூவணப் புராணம், தக்கன் வேள்வியழித்த சருக்கத்திலே உமையம்மை விமானத்தில் ஏறி தக்கனின் யாகசாலைக்குச் சென்றாக இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
“உரைத்தருளுவொல்லையினுவந்துவிடைகொண்டே
விருப்பினோர் ‘விமானம்’ அதின் மேவி யருணந்தி
யருட்டருகணங்களொடுமக்கொடியதக்கன்
றருக்கினுடன்வேள்விபுரிசாலையிடைசார்ந்தாள்”
“சார்ந்து உயர் ‘விமானம்’ அது தன்னைமுனிழிந்து
சேர்ந்துரியதக்கனெதிர்செல்லவவண்வல்லே
வார்ந்தகுழன்மாதுதனைமற்றவன்வெகுண்டே
நேர்ந்தபலநிந்தனைநிகழ்த்தியிடலுற்றான்”
திருப்பூவணப் புராணம் தீர்த்தச் சருக்கத்திலே, திருப்பூவணத்தில் உள்ள தீர்த்தங்களில் முறைப்படித் தீர்த்தம் ஆடுவோர், அவரது ஆயுள் முடிவிலே விமானம் ஏறிச் செல்வர் என்று இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
“உறைதருமத்திங்கடனிலொண்கலைசேர்பூரணையினோரைதன்னின்
மருவியவன்புடன்பிரமதாண்டவர்மாபூசைசெய்வோர்மகேசலோகத்
தொருபிரமகற்பமுறைந்துகாந்தத்தினுருத்திரனோடுற்றுப்பின்றைக்
குருமணி நல் ‘விமானம்’ மேல்கொண்டு சிவலோகமதிற்குடியாய்வாழ்வார்”
“இப்பரிசங்கமர்ந்துறையுமெல்லையினெம்மீசனருளிருந்தவாறோ
மைப்படியுந்திருநயனவல்லிதவம்புரிதலத்தின்வண்மையேயோ
வொப்பரிய நவமணி சேர் உயர் ‘விமானம்’ ஏறி உம்பர்சூழச்
செப்பரியவுலகமெலாந்திசைவிசயஞ்செய்தின்பந்திளைத்துவாழ்வார்”
திருப்பூவணப் புராணம் நளன் கலிமோசனச் சருக்கத்திலே -
“அன்றியேகயிலையினணைந்தநந்தநாள்
வென்றியின் நவமணி ‘விமானத்து’ ஏறியே
துன்றுபூம்பொழிறொறுஞ்சுவேச்சையாலுறீஇச்
சென்றரனுடன்சிவபுரியிற்சேர்குவார்”
திருப்பூவணத்தில் கோட்டை எழுப்பிய வரலாறு கூறும் திருவிளையாடற் புராணம் (49) திருவாலவாய்க் காண்டத்திலே, மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர் விமானத்திலிருந்து இறங்கி வந்ததாகப் பாடப் பெற்றுள்ளது.
--------------------------------
திருவிளையாடற் புராணத்தில் விமானம் -
ஈசன். பிரளயம் வற்றிய பின்னர் மீண்டும் உலகங்களும் உயிர்களும் உண்டாகுமாறு செய்தார். அப்போதுசந்திரனது குலத்தில் பாண்டியர்களைத் தோற்றுவித்தார். அப் பாண்டியவம்சத்தில் வங்கிய சேகரபாண்டியன் தோன்றினான். ஒருசமயம். வங்கிய சேகர பாண்டிய மன்னன் "மதுரை மக்களெல்லாம் வசிக்கத்தக்க தகுதியுடையதாக நகரினை உண்டாக்க வேண்டுமென விருப்பமுற்று. மதுரை நகரின் பழையஎல்லைகளை வரையறுத்துத் தரவேண்டும்" என இறைவனிடம் வேண்டி நின்றான். மன்னனதுவிருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வானில் இருந்து ஒரு விமானத்தில் இறங்கியசோமசுந்தரக்கடவுள் ஒரு சித்தமூர்த்தியாகி அற அருட்கடலாகித் தோன்றினார். பாம்பினால் அரைஞார்ம்கோவணமும் அணிந்திருந்தார். பிளவுடைய நாக்கையுடைய பாம்பினையும் குழையும் குண்டலமும்.காலில் சதங்கை கோர்த்த கயிறும் கை வளையும் உடையவராகத் திகழ்ந்தார். அவ்வாறு வந்தசித்தமூர்த்தியானவர் தனது கையில் கட்டியிருந்த நஞ்சுடைய பாம்பை ஏவி நீ. இம் மன்னனுக்குமதுரையின் எல்லைகளைக் காட்டு எனக் கட்டளையிட்டார்.
“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி ‘விமான’நின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்”
----------------
திருப்பூவணப்புராணத்தில் இதுபற்றிய பாடல் -
“நீடுதிரைக்கடலாடைநிலவேந்தர் நேரிழையார் நெருங்க வெங்குஞ்
சூடகக்கைச்சுரர் மடவார் துணைவரொடும் ‘விமான’த்திற்றுவன்றுமூதூர்
ஆடலர்தாரிட்டருச்சித்திந்திரன் வந்தனைபுரியுமெழில்கொண்மூதூர்
மாடமலிமறுகுதிகழ்வளமைசாறமிழ்ச் சங்கம் வளருமூதூர்
இவ்வாறகத் திருப்பூவணப் புராணத்திலே பல்வேறு பாடல்களில் நற்கதி பெறும் மானிடர் விமானம் ஏறிச் செல்வர் என்றும், சிவனும் பார்வதியும் பூதகணங்களும் விமானத்தில் செல்வர் என்பதும் பாடப்பெற்றுள்ளது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
https://kalairajan26.blogspot.com/2014/02/flights-on-puranams.html