Showing posts with label மணலூர். Show all posts
Showing posts with label மணலூர். Show all posts

Saturday, 18 June 2022

கீழடி – மணலூர் கல்வெட்டு

கீழடி – மணலூர் குறிப்புகள் 

திருவிளையாடற் புராணம் உக்கிரபாண்டியனுக்கு மணவூர் காந்திமதியைத் திருமணம் செய்துவைத்ததாக உள்ளது.

தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய்.


மணலூர் மணவூர் "சீர்க்கிரி" (?)என்று மகாபாரதத்தில் உள்ளது.

ஸிகதா என்றால் மணல், வடமொழியில். எனவே, ஸிக்கதாபுரி < மணலூர் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

சோமசுந்தர பாண்டியனும் தடாதகைப் பிராட்டியும் இன்புற்றுப் பிறந்தவன் உக்கிரபாண்டியன்.  இவனுக்கு மணவூர் சோமசேகரனின் புதல்வியான காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தனர்.
உக்கிரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல் (சுனாமி) கரைகடந்து மதுரை வரை வந்துள்ளது.  இதனால் காந்திமதி பிறந்து வளர்ந்த மணவூர் மண்ணுள் புதையுண்டு போனது.
மணவூரின் மேற்கே தற்போது (கீழடி அருகே) தொல்லியல்துறையினரின் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மணவூர்  புதையுண்டுள்ள இடத்தில் பண்டைக் காலத்திய காந்திமதி வாழ்ந்த வரலாற்றுத் தடையங்களைத் தேடித் திரிந்த போது,  அன்னை மீனாட்சியின் பெயரையும் காந்திமதி என்ற பெயரையும் தாங்கிய  இக்காலத்திய கல்வெட்டு ஒன்றை என்னால்  காண முடிந்தது.






dorai sundaram  22/10/2016

கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:
1 சாலிகவாகன
2 சகாப்த்தம்  1.. ( த்த- கூட்டாக ஒரே எழுத்து)
3 5 ற்மேல்ச் செ
4 ல்லாய்நின்ற பிரமா
5 தீட்ச வரு. சித்திரை (மீ)
6 30 உ சங்கிலி சேரு
7 வை காறரவர்கள்  ப
8 பட்டையமாவது மது
9 ரையில் மீனாட்சி சுந்த
10 ரறைக்கட்டளைக்(கி)
11  காந்திமதி மகள் தா
12 யம்மாளுக்கு நம்மிட (க்கு- கூட்டாக ஒரே எழுத்து)
13 பேற் குடுத்து மண (த்து- கூட்டாக ஒரே எழுத்து)
14 லூரில் கோரஞ்
15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

குறிப்பு:   கல்வெட்டில் சாலிவாகன் சகாப்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும்
தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகக்  கணிக்க இயலவில்லை. தமிழாண்டின் பெயர் பிரமாதீட்ச  என்னும் குறிப்பு கி.பி. 1853, 1913 ஆகிய இரு ஆண்டுகளையும் குறிக்கும். 
சங்கிலி சேர்வைக்காரர் என்பவர் பட்டையம் அளித்துள்ளார். மீனாட்சிசுந்தரர்
அறக்கட்டளை என்பதாக் இறைவர்க்கு ஒரு கொடை அளிக்கப்படுகிறது. 
காந்திமதி மகள் தாயம்மாள் குறிக்கப்படுகிறார். பட்டயம் அவருக்கு  அளிக்கப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
“நம்மிட பேர் குடுத்து மணலூரில் கோரஞ்செய்தபடி”  என்பதன்  பொருளும் புலப்படவில்லை.  கொடை, கல்லும் காவேரியும் உள்ளவரை
நடக்கவேண்டும் என்னும் குறிப்புள்ளது.

சுந்தரம்.


 ஸ்ரீ சங்கலிச்சேர்வை வாரிசான திருமதி. காந்திமதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தேவாரம் பாடியவர்க்கு மானியமாக மணலூரில் உள்ள மூன்று தடி நிலத்தை உபயமாக வழங்கியுள்ளார் 

 எவனொருவன் அக்கல்வெட்டையோ  அல்லது அந்த உபயம் அளித்த நிலத்தையோ அழிக்கவோ அல்லது தான் அதை அடைய முற்பட்டாலோ காவிரிக் கரை துவங்கி குமரிக்கரை வரை உள்ள மக்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் அவனைச் சேரும் .

15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

சம்பளம் உம்பளம்

இது “உம்பள” என்னும் சொல். தானமாகக் கொடுத்த நிலம் எனப் பொருள். உம்பளம்¹ umpaḷam
, n. [T. umbaḷamu, K. umbaḷi.] Land granted rent-free for the performance of services; மானியநிலம். Loc.
உம்பளித்தல், உம்பளம் = தானமாக பரம்பரையாக அனுபவித்துக்கொள்ள தரும் முற்றூட்டு, கொடைநிலம்.

தானமாகக் கொடுப்பதை “உம்பளிக்கை” எனச் சொல்கிறோம்.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=759
”இதே போல் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகள் மூன்றில் குறிக்கப்பட்டிருந்த மைத்துனர் அழகப் பெருமாள், அண்ட நாட்டுப் பெருமணலூர் மந்திரி பல்லவராஜன், திருமல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூருடையான் சோறந் உய்யநின்றாடுவானான குருகுலராயன் ஆகிய அரசு அலுவர்களின் பெயர்கள் அவை மாறவர்மன் சுந்தரபாண்டியரின் கல்வெட்டுகள் என்பதை உறுதிசெய்ய உதவின. ”

http://www.thehindu.com/features/metroplus/society/keezhadi-archaeological-excavation/article7557728.ece
The second locality has more of graffiti on pottery, bone tools and iron weapons. “We have got the fish symbol, both as an art and as a ‘sign representing a clan,” says Vadivel. Red-and-black pottery, groove tiles used for laying roofs and the typical flat brick measuring 38 centimetres are the other indications that the city unearthed belongs to the Sangam Age. “Keezhadi could as well be the ‘Peru Manalur’, the city of Sangam Pandiyas mentioned in literature,” suggests Amarnath. 

பழைய திருவிளையாடற் புராணத்தில் மணலூர்புரம் என்றுள்ளது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலில் மணவூர் என்றுள்ளது. மஹாபாரதத்தின் வடமொழிச் சுவடிகளில் - பஞ்ச த்ராவிட தேசத்துச் சுவடிகளில் - மணலூர்புரம் என்றுள்ளது. 
நா. கணேசன்




-----------------------------------------------------------

தினமணி செய்தி -  மணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது வயலில் கண்டெடுத்த பழங்கால கல்வெட்டு குறித்து கொடுத்த தகலின் பேரில் கி.பி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை சொ. சாந்தலிங்கம்  உதவி செயலர் பா. ஆத்மநாதன் ஆகியோர் கல்வெட்டை படியெடுத்தனர். 

https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2014/aug/06/திருப்புவனம்-அருகே-பழங்கால--952340.html

-----------------------------------------------------------



Saturday, 23 April 2022

மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்

(கீழடி) மணலூர், கூடல், முடத்திருமாறன் பற்றிய தகவல்


செந்தமிழ்  பக்கம் 246

ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும்.  கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன.  அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது.  எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.

பாண்டியன் முடித்திருமாறன் -

குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன்.  ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.

இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5) 

இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன.   இச்செய்தியை,

“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க.  தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும்.  இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள்.   இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர்.  இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)

பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர்.  இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........

-----------------------------------------------

நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்”  அவர்கள்

Wednesday, 11 March 2020

அகரம் தமிழரின் சிகரம்

அகரம் தமிழரின் சிகரம் 

தினகரன் செய்தி - கீழடி அருகேயுள்ள அகரத்தில் அகழாய்வு பணிகள் இன்று (12.03.2020)  துவக்கம்.


திருப்புவனம்: கீழடி அருகே அகரம் கிராமத்தில் அகழாய்வு பணிகள் இன்று துவங்க உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி ஜன. 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியை தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொந்தகையில் தற்போது மயானத்திற்கு அருகே அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது. மணலூர் அருகே கழுகேர்கடை ஊராட்சியை சேர்ந்த அகரம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடத்தை தொல்லியல் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர்.
அகரம் துவக்கப்பள்ளி அருகே உள்ள ஊருணிக்கு எதிரே அக்ரஹாரம் என்றும், கோட்டை மேடு என்றும் கிராமத்தினரால் அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆய்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நேற்று கிராமத்தினர் கழுகேர்கடை ஊராட்சி தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பூமி பூஜை நடத்தி ஆயத்தப்பணிகளை துவக்கினர். இன்று முதல் அகழாய்வுப்பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570636
---------------------------------------------------


அகரம் தமிழரது சிகரம் - பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும். 

கோட்டைக் கருப்பணசாமி   (https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும். 

கூடல் மாநகரில் பாண்டியரின் அரண்மனை இருந்த இடமே அகரம் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும் ஆகும்.  தொல்லியல் ஆய்வுகள் சிறக்கட்டும்.
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post_25.html

தொல்தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்மாநகர் போற்றவோம்,
அகரம் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Monday, 30 December 2019

கீழடி - கூடல் என்ற கைவிடப்பட்ட நகரம்

கீழடி - ஓர் கைவிடப்பட்ட நகரம்

மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை கொந்தகை மணலூர் அகரம் என்ற கிராமங்களில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.  இங்கே பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.  சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த மத்திய மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரைப் போற்றுவோம், அவர்களுக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

மணலூர்க் கண்மாய்க்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் முதன்முதலாகத் தொல்லியல் ஆய்வைத் திரு அமர்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார். 

மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  புராண காலத்தில், இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு  மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.   இது மணலூர் எனப் பழைய திருவிளையாடலிலும், “மணலூர் புரம்” என வடமொழி வியாசபாரதத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளது.

மணவூரும் மதுரையும் - 
உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு  கடல்கோள் (பெருஞ் சுனாமி) உண்டாகி மதுரை எழுகடல்தெருவரை வந்து அழித்துள்ளது.  இந்தக் கடல்கோளிலால் மணவூரை மண்மூடி விட்டது.   மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான்.  மணவூரிலிருந்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பெற்ற (இன்றைய) மதுரை நகரில் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)


சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது. 

மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.  மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.  இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு வடக்கே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்

Saturday, 12 October 2019

தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல்

தமிழரின் 
தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் 
இவற்றின் இருப்பிடங்கள் பற்றிய ஒரு சிறு விளக்கம்.



 தென் மதுரை  
பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. மிகமிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தென்மதுரை என்று அழைத்துள்ளனர்.
தென்மதுரை (1) = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  இதன் இருப்பிடம் இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டும்.   ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே (மொரிசியசு தீவு) ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்க வேண்டும்.  முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.



 மதுரை 
கடல்கொண்ட தென்மதுரையிலிருந்த தமிழர் புலம்பெயர்ந்து இன்றைய மதுரை இருக்கும் இடத்தில் குடியேறி உள்ளனர்.   இதுவே பழைமையான  மதுரை ஆகும்.  
1) இன்றை மதுரை இருக்கும் இடத்தில் இந்தப் பழைமையான மதுரை(1) இருந்தது.  இந்த மதுரை (1) மிகவும் தொன்மையானது.   இது கடல்கோளால் அழிந்தது.  இரண்டாம் கடல்கோளால் அழிந்துபோன மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் உண்டானது.
  மதுரை(1) = ஆலவாய்.


2) கடல்கோளுக்குப் பின்னர் புதிதாக மதுரை(2) நகரைப் பாண்டியர்கள் உண்டாக்கி அரசாளுகின்றனர்.  இதன் பெயர் கூடல். இந்தக் கூடல் மாநகரைத்தான் கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  
 மதுரை(2) = கூடல் 

(குறிப்பு - கீழடி வேறு, கீழடி யருகே புதையுண்டுள்ள கூடல் நகரம் வேறு. கீழடி அருகே உள்ள மணலூர் வேறு.  மணலூரின் தொன்மையான பெயர் மணவூர்.  மணலூரும் மணவூரும் ஒன்றுதான். மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன.)

3) கூடலை ஆளும்போது பண்டைய மதுரை (1) இருந்த இடம் கண்டறியப்படுகிறது. உடனே அந்த இடத்தில்  புதிதாக நகரை உண்டாக்கிக் கூடலில் வாழ்ந்த மக்கள் குடியேறுகின்றனர்.  இந்த நகரமே இன்றைய மதுரை ஆகும். மதுரை (1) இருந்த இடத்தில் மதுரை (3) உருவாக்கப்படுகிறது. 
  மதுரை(3) = இன்றைய மதுரை.

4) மதுரை(3)வரை மீண்டும் ஒரு கடல்கோள்.  இந்த மூன்றாவது  கடல்கோளால் கைவிடப்பெற்ற கூடல்நகரம் (மதுரை 2) அழிந்து போகிறது.  திருஞானசம்பந்தர் கடல்கோளால் அழிந்த மதுரை(1) மற்றும் கூடல் என்ற மதுரை(2) என்ற இரண்டு நகரங்களையும் இணைத்துக்  ”கூடல் ஆலவாய்” என்று பாடியுள்ளார்.
  மதுரை(1)யும், கூடல் என்ற மதுரை(2)யும் = கூடல் ஆலவாய்.
கூடலை அழிந்த மூன்றாவது கடல்கோளால் மதுரை (3) அழியாமல் அப்படியே இன்றும் இருக்கிறது.



5) இந்நாளில், கடல்கொண்ட கூடல் என்ற மதுரை(2)யை தொல்லியலாளர்கள் கீழடி அருகே கண்டறிந்து ஆய்வுகள் செய்துவருகின்றனர்.

6) மதுரை(3)யின் அடியிலே  மதுரை(1) புதையுண்டுள்ளது.

மேற்கண்ட விளக்கமானது, தமிழ்ச்சங்கப்பாடல்கள் மற்றும் திருவிளையாடற்புராணம் பாடல்களின் அடிப்படையிலானது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 26 (13.10.2019) ஞாயிறு கிழமை.