Showing posts with label பன்றி முத்திரை. Show all posts
Showing posts with label பன்றி முத்திரை. Show all posts

Sunday, 1 September 2019

இது ஆலவாய் என்ற பண்டைய மதுரையின் வராக முத்திரையா?

வராக முத்திரை 

கீழடி அருகே அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ள வராகமுத்திரையானது ஆலவாயை ஆண்ட வராகர்களின் முத்திரையா?

இன்றைய கீழடி அருகே அன்றைய மதுரை இருந்தது. இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.

இந்தத் தொன்மையான ஆலவாய் நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.  அதில் செங்கல் கட்டுமானம், இரட்டை சுவர், சுடுமண் குழாய், கட்டைவிரல் அளவுள்ள சுடுமண் பானை, வராக உருவத்துடன் கூடிய சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் எனப் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.  இதில் “வராக உருவம் பதித்த பவளம்” மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


கீழடி அருகே புதையுண்டுள்ள இந்தப் பண்டைய ஆலவாய் நகரம் கடல்கோளால் அழிவதற்கு முன்னர், இந்த ஆலவாய் நகரை இராசராச பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.   அவனது ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள பன்றிமலையில் பன்றியின் அம்சமாகத் தோன்றிய 12 சகோதர்கள் இருந்தனர். இந்தப் 12 பேர்களையும் தனது அமைச்சர்களாக ஆக்கி இராசராசன் சிறப்புடன் தேசம் ஆண்டு வந்தான்.  

இராசராச பாண்டியனது ஆட்சிக்காலத்திற்குப் பின்னாள் , ஆதுலகீர்த்தி பாண்டியனின் மைந்தனாகிய கீர்த்தி வீடணன் காலத்தில் பிரளயத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றியது.   அந்தக் கடல்கோளால் ஆலவாய் என்ற இந்தத் தொன்மையான மதுரையானது முற்றிலும் அழிந்து போனது.  எல்லாமும் மண்ணுள் புதைந்து போயின.  பன்றிகளின் அம்சமாகத் தோன்றி அமைச்சர்களாக விளங்கி நல்லாட்சி செய்த 12 மந்திரிகளின் இலட்சினைகளும் புதைந்து போயின.
இந்தக் கடல்கோளில் சோமசுந்தரப் பெருமான் விமானமும், மீனாட்சி அம்மை ஆலயமும், இடபமலையும், யானை மலையும், நாக மலையும், பசுமலையும், பன்றி மலையும் மட்டும் அழியாமல் இருந்தன.

கடல்வெள்ளம் வற்றிய பிறகு உலகம் மீண்டும் சிவபெருமானால் படைக்கப்பட்டது.  தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டனர்.
சந்திர குலத்தில் தோன்றிய  ‘வங்கிய சேகர பாண்டியன்’ என்பவன் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலைச் சுற்றி ஒரு சிறு நகரத்தை அமைத்து நீதி வழுவாமல் அரசாண்டான்.  இந்த நகரமே இன்றைய மதுரை நகரமாகும்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி, வெள்ளையன் ஆட்சி முடிந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டைய ஆலவாய் நகரைக் கண்டறிந்து தொல்லியல் துறையில் அகழாய்வுகள் செய்துவருகின்றனர்.
இந்த அகழாய்வில்தான் பண்டைய வராக முத்திரை உடைய சூதுபவளம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
மாமதுரை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 15 (01.09.2019) ஞாயிற்றுக் கிழமை


நன்றி - படம், தினமலர்.
பார்வை -
1) தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2356972&fbclid=IwAR1VISgDBzbFai7nhiBsT-wC4vC2VjPJyFe3Ct0Wvp2X2aARnW60W7deRXY
2) திருவிளையாடல் புராணம்  45ஆவது படலம் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்,
3) திருவிளையாடல் புராணம் 46ஆவது படலம் - பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

வராகம் கேழல் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
2219.
பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.

2236.
மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.

2266.
வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர்.

2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.

கேழல் என்ற சொல் உள்ள பாடல்
2227.
தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர்
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும்
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே.