Showing posts with label கல்யானை. Show all posts
Showing posts with label கல்யானை. Show all posts

Monday, 3 November 2025

திருவிளையாடல் புராணத்தில் காசி (வாரணாசி)

 


மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களில்

காசி  (வாரணாசி“

மதுரையும்  காசியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஆன்மீக நகரங்கள் ஆகும். முத்தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் ஆராய்ந்த பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரையும், வாரணாசி என்ற   காசியும் இந்தியாவின் மிகத் தொன்மையான நகரங்கள் ஆகும்.   தமிழருடைய  வாழ்வோடும் பண்பாட்டோடும் தொடர்புடையன  இந்த  இரண்டு நகரங்களும்.   மதுரையில் சிவபெருமான் எழுந்தருளி 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.   அந்தத் திருவிளையாடல்களில் சிவபெருமான் “ காசி“யில் இருந்து சித்தராக வந்ததாகப்  புராணம் குறிப்பிடுகிறது.  பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய  திருவிளையாடல் புராணத்தில் 13  பாடல்களில்  “காசி இடம் பெற்றுள்ளது.  ஒரு  பாடலில் “வாரணாசி“  இடம் பெற்றுள்ளது.

( Madurai and Kasi are historically important and spiritual cities. Madurai, the capital of the Pandyan dynasty, where the Tamil Language was analyzed by the Tamil Sangam.  The Madurai and the Varanasi, which is known as Kasi, are the most ancient cities in India. These two cities are associated with the life, civilization and culture of the Tamils. Lord Shiva appeared in Madurai and performed the Holly 64 Thiruvilayadals. In these Purana stories, it is mentioned that Lord Shiva came from “Kashi” as a Siddha. In the Thiruvilayadal Purana, the “Kashi city” is mentioned in 13 songs. “Varanasi” is mentioned in one song.)

 

'  காசி' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு -

224.     
புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள்
விதியினால் கடுநடைப் பரி மகம் செய்வான் வேண்டிக்
கதியை மாய்ந்தவர்க்கு உதவு தண்துறை கெழு காசிப்
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டு ஒரு வைகல்.

புதிய தாமரை மலரில் உறையும், பழைய வேதங்களை யுணர்ந்த பிரமதேவன், அவ் வேத விதிப்படி, விரைந்த நடையினையுயடைய துரகவேள்வி செய்தற்கு, விரும்பி, இறந்தவருக்கு, வீட்டுலகைத் தருகின்ற, குளிர்ந்த நீர்த்துறைகள் பொருந்தியகாசி என்னுந் திருப்பதியின் கண், முன்னொரு காலத்தில், புதல்வர்களோடு சென்றான்.

226.     
சத்திய உலகில் சரோருகக் கிழவன் சார்ந்த பின் புலப் பகை சாய்த்த
அத்திரு முனிவர் அனைவரும்   காசி அடிகளை அடைந்தனர் பணிந்து
முத்தி மண்டபத்தின் அற முதல் நான்கு மொழிந்த அருள் மூர்த்தி சந்நிதியில்
பத்தியாய் இருந்து நாரத முனியைப் பார்த்து ஒரு வினா வுரைபகர்வார்.

தாமரை மலருக்கு ரியவனாகிய அயன், சத்திய உலகை அடைந்தபின், புலன்களாகிய பகையைக் கெடுத்த, சிறந்த முனிவர்கள் அனைவரும், காசிப்பதியில் வீற்றிருக்கும் இறைவனை யடைந்து வணங்கி, முத்தி மண்டபத்தில், சனகாதி நால்வருக்கும் உபதேசித்து அருளிய தட்சிணா மூர்த்தி திருமுன்னே, அன்போடு அமர்ந்து, நாரத முனிவரை நோக்கி, ஓர் வினா நிகழ்த்துவாராயினார்.

236.     அன்னமலி வயல் புலியூர்   காசி நகர் காளத்தி ஆல வாயாம்
இன்ன வளம் பதினான்கில் திரு வால வாய் அதிகம் எவ்வாறு என்னின்
மின்னவிர் அம்பலம் காணக்   காசிநகர் வதிந்து இறக்க வியன் காளத்திப்
பொன் நகரம் பத்தியினால் வழிபாடு செய அளிக்கும் போகம் வீடு.

அன்னப் பறவைகள் நிறைந்த வயல்களையுடைய சிதம்பரமும், காசி நகர்,  சீகாளத்தி, திருவாலவாய், இந்த அழகிய திருப்பதி நான்கனுள், திருவாலவாயே உயர்ந்தது;  எப்படி என்றால்,  ஒளி விளங்குகின்ற, சிதம்பரந் தரிசித்தலானும், காசிப்பதி தங்கி இறத்தலானும், பெருமை பொருந்திய சீகாளத்தியாகிய, அன்போடு வழிபடுதலானும்,  போகத்தையும் வீட்டையுங் கொடுக்கும்.

 239.     சுர நதி சூழ்   காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும் தூநீர் வைகை
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும் வதிவோர்க்கு ஈது
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின் இச் சீவன் முத்தி
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம் எப் புவனத்து உள்ளும்.

கங்கையாறு சூழ்ந்த காசி முதலிய பிறபதிகள் மறுமையில் வீட்டினைக் கொடுக்கும்.   தூய்மையான நீரினை டைய வையை ஆறு சூழ்ந்தது திருவாலவாய்.  இங்கே வசிப்பவர்களுக்குச் சீவன் முத்தியைக் கொடுக்கும்இது மிகுந்த உறுதி, மறுமையில் வீடு   கொடுக்கும்.  ஆதலால், சீவன் முத்திபுரங்களில்  திருவாலவாய் சிறந்தது.   உலகத்திலும், அதற்கு அதுவே நிகர் ஆகும்.

 242.     எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை இல்லம்
வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு பழனம் உன்னாத்
தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன்   காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.

எள்ளும் நெய்யும் சோறும் கன்னியும், குதிரையும் தேரும் யானையும் வீடும், வெள்ளியும் பசுவும் பொன்னும் அணிகலனும் ஆடையும், விளைவோடு கூடிய வயலும், முதலாகவும், நீக்குதற்கு அரிய அடிமை முதலாகவும் உள்ள, தானங்களைச் செய்தலினால் வரும்பயனும், சிவபிரான் எழுந்தருளி யிருக்கும் காசி முதலிய, தலங்களில் வசித்தலால் வரும் பயனும்.

413.     கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எலாம் போய் படிந்து   காசி காஞ்சி
அம் கனக கேதார முதல் பதிகள் பலபணிந்து அவுணன் கொன்ற
பொங்கு பழி விடாது அழுங்கி அரா உண்ண மாசுண்டு பொலிவு மாழ்கும்
திங்களனை யான் கடம்ப வனத்து எல்லை அணித்தாகச் செல்லு மேல்வை.

கங்கை முதலிய அளவற்ற தீர்த்தங்கள் அனைத்திலும் சென்று நீராடி,  காசியும் காஞ்சியும் அழகிய பொன்மயமான கேதாரமும் முதலாகிய பல திருப்பதிகளிற் சென்று  வணங்கியும், அசுரனைக் கொன்றதனால் வந்த மிக்க பாவமானது விடப் பெறாமையால் வருந்தி, பாம்பு விழுங்க  குற்றப்பட்டுப் பொலிவினை ந்த சந்திரனைப் போன்று   இந்திரன் இருந்தான்.  அவன் கடம்பவனமாகிய மதுரையின் எல்லையின் அருகே செல்லும் பொழுது,

 442.     கரு வாசனை கழிக்கும்   காசி நகர் தன்னில்
துருவாச வேத முனி தொல் ஆகமத்தின்
பெரு வாய்மை ஆற்றன் பெயர் விளங்க ஈசன்
ஒருவா இலிங்க ஒளி உருவம் கண்டான்.

கருவாகப்  பிறக்கும்  வாசனையைப் போக்குகின்ற காசி நகர் தன்னில்,  மறைகளை ணர்ந்த துருவாச முனிவன், பழைய ஆகமத்தின் சிறந்த உண்மையால், தனது பெயர் விளங்குமாறு, இறைவன் நீங்காத ஒளிவடிவாகிய சிவலிங்கத் திருவுருவத்தை நிறுவினான்.

515.     கை வரை எருத்தில் கனவரை கிடந்த காட்சியில் பொலிந்து ஒளிர் கோயின்
மைவரை மிடற்று மதுரை நாயகரை மரபுளி அருச்சனை புரிவான்
பொய் வரை மறை ஆகம நெறி ஒழுகும் புண்ணிய முனிவரை ஆதி
சைவரைக்  காசிப்பதி யினில் கொணர்ந்து தலத்தினில் தாபனம் செய்தான்.

யானையின் பிடரியில் பொன்மலை தங்கிய தோற்றம் போல், பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய, கருமை தாங்கிய திருமிடற்றினை டைய மதுரை நாயகரை, விதிப்படி பூசிப்பதற்கு,  பொய்ம்மை நீக்குகின்ற, வேதாகம வழியில் ஒழுகா நின்ற,  அற வடிவாகிய முனிவர்களையும் ஆதி சைவர்களையும்,  காசி ன்னும் திருப்பதியில் இருந்து கொண்டுவந்து, தலத்தினில் நிறுவினான்.

804.     திருவளர் ஆரூர் மூலம், திருவானைக் காவே குய்யம்,
மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம், நீவிர்
இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம், திருக்காளத்தி
பொருவரும் கண்டம் ஆகும், புருவ மத்தியம் ஆம்  காசி.

செல்வம் ஓங்கும்  திருவாரூர் மூலஸ்தானம்; திருவானைக்கா  சுவாதிஸ்டான ஸ்தானம்;   மணம் ஓங்கும் சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை மணிப்பூர ஸ்தானம்;  நீங்கள் இருவரும் தரிசித்த தில்லைப்பதி இதய ஸ்தானம் ஆகும்; திருக்காளத்தி ஒப்பில்லாத கண்ட ஸ்தானம் ஆகும்;  காசி புருவ மத்திய ஸ்தானம் ஆகும்.

(குய்யம் - மறைவிடம்; சுவாதிஸ்டானத்தைக் குறிக்கின்றது.  இதயம் - அநாகதம். கண்டம் - விசுத்தி. புருவ மத்தியம் - ஆஞ்ஞை.)

1059.   மந்தரம்  காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத்
தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில்
இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில் சோம
சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம்.

மந்தரம் காசி
  முதலிய திருப்பதிகளில்,  இருந்து மேற்கொண்ட விரதங்களும் வழிபாடுகளும் தருகின்ற பயனிலும்,  மதுரைப்பதியில் இருந்துகொண்டு  அந்த விரதங்களையும் வழிபாடுகளையும் செய்பவர்களுக்குப்  கோடி பங்கு பயன் கூடுதலாக்  கிடைக்கும். அங்ஙனம் மிகுதியாக்  கிடைப்பதற்குக் காரணம் என்னவென்றால், சோமவாரமானது (திங்கள்  கிழமையானது) சோமசுந்தரக் கடவுளக்கு உரிய வாரம் ஆகும்.

1130.   அந் நெடு நாடு நீங்கி ஆடல் ஏறு உயர்த்த தோன்றல்
பொன் நெடும் சடையில் தாழ்ந்து புனிதம் ஆம் தீர்த்தக்  காசி
நல் நெடு நகரம் எய்தி நளிர் புனல் கங்கை நீந்திக்
கல் நெடு நெறி அநேக காவதம் கடந்த பின்னர்.

அந்த நெடிய நாட்டினைக் கடந்து, வெற்றியையுடைய இடபக் கொடியை உயர்த்திய சிவபெருமானது, பொன் போன்ற நீண்ட சடையினின்றும் இழிந்து, தூய்மையாகிய கங்கையை டைய, நல்ல நெடிய காசிப்பதியை அடைந்து, குளிர்ந்த நீரையுடைய கங்கையாற்றைக் கடந்து, கற்கள் செறிந்த  நீண்ட அனேக காத வழியைக் கடந்த பின்.

1363.   ஆனாலும் இப்போது அணி கான்மிர நாட்டில்  காசி
தான் நாம் இருக்கும் தலம் ஆகும் அநாதர் ஆகி
ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமரா
நாள் நாளும் விஞ்சை நடாய்த் திரி சித்தரேம் யாம்.

 ஆயினும் இப்பொழுது, அழகிய காசுமீர நாட்டில்  உள்ள காசிப்பதியே, நாம் தங்கும் பதியாகும்.  அனாதையாய் யாருடைய ஆதரவும்  இல்லாதவராய், ஒரு பற்றும் இல்லாதவராய், நீங்காத பிச்சை எடுத்தலாகிய பெருவாழ்வினை டைய அடியார்களே நம் உறவினர் ஆவர். இறந்த உயிர்களை  மீண்டும் பிறக்க வைக்கும் விஞ்சை என்ற தொழிலை யாம் எந்நாளும் நடாத்தித் திரிகின்ற சித்தர் ஆவோம். (கான்மிரம் – காசுமீரம்).

 2395.   வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில்  காசி தன்னில்
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

வங்கிய சேகரபாண்டியனது செங்கோல் நன்கு நடைபெறும் நாளில்,  முன் ஒரு நாளில், கங்கையின் அழகிய துறை சூழ்ந்த, அழியாத காவலையுடைய மதில் சூழ்ந்த காசிப்பதியில், தாமரைமலரை இருக்கையாக டைய பிரமன், தாவுகின்ற துரங்க வேள்வி பத்தினை, தேவர்கள் மகிழ்கூர, வேதவிதிப்படி பேணிச் செய்தான்.

'வாரணாசி' என்ற பெயர் உள்ள பாடல்

3065.    மந்தரம் கயிலை மேருப் பருப்பதம் வாரணாசி
இந்த நல் இடங்கள் தோறும் இக பர போகம் யார்க்கும்
தந்து அருள் செய்து எம் போல்வார் தம் மனம் புறம் போகாமல்
சிந்தனை திருத்தி ஞானத் திருஉரு ஆகி மன்னும்.

மந்தரமலையும் கயிலைமலையும் மேருமலையும் ஸ்ரீபருப்பதமும் வாரணாசி என்ற காசி இந்த நல்ல தலங்கள் தோறும், அழகிய ஞானவடிவை  உடையனாகி,  அனைவர்க்கும் இம்மை மறுமை ன்பங்களை அளித்தருளி, ன்னைப் போன்றோரின் மனம் புறத்தே செல்லாமல், உள்ளத்தைத் திருத்தி வீற்றிருப்பான்.

----------------

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
மேனாள் துணைப் பதிவாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம்,  காரைக்குடி 630003

kalairajan26@gamil.com  WhatsApp  +91 9443501912
(ஐப்பசி 22  சனிக்கிழமை - 08/11/2025)



Monday, 13 January 2025

தை 1 - குழந்தை வரம் பெரும் நாள், யானைக்குக் கரும்பு கொடுக்கும் நாள்

 தை முதல்நாள்

கல்யானை கரும்பு தின்ற நாள்

எல்லாம் வல்ல சித்தர்  அபிடேகபாண்டியனுக்கு

குழந்தை வரம் அருளிச் செய்தநாள்

தை முதல் நாள் அபிடேக பாண்டியன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டு வலம் வரும்போது எல்லாம் வல்ல சித்தரைக் கண்டான்.  சித்தரின்  அருட்பார்வையால் கல்யானை  பாண்டினின் கையிலிருந்த கரும்பைத் தின்றது.  இந்தக் கதையை நாம் அனைவரும் அறிவோம்.    இவ்வாறான சிறப்புடைய  தை முதல்நாளிலே எல்லாம் வல்ல சித்தர் பாண்டியனுக்கு குழந்தை வரம் அருளிச் செய்தார்.    

எனவே  தை முதல் நாளில்
1) மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபடுதல் சிறப்பு
2) யானைக்குக் கரும்பு கொடுப்பது சிறப்பு.
3) எல்லாம் வல்ல சித்தரை வணங்கிக் குழந்தை வரம் வேண்டிப் பெறலாம்.  
வாருங்கள் நாமும் அபிடேக பாண்டியனைப் போன்று தை முதல்நாள் வழிபட்டு வரங்கள் பல பெருவோம்.
----------------------------------------------
திருவிளையாடற் புராணம் - 
ஆனந்த சித்தர் தமைக்காண்பலென் றன்பு கூர்ந்த
மீனந் தரித்த கொடிவேந்தன் குறிப்பு நோக்கி
மோனந் தரித்த சிவயோகரு முந்தித் தம்பொன்
மானந் தனக்கு வடமேற்றிசை வந்தி ருந்தார் ( பாடல் எண் 1359)

அருகாத செல்வத் தவனன்றுதைத் திங்க டோற்றம்
வருகால மாக மதுரேசனை வந்து வந்தித்
துருகா தரத்தாற் கழிந்துள்வல மாக மீள...... (பாடல் எண் 1360)

தைமாதம் முதல் நாள் அன்று சொக்கநாதரை வழிபட வேண்டி அபிடேகபாண்டியன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் கோவிலுக்குச் சென்றான். பாண்டியனின் வருகையை அறிந்த எல்லாம்வல்ல சித்தர் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார்.  அபிடேகபாண்டியன் சொக்கநாதரை வழிபட்டு உள் வலமாக வந்தபோது சித்தரைக் கண்டு, சித்தரிடம் “சித்தரே, தாங்கள் யார்? தங்களது ஊரும், நாடும் எவை? நீங்கள் எதனை எதிர்பார்த்து இங்கு வந்து சித்து வேலைகளை மதுரை மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஆகவேண்டியது ஏதும் உளதா?” என்று கேட்டான்.

இதனைக் கேட்ட சித்தர் சிரித்துக் கொண்டே “அப்பா எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் நாம் திரிவோம். நான் தற்போது காசியை சொந்த ஊராகக் கொண்டுள்ளேன்.  எதிலும் பற்றுஇல்லாமல் பிச்சை எடுத்து வாழும் அடியவர்களே என்னுடைய உறவினர்கள். நாம் எந்நாளும் வித்தைகள் செய்கின்ற சித்தராவோம்.  தில்லைவனம் உள்ளிட்ட சிவதலங்களை வணங்க வந்தோம். இம்மையில் வளமான வாழ்கையையும், மறுமையில் வீடுபேற்றினை அளிக்கும் மதுரையம்பதியில் தற்போது தங்கியுள்ளேன்.

உன்நாட்டு மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை தருவது போல் உனக்கும் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். அறுபத்திநான்கு கலைகளிலும் நாம் நன்கு தேர்ச்சியுடையோம்.  விண்ணுலகத்தில் உள்ளவற்றை மண்ணுலகத்திற்கு கொண்டு வரும் ஆற்றலை உடையவன். ஆதலால் பாண்டியனே உன்னிடத்தில் நாம் பெறத்தக்கது ஒன்றும் இல்லை.” என்று கூறி புன்னகைத்தார்.

சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட அபிடேகபாண்டியன் அதிர்ச்சி அடைந்து ‘இவருடைய செருக்கு, பெருமிதம், இறுமாப்பு ஆகியவற்றை கண்டிப்பாக சோதித்து அறிய வேண்டும்’ என்று எண்ணினான்.

கல்யானைக்கு கரும்பு அளித்தல்

அப்போது அங்கே ஒரு உழவன் செங்கரும்பினைக் கொண்டு வந்து அரசனை வணங்கினான்.  அபிடேகபாண்டியன் அக்கரும்பினைப் பெற்றுக் கொண்டு “வல்லோர்களில் வல்லோர் என்று உம்மை மதித்துக் கொண்டவரே, நீர் இங்கு நிற்கும் இக்கல்யானைக்கு இக்கரும்பினைக் கொடுத்து அதனை உண்ணச் செய்தால் எல்லா வல்ல சித்தரும் நீரே, இங்கு குடிகொண்டிருக்கும் சொக்கநாதரும் நீரே என்பதை நான் ஒப்புக் கொள்வேன். நீர் விரும்பிதை அளிப்பேன்.” என்று கூறினான்.

பாண்டியன் கூறியதைக் கேட்ட இறைவனார் சிரித்துக் கொண்டே, “பாண்டியனே எமக்கு உன்னால் வரும் பயன் ஏதேனும் இல்லை. இருப்பினும் நீ கூறியவாறே இதே இக்கல்யானை இப்பொழுதே இக்கருப்பினை கடித்து உண்பதைப் பார்” என்று கூறி கல்யானையைப் பார்த்தார்.

இறைவனின் கண் அசைவினால் கல்யானை உயிர்பெற்று தன்னுடைய கண்களை உருட்டியது. வாயினைத் திறந்து கோவில் அதிரும்படி பிளிறியது. அபிடேக பாண்டியனின் கையிலிருந்த கரும்பினைப் பிடுங்கியது. பின்னர் அதனுடைய கடைவாயில் கரும்புச்சாறு ஒழுகுமாறு கரும்பினை மென்று தின்றது.

பின்னர் சித்தமூர்த்தி கல்யானையை மீண்டும் பார்த்தார். உடனே கல்யானை தன்னுடைய துதிக்கையால் பாண்டியன் அணிந்திருந்த முத்தாலாகிய மாலையை பிடுங்கியது.  இதனைக் கண்ட மெய்காவலர்கள் யானை அடிக்க கம்பினை உயர்த்தினர். சித்தமூர்த்திகள் கோபம் கொண்டு மெய்காவலர்களைப் பார்த்தார்.  அதற்குள் கல்யானை முத்துமாலையை விழுங்கி விட்டது. இதனைக் கண்ட பாண்டியன் மிக்க கோபம் கொண்டான். உடனே மெய்காவலர்கள் சித்தமூர்த்தியை அடிக்க நெருங்கினர்.

உடனே சித்தமூர்த்தி புன்னகையுடன் “நில்லுங்கள்” என்று கூறினார். உடனே அவ்வீரர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசைவின்றி நின்றனர். இதனைக் கண்ட பாண்டியனுக்கு கோபம் மாறி பயம் உண்டாகியது.

புத்திரப் பேறு பெறுதல் 

சித்தமூர்த்திகளின் காலில் விழுந்து வணங்கி “அடியேனின் பிழையைப் பொறுத்தருளுங்கள்.” என்று கூறினான். சித்தமூர்த்தி “பாண்டியனே நீ வேண்டும் வரம் யாது?” என்று கேட்டார்.

அதற்கு அபிடேகபாண்டியன் “நற்புத்திரப் பேறு அருளுக” என்று வேண்டினான். சித்தமூர்த்தியும் “அவ்வாறே ஆகுக” என்று அருள்புரிந்தார்.

கல்யானையின் மீது சித்தமூர்த்தி தன்னுடைய கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். உடனே யானை தனது துதிக்கையை நீட்டி பாண்டியனின் முத்துமாலையை திருப்பிக் கொடுத்தது.

பாண்டியனும் அதனை வாங்கி அணிந்து கொண்டான். அப்போது சித்தமூர்த்தி மறைந்து அருளினார். யானையும் மீண்டும் கல்யானையாகி அசைவற்று நின்றது.

இறைவனின் திருவிளையாடலை எண்ணிய அபிடேகபாண்டியன் மீண்டும் சொக்கநாதரை வணங்கி அரண்மனை திரும்பினான்.

சித்தமூர்த்தியின் திருவருளால் அபிடேகபாண்டியனுக்கு விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். விக்ரமன் வளர்ந்து பெரியவனானதும் அபிடேகபாண்டியன் விக்ரமனுக்கு அரசாட்சியை அளித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.

-------------------------------