Sunday, 6 October 2019

திருவிளையாடல் புராணத்தில் தமிழும் தமிழ்நாடும்


திருவிளையாடற் புராணத்தில்  
'தமிழ், தமிழ்நாடு' என்ற சொற்கள்
இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு


தமிழ் அமிழ்தம் போன்றது.
நாம் நம் குழந்தைகளுக்குத் தமிழை ஊட்டி வளர்க்க வேண்டும்.
தமிழுண்ட குழந்தைகள் உடல்நலமுடனும் மனவளமுடனும் வாழ்வர்.

சங்கம் வளர்த்த தமிழ் மதுரைக்கு ஆலவாய் என்றும் கூடல் என்றும் பெயர்கள் உண்டு.  கீழடி அருகே தொன்மையான நகர நாகரிகத்தைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  இந்த நகரத்திற்குக் கூடல் மாநகரம் என்று பெயர்.   தென்மதுரை என்ற கபாடபுரத்தில் முதற் தமிழ்ச்சங்கமும்,  ஆலவாய் என்ற மதுரையில் இரண்டாம் தமிழ்ச்சங்கமும், கூடல் என்ற இந்நகரில் மூன்றாம் தமிழ்ச்சங்கமும் நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது.  சங்கம் வைத்துத் தமிழாய்ந்த சங்கப்புலவர்கள் இயற்றிய சங்கப்பாடல்களில் 16 பாடல்வரிகளில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஆலவாய் என்ற மதுரையானது சிவபெருமானது உலகு ஆகும்.  ஆலவாய்நகர் தவிர்த்து உலகில் உள்ள மற்றைய நகரகள் எல்லாம் பிரமனால் படைக்கப் பெற்ற திருமாலின் உலகு ஆகும்” என்கிறது திருவிளையாடற் புராணம்.  திருவிளையாடற் புராணத்தில் 68 பாடல்களில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

அன்னையரே, அன்னையரே,
தமிழன்னையரே,
நாம் நம் குழந்தைகளுக்கு அமிழ்தினும் இனிய தமிழை ஓதுவோம், தமிழன்னையரே.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மேனாள் துணைப்பதிவாளர் , அழகப்பா பல்கலைக்கழகம்.
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் ஆராய்ச்சிமையம், மதுரை.
புரட்டாசி 24 (11.10.2019) வெள்ளி கிழமை.

தமிழ்ச் சங்கப்பாடல்களில் தமிழ்
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் - சிறு 66
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து - பதி 63/9
தமிழ் வையை தண்ணம் புனல் - பரி 6/60
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் - பரி 9/25
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் - பரி 26/1
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் - பரி 30/5
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம் - பரி 31/1
தமிழ் கெழு மூவர் காக்கும் - அகம் 31/14
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் - அகம் 227/14
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து - புறம் 19/2
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் - புறம் 35/3
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் - புறம் 50/10
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து - புறம் 51/5
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப - புறம் 168/18
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக - புறம் 198/12

திருவிளையாடல் புராணப் பாடல்களில் தமிழ்
64.         
பின் எவன் உரைப்பது அந்தப் பெரும் தமிழ் நாடு ஆம் கன்னி
தன் இடை ஊர்கள் என்னும் அவயவம் தாங்கச் செய்த
பொன் இயல் கலனே கோயில் மடம் அறப்புற நீர்ச்சாலை
இன் அமுது அருத்துசாலை என உருத் திரிந்தது அம்மா
74.         
அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம் அன்பாம்
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.        
81.         
மாயவன் வடிவாய் அது வைய மால் உந்திச்
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப் பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.     
83.         
சிறந்த தண் தமிழ் ஆலவாய் சிவன் உலகு ஆனால்
புறம் தயங்கிய நகர் எலாம் புரந்தரன் பிரமன்
மறம் தயங்கிய நேமியோன் ஆதிய வானோர்
அறம் தயங்கிய உலகு உருவானதே ஆகும்
86.         
கடுக் கவின் பெறு கண்டனும் தென் திசை நோக்கி
அடுக்க வந்து வந்து ஆடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வார மென் கால் திரு முகத்து இடை வீசி
மடுக்கவும் தமிழ் திருச் செவி மாந்தவும் அன்றோ.
89.         
தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.     
108.       
குமிழ் அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின்
உமிழ் தரும் பா ஞானம் உண்டு உமிழ்ந்த வாய் வேதத்
தமிழ் அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும்
அமிழ்த வெண் திரை வைகையும் ஒரு புறத்து அகழ் ஆம்.
146.       
வரு விருந்து எதிர் கொண்டு ஏற்று நயன் உரை வழங்கும் ஓசை
அருகிருந்து அடிசில் ஊட்டி முகமனன் அறையும் ஓசை
உரை பெறு தமிழ் பாராட்டு ஓசை கேட்டு உவகை துள்ள
இருநிதி அளிக்கும் ஓசை எழுகடல் அடைக்கும் ஓசை.
228.       
மால் அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி வாதாவி வில்வலனைக்
கொலை புரி தரும மூர்த்தியே விந்தக் குன்று அடக்கிய தவக் குன்றெ
அலைகடல் குடித்த அருள் பெரும் கடலே அரும் தமிழ்க் கொண்டலே தென்பார்
துலை பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம் எனத் துதித்தார்.
340.       
சுந்தரன் என்று எழுதிய கூர் அம்பு எய்து செம்பியன் போர் தொலைத்தவாறும்
செந்தமிழோர்க் இயற்பலகை அருளியதும் தருமிக்குச் செம் பொன் பாடித்
தந்ததுவும் மாறுபடு கீரற்குக் கரை ஏற்றம் தந்தவாறும்
விந்தம் அடக்கிய முனியால் கீரன் இயல் தமிழ் தெளிய விடுத்த வாறும்.        
520.       
மனு அறம் உவந்து தன் வழிச் செல நடத்தும்
புனிதன் மலயத் துவசன் வென்றி புனை பூணான்
கனி அமுதம் அன்ன கருணைக்கு உறையும் காட்சிக்கு
இனியன் வட சொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன்.         
532.       
மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில்
தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப
ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த.           
569.       
செந்தமிழ் வடநூல் எல்லை தெரிந்தவர் மறைநூல் ஆதி
அந்தம் இல் எண் எண் கேள்வி அளந்தவர் சமயம் ஆறும்
வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போதம் ஆண்ட
சிந்தனை உணர்வான் மாயை வலி கெடச் செற்ற வீரர்.  
599.       
சிவ பரம் பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் தென்னவர் மன்னனாய் மலயத்
துவசன் என்று ஒருவன் வரும் அவன் கற்பின் துணைவியாய் வருதி அப்போது உன்
தவ மகவாக வருவல் என்று அன்பு தந்தனள் வந்த வாறு இது என்று
உவமையில் பொதியத் தமிழ் முனி முனிவர்க்குஓதினான் உள்ளவாறு உணர்ந்தார்.              
716.       
தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார்.             
822.       
எந்தையிருத் திருக்கூத்தென் றுமிந்நிலைநின் றியார்க்கும்
பந்தவெம் பாசநீங்கப் பரித்தருள் செய்தி யென்னச்
செந்தமிழ்க் கன்னி நாடுசெய்தமா தவப்பே றெய்தத்
தந்தன மென்றான் வேந்தலை தடுமாறநின்றான்.
869.       
ஆரொடு மடல் அவிழ் பனை யொடும் அர நிகர் இலை நிம்பத்
தாரொடு புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவாப்
பாரொடு திசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் குழுமிச்
சீரொடு பல திரு வொடு வரு செயல் அனையது நதியே.  
1054.    
கோமகன் நிகழும் நாளில்கோள் நிலை பிழைத்துக் கொண்மூ
மா மழை மறுப்பப் பைங்கூழ் வறந்து புல் தலைகள் தீந்து
காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர்
தாம் அது தீர்வு நோக்கித் தமிழ் முனி இருக்கை சார்ந்தார்.
1127.    
தென் கடல் வடபால் நோக்கிச் செல்வது போலத் தென்னன்
தன் கடல் அணிகம் கன்னித் தண் தமிழ் நாடு நீந்தி
வன் கட நெறிக் கொண்டு ஏகி வளவர் கோன் எதிர் கொண்டு ஆற்றும்
நன் கடன் முகமன் ஏற்று நளிர் புனல் நாடு நீந்தி.
1146.    
மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்
தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்
தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு சார்ந்தான்.            
1602.    
நிலை நிலையாப் பொருள் உணர்ந்து பற்று இகந்து  கரணம் ஒரு நெறியே செல்லப்
புலன் நெறி நீத்து அருள் வழி போய்ப் போதம் ஆம் தன் வலியைப் பொத்தி நின்ற
மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதி போல் விளங்கி மாறி ஆடும்
தலைவன் அடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி அடைந்தான் தமிழ்ர் கோமான்.
1603.    
செம் கண் மால் விடை மேல் விடங்கர் செருக்களத்து இடை வாள் எடுத்து
அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் தமிழ் மாறன் மேல்
சங்கை இட் அமனிசரார் ஆற்றிய தறு கண் வேள்வி முளைத்து ஓர்
வெம் கண் வாள் அரவைத் துணித்து விளித்தவாறும் விளம்புவாம்.
1606.    
நாயினும் கடை ஆன மாசுடன் இருள் புரை நெஞ்சு அரண்
ஆயினும் சமண் வேடர் அன்ன தறிந்து கொண்டு வெகுண்டு அழற்று
 இரும்பு என மான வெம் கனல் சுட்டிடத்தரியார் களாய்
மாயிரும் தமிழ் மாறனைத் தெற வஞ்ச வேள்வி இயற்றுவார்.
1616.    
அனுமதி கொடு தொழுது இறை பாத மகமதி கொடு புறன் அடைகின்ற
பனிமதி வழி வரு தமிழ் மாறன் பகழி யொடு அடுசிலை யினன் ஏகிக்
குனி மதி தவழ் தரு மதி நீடும் கொடி அணி குட கடை குறுகா முன்
தனிவரை என நிகர் தரு கோபத்தழல் விழி அரவினை எதிர் கண்டான்.          
1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.
1968.    
கனவட்டத்து அடி இடறப் பொறி விட்டுப் புலன் அவியக்
                           கரணத் உட்பொதி உயிர் விட்டவன் ஆகம்
தனை ஒக்கல் பவனர் எடுத்தனர் கிட்டிக் குரிசில் கடைத்
                           தலை இட்டத் திறம் மொழியத் தமிழ் மாறன்
இனை உற்றுப் பனவர் கையில் கனகக் குப்பைகள் நிறை
                        வித்து எமதிக் உற்றவனை எடுத்து எரிமாலை
புனைவித்த அக் கடன் முடிவித்தனன் மற்றப் பழி படரின்
                            புதையப் பற்றியது இடைவிட்டு அகலாதே.
2129.    
பின்னே ஏழ் அடி சேண் சென்று பெருமை சான்ற வரிசையினால்
தன் நேரிசையான் தனை விடுத்து மீண்டான் ஆகத் தமிழ் மதுரை
மின்னேர் சடையார் இசைத் தொண்டன் தானும் மீண்டு வெயில் விரிக்கும்
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை நகர் புக்கான்.          
2244.    
என்று கூறிய அரும் தமிழ்க்கு இறைவனை நோக்கித்
துன்று மாதவர் அறிவிலாச் சூகர உருவக்
குன்றின் மீது இருந்தவர் எலாம் கோதற நோற்று
நின்ற காரணம் யாது எனக் குறு முனி நிகழ்த்தும்.
2279.    
இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.
2333.    
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2402.    
அத் தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின்
மெய்த்தகு தன்மை எய்தி வேறு வேறு இயக்கம் தோன்ற
உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர்
முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான் மன்னோ.
2409.    
தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம்
நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல் வேண்டும்
இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி
துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தரக் கடவுள் என்றார்.
2414.    
வண் தமிழ் நாவினார்க்கு மன்னவன் வரிசை நல்கக்
கண்டு உளம் புழுங்கி முன்னைப் புலவர் அக் கழகத் தோரை
மண்டினர் மூண்டு மூண்டு வாது செய் ஆற்றன் முட்டிப்
பண்டைய புலனும் தோற்றுப் படர் உழந்து எய்த்துப் போனார்.
2431.    
நதி அணிந்தவர் தம் மொடு நாற்பத்து ஒன்
பதின்மர் என்னப் படும் புலவோர் எலாம்
முதிய வான் தமிழ் பின்னு முறை முறை
மதி விளங்கத் தொடுத்து அவண் வாழும் நாள்.
2520.    
தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.    
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.   
2531.    
கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலம் குடி கொண்டு அகத்து அழகு எலாம் கொள்ளைக் கொள்ளத்
தண் தமிழ் மூன்றும் வல்லோன் தான் எனக் குறி இட்டு ஆங்கே
புண்டர நுதலில் பூத்துப் பொய் இருள் கிழித்துத் தள்ள.
2566.    
சம்பக மாறன் என்னும் தமிழ்நர் தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.     
2567.    
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.
2577.    
விடை கொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும் தேயம்
தொடை பெறு தமிழ் நாடு என்று சொல்லுப வந்த நாட்டின்
இடை பயில் மனித்தர் எல்லாம் இன் தமிழ் ஆய்ந்து கேள்வி
உடையவர் என்ப கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் வேண்டும்.
2578.    
சித்தம் மாசு அகல அந்தச் செம் தமிழ் இயல் நூல் தன்னை
அத்தனே அருளிச் செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதல் நூல் தன்னை மற்று அது தெளிந்த பின்னும்
நித்தனும் அடியேன் என்று நின் அடி காண்பேன் என்றான்.
2584.    
இருந்த மாதவச் செல்வனை எதிர் வர நோக்கி
அருந்த வாவிற்கு இயல் தமிழ் அமைந்தில எம்பால்
தெரிந்த நீ அதை அரி தபத் தெருட்டு எனப் பிணியும்
மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான்.
2598.    
அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து எய்தினாரே.
2602.    
ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.
2605.    
பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை கேளா.
2607.    
இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்.
2610.    
உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.
2618.    
சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.
2622.    
சங்கவான் தமிழ்த் தெய்வப் புலவரோடும் உடன் எழுந்து சைல வேந்தன்
மங்கை நாயகன் போன வழிபோய் அங்கு இருந்தார் அவ் வழி நாள் வைகல்
கங்குல்வாய் புலரவரும் வை கறையில் பள்ளி உணர் காலாத்து எய்தி
அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் இலிங்க உரு அங்குக் காணார்.
2630.    
அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய் எந்தாய்.
2674.    
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.
2949.    
கரியின் ஓசையும் பல்லிய ஓசையும் கடும் தேர்ப்
பரியின் ஓசையும் இன் தமிழ் ஓசையும் பாணர்
வரியின் ஓசையும் நிரம்பிய மணி நகர் எங்கும்
நரியின் ஓசையாய்க் கிடந்தது விழித்தது நகரம்.
3090.    
பின்னும் அவர் கனவின் கண் மன்றுள் நடம் பிரியாத பெருமான் வந்து
முன்னவனைப் பெருந்துறையில் குருந்தடியில் ஆட் கொண்ட முறையினாலும்
இன் இசை வண் தமிழ் மணி போல் பாடும் காரணத்தாலும் யாம் அன்று இட்ட
மன்னிய பேர் மாணிக்க வாசகன் என்று அழை மின்கள் வருவான் என்றார்.
3118.    
அரும் தமிழ்ப் பாண்டி வேந்தற்கு உறுதி ஆக்கம் செய்யும்
மருந்தினில் சிறந்த கற்பின் மங்கையர்க்கு அரசி யாரும்
பெருந்தகை அமைச்சு நீரில் குழைத்து அன்றி பிறங்கப் பேறு
தரும் திரு நீறு இடாராய் சிவ அடிச் சார்பில் நின்றார்.      
3133.    
வெம் குரு வேந்தர் அடி பணிந்து அடியேன் குலச் சிறை விளம்பும் விண்ணப்பம்
இங்கு எழுந்து அருளிச் சமண் இருள் ஒதுக்கி எம் இறை மகற்கு நீறு அளித்துப்
பொங்கி வரும் பணை சூழ் தென் தமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி
எங்களைக் காக்க என்ற பாசுரம் கேட்டு எழுந்தனர் கவுணியர்க்கு இறைவர்.
3147.    
வைதிகத்து தனி இளம் சிறு மடங்கலேறு அடைந்த
செய்தியைத் தெரிந்து அயன் மலை இடங்களில் திரண்ட
கை தவத்த எண்ணாயிரம் கயவரும் ஒருங்கே
எய்தி முத்தமிழ் விரகர் மேல் பழித்தல் இழைத்தார்.           
3150.    
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.       
3157.    
அழைமின் ஈண்டு என அரசனும் இசைந்தனன் ஆர்வம்
தழையும் மந்திரத் தலை மகன் தனி நகர் எங்கும்
விழவு தூங்க நல் மங்கல வினைகளால் விளக்கி
மழலை இன் தமிழ் விரகர் தம் மடாத்தில் வந்து எய்தா.    
3250.    
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.
3251.    
தன் பெரும் கற்பினாளும் அமைச்சனும் தமிழ் நர் கோனும்
பின்பு முனம் தண் காழிப் பிரான் அடி பிரிவு ஆற்றார் ஆய்
அன்பு தந்தவர் பால் நட்ட அன்று தொட்டு ஆனாக் கேண்மை
இன்பமும் துன்பம் ஆகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார்.
3258.    
அத்தன வணிகற்கு உரிய நன் மருகன் அவன் முதற் கடிமணம் முடித்தோன்
முத்தமிழ் மதுரைப் பதி உளான் அவற்கே முறையினால் நோற்று நான் பயந்த
வித்தக மயிலைக் கொடுப்பல் என்று அனைய இயற் குல வணிகர் கோன் தன்னோடு
ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் சில பகல் ஒழிய.
3309.    
என்று தென் மலை மேல் இருந்த மாதவத் தோன் இன் அருள் குருபரன் தனையும்
அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் அருள் கனிந்து ஒழுக உள்ளடக்கித்
தென்தமிழ் ஆலவாய்த் தனிப் பதியைச் சென்னிமேல் பன்னிரண்டு உம்பர்
ஒன்ற வைத்து இமையா அம் கயல் கண்ணி உடன் உறை ஒருவனை நினைந்தான்
3338.    
இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும் சென்னி
மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு
அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான்

நன்றி - சங்கப்பாடல் தொகுப்பு = http://tamilconcordance.in/
நன்றி - திருவிளையாடல் பாடல் பதிவு = தமிழ்இணையப் பல்கலைக்கழகம்

திருவிளையடல் பாடல் தொகுப்பு - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 20 (07.10.2019) திங்கள் கிழமை

Friday, 4 October 2019

கீழடியை ஆண்ட கரடி

கூடலை (கீழடியை) ஆண்ட கரடி


சிவந்த செங்கற்களால் நீண்ட மதில்களையும் நெடிய பல கட்டிடங்களையும் கொண்டுள்ள இந்த நகரத்தைக் “கருப்புக் கரடி” ஒன்று அரசாண்டுள்ளதாம்.  நம்பும்படியாகவா உள்ளது? நம்பித்தான் ஆக வேண்டும்.  ஏனென்றால் இப்படிச் சொல்வது நானல்ல, முத்தமிழ்ச் சங்கப் புலவர் எருக்காட்டூர்த் தாய்ங் கண்ணனார்.  

திருப்பரங்குன்றத்திற்கும் திருப்பூவணத்திற்கும் இடையே கீழடி உள்ளது.  கீழடி அருகே தொல்லியலாளர் ஒரு பெரிய நகர நாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்து உலகு அறியச் செய்துள்ளனர்.  ஐயம் தெளிவுற அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து, இந்தத் தொன்மையான நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது என அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

கரையான் புற்றும் கரடியும் - சிறிய உருவத்தை உடையது கரையான்.  கரையானின் வாய் மிகவும் சிறியது.  இருப்பினும் ஆயிரக்கணக்கான கரையான்கள் ஒன்று சேர்ந்து அரும்பாடுபட்டு இரவுபகலாக உழைத்து, அவற்றின் மிகச் சிறிய வாயில் சிறிதுசிறிதாக மண்ணை எடுத்துச்  சிவந்த நிறத்தில் உயரமான புற்றை ஒன்றைக் கட்டிவிடும்.  இந்தப் புற்றினுள் உள்ளே உண்டக்கட்டிச் சோறு போன்று இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துக் குடும்பம்போல் கூடி வாழும்.     இந்தச் சிவந்து உயர்ந்த கரையான் புற்றைக் கரிய நிறமுடைய கரடியானது தனது பெரிய கையில் உள்ள நீண்ட நகத்தினால் தோண்டி எடுத்து, உள்ளே உள்ள கரையான் புற்றுச் சோற்றையும் தின்று தீர்த்து விட்டது.

வெளைப்பூவும் வெள்ளைவாய்க் கரடியும் - கரையான் புற்றில் எப்படித் துளை உள்ளதோ அதேபோன்று துளை உடைய வெள்ளைநிறப் பூ உள்ளது.  கரையான் புற்றினுள்ளே உள்ள அறையில் சோறு இருப்பது போல், இந்தப் பூவின் துளையினுள்ளே உள்ள அறையில் தேன் நிறைந்து இருக்கும்.   கரையான் புற்றின் சோற்றைத் தின்றுதீர்த்தும் திருப்தி அடையாத இந்தக் கரிய கரடியானது, வான் உயர வளர்ந்திருக்கும் மரத்தின் மேலே ஏறி, இந்த வெள்ளைநிறப் பூவையும் பறித்து அதன் தேனைக் குடித்து மகிழ்ந்து இருக்கிறது.

செழியனும் கரடியும் - இந்தக் கரடி போன்றவனாம் செழியன்.  இவன் கரையான் போன்ற சிறுசிறு சிற்றரசர்கள் பெரிதும் முயன்று கட்டிய மண்  கோட்டைகளைத் தனது வலிமையான நகம்போன்ற வேல்படையால் அழித்து, அதனுள்ளே உள்ள செல்வதை எடுத்துச் சென்றுவிட்டான்.  ஆனாலும் இவனுக்குத் திருப்தி இல்லை.


சேரநாட்டில் முசிறி உள்ளது.  சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது.  அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.  அந்த நுரைகள் சிதறிப் போகுமாறு சிறந்த தொழில்நுட்பம் கொண்ட மரக்கப்பல்கள் செல்கின்றன.  அந்தக் கப்பல்களில் யவனர்கள் பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர்.  வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால் எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது இந்த முசிறி நகரம்.



கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்று அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.

கூடலும் கரடியும் - கரிய கரடி போன்ற செழியனுடைய கொடி அசையும் தெருக்களையுடையது கூடல் நகரம்.  இந்தக் கூடல் மாநகருக்கு மேற்குப்புறத்தே  திருப்பரங்குன்றம் இருக்கிறது.  இந்தத் திருப்பரங் குன்றத்தில்  பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக் கொடி உயர்த்து பறக்கிறது.


வருடத்திற்கு ஒருமுறை திருவிழா என்றால் விடுமுறை கொடுக்கலாம்.  வருடவிடுமுறை, மாதவிடுமுறை, வாரவிடுமுறை என்று எந்தவொரு விடுமுறைநாளும் இல்லாமல், இடையறாத திருவிழாக்களைக் கொண்டுள்ளது இந்தத் திருப்பரங்குன்றம்.   விடுமுறையே அளிக்காமல்  இந்த உயர்ந்த மலையில், நெடியோனாகிய முருகன் அருளுகிறான்.  அந்தத் திருப்பரங்குன்றின் மேலே உள்ளது குண்டு சுனை.  இங்கே வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்று, இரண்டுபேர் காதல் செய்கின்றனர்.
நெஞ்சமே!  நான் இந்தச் சிவந்த செங்கற்களை உடைய நீண்ட இரண்டை மதிலையும், நெடிய மாளிகைகளையும் உடைய இந்த இடத்திலிருந்து எனது முப்பாட்டன் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்தைப் பார்த்து வணங்கி மகிழ்ந்திருப்பேன்.  இதைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக!
முப்பாட்டன் முருகனைப் போற்றுவோம்.  கூடல் என்ற மாமதுரையை ஆண்ட மன்னன் செழியனைப் போற்றுவோம். தொல்லியலாளர் போற்றவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 18 (05.10.2019) சனிக்கிழமை.

நன்றி -  1)    https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
2)    படங்கள் இணைத்தில் இருந்தவை.   அவற்றைப் பதிவு செய்தோருக்கு நன்றி.

கற்றது - 
1) அகம் 149.
எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                     
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)
2) https://kalairajan26.blogspot.com/2018/06/world-wide-big-corporate-tamils.html

Wednesday, 25 September 2019

சங்ககாலப் பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்


சங்ககாலப் பாண்டியரின் 
அரண்மனையும் கோட்டைவாயிலும் 
எங்கே உள்ளன ?

கீழடி அருகே, தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடமானது ஒரு தொழிற்கூடம் என்கின்றனர். அப்படியானால் இந்த நகரை ஆண்ட பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும் எங்கே உள்ளன ? 
என்ற கேள்வி எழுகிறது.

பண்டைத் தமிழரின்  தொன்மையான நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  இன்றைய கீழடி அன்றைய மதுரையாக இருந்துள்ளது.  இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்த “கூடல் என்ற ஆலவாய்நகரம்” என்கிறது திருவிளையாடல் புராணம்.  தொல்லியலாளர் தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பன்றி முத்திரையும் பாண்டியனின் மந்திரிகளும்
தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டெடுத்துள்ள ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.  இவையனைத்தும் பண்டைத் தமிழரின் நாகரிகத்தின் நகர நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன.  கண்டெடுக்கப் பெற்றுள்ள பொருட்களில் ஒன்றான வராக உருவம் பதித்த பவளம்மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்தப் “பன்றி உருவம் பதித்த பவளம்” பண்டைய பாண்டியமன்னனிடம் மந்திரிகளாகப் பணியாற்றிய 12 மந்திரிகளின் இலட்சினையாக இருக்கவேண்டும். இதுவே முத்தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த நகரமாக இருக்க வேண்டும்.  இங்குதான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் கூடித் தமிழாய்ந்து இருக்க வேண்டும் https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html என எழுதியுள்ளேன்.

இதை வாசித்த நண்பர் ஒருவர், 12 மந்திரிகளின் முத்திரைதான் இந்தப் பன்றி உருவம் பதித்த பவளம் என்று சொன்னால், “பாண்டிய மன்னர்கள் தொடர்பான எந்த ஆதாரமும் கீழடியில் இது வரை கிடைக்க பெறவில்லையே…..” என்று என்னிடம் கேட்டார்.


பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்
என்னிடம் கேட்டால், பாண்டிய மன்னர்கள் வசித்த அரண்மனையும், அரண்மனைக் கோட்டை வாயிலும் புதையுண்டுள்ள சிவன்கோயிலுக்குத் தென்கிழக்கே, சந்திரமூலையிலே (அஃனிமூலையிலே) உள்ளன என்றும், பாண்டியர்கள் வழிபட்ட சிவாலயமானது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடத்திற்கு அருகே சுமார் 500மீட்டர் கிழக்கே புதையுண்டுள்ளது என்பேன்.

அகரம் தமிழரது சிகரம்
பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும்.  

கோட்டைக் கருப்பணசாமி  
(https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும்.

இவ்வளவு கண்டுபிடித்துள்ள நமது தொல்லியலாளர்கள் புதையுண்டுள்ள பாண்டியர்களது அரண்மனையையும் தோண்டியெடுத்து உலகு அறியச் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Sunday, 22 September 2019

சங்கப்பாடல்களில் சிவபெருமான்

சங்கப்பாடல்களில் சிவன்
(அண்ணல் ஆலவாயன்)


சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ  வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். 

சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை எனலாம்.   ஆனால் சங்க இலக்கியங்கள் சிவபெருமானை “அண்ணல்” என்று போற்றுகின்றன.  அண்ணல் என்றால் தலைவன் தலைமை என்று பொருள்.  சங்கப்பாடல்களில் 79 பாடல்வரிகளில் அண்ணல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.   மேலும் சிவபெருமான்  ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,  மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெற்றுள்ளனான். 

மதுரையின் மத்தியில் சிவன்கோயில் -


திருமாலின் தொப்புளில் தாமரைப் பூ தோன்றி மலர்ந்துள்ளது.  அந்தத் தாமரைப் பூவைப் போன்று அழகாக உள்ளது கூடல் (மதுரை). அந்தப் பூவின் அக இதழ்களைப் போன்று தெருக்கள் உள்ளன.   தாமரைப் பூவின் மத்தியில் அதன் பொகுட்டு இருப்பது போன்று,  இந்த ஊரின் மத்தியில் அண்ணல் (சிவபெருமானின்) கோயில் உள்ளது.  தாமரைப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்.   அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழும் புலவர்கள்.  அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த  நான்கு வேதங்கள்.  இந்த நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் அதிகாலை வேளையில் இந்த வேதங்களை ஓதுகின்றனர்.  இவர்கள் ஓதும்  குரலைக் கேட்டு,   மிக்க இன்பமான துயிலிலிருந்து மதுரை மக்கள் எழுகின்றனர்.  வாழ்த்துப் பெற்ற  வஞ்சியும் உறைந்தையும் போல கோழி கூவும் போது மதுரை மக்கள் எழுவதில்லை.


பரி பாடல் 30 
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்  - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

-------------------------------------------

1) அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை - நற் 194/5
2) அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென - நற் 236/8
3) வண்ணம் மிகுந்த அண்ணல் யானை - நற் 273/6
4) அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி - நற் 372/7

4) மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை - குறு 260/5
5) திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு - குறு 338/1
6) அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என - குறு 343/2
7) புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு - குறு 344/3
8) கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - குறு 363/1
9) அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - குறு 392/3

10) நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே - ஐங் 198/4
11) அண்ணல் யானை அரசு விடுத்து இனியே - ஐங் 466/2

12) அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் - பதி 12/12
13) அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த - பதி 22/26
14) அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் - பதி 23/14
15) இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்/வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் - பதி 33/1,2
16) அண்ணல் யானை அடு போர் குட்டுவ - பதி 42/8
17) ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் - பதி 44/7
18) வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என - பதி 51/23
19) குடவர் கோவே கொடி தேர் அண்ணல்/வாரார் ஆயினும் இரவலர் வேண்டி - பதி 55/9,10
20) காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்/மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் - பதி 64/15,16
21) தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்/மாடோர் உறையும் உலகமும் கேட்ப - பதி 70/22,23
22) வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்/முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து - பதி 81/18,19
23) பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்/கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் - பதி 86/8,9

24) ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய - கலி 9/10
25) ஆர மார்பினை அண்ணலை அளியை - கலி 52/15

26) செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்/இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் - பரி  1/30,31
27) மு கை முனிவ நால் கை அண்ணல்/ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் - பரி  3/36,37
28)  கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்  - பரி 8/127
29) மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7

அவையும் நீயே அடு போர் அண்ணால்/அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே - பரி  13/15,16

30) ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப - பரி 17/14
31) இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு/அணி மிக வந்து 
 இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க - பரி  23/65,66
32) கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - பரி 23/86
33) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்  - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

34) அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ - அகம் 23/8
35) இரு திரி மருப்பின் அண்ணல் இரலை - அகம் 34/4
36) அண்ணல் யானை வெண் கோடு கொண்டு - அகம் 61/9
37) மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு - அகம் 64/11
38) அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த - அகம் 75/8
39) அண்ணல் யானை அடு போர் சோழர் - அகம் 96/13
40) பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை - அகம் 115/13
41) வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு - அகம் 146/1
42) அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் - அகம் 208/4
43) தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு - அகம் 238/7
44) மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை - அகம் 251/15
45) வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு - அகம் 304/9
46) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - அகம் 373/16

47) ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் - புறம் 42/1
48) கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4
49) ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்/நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல - புறம் 67/2,3
49) அண்ணல் யானை அடு_களத்து ஒழிய - புறம் 93/13
50) அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95/9
51) அண்ணல் யானை வேந்தர்க்கு - புறம் 115/5
52) அண்ணல் நெடு வரை ஏறி தந்தை - புறம் 116/15
53) அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய - புறம் 126/20
54) ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்/இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று - புறம் 129/5,6
55) அண்ணல் யானை எண்ணின் கொங்கர் - புறம் 130/5
56) வென் வேல் அண்ணல் காணா ஊங்கே - புறம் 141/7
57) அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை - புறம் 158/2
58) நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்/கல் கண் பொடிய கானம் வெம்ப - புறம் 174/23,24
59) திண் தேர் அண்ணல் நின் பாராட்டி - புறம் 198/6
60) வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்/தார் அணி யானை சேட்டு இரும் கோவே - புறம் 201/12,13
61) இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்/எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் - புறம் 202/13,14
62) இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்/இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் - புறம் 203/6,7
63) கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ - புறம் 205/11
64) அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை - புறம் 249/7
65) பொலம் புனை ஓடை அண்ணல் யானை - புறம் 287/5
66) அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து - புறம் 288/2
67) பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு/ஒருவரும் இல்லை மாதோ செருவத்து - புறம் 311/4,5
68) அண்ணல் யானை அணிந்த - புறம் 326/14
69) ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்/கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் - புறம் 337/1,2
70) வினவல் ஆனா வெல் போர் அண்ணல்/யார் மகள் என்போய் கூற கேள் இனி - புறம் 353/6,7
71) அண்ணல் யானை வழுதி - புறம் 388/15
72) அண்ணல் யானை வேந்தர் - புறம் 390/27
73) மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி - புறம் 393/9

74) திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
75) அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப - சிறு 200
76) கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்/கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 207,208
77) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - மது 348
78) அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் - குறி 54
79) அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் - குறி 171

------------------
நன்றி - பாடல் வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in/


-----------------------

பரங்குன்றை வாழ்த்தல்
125
“உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு”
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி 8/127
--------------------------------------------


“விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்”
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
-----------------------------------------------------------------------------------------

Sunday, 1 September 2019

இது ஆலவாய் என்ற பண்டைய மதுரையின் வராக முத்திரையா?

வராக முத்திரை 

கீழடி அருகே அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ள வராகமுத்திரையானது ஆலவாயை ஆண்ட வராகர்களின் முத்திரையா?

இன்றைய கீழடி அருகே அன்றைய மதுரை இருந்தது. இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.

இந்தத் தொன்மையான ஆலவாய் நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.  அதில் செங்கல் கட்டுமானம், இரட்டை சுவர், சுடுமண் குழாய், கட்டைவிரல் அளவுள்ள சுடுமண் பானை, வராக உருவத்துடன் கூடிய சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் எனப் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.  இதில் “வராக உருவம் பதித்த பவளம்” மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


கீழடி அருகே புதையுண்டுள்ள இந்தப் பண்டைய ஆலவாய் நகரம் கடல்கோளால் அழிவதற்கு முன்னர், இந்த ஆலவாய் நகரை இராசராச பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.   அவனது ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள பன்றிமலையில் பன்றியின் அம்சமாகத் தோன்றிய 12 சகோதர்கள் இருந்தனர். இந்தப் 12 பேர்களையும் தனது அமைச்சர்களாக ஆக்கி இராசராசன் சிறப்புடன் தேசம் ஆண்டு வந்தான்.  

இராசராச பாண்டியனது ஆட்சிக்காலத்திற்குப் பின்னாள் , ஆதுலகீர்த்தி பாண்டியனின் மைந்தனாகிய கீர்த்தி வீடணன் காலத்தில் பிரளயத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றியது.   அந்தக் கடல்கோளால் ஆலவாய் என்ற இந்தத் தொன்மையான மதுரையானது முற்றிலும் அழிந்து போனது.  எல்லாமும் மண்ணுள் புதைந்து போயின.  பன்றிகளின் அம்சமாகத் தோன்றி அமைச்சர்களாக விளங்கி நல்லாட்சி செய்த 12 மந்திரிகளின் இலட்சினைகளும் புதைந்து போயின.
இந்தக் கடல்கோளில் சோமசுந்தரப் பெருமான் விமானமும், மீனாட்சி அம்மை ஆலயமும், இடபமலையும், யானை மலையும், நாக மலையும், பசுமலையும், பன்றி மலையும் மட்டும் அழியாமல் இருந்தன.

கடல்வெள்ளம் வற்றிய பிறகு உலகம் மீண்டும் சிவபெருமானால் படைக்கப்பட்டது.  தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டனர்.
சந்திர குலத்தில் தோன்றிய  ‘வங்கிய சேகர பாண்டியன்’ என்பவன் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலைச் சுற்றி ஒரு சிறு நகரத்தை அமைத்து நீதி வழுவாமல் அரசாண்டான்.  இந்த நகரமே இன்றைய மதுரை நகரமாகும்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி, வெள்ளையன் ஆட்சி முடிந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டைய ஆலவாய் நகரைக் கண்டறிந்து தொல்லியல் துறையில் அகழாய்வுகள் செய்துவருகின்றனர்.
இந்த அகழாய்வில்தான் பண்டைய வராக முத்திரை உடைய சூதுபவளம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
மாமதுரை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 15 (01.09.2019) ஞாயிற்றுக் கிழமை


நன்றி - படம், தினமலர்.
பார்வை -
1) தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2356972&fbclid=IwAR1VISgDBzbFai7nhiBsT-wC4vC2VjPJyFe3Ct0Wvp2X2aARnW60W7deRXY
2) திருவிளையாடல் புராணம்  45ஆவது படலம் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்,
3) திருவிளையாடல் புராணம் 46ஆவது படலம் - பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

வராகம் கேழல் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
2219.
பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.

2236.
மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.

2266.
வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர்.

2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.

கேழல் என்ற சொல் உள்ள பாடல்
2227.
தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர்
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும்
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே.