Showing posts with label தீர்த்தக் கலசம். Show all posts
Showing posts with label தீர்த்தக் கலசம். Show all posts

Tuesday, 11 February 2020

ஞானநீர், யாககுண்டம், தீர்த்தக்குடம், தீர்த்தக் கலசம்

ஞானநீர்

கும்பாபிஷேகம் என்ற சொல்லிற்குப் பதிலாக குடமுழுக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் திருஞானசம்பந்தர் “ஞானநீர்” என்று சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதனால் குடமுழுக்கு என்ற பொருளற்ற சொல்லுக்குப் பதிலாக “ஞானநீராட்டல்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோயில் தேவாராப் பதிகத்தில்,

“வாவி வாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனங்
காவிவாய்ப் பண்செய்யும் கானப்பேர் அண்ணலை
நாவி வாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவி வாய்ப்பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே“

என்ற இப்பாடலில் “ஞானநீர்“ என்ற சொல்லைத் திருஞானசம்பந்தர் பயன்படுத்தியுள்ளார்.

அஃறினைப் பொருளான நீருக்கு ஏது ஞானம்? ஞானசம்பந்தர் குறிப்பிடும் நீர் எது?

குடத்திலே (கும்பத்திலே) நீர் பெய்து, அதனை யாகத்தில் வைத்து வேத மந்திரங்களை ஓதுவதால், அக்குடத்தில் இருக்கின்ற நீர் ஞானநீர் ஆகிவிடுகிறது, என்பது திருஞானசம்பந்தரின் கூற்று.
“வாசனை மலர்கள் மிகுந்த தடாகத்திலே வாசம் செய்கின்ற சிறிய வண்டு இனங்கள் பலவும், கானப்பேர் அண்ணலின் மேல் உள்ள சந்தனத்திலிருந்தும் பூவிலிருந்தும் வருகின்ற வாசனையை நுகர்ந்து, அடியார்களின் பாடலுக்கு இசைய ரீங்காரம் செய்கின்றன. நல்வினைப் பயனால் இப்பிறவியில் கானப்பேர் அண்ணலை வழிபடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற தொண்டர்கள்,யாகத்தில் வைக்கப்பெற்ற கும்பத்தில் உள்ள ஞானநீரைத் தூவிக் கானப்பேர் அண்ணலை நீராட்டுவார்கள்“ என்கிறார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தரின் ஞானநீர் என்ற சொல்லாட்சி அருமையாக உள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்