Friday, 21 March 2025

திருவிளையாடல் புராணம், 36ஆவது படலம், இரசவாதம் செய்த படலம்

திருவிளையாடல் 36ஆவது படலம். 

இரசவாதம் செய்த படலம்



பாண்டிய நாட்டில் மதுரைக்குக் கிழக்கே திருப்பூவணம் என்னும் சிவதலம் ஒன்று உண்டு. அங்கு திருக்கோயில் பணியாற்றிய உருத்திர கணிகையர்களுள் பொன்னனையாள் என்பவள் ஒருத்தி இருந்தாள். அவள் சிவபக்தியிலும் சிவனடியார் தொண்டிலும் சிறந்து விளங்கினாள்.

பொன்னனையாள் திருப்பூவணநாதரின் உற்சவமர்த்தி திருவுருவைத் தங்கத்தினால் செய்ய விருப்பம் கொண்டாள்;   அந்த  பொன்னார்மேனியனின் திருவுருவைச் செய்வதற்காக கரு  (அச்சு, die ) ஒன்றைச் செய்து வைத்திருந்தாள்.   

உலோகத் திருமேனி செய்யும் முறை - உலோகத்தினால் செய்ய வேண்டிய திருமேனியின் வடிவத்தை முதலில் படமாக (2 D) வரைந்து கொள்வார்கள்.  அந்தப் படத்தில் உள்ள உருவத்தை மெழுகினால் செய்வார்கள் (3 D).  அந்த மெழுகுப் பொம்மையின் மேல் களிமண்ணைப் பூசுவார்கள்.   இதை அப்படியே நெருப்பிலிட்டுச் சுடுவார்கள்.  இவ்வாறு சுட்டு எடுக்கும் போது உள்ளேயுள்ள மெழுகு உருகிக் கரைந்து வெளியே வந்து விடும்.  களிமண் சுடப்பட்டு சுடுமண் பொம்மை கிடைக்கும்.  இந்தச் சுடுமண் பொம்மையின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறு துளையிட்டு, அதன் வழியே உலோகத்தைக் காய்சி ஊற்றுவார்கள்.  சிறிது நேரத்தில் காய்ச்சி ஊற்றிய உலோகம் காய்ந்த பின்னர் அதன்மேலேயுள்ள சுடுமண் ஓட்டை உடைத்து எடுத்து விடுவார்கள்.  இவ்வாறு சுடுமண் ஓடு உடைக்கப்பட்டவுடன் உள்ளேயுள்ள உலோகத் திருமேனி நமக்குக் கிடைக்கும்.

பொன்னுக்குக் காத்திருந்த பொன்னனையாள் -   நாடோறும் பொன்னனையாளுக்குக் கிடைத்த வருமானம் எல்லாமும் அடியார்களுக்கு அன்னதானம் செய்தவற்கே  போதுமானதாக இருந்தது.  திருவுரு வார்ப்பிக்கத் தேவையான தங்கம் வாங்கிடத் தேவையான  பொருள் கிடைக்காமல் அவள் வருந்தினாள்.

பொற்கிழி - குல்பூடணபாண்டியனுக்குப் பொற்கிழி வழங்கியது போன்று, தனக்கும் பொற்கிழி வழங்க வேண்டுமென்று மதுரை அருள்மிகு சோமசுந்தரப் பெருமானிடம்  வேண்டிக் கொண்டாள்.  அன்பர்கள் வேண்டுவனவற்றை வேண்டியவாறே அளிக்கும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஒருநாள் சித்தர் உருக்கொண்டு பொன்னனையாளின் இல்லத்தை அடைந்தார். 
அவளது இல்லத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அடியார்கள் பலரும் திருவமுது அருந்திச் சென்று கொண்டிருந்தனர்.  
பொன்னனையாளின் தோழியர்கள் சித்தர்பெருமானிடம் வந்து திருவமுது செய்ய வருமாறு அழைத்தனர்.  அதற்குச் சித்தர் பெருமானும் உங்களது பொன்னனையாளை இங்கே அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

அதுகேட்ட பொன்னனையாளும் சித்தர்பெருமானிடம் வந்து அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அகமும் முகமும் மலர வரவேற்று,  திருவமுது செய்ய வாருங்கள் என்று அழைத்தாள். 
சித்தர் பெருமானும் நீ ஏன் மெலிருந்துள்ளாய்?
உன் குறைதான் என்ன? என்று கேட்டார்.  
அதுகேட்ட பொன்னனையாள் சித்தரிடம் திருப்பூவணநாதரின் திருவுருவை வார்ப்பிக்கத் தங்கம் வேண்டியுள்ளது  என்று முறையிட்டாள். 

சித்தராகிய சிவபெருமான் -  சித்தர் வடிவில் வந்திருந்த அருள்மிகு மதுரை சோமசுந்தரேசுவரர் அவளை நோக்கி, 'பெண்ணே, உன் இல்லத்தில் உள்ள பித்தளைப் பாத்திரம், ஈயப் பாத்திரம் முதலிய எல்லாப் பாத்திரங்களையும் இங்கே கொண்டு வா' என்றார். உடனே பொன்னனையாள் தன் வீட்டில் வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், பித்தளை, வெண்கலம் முதலிய உலோகங்கள் எல்லாவற் றையும் கொண்டுவந்து சித்தர்முன் வைத்தாள். சித்தர் அவற்றின்மீது திருநீறு சிதறி, பொன்னனையாளைப் பார்த்து,'நீ இவற்றை இன்று இரவு நெருப்பில் இட்டு எடுத்தால் இவை பொன்னாக மாறுவதைக் காணலாம். அவற்றைக் கொண்டு சிவபெருமான் திருவுருவை வார்ப்பிக்கக் கடவாய்' என்று கூறி மறைந்தார்.

சித்தராய் வந்தவர் சிவபெருமானே என்று தெளிந்த பொன்னனையாள் துன்பம் நீங்கி இன்பம் அடைந்தாள். சித்தர் கூறியபடியே அவள் அவ்வுலோகங்கள் எல்லாவற்றையும் நெருப்பில் இட்டுக் காய்ச்சினாள்.   ஆணவமலம் கழிந்ததுபோல் காய்ச்சி உலோகத்திலிருந்த கசடுகள் நீங்கின.  பொன் உருகி வந்து.  அந்தப் பொன்னைக் கொண்டு திருப்பூவணநாதரின் உற்சவர் திருவுருவை வார்ப்பித்து எடுத்தாள். அவ்வுருவின் பேரழகைக் கண்டு களித்து, 'அழகிய பிரானோ' என்று கண்ணத்தைக் கிள்ளி முத்தமிட்டுப் பிரதிட்டை செய்தாள். பின்பு அவள் தேர்த்விழாக்கள் முதலியனவும் நடத்தினாள். சில ஆண்டு கள் கழித்தபின் அவள் சிவலோகம் அடைந்தாள்.

இந்நாளில் அடியார்கள் ஒன்று சேர்ந்து,  திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் பெயரில்  அன்னதான அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஸ்ரீ பொன்னனையாள் நடத்திய அன்னதானத்தைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.








No comments:

Post a Comment