Friday, 4 January 2019
தொடரும் திருவிளையாடல்கள்
தொடரும் திருவிளையாடல்கள்
கடந்த மாசிமாதம் 25ஆம் நாள் (9.மார்ச்.2014) ஞாயிற்றுக்கிழமை மாலை தேவகோட்டை தியாகிகள் சாலையில் உள்ள ‘இராம ஏகம்மை‘ திருமண மண்டபத்தில் ‘ஞானதான சபை‘யின் பத்தாம் ஆண்டுவிழா நடைபெற்றது.
விழாவிற்குச் சபையின் நிறுவுனர் தலைவர் திரு.சுப.செட்டியப்பன் அவர்கள் (80)ஆசியுரை வழங்கினார். கயிலைமணி பேராசிரியர்இராம.திண்ணப்பன் (திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் தலைவர்) அவர்கள் தலைமை ஏற்றார்.
1) தேவகோட்டை இலக்கியமேகம் ந.சீனிவாசன் அவர்களது “பெருங்கருணைப்பேராறு“ என்ற தலைப்பிலான சிறப்புரையாற்றினார். கண்ணப்பநாயனாருக்கு மட்டுமே சிவலிங்கத்தில் கண் தெரிந்தது, மதுரையை ஆண்ட ராஜசேகரபாண்டியனுக்கு மட்டுமே நடராசனின் கால்வலிக்குமே என்ற உணர்வு தோன்றியது முதலான சில கருணைப் பேறுகளை எடுத்து விரித்துரைத்தார். அளவு பெரியதாக இருப்பதால் இவரது உரையின் ஒலிப்பதிவை இணைக்க இயலவில்லை.
2) சொல்லோவியர் பொற்கிழிக்கவிஞர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களது “திருவாகத் தேன்“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேய ஆட்சியருக்கு அன்னைமீனாட்சி அருளியதை வரலாற்றைக் கூறித் ”தேனில் எப்பக்கம் சுவை இருக்கிறது என்று கேட்டால் எப்படி?” என்று கேட்டுச் சிறப்பானதொரு உரையை யாற்றினார். இவரது உரை மீண்டும் மீண்டும் கேட்கும்படியாக அமைந்துள்ளது. அளவு மிகப் பெரியதாக இருப்பதால் இவரது உரையையும் இணைக்க இயலவில்லை.
3) சிறப்பு விருந்தினராக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தக்கார் உயர்திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மதுரையம் பதியிலே இன்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருவிளையாடல்கள் தொடர்ந்து நாளும் நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளன என்றார். கோயிலில் சிதலமடைந்த கற்தூண்களை அகற்றிப் புதியன பதித்த பணியிலும், குடமுழுக்குநாள் குறித்துச் சர்ச்சைகள் உண்டானபோதும், குடமுழுக்கு நாளன்று தனக்கு இறைவன் இறைவியர் வழங்கிய கருணையையும் எடுத்துக் கூறினார். இவரது உரையின் ஒலிப்பதிவும் மிகப் பெரியதாக இருப்பதால் இணைக்க இயலவில்லை.
இம்மூவரது உரைகளும் தேவாமிர்தம் போன்றிருந்தன என்றால் அது மிகையல்ல.
இப்போதைக்கு உயர்திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் வழங்கிய இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னையின் அருட்காட்சி
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் கும்பஅபிஷேகத்திற்கு நாள் குறித்துப் பணிகள் எல்லாம் நடைபெற்று முடியும் தருவாய்க்கு வந்து விட்டன. ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில் சில காரணகாரியங்களால் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று சில ஸ்தானிகங்கள் (பரம்பரை பரம்பரையாகக் கோயிலில் பூசைகள் செய்வோர்) தடுத்தனர். வேறுசில ஸ்தானிகங்கள் அந்தக் குறிப்பிட்ட நாளில் உள்ள நல்லனவற்றை எடுத்துக்கூறி நடத்தலாம் என்றனர்.
ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கூட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. மாறாக இரண்டு கருத்துக்களைக் கொண்டவர்களும் குழுவாகக் கூடிக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொண்டனர். அவர்களுக்குள் இருந்த மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் ஒரு வலுவான சண்டை உருவாகிக் கொண்டிருந்து.
ஒருநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி எப்படியாகிலும் இரண்டில் ஒன்றை முடிவெடுத்தே தீர்வது என்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி அன்றைய தினமும் கூட்டத்தினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு தங்களுக்குள் சண்டையிடத் துவங்கிவிட்டனர்.
நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
என் மனதுக்குள் ஏதோ ஒன்று ”நீ பேசு, நீ பேசு“ என்று சொல்லிக் கொண்டே இருந்தது! நாம் எழுந்து பேசினால், பிரச்சனை தீர்வதற்கான வழியே இல்லை. எந்தப் பக்கம் பேசினாலும், மாற்றுக் கருத்துடையோர் எனது கருத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்று எனது அறிவு சொன்னது....
ஆனாலும்,
ஏதோ ஒன்று ” நீ பேசு, நீ பேசு“ என்று சொல்லிக் கொண்டே இருந்தது!
என்னால் எனது அந்த உள்ளுணர்வை அடக்க முடிய வில்லை.
ஆனால் என்ன பேசுவது?
என் மனதில் குழப்பமே மேலோங்கி நின்றது.
இருப்பினும் இன்று இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும் என்ற நிலையிலும் எழுந்து நின்றேன்.
சிறிது நேரத்தில் எல்லோரும் அமைதியாகினர்.
நான் அவர்களிடம், “இந்தத் திருவிழா அன்னை மீனாட்சியுடன் தொடர்புடையது, எனவே நாம் அனைவரும் அன்னையிடம் சென்று கேட்போம்“ என்று கூறி அழைத்துச் சென்றேன்.
ஆமாம், சரி.
இல்லை. வேண்டாம்.
என இரண்டு சீட்டு எழுதினேன்.
இரண்டு சீட்டுக்களையும் அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்து எடுத்து வரச் சொன்னேன். அவ்வாறே அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்து எடுத்து வந்து ஒரு தாம்பாளத்தில் வைத்தனர்.
அன்னையின் சந்நிதிவாயிலில் பெரும் பக்தர்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. மெய்யன்பர்கள் வரிசையாக வந்து வழிபட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
இரண்டு சீட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் ஆளைத் தேடினேன்.
அப்போது ஒரு சிறுமி வரிசையில் வந்தாள்.
அந்தச் சிறுமியை அழைத்து, ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டேன்.
அவளும் எடுத்துக் கொடுத்தாள்.
பிரித்துப் பார்த்தோம்.
ஆமாம், சரி என்று இருந்தது.
என்னுடைய மனதிற்குள் மட்டட்ற மகிழ்ச்சி.
அம்மா உனது பெயர் என்ன? என்று கேட்டேன்.
“என் பெயர் மீனாட்சி“ என்றாள் அந்தச் சிறுமி.
அங்கிருந்த அனைவரும் அப்படியே உறைந்து போனோம்.
என்னையையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, அன்னை மீனாட்சி அருட்காட்சி வழங்கியதை எண்ணியெண்ணி என்னுள்ளம் என்றும் பூரிப்படைந்தேன்.
இப்போது யாரும் யாருடனும் குடமுழுக்குநாள் குறித்துத் தர்க்கம் செய்து கொள்ளவில்லை.
குறிப்பிட்ட தேதியன்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
குடமுழுக்குநாளான்று மீண்டும் ஒரு அற்புதம் நடைபெற்றது.
அந்த அற்புதத்தை என்னவென்று எடுத்துரைப்பது.,.,
திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்களின் அனுபவங்கள் தொடரும்,,,,
64 திருவிளையாடல்களுக்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து திருவிளையாடல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.
அவற்றில் திருமலைநாயக்கர் மடியில் வந்து அமர்ந்து மீனாட்சி பிள்ளைத்தமிழ் கேட்டது.
பீட்டர் பாண்டியன் என்ற வெள்ளைக்கார அதிகாரிக்கு அருள்வழங்கியது, எனச் சில பதிவாகி உள்ளன. https://youtu.be/WVoFI9OsGuk
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Tuesday, 1 January 2019
Monday, 31 December 2018
புராணக் கதைகள் ஏன் குடும்பக் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன? என்னிடம் கேட்டால்
புராணக் கதைகள்
ஏன் குடும்பக் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன?
என்னிடம் கேட்டால்?
புராணக் கதைகள் அனைத்தும் அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் குடும்பக்கதைகள் போலச் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு சந்திரனுக்கு 27 (நட்சத்திரங்கள்) மனைவிகள் என்று சொல்லப்பட்டிருக்கும். சூரியனுக்கு உஷா தேவி, சாயா தேவி என்ற இரண்டு மனைவியர் என்றும், சூரியனுக்கும் சாயாவிற்கும் பிறந்தவன் சனீசுவரன் என்றும் சொல்லப்பட்டிருக்கும்.
நமக்குத் தேவைப்படும் உணவோ மருந்தோ அப்படியே கொடுக்கப்படாது. மருந்தை அப்படியே விற்கவும் முடியாது, அப்படியே சாப்பிடவும் முடியாது.
மருந்துத் தயாரிப்பாளர் உற்பத்தி செய்த மருந்தை முதலில் ஒரு கூடு (capsule) போட்டு பத்திரப்படுத்தி வைப்பார். கூட்டு மாத்திரையை அப்படியே விற்க முடியாது. 10 எண்ணிக்கை கூட்டுமருந்தை ஒரு அட்டையில் அடைத்து வைத்து இருப்பார்கள். இதுபோல் 10 அட்டைகள் அடங்கியதை ஒரு காகித அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து விற்பார்கள்.
இதுபோல் தான் புராணக்கதைகளும் இருக்கும், பல்வேறு படிநிலைகளைத் தாண்டி அது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும்.
நாம் அட்டைகளை நீக்கி விட்டு கூட்டு மாத்திரையைச் சாப்பிடுகிறோம். நமது வயிறு கூட்டுமாத்திரையில் உள்ள மருந்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்.
நாம் புராணக்கதைகளை ஒன்றிக் கேட்டு அதன் அட்டைகளை நீக்கிவிட்டு கருத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
துவரிமான், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், சிறப்புரை
மதுரை
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்
ஒருங்கிணைப்பாளர்கள் முகாம்
மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் நிறுவுனத் தலைவர் திரு கா.சந்திரசேகரன் அவர்கள், “சிறப்புமிக்க திருவிளையாடல் புராண ஆராய்ச்சி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுமாறு அடியேனை அழைத்தார்.
அடியார்களுடன் கலந்திருப்பதும், கால்மாறி ஆடிய கருணைக்கடலின் திருவிளையாடல்களின் சிறப்புகளைத் திருவிளையாடல் புராணத்தில் உள்ளபடி எடுத்துக் கூறுவதும் ஒரு கொடுப்பினை யல்லவா? எனவே மிகவும் மகிழ்ந்து ஒத்துக் கொண்டேன்.
நேற்று மார்கழி 15 (30.12.2018) ஞாயிற்றுக் கிழமை யன்று காலை மணி 10.30க்கு துவரிமான் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எனது சிறப்புரை நிகழ்ந்தது.

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பெற்று 64 திருவிளையாடல்களாகச் சொல்லப் பெற்றுள்ளதற்கான காரணம், மதுரைக்கு மதுரை மதுராபுரி கூடல்நகர் திருஆளவாய் என்ற பெயர்கள் உண்டானதற்கான காரண காரியங்கள், மற்றும் புராணம் காட்டும் மானிடவாழ்க்கைநெறி முதலானவற்றைப் புராணத்தின் அடிப்படையில் விளக்கிக் கூறினேன். “கண்ணகி பற்றித் திருவிளையாடல் புராணத்தில் குறிப்புகள் ஏதும் ஏன் இடம்பெறவில்லை?” என்ற காரணங்களைத் தொகுத்துக் கூறினேன். “திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ள பொன்னனையாளை 64 நாயன்மார்களின் வரிசையில் வைத்துச் சுந்தரர் பெருமான் ஏன் பாடவில்லை ?” என்பதற்கான காரணங்களையும் தொகுத்துக் கூறினேன். அடியார் பலரும் மிகுந்த கவனத்துடன் செவிமடுத்துக் கேட்டது எனக்கு மட்டட்ற மகிழ்ச்சியை அளித்தது.

மதிய உணவிற்குப் பிறகு, மதுரை திருப்பணிச் செம்மல் உயர்திரு. கருமுத்து க. தியாகராசன் அவர்கள் உரையாற்றினார்கள். 36ஆவது திருவிளையாடல் நடைபெறக் காரணமான பொன்னனையாளின் சிறப்பையும் அவள் நடத்தி வந்த அன்னதானத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறினார்.
புராணங்களைப் பொய் யென்று பேசியும் எழுதியும் வருகின்றனர் சிலர். சிலர் புராணங்களைத் தொன்மம் என்றும் கட்டுக் கதைகள் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது போன்ற சில அற்புதமான நிகழ்ச்சிகள் அன்றாடம் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன எனச் சில நிகழ்ச்சிகளை உதாரணத்துடன் எடுத்துக்காட்டி விளக்கினார் உயர்திரு.கருமுத்து க. தியாகராசன் அவர்கள்.
திருமலை நாயக்கர் குமரகுருபரரை அழைத்து மீனாட்சியம்மன் சந்நிதியில் அமர்த்தி மீனாட்சி பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்கிறார். அப்போது சிறுபெண்குழந்தை வடிவில் அன்னை மீனாட்சி வந்து மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.
இப்போது நடைபெற்று முடிந்துள்ள குடமுழுக்குத் திருப்பணியின் போது, குடமுழுக்கை எந்த நாளில் வைத்துக் கொள்ளலாம் எனச் சீட்டு எழுதிப் போட்டு அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொண்டபோது, ஒரு சிறுமியே மீனாட்சி உருவத்தில் வந்து சீட்டு எடுத்துக் கொடுத்தும் தன்னுடைய பெயர் மீனாட்சி என்று கூறி அருளிச் செய்த நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார்.
இதுபோன்று அன்றாடம் நடைபெறும் திருவிளையாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்திட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அவரது பக்தியில் தோய்ந்த உரையை நிறைவு செய்தார்.

கூட்டத்திற்கு வந்திருந்த அடியார்கள் ஒவ்வொருவராக, அவரவர் செய்துவரும் திருப்பணிகளை எடுத்துக்கூறி அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து கொண்டனர்.
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்களும், செயலாளர் முனைவர்.கண்ணன் அவர்களும், பொருளாளர் திரு. சரவணன் அவர்களும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அடியார்களைப் பெரிதும் உபசரித்து மகிழ்ந்தனர்.

முகாம் நிறைவடைந்தவுடன், நானும் திருப்பூவணம் பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் பொருளாளருமான ஐயா முத்துக்குமாரசாமி அவர்களும் கோயில் எதிரே உள்ள அருள்மிகு முனீசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம். அனைவரும் முனீசுவரர் மேல் மிகுந்த பக்தியும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். முனீசுவரர் கோயில் வளாகத்தில் கிராமத்தினர் யாரும் காலணி அணிந்து செல்வதில்லை. உலகமக்களெல்லாம் கணினியுடனும் கைபேசியுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கலிகாலத்தில், காலில் செருப்பு அணியாமல் கடவுளுடன் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கிராமத்தினரைக் கண்டு பெரிதும் வியந்து மகிழ்ந்தோம்.

மொத்தத்தில் என் வாழ்நாளில் நான் வாழ்ந்த நாளில் ஒருநாளாக நேற்றைய மார்கழி 15ஆம் நாள் விளங்கியது.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------------------------------------
தினமலர் பத்திரிக்கைச் செய்தி
மார்கழி 16 ( 31.12.2018) திங்கள் கிழமை,வாடிப்பட்டி: மதுரை துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் முகாம் நடந்தது.மைய நிறுவன தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை ஓய்வு பெற்ற துணை பதிவாளர் காளைராஜன், தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் பலர் பேசினர். நிகழ்ச்சியை நிர்வாகி முருகேசன் ஒருங்கிணைத்தார்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2180902
Wednesday, 19 December 2018
திருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர் பாடியருளிய வரலாறு
திருவிளையாடல் புராணம்
பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடி அருளிய வரலாறு

சிவபெருமான் மதுரையில் அருளிச் செய்த நிகழ்ச்சிகளைத் ‘திருவிளையாடல் புராணம்’ கூறுகிறது. வடமொழியில் இருந்த இந்தக் கதைகளைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். பரஞ்சோதி என்பது சிவபெருமானின் பெயர்களுள் ஒன்றாகும். நாரைக்கு முத்தி கொடுத்த திருவிளையாடலைக் கூறும் திருவிளையாடல் புராணம் 2310ஆவது பாடல் சிவபெருமானைப் சிவபரஞ்சோதி என்று குறிப்பிடுகிறது.
மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. அவற்றுள் 64 நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. மதுரை மாநகருக்குக் கடம்பவனம், கூடல்நகர், நான்மாடக் கூடல், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.
பாடல் -
" அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை அரங்கேற்று மா போல்
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும்
அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே."
பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் பிறந்தவர். இவர் தமிழும் வடமொழியிலும் புலமை மிகுந்தவர். சங்கர சங்கிதை என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்து எழுதித்தர வேண்டும் எனப் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த வடமொழிநூலை மொழிபெயர்த்துப் பாடிச் சொக்கநாதர் (மீனாட்சி சுந்தரேசுவரர்) சந்நிதியில் அரங்கேற்றியதாகக் கந்தசாமிப் புலவர் மேலேயுள்ள அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகிறார்.
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 24.)
அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால் சனற்குமாரன்
உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு
எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின் மாதோ.
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 25.)
அறைந்திடப் பட்டது ஆகும் ஆலவாய் புகழ்மை அந்தச்
சிறந்திடும் வடநூல் தன்னைத் தென் சொலால் செய்தி என்று இங்கு
உறைத்திடும் பெரியோர் கூறக் கடைப் பிடித்து உறுதி இந்தப்
பிறந்திடும் பிறப்பில் எய்தப் பெறுதும் என்று உளம் தேறா.
18 புராணங்களில் ஒன்று காந்தத் தீச சங்கிதை என்ற புராணம் ஆகும். இதில் ஈசனது கதைகள் பாடப்பெற்றுள்ளன.
திருவிளையாடற் புராணம் பாடல் எண் 221
இன்ன ஆறனுள் சங்கர சங்கிதை என்று
சொன்ன நூலினை உணர்த்தினான் சங்கரன் துணைவிக்கு
அன்ன போது அவள் மடியினில் இருந்து கேட்டு அதனை
மின்னு வேல் பணி கொண்ட வேள் வெளிப்பட உணந்தான்.
குன்று எறிந்த வேள் வழிபடு குறு முனிக்கு உரைத்தான்
அன்று தொட்டு அஃது அகத்திய சங்கிதை ஆகி
நின்ற தன்னது கேட்பவர்க்கு அரன் அடி நீழல்
ஒன்றும் இன்ப வீடு அளிப்பதா ஒரு தலன் உரைக்கும்.
14
சங்கிதை என்ற வடநூலில் உள்ளதை மொழிபெயர்த்துப் பாடுகிறேன் என்று பரஞ்சோதி முனிவரே குறிப்பிடுகிறார்.
இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.
இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
Tuesday, 18 December 2018
Subscribe to:
Posts (Atom)