Friday, 4 October 2019

கீழடியை ஆண்ட கரடி

கூடலை (கீழடியை) ஆண்ட கரடி


சிவந்த செங்கற்களால் நீண்ட மதில்களையும் நெடிய பல கட்டிடங்களையும் கொண்டுள்ள இந்த நகரத்தைக் “கருப்புக் கரடி” ஒன்று அரசாண்டுள்ளதாம்.  நம்பும்படியாகவா உள்ளது? நம்பித்தான் ஆக வேண்டும்.  ஏனென்றால் இப்படிச் சொல்வது நானல்ல, முத்தமிழ்ச் சங்கப் புலவர் எருக்காட்டூர்த் தாய்ங் கண்ணனார்.  

திருப்பரங்குன்றத்திற்கும் திருப்பூவணத்திற்கும் இடையே கீழடி உள்ளது.  கீழடி அருகே தொல்லியலாளர் ஒரு பெரிய நகர நாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்து உலகு அறியச் செய்துள்ளனர்.  ஐயம் தெளிவுற அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து, இந்தத் தொன்மையான நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது என அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

கரையான் புற்றும் கரடியும் - சிறிய உருவத்தை உடையது கரையான்.  கரையானின் வாய் மிகவும் சிறியது.  இருப்பினும் ஆயிரக்கணக்கான கரையான்கள் ஒன்று சேர்ந்து அரும்பாடுபட்டு இரவுபகலாக உழைத்து, அவற்றின் மிகச் சிறிய வாயில் சிறிதுசிறிதாக மண்ணை எடுத்துச்  சிவந்த நிறத்தில் உயரமான புற்றை ஒன்றைக் கட்டிவிடும்.  இந்தப் புற்றினுள் உள்ளே உண்டக்கட்டிச் சோறு போன்று இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துக் குடும்பம்போல் கூடி வாழும்.     இந்தச் சிவந்து உயர்ந்த கரையான் புற்றைக் கரிய நிறமுடைய கரடியானது தனது பெரிய கையில் உள்ள நீண்ட நகத்தினால் தோண்டி எடுத்து, உள்ளே உள்ள கரையான் புற்றுச் சோற்றையும் தின்று தீர்த்து விட்டது.

வெளைப்பூவும் வெள்ளைவாய்க் கரடியும் - கரையான் புற்றில் எப்படித் துளை உள்ளதோ அதேபோன்று துளை உடைய வெள்ளைநிறப் பூ உள்ளது.  கரையான் புற்றினுள்ளே உள்ள அறையில் சோறு இருப்பது போல், இந்தப் பூவின் துளையினுள்ளே உள்ள அறையில் தேன் நிறைந்து இருக்கும்.   கரையான் புற்றின் சோற்றைத் தின்றுதீர்த்தும் திருப்தி அடையாத இந்தக் கரிய கரடியானது, வான் உயர வளர்ந்திருக்கும் மரத்தின் மேலே ஏறி, இந்த வெள்ளைநிறப் பூவையும் பறித்து அதன் தேனைக் குடித்து மகிழ்ந்து இருக்கிறது.

செழியனும் கரடியும் - இந்தக் கரடி போன்றவனாம் செழியன்.  இவன் கரையான் போன்ற சிறுசிறு சிற்றரசர்கள் பெரிதும் முயன்று கட்டிய மண்  கோட்டைகளைத் தனது வலிமையான நகம்போன்ற வேல்படையால் அழித்து, அதனுள்ளே உள்ள செல்வதை எடுத்துச் சென்றுவிட்டான்.  ஆனாலும் இவனுக்குத் திருப்தி இல்லை.


சேரநாட்டில் முசிறி உள்ளது.  சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது.  அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.  அந்த நுரைகள் சிதறிப் போகுமாறு சிறந்த தொழில்நுட்பம் கொண்ட மரக்கப்பல்கள் செல்கின்றன.  அந்தக் கப்பல்களில் யவனர்கள் பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர்.  வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால் எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது இந்த முசிறி நகரம்.



கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்று அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.

கூடலும் கரடியும் - கரிய கரடி போன்ற செழியனுடைய கொடி அசையும் தெருக்களையுடையது கூடல் நகரம்.  இந்தக் கூடல் மாநகருக்கு மேற்குப்புறத்தே  திருப்பரங்குன்றம் இருக்கிறது.  இந்தத் திருப்பரங் குன்றத்தில்  பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக் கொடி உயர்த்து பறக்கிறது.


வருடத்திற்கு ஒருமுறை திருவிழா என்றால் விடுமுறை கொடுக்கலாம்.  வருடவிடுமுறை, மாதவிடுமுறை, வாரவிடுமுறை என்று எந்தவொரு விடுமுறைநாளும் இல்லாமல், இடையறாத திருவிழாக்களைக் கொண்டுள்ளது இந்தத் திருப்பரங்குன்றம்.   விடுமுறையே அளிக்காமல்  இந்த உயர்ந்த மலையில், நெடியோனாகிய முருகன் அருளுகிறான்.  அந்தத் திருப்பரங்குன்றின் மேலே உள்ளது குண்டு சுனை.  இங்கே வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்று, இரண்டுபேர் காதல் செய்கின்றனர்.
நெஞ்சமே!  நான் இந்தச் சிவந்த செங்கற்களை உடைய நீண்ட இரண்டை மதிலையும், நெடிய மாளிகைகளையும் உடைய இந்த இடத்திலிருந்து எனது முப்பாட்டன் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்தைப் பார்த்து வணங்கி மகிழ்ந்திருப்பேன்.  இதைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக!
முப்பாட்டன் முருகனைப் போற்றுவோம்.  கூடல் என்ற மாமதுரையை ஆண்ட மன்னன் செழியனைப் போற்றுவோம். தொல்லியலாளர் போற்றவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 18 (05.10.2019) சனிக்கிழமை.

நன்றி -  1)    https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
2)    படங்கள் இணைத்தில் இருந்தவை.   அவற்றைப் பதிவு செய்தோருக்கு நன்றி.

கற்றது - 
1) அகம் 149.
எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                     
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)
2) https://kalairajan26.blogspot.com/2018/06/world-wide-big-corporate-tamils.html

Wednesday, 25 September 2019

சங்ககாலப் பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்


சங்ககாலப் பாண்டியரின் 
அரண்மனையும் கோட்டைவாயிலும் 
எங்கே உள்ளன ?

கீழடி அருகே, தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடமானது ஒரு தொழிற்கூடம் என்கின்றனர். அப்படியானால் இந்த நகரை ஆண்ட பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும் எங்கே உள்ளன ? 
என்ற கேள்வி எழுகிறது.

பண்டைத் தமிழரின்  தொன்மையான நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  இன்றைய கீழடி அன்றைய மதுரையாக இருந்துள்ளது.  இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்த “கூடல் என்ற ஆலவாய்நகரம்” என்கிறது திருவிளையாடல் புராணம்.  தொல்லியலாளர் தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பன்றி முத்திரையும் பாண்டியனின் மந்திரிகளும்
தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டெடுத்துள்ள ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.  இவையனைத்தும் பண்டைத் தமிழரின் நாகரிகத்தின் நகர நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன.  கண்டெடுக்கப் பெற்றுள்ள பொருட்களில் ஒன்றான வராக உருவம் பதித்த பவளம்மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்தப் “பன்றி உருவம் பதித்த பவளம்” பண்டைய பாண்டியமன்னனிடம் மந்திரிகளாகப் பணியாற்றிய 12 மந்திரிகளின் இலட்சினையாக இருக்கவேண்டும். இதுவே முத்தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த நகரமாக இருக்க வேண்டும்.  இங்குதான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் கூடித் தமிழாய்ந்து இருக்க வேண்டும் https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html என எழுதியுள்ளேன்.

இதை வாசித்த நண்பர் ஒருவர், 12 மந்திரிகளின் முத்திரைதான் இந்தப் பன்றி உருவம் பதித்த பவளம் என்று சொன்னால், “பாண்டிய மன்னர்கள் தொடர்பான எந்த ஆதாரமும் கீழடியில் இது வரை கிடைக்க பெறவில்லையே…..” என்று என்னிடம் கேட்டார்.


பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்
என்னிடம் கேட்டால், பாண்டிய மன்னர்கள் வசித்த அரண்மனையும், அரண்மனைக் கோட்டை வாயிலும் புதையுண்டுள்ள சிவன்கோயிலுக்குத் தென்கிழக்கே, சந்திரமூலையிலே (அஃனிமூலையிலே) உள்ளன என்றும், பாண்டியர்கள் வழிபட்ட சிவாலயமானது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடத்திற்கு அருகே சுமார் 500மீட்டர் கிழக்கே புதையுண்டுள்ளது என்பேன்.

அகரம் தமிழரது சிகரம்
பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும்.  

கோட்டைக் கருப்பணசாமி  
(https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும்.

இவ்வளவு கண்டுபிடித்துள்ள நமது தொல்லியலாளர்கள் புதையுண்டுள்ள பாண்டியர்களது அரண்மனையையும் தோண்டியெடுத்து உலகு அறியச் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Sunday, 22 September 2019

சங்கப்பாடல்களில் சிவபெருமான்

சங்கப்பாடல்களில் சிவன்
(அண்ணல் ஆலவாயன்)


சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ  வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். 

சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை எனலாம்.   ஆனால் சங்க இலக்கியங்கள் சிவபெருமானை “அண்ணல்” என்று போற்றுகின்றன.  அண்ணல் என்றால் தலைவன் தலைமை என்று பொருள்.  சங்கப்பாடல்களில் 79 பாடல்வரிகளில் அண்ணல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.   மேலும் சிவபெருமான்  ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,  மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெற்றுள்ளனான். 

மதுரையின் மத்தியில் சிவன்கோயில் -


திருமாலின் தொப்புளில் தாமரைப் பூ தோன்றி மலர்ந்துள்ளது.  அந்தத் தாமரைப் பூவைப் போன்று அழகாக உள்ளது கூடல் (மதுரை). அந்தப் பூவின் அக இதழ்களைப் போன்று தெருக்கள் உள்ளன.   தாமரைப் பூவின் மத்தியில் அதன் பொகுட்டு இருப்பது போன்று,  இந்த ஊரின் மத்தியில் அண்ணல் (சிவபெருமானின்) கோயில் உள்ளது.  தாமரைப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்.   அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழும் புலவர்கள்.  அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த  நான்கு வேதங்கள்.  இந்த நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் அதிகாலை வேளையில் இந்த வேதங்களை ஓதுகின்றனர்.  இவர்கள் ஓதும்  குரலைக் கேட்டு,   மிக்க இன்பமான துயிலிலிருந்து மதுரை மக்கள் எழுகின்றனர்.  வாழ்த்துப் பெற்ற  வஞ்சியும் உறைந்தையும் போல கோழி கூவும் போது மதுரை மக்கள் எழுவதில்லை.


பரி பாடல் 30 
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்  - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

-------------------------------------------

1) அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை - நற் 194/5
2) அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென - நற் 236/8
3) வண்ணம் மிகுந்த அண்ணல் யானை - நற் 273/6
4) அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி - நற் 372/7

4) மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை - குறு 260/5
5) திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு - குறு 338/1
6) அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என - குறு 343/2
7) புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு - குறு 344/3
8) கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - குறு 363/1
9) அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - குறு 392/3

10) நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே - ஐங் 198/4
11) அண்ணல் யானை அரசு விடுத்து இனியே - ஐங் 466/2

12) அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் - பதி 12/12
13) அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த - பதி 22/26
14) அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் - பதி 23/14
15) இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்/வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் - பதி 33/1,2
16) அண்ணல் யானை அடு போர் குட்டுவ - பதி 42/8
17) ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் - பதி 44/7
18) வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என - பதி 51/23
19) குடவர் கோவே கொடி தேர் அண்ணல்/வாரார் ஆயினும் இரவலர் வேண்டி - பதி 55/9,10
20) காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்/மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் - பதி 64/15,16
21) தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்/மாடோர் உறையும் உலகமும் கேட்ப - பதி 70/22,23
22) வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்/முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து - பதி 81/18,19
23) பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்/கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் - பதி 86/8,9

24) ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய - கலி 9/10
25) ஆர மார்பினை அண்ணலை அளியை - கலி 52/15

26) செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்/இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் - பரி  1/30,31
27) மு கை முனிவ நால் கை அண்ணல்/ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் - பரி  3/36,37
28)  கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்  - பரி 8/127
29) மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7

அவையும் நீயே அடு போர் அண்ணால்/அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே - பரி  13/15,16

30) ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப - பரி 17/14
31) இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு/அணி மிக வந்து 
 இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க - பரி  23/65,66
32) கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - பரி 23/86
33) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்  - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

34) அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ - அகம் 23/8
35) இரு திரி மருப்பின் அண்ணல் இரலை - அகம் 34/4
36) அண்ணல் யானை வெண் கோடு கொண்டு - அகம் 61/9
37) மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு - அகம் 64/11
38) அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த - அகம் 75/8
39) அண்ணல் யானை அடு போர் சோழர் - அகம் 96/13
40) பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை - அகம் 115/13
41) வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு - அகம் 146/1
42) அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் - அகம் 208/4
43) தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு - அகம் 238/7
44) மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை - அகம் 251/15
45) வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு - அகம் 304/9
46) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - அகம் 373/16

47) ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் - புறம் 42/1
48) கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4
49) ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்/நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல - புறம் 67/2,3
49) அண்ணல் யானை அடு_களத்து ஒழிய - புறம் 93/13
50) அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95/9
51) அண்ணல் யானை வேந்தர்க்கு - புறம் 115/5
52) அண்ணல் நெடு வரை ஏறி தந்தை - புறம் 116/15
53) அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய - புறம் 126/20
54) ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்/இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று - புறம் 129/5,6
55) அண்ணல் யானை எண்ணின் கொங்கர் - புறம் 130/5
56) வென் வேல் அண்ணல் காணா ஊங்கே - புறம் 141/7
57) அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை - புறம் 158/2
58) நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்/கல் கண் பொடிய கானம் வெம்ப - புறம் 174/23,24
59) திண் தேர் அண்ணல் நின் பாராட்டி - புறம் 198/6
60) வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்/தார் அணி யானை சேட்டு இரும் கோவே - புறம் 201/12,13
61) இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்/எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் - புறம் 202/13,14
62) இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்/இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் - புறம் 203/6,7
63) கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ - புறம் 205/11
64) அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை - புறம் 249/7
65) பொலம் புனை ஓடை அண்ணல் யானை - புறம் 287/5
66) அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து - புறம் 288/2
67) பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு/ஒருவரும் இல்லை மாதோ செருவத்து - புறம் 311/4,5
68) அண்ணல் யானை அணிந்த - புறம் 326/14
69) ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்/கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் - புறம் 337/1,2
70) வினவல் ஆனா வெல் போர் அண்ணல்/யார் மகள் என்போய் கூற கேள் இனி - புறம் 353/6,7
71) அண்ணல் யானை வழுதி - புறம் 388/15
72) அண்ணல் யானை வேந்தர் - புறம் 390/27
73) மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி - புறம் 393/9

74) திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
75) அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப - சிறு 200
76) கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்/கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 207,208
77) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - மது 348
78) அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் - குறி 54
79) அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் - குறி 171

------------------
நன்றி - பாடல் வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in/


-----------------------

பரங்குன்றை வாழ்த்தல்
125
“உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு”
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி 8/127
--------------------------------------------


“விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்”
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
-----------------------------------------------------------------------------------------

Sunday, 1 September 2019

இது ஆலவாய் என்ற பண்டைய மதுரையின் வராக முத்திரையா?

வராக முத்திரை 

கீழடி அருகே அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ள வராகமுத்திரையானது ஆலவாயை ஆண்ட வராகர்களின் முத்திரையா?

இன்றைய கீழடி அருகே அன்றைய மதுரை இருந்தது. இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.

இந்தத் தொன்மையான ஆலவாய் நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.  அதில் செங்கல் கட்டுமானம், இரட்டை சுவர், சுடுமண் குழாய், கட்டைவிரல் அளவுள்ள சுடுமண் பானை, வராக உருவத்துடன் கூடிய சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் எனப் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.  இதில் “வராக உருவம் பதித்த பவளம்” மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


கீழடி அருகே புதையுண்டுள்ள இந்தப் பண்டைய ஆலவாய் நகரம் கடல்கோளால் அழிவதற்கு முன்னர், இந்த ஆலவாய் நகரை இராசராச பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.   அவனது ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள பன்றிமலையில் பன்றியின் அம்சமாகத் தோன்றிய 12 சகோதர்கள் இருந்தனர். இந்தப் 12 பேர்களையும் தனது அமைச்சர்களாக ஆக்கி இராசராசன் சிறப்புடன் தேசம் ஆண்டு வந்தான்.  

இராசராச பாண்டியனது ஆட்சிக்காலத்திற்குப் பின்னாள் , ஆதுலகீர்த்தி பாண்டியனின் மைந்தனாகிய கீர்த்தி வீடணன் காலத்தில் பிரளயத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றியது.   அந்தக் கடல்கோளால் ஆலவாய் என்ற இந்தத் தொன்மையான மதுரையானது முற்றிலும் அழிந்து போனது.  எல்லாமும் மண்ணுள் புதைந்து போயின.  பன்றிகளின் அம்சமாகத் தோன்றி அமைச்சர்களாக விளங்கி நல்லாட்சி செய்த 12 மந்திரிகளின் இலட்சினைகளும் புதைந்து போயின.
இந்தக் கடல்கோளில் சோமசுந்தரப் பெருமான் விமானமும், மீனாட்சி அம்மை ஆலயமும், இடபமலையும், யானை மலையும், நாக மலையும், பசுமலையும், பன்றி மலையும் மட்டும் அழியாமல் இருந்தன.

கடல்வெள்ளம் வற்றிய பிறகு உலகம் மீண்டும் சிவபெருமானால் படைக்கப்பட்டது.  தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டனர்.
சந்திர குலத்தில் தோன்றிய  ‘வங்கிய சேகர பாண்டியன்’ என்பவன் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலைச் சுற்றி ஒரு சிறு நகரத்தை அமைத்து நீதி வழுவாமல் அரசாண்டான்.  இந்த நகரமே இன்றைய மதுரை நகரமாகும்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி, வெள்ளையன் ஆட்சி முடிந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டைய ஆலவாய் நகரைக் கண்டறிந்து தொல்லியல் துறையில் அகழாய்வுகள் செய்துவருகின்றனர்.
இந்த அகழாய்வில்தான் பண்டைய வராக முத்திரை உடைய சூதுபவளம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
மாமதுரை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 15 (01.09.2019) ஞாயிற்றுக் கிழமை


நன்றி - படம், தினமலர்.
பார்வை -
1) தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2356972&fbclid=IwAR1VISgDBzbFai7nhiBsT-wC4vC2VjPJyFe3Ct0Wvp2X2aARnW60W7deRXY
2) திருவிளையாடல் புராணம்  45ஆவது படலம் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்,
3) திருவிளையாடல் புராணம் 46ஆவது படலம் - பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

வராகம் கேழல் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
2219.
பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.

2236.
மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.

2266.
வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர்.

2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.

கேழல் என்ற சொல் உள்ள பாடல்
2227.
தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர்
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும்
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே.


திருவிளையாடல் புராணம் 'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம்
'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

கேழ் = ஒளி, நிறம், ஒப்பு
கேழ்த்த = adj. bright, abundant., நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96)
மிகுந்த. கேழ்த்த சீரன் (திவ். திருவாய், 3, 1, 7)
கேழ்பவர் = நன்மையுடையார் the blessed.
கேழ்பு = நன்மை blessing.
கேழல் = நிறம், பன்றி, குளநெல்
கேழ்வரகு = ஒருவகைத் தவசம், கேப்பை
கேழற்பன்றி = ஆண்பன்றி

50.
பல நிற மணி கோத்த என்ன பல் நிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேய வாள் வினைக் கரும் கால் மள்ளர்
நில மகள் உடலம் கீண்ட சால் வழி நிமிர்ந்த சோரிச்
சலம் என நிவந்த செம் கேழ்த் அழல் மணி இமைக்கும் மன்னோ.

170.
தம் உயிர்க்கு இரங்கார் ஆகித் தருக்கொடு மானம் ஈர்ப்ப
தெம் முனை எதிர்ந்தார் ஆற்றும் செரு எனக் குருதிச் செம்கேழ்க் 
கொய்ம் மலர்க் குடுமிச் சேவல் கோழிளம் தகர் யோர் முட்டி
வெம் முனை நோக்கி நிற்பார் வேறு அவற்று ஊறு நோக்கார்.

352.
அழல் அவிர்ந்து அனைய செம் கேழ் அடுக்கிதழ் முளரிவாழ்க்கைத்
தொழுதகு செம்மல் தன்னைத் தொழுது மீண்டு  அகன்று நீங்கா
விழை தகு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை
வழிபடு குருவாக் கொண்டான் மலர் மகன் சூழ்ச்சி தேறான்.

756.
கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர் தோய்த்து அட்டிப்
பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத்
தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ் 
அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.

773.
பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்
நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அம் கேழ் 
வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்த
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது அம்மா.

1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.

2344.
கீழ்த் திசைத் தலைச் சென்று தன் கேழ் கிளர் வாலை
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலைக்
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்.

Thursday, 29 August 2019

கீழடி (ஆலவாய் என்ற மதுரை) அழிந்தது எவ்வாறு?

கீழடி (குலசேகரபாண்டியன் ஆண்ட 
ஆலவாய் என்ற மதுரை) 
அழிந்தது எவ்வாறு?

கழிவு நீர் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும்.



கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.
சில அறிஞர்கள் வைகை ஆற்றுப் பெருக்கால் அழிந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?
உள்ளது.

புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவுநீர்க் குழாயின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக் கொண்டு, இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா? அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா? என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.
புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது. 

எனவே கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவூநீர்க்குழாய் அதனுடைய இருப்பிடத்திற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டிருந்தால்,  இந்த நகரம் கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்கே கிடக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
மாறாக, இந்தக் கழிவுநீர்க் குழாயானது அதனுடைய இருப்பிடத்திற்குக்  கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இந்த நகரமானது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இந்தக் கழிவூநீர்க் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும் இந்தத் தொன்மையான ஆலவாய் நகரம் எப்படி அழிந்தது என்று !

அன்பன்
காசீசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன்
ஆவணி 12 (29.08.2019) விழாயன் கிழமை

பார்வை  - திஇந்து நாளிதழ் செய்தி.
திருப்புவனம்  - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.  2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/29/large/513341.jpg
இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
https://www.hindutamil.in/news/tamilnadu/513341-discovery-of-underground-hot-tub-1.html

Tuesday, 6 August 2019

தமிழரும் துருக்கரும்

திருவிளையாடல் புராணத்தில் 
‘துருக்கர் (துலுக்கர்)’என்ற சொல் 
உள்ள பாடல்கள்

திருவிளையாடற் புராணத்தில் மூன்று பாடல்களில் துருக்கர் (துலுக்கர்) பற்றிய செய்திகள் உள்ளன.



1) மாணிக்கம் விற்ற படலத்தில் (படலம் எண் 17), சிவபெருமான் விற்கக் கொண்டு வந்த பல்வேறுவிதமான உயர்ரகக் கற்கள் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.  முட்கள் பொருந்திய நாளத்தினையுடைய தாமரையின் மலர்போலும் கண்களையுடைய திருமால், மோகினிப் பெண் வடிவாகி ஓட,  அழகிய பாதி மதியினைச் சடையிற் சூடிய சிவபெருமான், ஒரு திருவிளையாட்டாக, மந்தரமலையின் எல்லை அளவாக, துள் அரி ஏறு போலத் தொடர்ந்து சென்று, பழிப்பில்லாத சிவந்த தீயாகிய இந்திரியத்தைச் சிந்தினான்.  அப்போது,  தூய அவ்விந்தில் ஐயன் (ஐயனார்) என்பான், காட்டிலுறையும் பரிவார தெய்வங்களோடும் வந்தனன்; அந்த விந்தினை, வலமிக்க கருடன் கௌவி, கடலிலும் துருக்க நாட்டிலும் பரவ விடுத்தது,  அதனால், கலுழப் பச்சை கற்கள் தோன்றின என்கிறது திருவிளையாடற் புராணம்.

மாணிக்கம் விற்ற படலம் (பாடல் எண் 1259)
அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான 
வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து 
துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும் 
பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை”.
-------------------------------------------------------------------

2) மெய்க் காட்டிட்ட படலத்தில் (படலம் எண் 30) குலபூடணபாண்டியனுக்குச் சுந்தரசாமந்தன் என்னும் பல்வேறு நாட்டிற்கும் ஓலை அனுப்பிப் படை திரட்டிய செய்து கூறப்படுகின்றது.  அதில் துருக்க நாட்டிற்கும் ஓலை அனுப்பி செய்தி பதிவு செய்யப்பெற்றுள்ளது.

மெய்க் காட்டிட்ட படலம் ( பாடல் எண் 1677)
எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை 
எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை 
எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை 
எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான்”.
-------------------------------------------------------------------


3)  சுந்தரப்பேர் அம்பு எய்த படலத்தில் (படலம் எண் 50)  வங்கிய சேகர பாண்டியன் மீது விக்கிரமசோழன் படையெடுத்து வந்தான்.  விக்கிரமசோழனுடைய படையில், போர்த்துணையாகி வந்த, வடக்கே உள்ள நாட்டிலுள்ளாராகிய துருக்கரும் ஒட்டியரும், இவரொழிந்த ஏனையோரும் இருந்துள்ளனர். அவர்கள் சோழனைச் சூழ்ந்து நின்று,  “நிற்பாயாக என்று கூறிச் சினந்து வைது,  நீ போருக்குத் தோற்றுப் போகின்றாய்;  இது உனது கருத்தானால், ஆண் தன்மை யாரிடத்தது; உனது பெருமை என்னாகும்” என்று சோழனைப் பழித்த செய்தி பதிவு செய்யப் பெற்றுள்ளது.

சுந்தரப்பேர் அம்பு எய்த படலம் 2373.
செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார் 
துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில் என்று 
உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது உன் 
கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம் என்னாம்”.
-------------------------------------------------------------------

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆடி 21 (06.08.2019) செவ்வாய் கிழமை.