Showing posts with label கோடைகாலம். Show all posts
Showing posts with label கோடைகாலம். Show all posts

Sunday, 10 March 2019

கோடைக்கு உகந்த மணம் நிறைந்த குளிர்ந்த நீர்ப்பந்தர் (flavoured ice water)


கோடைக்கு உகந்த
மணம் நிறைந்த குளிர்ந்த நீர்ப்பந்தர் 
(flavoured ice water)


கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கி விடுகிறது.  எங்கு பார்த்தாலும் கரும்புச்சாறும், இளநீரும், மோரும் விற்பனையாகின்றன.  நல்லோர் பலர் ஆங்காங்கே ஆட்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் தண்ணீர்ப் பந்தர் அமைத்துள்ளனர்.  

அதிலும் குறிப்பாகக் குளிர்ந்த நீர்மோர், அல்லது குளிர்ந்த கரும்புச்சாறு இவைகளையே பெரிதும் மக்கள் விரும்பி அருந்துகின்றனர்.

இவ்வாறு தண்ணீர்ப் பந்தர் அமைத்துத் தாகம் தீர்க்கும் பணியை முதன்முதலாகச் செய்தவர் யார்?  எந்த ஊர்? 

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் சோமசுந்தரேசுவரர் தண்ணீர்ப் பந்தர் வைத்துத் தண்ணீர் வழங்கியதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  அதிலும்,  மலர்களைத் தூவி வாசம் நிறைந்த குளிர்ந்த தண்ணீர் வழங்கப்பட்டதாகத் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.  

உலகில் வெப்பநாடுகள் பல உள்ளன.  அந்நாட்டு இலக்கியங்களில் தண்ணீர்ப் பந்தல் பற்றிய குறிப்புகள் எதும் உள்ளனவா? என அறிய இயலவில்லை. 

ஆனால் புராண காலத்திலேயே மதுரை மக்கள் மணம் நிறைந்த குளிர்ந்த நீர்ப்பந்தர் (flavoured ice water) அருந்திக் கோடையின் வெப்பத்தினைத் தணித்துக் கொண்டுள்ளனர் என்ற செய்தி வியப்பாக உள்ளது.
-----------------------------------------------------------------------------------------


பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியருளிய
திருவிளையாடற் புராணத்தில்
பந்தர்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

336.       
சென்னி பொருட்டு எயில் வாயில் திறந்து அடைத்து  விடை பொறித்த செயலும் சென்னி
மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப் பந்தர் வைத்த வாறும்
பொன் அனையாள் பொருட்டுஇ ரதவாத வினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை தந்த வாறும்.     

1819.    
சம்பு மதுரைப் பரன் இரவு தனியே வந்து தனைப்  பணிந்த
வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டும் தாழ் இறுக்கி
அம் பொன் கதவின் விடை பொறித்தது அறைந்தும் தென்னன் அடு படைக்கு
வம்பு மலர் தோய் புனல் பந்தர் வைத்துக் காத்த வகை சொல்வாம். 

1848.    
ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற
தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல்
நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால்
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர் நாப்பண்.         

1851.    
சுந்தரப் புத்தேள் வைத்த துறு மலர் வாசத் தெண்ணீர்ப்
பந்தர் புக்கு அடைந்து நன்னீர் பருகி எய்ப்பு அகல  ஆற்றல்
வந்தபின் செழியன் தன்னோர் வளவன் மேல் ஏறிச்சீறி
அந்தம் இல் அனிகம் சிந்தித் தும்பை வேய்ந்து அடு போர் செய்தார்.  

1856.    
வரதன் மீனவன் படை இடை வந்து நீர்ப் பந்தர்
விரதன் ஆகி நீர் அருந்திய வினை செய்ததும்
பரத நூலியன் நாடகப் பாவையாள் ஒருத்திக்
இரத வாதம் செய்து அருளிய ஆடலை இசைப்பாம்.            

2369.    
அந்த வேலையின் முன் அரும் தமது அருள் எனக் குளிர் கடிபுனல்
பந்தர் நீழல் அளித்தும் ஓடை படுத்தியும் பகை சாயவே
வந்த வேடர் அவ்வண்ணமே ஒரு மான வேட அரசாய் வலம்
சிந்த ஆகுலம் மூழ்கு மீனவன் சேனை காவலர் ஆயினார்.           

தண்ணீர்ப் பந்தர் போன்று, மல்லிக்கைப் பந்தர், மாதவிப் பந்தர், முத்தின் பந்தர், தரளப் பந்தர் முதலான பந்தர்களைப் பற்றியும் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

பாடற் தொகுப்பு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 26 (10.03.2019) ஞாயிற்றுக் கிழமை.


2451.    

பொங்கரின் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கு அலர் மணம் கூட்டு உண்டு குளிர்ந்து மெல் என்று தென்றல்
அங்கு அங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே.     

2469.    
மயில் இளம் பெடை அன்னாள் ஓர் மாதர் மாங் குடம்பை  செல்லும்
குயில் இளம் பெடை தன் ஆவிச் சேவலைக் கூவ நோக்கி
அயில் இளம் களிறு அன்னானைக் கடைக் கணித்து அளியும் தேனும்
பயில் இளம் சோலை மாடு ஓர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள்.       

3128.    
பருமுத்த முலையாள் பங்கன் அருளினால் பசும் பொன் தாளம்
திரு முத்தின் சிவிகை காளம் தெள் முத்தின் பந்தர் இன்ன
நிருமித்த வகைபோல் பெற்றுப் பாலையை நெய்தல் ஆக்கி
பொரு முத்த நதி சூழ் வீழிப் பொன் படிக்காசு பெற்று.      

3138.    
புண்ணிய நீற்றுத் தொண்டர் குழாத்தினுள் புகலி வேந்தர்
நண்ணிய சிவிகை மீது நகைவிடு தரளப் பந்தர்
கண்ணிய தோற்றம் தீம் பால் கடல் வயிறு உதித்து தீர்ந்து
விண் இயல் முழு வெண் திங்கள் விளக்கமே ஒத்தது  அன்றே.  


நன்றி - திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் பதிவு செய்து வைத்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தினருக்கு நன்றி.