Sunday, 13 November 2022

இதிகாசங்களில் இந்து, இந்துஸ்தான்



இதிகாசங்களில் இந்து, இந்துஸ்தான்

இந்து, இந்துமதம் என்பன மிகப் பழமையான பெயர்கள் என்பதை பல்வேறு புராண இதிகாசங்கள் விவரிக்கின்ற.

அந்த வகையில், ப்ருஹஸ்பதி சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப்பட்டிருப்பதோடு, இந்து என்ற சொல்லிற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண
தத்பர: வேத, கோ, ப்ரதிமா
ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக

(புத்தஸ்ம்ருதி கி.மு.4&ம் நூற்றாண்டு)

பொருள்:  யார் ஹிம்ஸிக்கப் பட்டாலும், எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன்வழிபடுகிறானோ அவனே ஹிந்து.

------------------------------

ஹிமாலயாத் ஸமாரப்ப யாவத் இந்து
ஸரோவரம்
தத்தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத

(ப்ருஹஸ்பத்ய ஆகமம் கி.மு. 4&ம் நூற்றாண்டு)

பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹா ஸாகரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்றுஅழைக்கப்படுகிறது.

------------------------------

ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த
சிந்துஸ் ததைவ ச;
ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா
குருண்டிகா:

(பவிஷ்ய புராணம் 4&ம் நூற்றாண்டு)

பொருள்: ‘ஸ’ என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில் ‘ஹ’ என்று திரிகிறது.  எனவேதான், ‘ஸப்த ஸிந்து’ என்ற வாக்கியம் ‘ஹப்த’ ஹிந்து என்பதாக மாறியது

--------------------------------

கலினா பலினா கலிதகலௌ
நூம்தர்மா
யவனையோ ரதரமாக்ராஜதா
ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!!

(காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு)

பொருள்:  அதர்ம ஆகிரமிப்பாளர்களின்படை யெடுப்புகளினால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து ஹிந்துக்கள் தப்பிக்க விந்தியமலையை பயன் படுத்தினர்.  

--------------------------------

சமஸகிருதம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் இதிகாச புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த வகையில், 

"இந்து வார்சடை எம்மிறையே"-  திருஞான சம்மந்தர்.
"வந்து மேருவினை நாள்தொறும் வலம் செய்து உழல்வோர்;
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே"-  கம்பராமாயணம்.

"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து; வேறு உக்கவான் தனிஎயிறு ஒத்த இந்து"- மூவருலா

"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-  மூவருலா.

-------------------------------

இதுபோன்று தமிழில் எழுதப்பட்ட புராணங்களில் இந்து இந்துமதம் பற்றிப் பல் வேறு தகவல்களை கூறப்பட்டுள்ளன. ஒருசிலவற்றை மட்டும்  மேலே கண்டோம்.


Monday, 31 October 2022

சுமதி பெயர்ச்சொல்

சுமதி பெயர்ச்சொல் விளக்கம்

சுமதி என்றால் என்ன பொருள்?


அருள்மிகு மீனாட்சியம்மன் (தடாதகைப் பிராட்டியார்) திக்விஜயம் செய்த போது அம்மன் தேர்ப்பாகனாகத் தேரை ஓட்டிச் சென்றவர் பெயர் சுமதி.

திருவிளையாடற் புராணம் பாடல் வரிசை எண் 619.

அங்கய னோக்கி மான்றேர்க் கணித்தொரு தடந்தே ரூர்ந்து

வெங்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி யென்போன்

நங்கைதன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையஞ் செல்லச்

செங்கையிற் பிரம்பு நீட்டிச் சேவகஞ் செலுத்திச் செல்ல.


அம் கயல் நோக்கி மான்தேர் அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து

வெம்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என்போன்

நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையும் செல்லச்

செம் கையில் பிரம்பு நீட்டிச் சேவகம் செலுத்திச் செல்ல.


(இ - ள்.) வெம் கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என் போன் - விரும்பும் ஒளியினையுடைய வியாழனது சூழ்ச்சியினும் சிறந்த சூழ்ச்சியினையுடைய சுமதி என்னும் முதலமைச்சன், 

அம் கயல் நோக்கிமான் தேர்க்கு - அழகிய கயல்போலுங் கண்களை யுடைய பிராட்டியாரின் தேருக்கு, 

அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து  - அணித்தாக ஒரு பெரிய தேரினைச் செலுத்தி, 

நங்கைதன் குறிப்பு நோக்கி - அப்பிராட்டியாரின் குறிப்பினை ஆராய்ந்து நால்

பெரும்படையும் செல்ல - பெரிய நால்வகைச் சேனைகளும் செல்லுமாறு, 

செம் கையில் பிரம்பு நீட்டி - சிவந்த கையிலுள்ள பிரம்பினாற் சுட்டிக் காட்டி, 

சேவகம் செலுத்திச் செல்ல -  சேவகத்தைச் செலுத்திச் செல்லா நிற்பவும் 


எ - று.

அணித்து - அணியதாக. வெம்மை - விருப்பம். வியாழன் -  பிருகற் பதி; 

தேவர்க்கு அமைச்சுப் பூண்டவ னென்பதுபற்றி யெடுத்துக் கூறினார். 

சூழ்ச்சியினும் என உருபும் உம்மையும் விரிக்க 

சேவகம் - வீரமும், பணியுமாம். இங்கே படையினைப் பணிகொள்ளுதலாகிய வீரமும், 

பிராட்டிக்குப் பணிசெய்தலாகிய தொண்டும் கொள்க. (20)


சுமதி பொருள் :  நல்லறிவு,  அறிஞன்,  சுமைதலை, தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர்,  நுண் அறிவுடையவர்,  படைப்பு, அதிர்ஷ்டம், நட்பு, மகிழ்ச்சியான, செயலில்

Thursday, 21 July 2022

திருவிளையால் புராணத்தில் கண்ணகியின்கதை இல்லையே?

திருவிளையால் புராணத்தில் 

கண்ணகியின்கதை இல்லையே?

என்னிடம் கேட்டால்(ர்)!

சிவனடியார் ஒருவரைச் சந்தித்தேன்.  சிவ சிந்தனைகள் நிறைந்திருந்தன.  தேவார திருவாசகப் பாடல்களை யெல்லாம் தெளிவான உச்சரிப்பில் பொருள் விளங்கும்படி அருமையாகப் பாடினார்.  மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  தொடர்ந்து, பேச்சின் நடுவே திருவிளையாடற் புராணம் பற்றிக் கூறினேன்.   அவ்வளதுதான் அவரது முகம் சிறிது வாட்டம் கண்டது.  திருமுறைகளே உண்மை, புராணங்கள் எல்லாம் பொய்-ஆரிய பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்றார்.   இது கேட்ட எனது முகமும் சிறிது வாட்டம் கண்டது.
    திருவிளையாடற் புராணத்தில் என்ன பிழை கண்டுள்ளீர்கள் ? என்று கேட்டேன்.  

        திருமுறைகள் 7ஆம் நூற்றாண்டு, திருவிளையாடற் புராணம் 13ஆம் நூற்றாண்டு என்றார்.   “கண்ணகி தமிழ்ப் பெண்” என்ற காரணத்தினால் திருவிளையாடல் புராணத்தில் கண்ணகியைப் பார்ப்பனர்கள் எழுதாமல் விட்டுவிட்டனர் என்றார்.

எனக்குத் தெரிந்த பதிலைக் கூறலாமா? என்று கேட்டுவிட்டுச் சொன்னேன்.

1) எந்தவொரு தமிழ் நூலும் எந்தக்காலத்தில் எழுதப்பட்டிருந்தால் என்ன? 
நேற்று எழுதினாலும் சரி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது என்றாலும் சரி,  அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தானே நமக்கு முக்கியம்.  அந்த நூலின் காலக் கணிப்பினால் நமக்கு (மனிதர்களுக்கு) ஆகப்போகவது ஏதுமில்லையே.  இன்னம் ஒருபடி மேலே சொல்வது என்றால்,  அந்த நூலின் ஆசிரியர் யார்? என்பது கூடத் தேவையற்றதே ஆகும்.  இவ்வாறான சிந்தனையால்தான் தமிழ்ப்புலவர் பலரும் தம் பெயரையோ காலத்தையோ எழுதிடவில்லை போலும் என்றேன்.  மேலும்

2) திருவிளையாடற் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பரஞ்சோதி முனிவரின் காலம் வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.   ஆனால் திருவிளையாடற் புராணத்திற்கான மூலநூல் எது?

18 புராணங்களில் ஒன்றான “காந்தத் தீச சங்கிதை” என்ற புராணம் ஆகும்.  இந்தப் புராணம் எழுதப்பெற்ற காலம் மிகவும் புராதனமானது. இன்ன காலம் என்று கணித்தல் அரிதாக உள்ளது.

எனவே திருவிளையாடற் புராணம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது என்பது தவறாகும்.  இது எப்படி யெனில், திருக்குறள் அச்சடிக்கப்பட்ட காலத்தைத் திருக்குறள் தோன்றிய காலம் என்பது போல் ஆகிவிடும்.

3) திருவிளையாடற் புராணத்தில் கதையாகச் சொல்லப்பட்டுள்ளன அனைத்தும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் திருவிளையாடல் ஆகும்.   அவரை வணங்கிய அடியார்களுக்கு அவர் அருள்புரிந்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரைக் கண்ணகியோ கோவலனோ வழிபாட்டதாக சொல்லப்படவில்லை.   மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரை வழிபட்டுப் பலன் அடைந்தவர்களின் பட்டியலில், வழிபடாதவரை எங்ஙனம் சேர்க்க இயலும்?

இந்தக் காரணத்தினால்தான் கண்ணகி கோவலன் கதை திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறாமல் ஆகியிருக்கலாம் என்றேன்..

திருவிளையாடற் புராணம் முழுக்கமுழுக்க மதுரையின் அண்ணலான அருள்மிகு சோமசுந்தரரேசுவரரின் திருவிளையாடல்களையும், மற்றும் மதுரை வாழ் தமிழ் மக்களின் சிறப்புகளையுமே கூறுகிறது.    இப்படியிருக்கக் கண்ணகி ஓர் தமிழ்ப் பெண் என்ற காரணத்தினால் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறவில்லை என்ற கற்பனைக் கருத்தை எப்படி ஏற்க இயலும் என்றேன்.

நீண்ட நேரம் மௌனம் காத்தார் எனது நண்பர்.  எனது இந்தக் கருத்துகளை  அவர் ஒத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை, மறுத்ததாகவும் தெரியவில்லை.

எனது கருத்துகள் சரியானவையா?  உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளனவா?

அன்பன்

காசிசீர், முனைவர், நா. ரா. கி. காளைராசன்

ஆடி 5 (21.07.2022) வியாழக்கிழமை. 

--------------------------------------------------------
கண்ணகி எரித்த கூடலும் - இன்றைய மதுரை மாநகரமும்

கண்ணகி எரித்த கூடல் மதுரை மாநகர் அழிந்துபட்டது.   இன்றிருக்கும் மதுரை மாநகரமானது குலசேகரபாண்டியனால் புதிதாகத் தோற்றுவிக்கப் பெற்றதாகும்..  கூடலில் வாழ்ந்த மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து இன்றைய மதுரைக்கு வந்து விட்டனர்.  எனவே கூடல் என்ற நகரம் வைவிடப்பட்ட நகரமானது,  கடல்கோளால் புதையுண்டு போனது.  அந்த க் கூடல் மாநகரத்தைத்தான் இன்றைய நாளில் தொல்லியலாளர்கள் கீழடி அருகே தோண்டிக் கண்டறிந்துள்ளனர் என்று கருதி அதற்கான சான்றுகளை யெல்லாம் தொகுத்து எழுதியுள்ளேன்.

நேரம் கிடைக்கும்போது அன்பர்கள் கீழடி தொடர்பான அந்தக் கட்டுரைகளையும் கண்ணுற்றுக் கருத்துக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--------------------------------------------------------

Monday, 11 July 2022

ஆடி மாதம் அட்டமி திதியில்

ஆடிமாதம் 5ஆம் நாள், (21.07.2022), அசுபதி நட்சத்திரம், அட்டமி திதி, வியாழக்கிழமை 

ஆடி மாதம், தேய்பிறை,  கார்த்திகை நட்சத்திரம்,  அட்டமி திதி,  வெள்ளிக்கிழமை சேர்ந்த நாளில் மதுரை மாநகரம் தீக்கிரையாகும் என்று ஓர் சாபம் மதுரைக்கு இருந்துள்ளது.  அன்றைய தினத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. ( குறள் எண் : 204 )

கோவலன் முற்பிறவியில் செய்த பாவம் மறுபிறவியில் அவன் கொலைக்கலன் பட்டான் என்கிறது சிலப்பதிகாரம்.

கட்டுரை காதை

ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண 135 
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே என்று பாண்டிய நெடுஞ் செழியன் முறை பிறண்டு நீதி செய்ததற்கான காரணத்தை மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகிறது. 

Sunday, 10 July 2022

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

 

கம்பராமாயணத்தில்  54 பாடல்வரிகளில் நீலன் 

சிலப்பதிகாரத்தில் 2 இடங்களில் நீலன், 3 இடங்களில் நீலி

நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் - வஞ்சி:28/80

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற - வஞ்சி:28/109

 

நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை - மது:12/68

சங்கரி அந்தரி நீலி சடாமுடி - மது:12/154

நிலைக்களம் காணாள் நீலி என்போள் - மது:23/159

------------------------------------------------------------

 நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்        80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி

வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்

கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது

தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே

செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு        85

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய

சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு

தமரின் சென்று தகை அடி வணங்க

 

சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு        100

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி

அமர்க்களம் அரசனது ஆக துறந்து

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்        105

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்

புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று

ஏனை மன்னர் இருவரும் கூறிய

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற

------------------------------------------------------------

 

வளை உடை கையில் சூலம் ஏந்தி        60

கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை_ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்        65

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்

அமரி குமரி கவுரி சமரி

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை

ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை

 

அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு        150

படு கடன் இது உகு பலி முக மடையே

வம்பலர் பல்கி வழியும் வளம் பட

அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்

சங்கரி அந்தரி நீலி சடாமுடி

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்        155

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு

கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

 

அங்காடி பட்டு அரும்_கலன் பகரும்        150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன்

வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன்

பரதன் என்னும் பெயரன் கோவலன்

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்        155

ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி

கொலை_கள பட்ட சங்கமன் மனைவி

நிலைக்களம் காணாள் நீலி என்போள்

 

பாடல் தொகுப்பு உதவி - http://tamilconcordance.in/

Thursday, 23 June 2022

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு

 தினமலர் செய்தி - கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுமணலுாரை புறக்கணித்த தொல்லியல் துறை

திருப்புவனம்--தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் 8ம் கட்ட அகழாய்வில் மணலுாரை தொல்லியல் துறை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையினர் பண்டைய மக்களின் வாழ்வியல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மாநில தொல்லியல் துறை கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வை மேற்கொண்டது. ஆனால் 8ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி 13ல் தொடங்கப்பட்ட போது அகரம், கொந்தகை, கீழடியில் மட்டும் பணிகள் ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. மணலூரில் பணிகள் தொடங்கப்படவில்லை.மணலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துச்சாமி கூறுகையில், பண்டைய காலத்தில் மணலூரை மையப்படுத்தி மதுரை நகரம் இயங்கி வந்தது. இன்றளவும் கழுகேர்கடை, அகரம், கொந்தகை, கீழடி உள்ளிட்ட கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் மணலூர் கண்மாயில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் தொடங்குவார்கள், என்றார்.பேராசிரியர் காளைராசன் கூறுகையில், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலானகுழு ஓர் ஆண்டிற்கும் மேலாக மணலூரில் ஆய்வு செய்த பின் தான் கீழடியில் அகழாய்வை தொடங்கினர். முதன் முதலில் அகழாய்வு தொடங்கிய இடம் மணலூர் கண்மாயை ஒட்டிய பகுதி தான், பண்டைய காலத்தில் அதுவும் மணலூராகத்தான் இருந்திருக்கும், என்றார்.மணலூர் அருண் கூறுகையில், பண்டைய இதிகாசங்களில் மணவூர் என குறிப்பிட்டுள்ளது. தற்போதைய மணலூரைத்தான், அகழாய்வில் முதன் முதலில் மணலுாரில் தான் இரும்பை உருக்க பயன்படுத்தும் உலைகலன் கிடைத்தது. அகழாய்வு முதன் முதலில் மணலுாரில் இருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும், இரு முறை அகழாய்வு செய்தும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தொல்லியல் துறையினர் 8ம் கட்ட அகழாய்வை நடத்தவில்லை.மணலுார் அம்மன் கோயிலை ஒட்டிய கண்மாய் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும், ஏற்கனவே இந்த இடத்தில் மணல் அள்ளிய போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது எனவே மணலுாரில் அகழாய்வை தொடங்க வேண்டும், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3059803